பிரேசிலின் அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவலும் போல்சனாரோவின் பலவீனமும் -ஐ.வி.மகாசேனன்-

கொரோனா தீநுண்மி தயவு தட்சணையின்றி உலகின் சகல கண்டங்களிலும் ஏதோவோர் வகையில் பாரிய அழிவை ஏற்படுத்திக் கொண்டே செல்கின்றது. ஆரம்பத்தில் சீனாவை மையமாய் கொண்டு ஆசிய கண்டத்தில் அழிவை ஆரம்பித்தது. பின்னர் இத்தாலியை மையமாய் கொண்டு ஐரோப்பா கண்டத்தில் ருத்ர தாண்டவமாடியது. தொடர்ந்து அமெரிக்காவை மையமாய் கொண்டு வடஅமெரிக்காவை சீர்குலைய வைத்தது. தற்போது பிரேசிலை மையப்படுத்தி தென்அமெரிக்காவில் அழிவிற்கான நகர்வை ஆரம்பித்துள்ளது. பிரேசிலின் கொரோனா பரவுகைக்கு பிரதான காரணியாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியும் தற்போதைய பிரேசில் சனாதிபதியுமான ஜெய்ர் மெசியாஸ் போல்சனாரோ இன் செயற்பாடுகளே காரணம் என பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. அதனடிப்படையிலேயே குறித்த கட்டுரை பிரேசிலின் அதிகரிக்கும் கொரோனா பரவுகைக்கு காரணமாகியுள்ள போல்சனாரோ இன் ஆட்சி செயற்பாடுகளை ஆராய்வதாக உருவாக்கப்பட்டுள்ளது.

2020 மே 20ஆம் திகதி தரவுகளின் படி உலகின் அதிக கொரோனா பாதிப்புக்கு உள்ளான நாடுகளில் அமெரிக்க மற்றும் ரஷ்யாவை தொடர்ந்து பிரேசில் மூன்றாம் நிலையில் உள்ளது. அண்மைய தரவுகளில் தினசரி பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாவதோடு, ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர். உலகளாவிய கொரோனா பாதிப்பின் தரவுகளை மதிப்பீடு செய்யும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் இன் 2020 மே 20ஆம் திகதி தரவுகளின் படி 275,087 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 18,121 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலின் மூலம் இறந்துள்ளனர். மே 19அன்று 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி 1179 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,  17,408 புதிய கொரோனா தொற்றும் பதிவாகியுள்ளது. பெப்ரவரி மாதத்தில் பிரேசில் முதல் கொரோனா தொற்றை உறுதிப்படுத்தியதிலிருந்து, இதுவே பிரேசிலின் ஒருநாளில் அதிக எண்ணிக்கையில் இறப்புகளும் புதிய தொற்றாளர்களும் பதிவான முதல் முறையாகும். 

நாடுமுழுவதும் போதிய அளவுக்குப் பரிசோதனைகளை மேற்கொள்ளாததால், நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகாரபூர்வ தரவை விட அதிகமாகவே இருக்குமென்று சுகாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். 'பிரேசிலில் மருத்துவமனைகளுக்கு வருபவர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.' என சா பாலோ மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆய்வுசார் கல்விப்புலமையாளர் டொமிங்கோ ஆல்வ்ஸ் ஏ.எப்.பி (AFP) செய்தி தளத்திற்கு தெரிவித்தார். 'இருக்கும் தரவுகளை வைத்து, இங்கு என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வது கடினம். இத்தொற்று பரவலை கட்டுப்படுத்த எங்களிடம் எந்தக் கொள்கையும் இல்லை' எனவும் அவர் குறிப்பிட்டடுள்ளார். பிரேசிலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வ தரவுகளைவிட 15 மடங்கு அதிகம் இருக்கும் என்று கணித்தவர்களில் டொமிங்கோவும் ஒருவர்.

கொரோனா வைரஸ் பரவுகையின் ஆரம்ப நாட்களில் உலகின் பல தலைவர்களும் அதனை உதாசீனம் செய்தார்கள் எனிலும் பின்னர் அதன் அழிவின் தன்மையை உணர்ந்து விரைந்து கொரோனா வைரஸ் பரவுகையை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். எனிலும் தீவிர வலதுசாரி கொள்கை கொண்ட பிரேசில் சனாதிபதி ஜெயிர் போல்சனாரோ பிரேசிலில் கொரோனா பரவுகை அதிகரிக்கப்பட்ட போதிலும் அதன் தீவிர நிலைமையை விளங்கிக்கொள்ளாதவராக காணப்படுகின்றார். அமேசான் காட்டுக்கு தீ வைக்க ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டி காப்ரியோ தான் பணம் கொடுத்தார், அமேசான் காடு உலகின் நுரையீரல் இல்லை, ஆணுக்குத் தரும் அதே சம்பளம் கொடுத்து ஒரு பெண்ணை வேலைக்கு எடுக்கமாட்டேன். ஏனெனில் பெண் கருத்தரிப்பாள் உள்ளிட்ட கருத்துகளை பல்வேறு காலகட்டங்களில் கூறி சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்த போல்சனாரோ கொரோனா விவகாரத்தில் தன் மீது உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு செவிசாய்க்கவில்லை.  தொடர்ந்தும் அசமந்த போக்கிலேயே காணப்படுகின்றார். அதுவே பிரேசிலின் இழப்பு வீதம் அதிகரித்து கொண்டே செல்கின்றது. 

ஐரோப்பாவில் கொரோனா பரவுகையின் தீவிரம் அதிகரிக்கப்படுகையில் அமெரிக்க சனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 'அது அரசியல் புரளி' எனக்கூறி அசண்டை செய்தது போன்றே அவரது நெருங்கிய நண்பனும் ஒரே கொள்கை கூட்டாளியுமான பிரேசிலின் சனாதிபதி போல்சனாரோ உம் 'கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட ஒரு சதாரண காய்ச்சல் போன்றது தான்' என்று கூறி கொரோனாவின் வீரியத்தை குறைத்து மதிப்பிட்டுள்ளார். அதன் அறுவடையை பிரேசில் மக்கள் தற்போது அனுபவிக்கின்றனர்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைளை மேற்கொள்ள பிரேசில் சனாதிபதி ஒத்துழைக்காத சூழலில் கொரோனா காலப்பகுதியினில் இரு சுகாதார அமைச்சர்கள் மாற்றம் பெற்றுள்ளனர். ஆரம்பத்திலிருந்தே கொரோனா நடவடிக்கை தொடர்பாக பிரேசில் ஜனாதிபதிக்கும் சுகாதாரத்துறை நிபுணர்களுக்குமிடையில் தொடர்ச்சியாக கருத்து வேறுபாடுகள் காணப்பட்டு வருகின்றது. போல்சனாரோ இன் முடிவுக்கு மாற்று கருத்து தெரிவித்ததை தொடர்ந்து சுகாதார துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த லூயிஸ் ஹென்ரிக் மாண்டெட்டா ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து ஏப்ரல் 17ஆம் திகதி பதவிக்கு வந்த நெல்சன் டீச் உம் போல்சனரோ இன் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்து உடற்பயிற்சி மற்றும் அழகு நிலையங்களை மீண்டும் திறக்க அதிபர் போல்சனாரோ அளித்த ஆணையை பகிரங்கமாக விமர்சித்த பின்னர் பதவியேற்று ஒரு மாத காலப்பகுதியினுள்ளேயே மே மாதம் 15ஆம் திகதி பதவி விலகியுள்ளார். 

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பிலே தொடர்ச்சியாக பிரேசில் சனாதிபதி மிக மிக அலட்சியமாவே செயற்பட்டு வருகின்றார். அங்குள்ள மாகாண ஆளுநர்கள் விதித்திருக்கும், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுளை மக்கள் பின்பற்ற தேவையில்லை என்று உத்தரவிட்டுள்ளார். மேலும், பிரேசிலில் கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் தீவிரமாக சென்றுகொண்டிருக்க, அந்த நாட்டின் அதிபரான போல்சனாரோ சமூக விலகல் அறிவுரைகளையும் கிடப்பில் போட்டுவிட்டு, தனது ஆதரவாளர்கள் திரளுடன் சந்திப்பது தொடர்பிலே வெளியிடப்படும் காணொளிகள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுமட்டுமின்றி, தொடக்கத்திலிருந்தே முடக்க நிலைக்கு எதிரான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வரும் போல்சனாரோ, சமூக விலகல் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிடும் என்று வாதிடுகிறார். இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் நடந்த மாகாண ஆளுநர்களுடனான கூட்டத்தில் பேசிய அவர், 'நமது வாழ்க்கை தொடர்ந்து நடக்க வேண்டும். வேலைகளை பாதுகாக்க வேண்டும். நாம் கண்டிப்பாக இயல்புநிலைக்குச் சென்றே தீர வேண்டும்.' என்று கூறினார்.

கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட பிரேசிலின் மிகப் பெரிய நகரமான சாவ் பாலோவில் இதே நிலை நீடித்தால் அடுத்த இரண்டு வாரங்களில் நகரின் சுகாதார அமைப்பு தகர்ந்து போகும் என்று அதன் மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சாவ் பாலோ நகரிலுள்ள அரசு மருத்துவமனைகளில் 90சதவீத இடம் ஏற்கனவே நிரம்பிவிட்டதாக மேயர் புருனோ கோவாஸ் எச்சரிக்கிறார். முடக்க நிலையை கடைபிடிக்காதவர்கள் மக்களின் உயிருடன் விளையாடுவதாக அவர் குற்றஞ்சாட்டுகிறார். மேயரின் குற்றச்சாட்டுக்குள் சனாதிபதியும் உள்ளடங்குவார். பிரேசிலில் கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் ஒன்றான சாவ் பாலோவில் மட்டும் இதுவரை கிட்டத்தட்ட மூவாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகின் பெரும்பாலான நகரங்களை போன்று சாவ் பாலோவிலும் இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே முடக்க நிலை அமுலுக்கு வந்துவிட்டது. அங்கு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பள்ளி - கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டு விட்டன. எனிலும் மக்கள் ஜனாதிபதியின் கருத்தை பின்பற்றி கொரோனா வைரஸ் பரவலை பொருட்டாக கருதாது முடக்க நிலையை விடுமுறையாய் கழித்து வருகின்றனர். 'சாவ் பாலோவில் விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்களைத் தண்டிக்கும் திட்டங்கள் ஏதும் அமுலில் இல்லை. எனவே, மக்கள் முகக்கவசங்களை அணியாமலும், சமூக விலகலை கடைப்பிடிக்காமலும் தெருக்களில் வழக்கம்போல் சென்றதை பார்க்க முடிந்தது.' என்று பி.பி.சி (BBC) இன் தென் அமெரிக்க செய்தியாளர் கேட்டி வாட்சன் கூறியுள்ளார்.

பிரேசில் சனாதிபதி போல்சனாரோ கொரோனா அபத்தம் தொடர்பில் வைத்தியர்கள் கூறும் ஆலோசனையையும் புறக்கணித்தே வருகின்றார். முறையான ஆய்வற்று அமெரிக்க சனாதிபதி ட்ரம்ப் அறிவித்த ஹைட்ராக்ஸி குளோரோயினுக்கே போல்சனரோ உம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார். எனிலும் பிரேசில் சுகாதாரத்துறை முறையான ஆய்வுக்கு உட்படுத்தப்படாத மருந்துகளை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்துவதில் தயக்கம் காட்டினார்கள். இதனால் ஏற்பட்ட கருத்து மோதலிலேயே முன்னைய சுகாதார அமைச்சர் லூயிஸ் ஹன்ரிக் மாண்டெட்டா உம் பதவி நீக்கப்பட்டிருந்தார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

பெண்கள் தலைமை தாங்கும் நாடுகள் பலதுமே கொரோனா வைரஸ் அபத்தத்திலிருந்து மீண்டு வருகையில் தீவிர வலதுசாரி கொள்கைகளை பின்பற்றும் தலைவர்களை கொண்ட நாடுகள் கொரோனா அபத்தத்தத்தின் வீரியத்தை விளங்கிக்கொள்ளாது செயற்பட்டு மக்களை இன்னல்படுத்துவது தீவிர வலதுசாரி கொள்கையின் பலவீனத்தையே உலகிற்கு பறைசாற்றுகின்றது. போல்சனாரோவும் ட்ரம்பை போன்றே தீவிர வலதுசாரி கொள்கை பிடிப்பில் மக்கள் நலனை துச்சமாக எண்ணி பொருளாதார நலன் தொடர்பிலேயே அதீத அக்கறை காட்டுவதே இழப்புக்கு காரணமாகிறது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-