தமிழ் சமூகம் வலுவான பொதுக்கட்டமைப்பாக உருவாக வேண்டிய தேவை எழுந்துள்ளது. -ஐ.வி.மகாசேனன்-
மே18 இலங்கை அரசியலில் முக்கியமானதொரு நாளாக 2009இற்கு பிற்பட தோற்றம் பெற்றுள்ளது. மே18 இனை மையப்படுத்தி உரையாடப்படும் உரையாடல்களும் இலங்கை அரசியலில் மாற்றங்ளை ஏற்படுத்த கூடிய வல்லமை பொருந்தியனவாகும். இலங்கையில் மே18 ஐ மையப்படுத்தி இரு உரைகள் வழமையாக நிகழ்வதுண்டு. வடக்கில் தமிழர் தரப்பிலிருந்து இறந்தவர்களை நினைவு கூர்ந்தும் போர்க்குற்றங்களுக்கு நீதி வேண்டியும் குறித்த உரை மேற்கொள்ளப்படும். அதேவேளை மறுபுறம் இலங்கை அரசாங்கத்தால் போரில் வெற்றியை பெற்று தந்த இராணுவ வீரர்களை நினைவு கூறியும் அவர்களுக்கான சலுகைகளை மையப்படுத்தியும் உரை மேற்கொள்ளப்படும். 2010ஆம் ஆண்டிலிருந்து இது வழக்கமாகி விட்டது. கொரோனா அபத்தம் உலக ஒழுங்கையே மாற்றி வருகையிலும் கூட இலங்கையின் ஒழுங்கில் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. எனிலும் இம்முறை இலங்கை அரசாங்க தலைவரின் உரையின் உள்ளடக்கங்களும், சர்வதேச ரீதியாய் மே18 நினைவுகூறலில் உரையாடப்பட்ட உரையாடல்களும் தமிழர்களுக்கான வாய்ப்பு ஒன்று இருப்பதை சூட்சகமாக புலப்படுத்துவதாக காணப்படுகின்றது. ஆயினும் வாய்ப்பினை தமிழ் சமூகத்திற்கு திசை திருப்பக்கூடிய பலமான கட்டமைப்பொன்று தமிழ் சமூகத்திடம் காணப்படுகின்றதா? என்பதும் கேள்விக்குறியதே அதனடிப்படையிலேயே குறித்த கட்டுரை மே18 இனை மையப்படுத்தி இலங்கையிலும் சர்வதேச பரப்பிலும் உரையாடப்பட்ட உரையாடல்களையும் தமிழர்களுக்கு உள்ள வாய்ப்பினை தேடுவதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டத்தில் இராணுவத்தினையும் சிங்கள இனவாத தரப்பையும் குளிர்விற்கும் விதத்தில் இலங்கையில் வளர்ந்துவரும் பொனப்பட்டிச அரசின் தலைவர் கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் உரையாற்றி இருந்தார். போரில் ஒரு தரப்பு இழந்தவை அதிகம் அவர்களின் இழப்புகளுக்கு இழப்பீடு பரிகாரமாவது வழங்க முன்வர வேண்டுமென்பதை முற்றுமுழுதாக இலங்கை அரசு தரப்பு மறந்து பயணிக்கின்றது என்பதையே குறித்த உரை வெளிப்படுத்தி நிற்கின்றது. குறிப்பாக யுத்தத்திற்கு பின்னர் இலங்கையில் உரையாடப்படும் நிலைமாறுகால நீதி என்பது அதிகம் இழப்பீட்டு பரிகார நீதியினையே வலியுறுத்துகின்றது. நிலைமாறுகால நீதியை இலங்கை மீது சர்வதேசமே திணிக்கின்றது என்ற நிலையில் சர்வதேசம் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்குமாயின் சர்வதேச அமைப்புக்களிலிருந்தும் இலங்கை அரசு வெளியேற தயங்காது என வெற்றி விழா கொண்டாட்ட உரையில் ஜனாதிபதி காட்டமாக கூறியுள்ள விடயம் இழப்பீட்டு பரிகாரத்தை கூட வழங்க மறுப்பதையே உணர்த்துகின்றது.
வடக்கில் போரின் இழப்புக்களை நினைவுகூர்ந்த தமிழ்த்தரப்பு, 'சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது சிறப்பு குற்றவியல் தீர்ப்பாய பொறிமுறையினூடோ இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கான நீதியை பெற்றுத்தர சர்வதேசம் முன்வர வேண்டும்' என வலியுறுத்தப்பட்டும் உரை நிகழ்த்தப்பட்டுள்ளது. இலங்கை அரசு முற்றுமுழுதாய் சர்வதேசத்தை விரோதிக்கையில் தமிழர் தரப்பு சர்வதேசத்திடமே சரணாகதி அடைந்து உள்ளது. எனிலும் தமிழர் தரப்பில் மே18இனை மையப்படுத்தி நிகழ்த்தப்பட்ட உரையின் வலு ஆராய வேண்டியதாய் உள்ளது. உரைக்கு அப்பால் அதை நிறைவேற்ற குறித்த தரப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் ஆராய வேண்டி உள்ளது. தமிழ் சமூகம் அரசற்ற தரப்பாய் அரசுக்கு எதிராக போராடுகையில் இறுக்கமானதோர் பொதுக்கட்டமைப்பு அவசியமாகின்றது. சர்வதேச ரீதியாய் தமிழின அழிப்பு நாளாக ஒருங்கிணைத்து செயற்படுத்தப்படும் மே 18இனை இலங்கையில் நடாத்தும் அமைப்பு தமிழின அழிப்புக்கு எதிராக முள்ளிவாய்க்கால் தாண்டியும் பயணிக்கக்கூடிய வலு இருப்பது அவசியமாகின்றது. மாறாக குறித்த அமைப்பு முள்ளிவாய்க்கால் என்ற புவியில் பிரதேசத்தோடு மாத்திரம் கட்டுண்ட நினைவேந்தல் கட்டமைப்பாயின் மே18அன்று நிகழ்த்தப்படும் உரை ஓரு செய்தியாகவே கடந்து செல்லக்கூடியதாகும். கடந்த ஆண்டு 10ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிலும் குறித்த அமைப்பு நிகழ்த்திய உரையில் சர்வதேச உதவியையே கோரியிருந்தது. எனினும் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி அதன் பின்னரான நகர்வு பூச்சியமாகவே காணப்படுகின்றது.
இவ்வருடம் மே18 இனை மையப்படுத்தி உள்ளூரில் இடம்பெற்ற உரைகளுக்கு அப்பால் சர்வதேச ரீதியிலும் உலக தலைவர்களால் மற்றும் சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளால் ஆற்றப்பட்டுள்ள உரைகளும் பிரதான நிலை பெறுகின்றமை அவதானிக்க வேண்டி உள்ளது.
கனடா பிரதமர் ஜஸ்டீன் ரூட்டோ, நீதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டுமாறு இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளார். கனடா அதன் பன்முகத்தன்மையினாலும், நாட்டைத் தங்களுடைய வீடாக ஏற்றுக்கொண்ட பல கலாசாரங்கள் கொண்ட மக்களாலும் பலம் வாய்ந்ததாக உள்ளது எனக்குறிப்பிட்டு, கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்வது எதிர்காலத்தை உருவாக்குவதற்கு முக்கியமானது. இந்நிலையில் அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் செயல்முறையைத் தொடர இலங்கைக்கு விடுக்கப்பட்ட அழைப்பை மீண்டும் நான் வலியுறுத்துகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
'தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் எனத் தன்னைத்தானே இலங்கை அரசு கேட்டுக் கொள்வதும், தமிழர்களிடம் அதனைக் கேட்டுப் பார்ப்பதும் இலங்கை அரசின் பொறுப்பு' என கிழக்குத் தீமோரின் முன்னாள் ஜனாதிபதியும், அமைதிக்கான நோபால் பரிசு பெற்றவருமான முனைவர் ஹொசே ரமோஸ்-ஹோர்தா, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு வழங்கிய முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையில் தெரிவித்துள்ளார். கிழக்கு தீமோர் தலைநகரம் டிலீயிலிருந்து இணையவழியே அவர் வழங்கிய முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையில், கற்றலோனியா மக்கள் நூற்றாண்டுக் கணக்கில் சேர்ந்து வாழ்ந்த பின் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்? என்ற கேள்வியை மாட்ரிட் தனக்குத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது போலவே, ஸ்காட்டுகள் பிரித்தானியாவிடம் இருந்து பிரிந்து செல்ல விரும்புவது ஏன்? என்று இலண்டன் தன்னைத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது போலவே, கொழும்பில் இடம்பெற்றுள்ள அரசாங்கமும் தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் என்று கேட்டுக் கொள்ள வேண்டும். தமிழர்களைப் போன்று மிகப்பெரும் இன அடையாள உணர்வும் வரலாற்று உணர்வும் கொண்ட ஒரு தேசிய இன மக்கள் தனித்திருக்க விரும்புவது ஏன்? தம்மைத்தாமே கேட்டுக் கொள்ளும் பொறுப்பு ஆளும் அரசுகளுக்கு இருப்பதாக அவர் வலியுறுத்தினார். தன்னாட்சிக்கும் தேசியத்துக்குமான போராட்டம் ஒரு வரலாற்று உண்மையாகும். ஒவ்வொரு தேசமும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என விரும்புகின்றன. ஆனால் அந்த சுதந்திரத்தின் பொருள் பிரிவினையாகத்தான் இருக்க வேண்டும். என்பதில்லை என்றார். இந்தோனேசியாவில் அவருடைய கிழக்கு திமோரிய மக்களின் போராட்டம் கடந்து சென்ற பாதையை எடுத்துரைத்தவர் எப்படிப் பின்னொரு கட்டத்தில் தங்களின் எதிர்ப்பியக்கம் ஐநாவின் தலைமையில் இந்தோனேசிய அரசாங்கத்துடன் உரையாடல் என்ற முயற்சியில் ஈடுபட்டது என்பதையும், எப்படி முடிவில் பொதுவாக்கெடுப்பு நடைபெற்று அது தங்கள் சுதந்திரத்துக்கு வழிகோலிற்று என்பதையும் குறித்த உரையில் குறிப்பிட்டார்.
இலங்கையில் யுத்த போர்க்குற்றம் இடம்பெற்ற காலத்திலும் பின்னர் நிலைமாறுகாலநீதியை இலங்கை அரசாங்கத்தின் மீது திணிக்க பிரயத்தனம் எடுக்கப்பட்ட காலத்திலும் சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளராக இருந்த நவநநீதம்பிள்ளை அவர்களும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் காணொளி ஒன்று வெளியிட்டுள்ளார். இலங்கையில் நடைபெற்ற இந்தப்போரின் போது சர்வதேச குற்றங்கள், மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் இடம்பெற்றுள்ளது என்பதை ஐ.நா முன்னெடுத்த விசாரணைகள் உறுதிப்படுத்தியிருந்தது. எனிலும் இன்னும் சரியான நீதிப்பொறிமுறை ஒன்றும் ஏற்படுத்தப்படவில்லை. இந்நிலையில் மரணமான தமிழர்களை கௌரவிக்கும் அதேவேளையில், அவர்களின் நீதிக்கும், சுதந்திரத்துக்கும், இழப்பீட்டை பெற்றுக்கொள்வதற்குமான அவர்களுடைய போராட்டத்துக்கு துணை நிற்போம் எனக் கூறியுள்ளார்.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி, இலங்கையில் ஈவிரக்கமற்ற யுத்தம் முடிவிற்கு வந்து பதினொரு வருடங்களாகியுள்ள நிலையிலும் இலங்கை அரசாங்கம் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை நோக்கி வாக்குறுதி அளிக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிட்டுள்ளதுடன், மறுத்துள்ளது என குற்றஞ்சாட்டியுள்ளார்.
நிச்சயம் நீதி கிடைக்கும் நம்பிக்கையை இழக்காதீர்கள் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று இயக்குநர் ஜஸ்மின் சூக்கா தமிழர்களுக்கு ஆதரவாக கருத்துரைத்துள்ளார். உயிரிழந்தவர்களின் கதைகளை தொடர்ந்தும் தெரிவித்துக்கொண்டிருப்பது அவசியமானது அதன் மூலம் அவர்களின் மரணம் அர்த்தமற்றதாய் மாறுவதை தடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்குறித்த சர்வதேச உரையாடல்கள், ஆரம்பத்திலே மே18 உரையில் தமிழ் மக்கள் கோரிய சர்வதேச ஆதரவுக்கான சமிக்ஞையாக காணப்படுகின்றது. பல தேசிய இனங்களின் சுதந்திரத்தில் சர்வதேச ஒத்துழைப்புக்களே காத்திரமான பங்களிப்பை வழங்கி வந்துள்ளன. இன்று அதே சர்வதேச ஒத்துழைப்பு அலை தமிழர்களுக்கு சார்பாய் வீசுவது தமிழர் தரப்பை பலப்படுத்துகின்றது. எனிலும் அதனை தமிழர்களுக்கு சாதகமாய் திருப்பக்கூடிய இராஜதந்திரமும் சரியானதொரு கட்டமைப்பும் தமிழர்களிடம் உண்டா என்பதே இங்கே கவலைக்குரிய விடயமாக காணப்படுகின்றது. அரசியல் தலைமைகள் தமிழர்களின் பலத்தை சலுகைகளுக்காக தாரைவார்த்து கொடுப்பவர்களாகவே உள்ளனர். போருக்கு பின்னரான கடந்த கால வரலாறுகள் அதனையே உணர்த்தி நிற்கின்றது. மறுபுறம் ஆயுதப்போராட்டம் மொணிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்த சூழலிலும் தமிழர்களிடம் வலுவான ஓர் பொதுக்கட்டமைப்பும் ஸ்தாபிக்கப்பட முடியவில்லை. தமிழ் மக்கள் பேரவை அவ்விடத்தை நிரப்பும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் உடைவுகளும் சமூகமயப்படுத்தப்படாத தலைமைகளும் தமிழ் மக்கள் பேரவையையும் காலவதியாக்கி விட்டது என்பதே உண்மையாகும். எனிலும் இன்று சர்வதேச பரப்பில் தமிழர்ளுக்கு சாதகமானதொரு வாய்ப்பு உருவாகுகையில் சரியான கட்டமைப்பின்றி தவறவிடுவோமாயின் மிகப்பெரும் தவறை விட்ட தலைமுறையாய் இன்றைய தலைமுறையை சேர்ந்த தமிழ் மக்களும் சேர வேண்டி வரும் என்பது கவனிக்கத்தக்கது ஆகும்.
ஜஸ்சின் சூக்க உடைய கருத்து ஆழமானது. அர்ஜென்டினாவிலும் 1980களில் இராணுவ சர்வதிகார அரசாங்கம் மூலம் நிகழ்த்தப்பட்ட அநீதிகளை அர்ஜென்டீனாவின் சிவில் சமூகங்கள் திரட்டி பேணியமையினாலேயே அன்றைய இழப்பை அர்த்தமுள்ளதாக மாற்றி 2003இற்கு பின்னர் அர்ஜென்டீனாவில் நீதி நிலைநாட்டப்பட்டது. ஆயினும் இலங்கையில் தமிழர்களின் இழப்பை ஆவணப்படுத்த கூடிய வகையிலான சீரான ஏற்பாடுகளை மேற்கொள்ள 10 ஆண்டுகளாகியும் அரசியல் தரப்பாயினும் சரி சிவில் சமூகமாயினும் சரி எவரும் முன்வரவில்லை. நீதி கிடைக்கும் ஓரு சந்தர்ப்பத்தில் வரலாற்றை தொலைத்து நீதியை பெற முடியாத சமூகமாவே தமிழ் சமூகம் மாறி வருகின்றது என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும். முள்ளிவாய்க்காலை புவியியல் பிரதேசமாக மட்டுப்படுத்தாது. 2009இற்கு பின்னர் அதற்கு ஏற்பட்டுள்ள அரசியல் வடிவத்தை உணர்ந்து மே 18 தமிழின அழிப்பை மையப்படுத்தி தமிழர்களிடையே பரந்ததொரு செயற்பாட்டு பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்படுவதும் இழப்புக்களை பேணுவதும் அவசியமாகின்றது. 'முள்ளிவாய்க்கால் முடிவல்ல ஆரம்பம்' என்ற சொல்லாட்சியின் ஆழத்தை தமிழர்கள் புரிந்து வடிவம் கொடுக்க வேண்டிய காலமிது என்பதை மறக்க முடியாது.
Comments
Post a Comment