சர்வதேச அனுபவத்தில் கொரோனாவிற்கான இரண்டாவது அலையிலிருந்து இலங்கையர்கள் தற்பாதுகாத்து கொள்வார்களா? -ஐ.வி.மகாசேனன்-
கொரோனா அபத்தம் முடிவற்ற வகையில் ஒவ்வொரு நாடுகளா மாறி மாறி இழப்பீடுகள் அதிகரித்து கொண்டு வரும் சூழலில் உலகின் பல நாடுகளும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. ஐரோப்பிய நாடுகள் பலவும் இழப்பு வீதம் குறைந்து வருகையில் ஏப்ரல் மாத இறுதிப்பகுதியிலிருந்து முடக்கத்தை நீக்கி பாதுகாப்புடனான இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முயலுகின்றனர். எனிலும் கொரோனா வைரஸ் பரவலுக்கான இரண்டாவது அலையும் ஐரோப்பாவை உரசும் சூழலும் காணப்படுகின்றது. இந்நிலையில் இலங்கையும் 2020 மே மாதம் 11ஆம் திகதி முதல் கொழும்பு மற்றும் கம்பஹா தவிந்த அனைத்து மாவட்டங்களினதும் சமூக முடக்கத்தை நீக்கி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. மக்கள் ஒவ்வொருவரும் தங்களதும், தங்கள் சமூகத்தினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனடிப்படையிலேயே இக்கட்டுரை சமூக முடக்க தளர்வுக்கு பின்னரான மக்கள் வாழப்போகும் வாழ்க்கையில் தற்பாதுகாப்பின் தேவையை விபரிப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தொடர்ந்து ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் ஒரு மாதமாக நீடிக்கப்பட்ட ஊரடங்கு ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி தளர்த்தப்பட்டது. குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் கொரோனா வைரஸ் எளிதில் தொற்றாது என்று வெளியான ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்தே பாடசாலைகள் திறக்கப்பட்டு சமூக இடைவெளியில் மாணவர்கள் வகுப்பறையில் அமர்த்தப்பட்டனர். இந்நிலையில் பாடசாலைகள் திறந்த பின்பு கொரோனாவின் தாக்கம் எப்படி உள்ளது என்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், பாடசாலைகள் திறப்புக்கு பின் ஊரடங்கு காலத்தில் இருந்ததை விட கொரோனா வைரஸ் பரவல் சற்று அதிகமாக இருப்பது கண்டிறியப்பட்டுள்ளது. அதாவது அந்நாட்டில் ஒருவர் வைரஸை பரப்பும் சதவீதம் 0.6 இலிருந்து 0.9சதவீதமாக உயர்ந்துள்ளது.
2020 ஏப்ரல்20 அன்று, ஜெர்மனி வணிகத்திற்காக மீண்டும் திறக்கத் தொடங்கியது. 800 சதுர மீட்டருக்கும் குறைவான தளங்களைக் கொண்ட கடைகள், கார் விற்பனை நிலையங்கள், புத்தகக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டன. இருப்பினும், முடக்க நிலையின் கட்டுப்பாடுகளும் தொடர்ந்தது. ஆரம்ப அல்லது இடைநிலைப் பள்ளியின் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மே4 அன்று சில பள்ளிகளை மீண்டும் திறக்கும் திட்டத்தை அரசாங்கம் அறிவித்தது. மக்கள் மே9 அன்று ஜெர்மனியில் அமுல்படுத்தப்பட்டுள்ள சில கட்டுப்பாடுகளுடன் கூடிய முடக்க நிலையை முழுவதுமாக நீக்க கோரி பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜெர்மனியில் உள்ள 16 மாகாணங்களின் தலைவர்களுடனும் ஆலோசனை நடத்திய பிறகு, நாடு முழுவதும் விரிவான முடக்கநிலை தளர்வுகள் குறித்த அறிவிப்பை அந்நாட்டின் சான்சீலர் ஏஞ்சலா மெர்கல் வெளியிட்டார். இதன்படி ஜெர்மனி முழுவதும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டதுடன் கல்வி நிறுவனங்களின் செயற்பாட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டன. மேலும் ஜெர்மனியில் பிரபல காற்பந்து தொடர் ஓரிரு வாரங்களில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜெர்மனியில் முடக்க நிலை தளர்த்தப்பட்டு சில நாட்களே கடந்துள்ள நிலையில் அங்கு கட்டுப்பாட்டினுள் வந்ததாக நம்பப்பட்ட நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக அறிக்கை வெளிவந்துள்ளது.
பிரான்ஸில் மார்ச் 17 முதல் 8 வாரங்களாக போடப்பட்டிருந்த ஊரடங்கு மே மாதம் 11ஆம் திகதி முதல் தளர்த்தப்பட்டுள்ளது. எனிலும் கொரோனா பாதிப்பின் அடிப்படையில் பிரான்ஸ் நாடு சிவப்பு மற்றும் பச்சை ஆகிய இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்படுவதாகவும் அதற்கு ஏற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் பிரான்ஸின் பிரதமர் எட்வர்ட் பிலிப் தெரிவித்துள்ளார். பிரான்சில் முடக்கம் நீக்கப்பட்ட முதல் நாளில் தெருவுக்கு வெகுஜன மக்கள் பிரசன்னமாகவில்லை. சில சிக்கல்கள் இருந்தபோதிலும், பாரிஸ் பயணிகள் அமைப்பு திணறடிக்கப்படவில்லை. மெட்ரோ ரயில்கள் பாதி ஆக்கிரமிப்புடன் இருந்தன. மேலும் சமூக தூரத்தில் முக்கிய சிரமம் இருந்தது. கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் கடைக்காரர்கள் குறைவாகவே இருந்தனர். பள்ளிகள் செவ்வாய்க்கிழமை மட்டுமே மீண்டும் திறக்கத் தொடங்குகின்றன. பிரான்ஸ் மக்கள் அயல் நாட்டு அனுபவங்களில் தங்கள் பழைய வாழ்க்கையை மீண்டும் தொடங்க தயங்குகிறார்கள். இரண்டாவது அலையின் ஆபத்து வந்திடுமோ என்ற எண்ணத்துடன் மக்கள் பாதுகாப்பாகவே செயற்படுகின்றார்கள். போதுமான எச்சரிக்கையும் வழிகாட்டலும் கொடுக்கப்பட்டமையால், மக்கள் நல்ல உணர்வுடன் செயல்படுகிறார்கள்.
ஐரோப்பிய நாடுகள் பரவலாக மே11இலிருந்து முடக்கத்தை தளர்த்தி வருகின்றது. பெல்ஜியத்தில் அநேக வர்த்தகங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நெதர்லாந்தில் ஆரம்ப பாடசலைகள் பகுதியாக திறக்கப்பட்டன. அதேசமயம் உடற்பயிற்சி சிகிச்சை நிலையங்கள், வாகன சாரதி பயிற்சி நிலையங்கள் மற்றும் சிகையலங்கார நிலையங்களும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினில் சில பிராந்தியங்களில் 10பேருக்கும் அதிகமானோருக்கு கூடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள போதும் சமூக இடைவெளியைப் பேணுதல் தொடர்பாக கட்டுப்பாடுகளை பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவிலும் சில பிராந்தியங்களில் முடக்க நிலை தளர்த்தப்படுகின்ற போதும் ஜூன்1 வரை ஊடரங்கு தொடரும் நிலை காணப்படுகிறது. மார்ச் மாதம் 23ஆம் திகதி முதல் போடப்பட்ட ஊரடங்கு ஜூன் 1ஆம் திகதி முதல் நிபந்தனைகளுடன் தளர்த்தப்படும் என பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இத்தாலி, சுவிஸர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளும் ஏற்கனவே ஊடரங்கை தளர்த்தி உள்ளமையம் குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய நாடுகளில் ஊரடங்கு தளர்த்தப்படுகின்ற போதிலும் கொரோனா வைரஸ் பரவுகைக்கான இரண்டாவது அலை அபாய எச்சரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டே வருகின்றது. ஏப்ரல் இறுதியில் ஊரடங்கை தளர்த்திய நாடுகளில் மீள அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பரவுகையின் எண்ணிக்கை அதனையே உறுதி செய்கின்றது.
நியூஸிலாந்திலேயே ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னரும் கொரோனா வைரஸின் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு காணப்படுகின்றது. நியூஸிலாந்தில் ஊடரங்கு தளர்வு படிமுறையாக மதிப்பீட்டு அடிப்படையிவேயே தளர்த்தப்படுகின்றது. ஏப்ரல் 27 முதல்கட்டமாய் கட்டுப்பாடுகளுடன் ஊடரங்கு தளHத்தப்பட்டது. இது உணவூ எடுத்துக்கொள்ளவூம் சில பொழுதுபோக்கு நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கவும் அனுமதித்தது. தொடர்ச்சியான மதிப்பீட்டில் கொரோனா கட்டுப்பாட்டில் இருப்பது உறுதி செய்யப்பட்டு, மார்ச்11 இரண்டாம் கட்டமாக மேலும் சில சலுகைகளுடன் தளர்த்தப்பட்டுள்ளது. இது உள்நாட்டு பயணம் அனுமதிக்கப்படும். இது முடங்கிப்போன சுற்றுலாத் துறைக்கு ஊக்கமளிக்கும். பள்ளிகள் மே18 மீண்டும் திறக்கப்படும். அடுத்த நிலைக்கு நகர்வது இரண்டு வாரங்களுக்குப் பிறகு மறு மதிப்பீடு செய்யப்படும் என்றும், முன்னேற்றங்களைப் பொறுத்து மேலும் எளிதாக்குவதாகவும் நியூஸிலாந்து பிரதமர் ஆர்டெர்ன் கூறினார். ஒப்பீட்டளவில் பிற நாடுகளின் ஊடரங்கு தளர்விலும் முன்னேற்றகரமான செயற்பாடாக நியூஸிலாந்தின் நகர்வு காணப்படுகின்றது.
இலங்கையும், நியூஸிலாந்து பொறிமுறையை ஒத்து படிப்படியாக ஊரடங்கினை தளர்த்தி வருகின்ற போதிலும் மதிப்பீட்டை கருத்தில் கொள்ளாமல் செயற்படுகின்றமையால் இலங்கையின் பொறிமுறை வேறுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது. உலக ஓட்டத்தோடு ஊடரங்கில் பெருவாரியான தளர்வை மே11அன்று இலங்கையும் செயற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பரவுகையில் பெரிதும் பாதிக்கப்பட்ட கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய 23மாவட்டங்களிலும், மே11 முதல் ஊடரங்கு தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திருப்பப்பட்டுள்ளது. கொழும்பிலும் அரச அலுவலகங்களின் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் கொழும்பின் அடர்த்தி நிலை மீள பெறப்பட்டு வருகிறது. ஊடரங்கு தளர்த்தப்பட்ட முதலிரு நாட்களினதும் தகவல்களின் படி மக்கள் கொரோனா பீதியை உணர்ந்து செயற்படுவது புரிகிறது. நகரங்களினை அத்தியாவசிய தேவைகளுக்கே மக்கள் பெரிதும் பயன்படுத்துவடன் சனநெரிசலை தவிர்த்தே வருகின்றனர். புகையிரத நிலையங்களிலும் இராணுவ கண்காணிப்பில் பயணிகள் மட்டுப்படுத்தப்பட்டு சமூக இடைவெளியை பேணியே பயணம் செய்கின்றார்கள். கொரோனா இரண்டாம் அலை ஏற்படாது மக்கள் விழிப்புடன் செயற்படுவதை பறைசாற்றும் இக்காட்சிகள் இலங்கை மக்களின் சிறந்த முன்னேற்றமாக காணப்படுகின்ற போதிலும் இதன் தொடர்ச்சி தன்மை பேண வெண்டியது அவசியமாகிறது. இலங்கையில் கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை என்பதை இலங்கை மக்கள் உணர வேண்டும். மார்ச்12 வரையான தகவலின் படி இலங்கையில் 366பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமாகி வெளியேறிய போதிலும் 494பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதை இலங்கை மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.
இலங்கை சுகாதார சேவை திணைக்களம் மற்றும் வைத்திய சங்கங்களின் அறிவிப்புக்களை அரசியல் நலன்சார்ந்து அரசாங்கம் பொருட்படுத்தாது விடினும் மக்கள் தங்களையும் தங்கள் சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்ள அவற்றின் அறிவிப்புக்களை கேட்டு செயற்பட வேண்டியது ஊடரங்கு முற்றாக தளர்த்தப்பட்டுள்ள சூழ்நிலையில் அவசியமாகின்றது. இலங்கையின் சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, இலங்கையில் வைரஸ் தாக்கம் பூச்சியத்திற்கு வரவில்லை ஆதலால் இரண்டாம் சுற்று தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது. என்ற எச்சரிக்கையை தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகின்றார். ஊரடங்கு முழுமையாக தளர்த்தபபட்டுள்ள இச்சூழ்நிலையில் மக்கள் தமது சுகாதார செயற்பாடுகள் மூலமே நிலைமையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளார். மேலும் உலக சுகாதார அமைப்பும் ஊடரங்கை தளர்த்தும் நாடுகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு விடுத்துள்ள கோரிக்கையை இலங்கை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
இலங்கையினதும் உலக இயக்கத்துக்கும் இன்று பொருத்தமான வாக்கியமாய் பிரான்ஸ் பாராளுமன்றில் பிரான்ஸ் பிரதமர் கூறிய, “வைரஸிடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள்” என்பதே அமைகின்றது. அதுவே இன்றைய யதார்த்தம். கொரோனாவிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரையில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியுமே தவிர அழிக்க முடியாது. தடுப்பூசி கண்டுபிடிக்க ஓராண்டுகளுக்கு மேல் தேவைப்படும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனிலும் உலகில் பரவி உள்ள எயிட்ஸ்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தொடர்ச்சியாக முடங்கி இருப்பதும் சாத்தியமற்றது. ஆதலால் மக்கள் தங்களிடம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனாவோடு வாழப்பழகுதலே சாலச்சிறந்தது. சமகாலத்தில் ஒவ்வொரு குடிமகனும் தன்னை பாதுகாத்து கொள்வது தனக்கான பாதுகாப்பு மாத்திரமன்றி அது சமூகத்தையும் பாதுகாப்பது என்பதை உணர்ந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
Comments
Post a Comment