21ஆம் நூற்றாண்டு உலக ஒழுங்கிற்கு தலைமை தாங்குவது இந்தியாவா? சீனாவா? -ஐ.வி.மகாசேனன்-


2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்தே உலக அரசியல் நிகழ்வுகள் யாவும் கொரோனா வைரஸை மையப்படுத்தியே சுழலுகின்றது. கொரோனா வைரஸ் பரவுகை உலகளாவிய அரசியல், பொருளாதார, சமூக சூழல்களில் சடுதியான பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. அரசியல் ரீதியாக நட்பு பாராட்டிய நாடுகளிடையே பிணக்குகளையும் பகைமை பாராட்டிய நாடுகளிடையே நல்லுறவையும் கண்ணுக்கு புலப்படாத எஜமான் நிர்ணயித்து வருகின்றது. யாவற்றுக்கும் பின்னால் உலகளாவிய அரசியல் பொருளாதாரத்தை அவ்எஜமான் உலுக்கியுள்ளமையே காணப்படுகின்றது. கொரோனா லைரஸின் பரவுகையால் உலக நாடுகள் யாவும் முடக்கப்பட்டுள்ள நிலையில் உலக நாடுகளின் பொருளாதாரமும் வரலாறு காணாத சரிவை கண்டுள்ளது. கொரோனாவின் பாதிப்பு ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவினையே கடுமையாக பாதித்துள்ளது. ஒப்பீட்டளில் ஆசியாவின் பாதிப்பு குறைவாகவே காணப்படுகின்றது. கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக விடுதலை பெற்ற சீனா பொருளாதார ரீதியிலும் தன்னை சீர் செய்து கொண்டு வருகின்றது. எனிலும் மேற்கத்தேய நாடுகள், சீனாவின் கொரோனா வைரஸ் பரவுகையின் வெளிப்படைத்தன்மை குறைவு தொடர்பிலே சீற்றம் கொண்டு பொருளாதார உறவில் மாற்றத்தை ஏற்படுத்த முனைகின்றார்கள். தற்போது மேற்குநாடுகள் இந்தியாவின் பக்கமே தங்கள் பார்வையயை ஆழமாக செலுத்துகின்றார்கள். இதனடிப்படையில் இக்கட்டுரையானது கொரோனா வைரஸ் பரவுகையால் உலக அரசியல் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் 21ஆம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்பதை உர்ஜிதப்படுத்துகின்றதா? என்பதை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

21ஆம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்பது தொடர்பாக அரசியல் பொருளாதார ஆய்வாளர்ளிடம் பரவலான கருத்து காணப்படுகின்றது. 21ஆம் நூற்றாண்டில் ஆசிய நாடுகளில் வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் மக்கள்தொகை போக்குகள் காரணமாக ஆசிய உலக நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் வகிபாகத்தை கணித்து 1980களின் பிற்பகுதியில் 21ஆம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்ற உரையாடல் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. உலகை காலத்துக்கு காலம் வேறுபட்ட பிராந்தியங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளளது. 19ஆம் நூற்றாண்டை ஐரோப்பிய கண்டம் அதிலும் பிரித்தானிய சிம்மசொப்பனமாக இருந்தது. ஆதலால் 19ஆம் நூற்றாண்டு பிரித்தானிய சாம்ராச்சிய நூற்றாண்டு என அழைக்கப்படுகின்றது. 20ஆம் நூற்றாண்டில் அமெரிக்க கண்டம் அதிலும் அமெரிக்க தன் வகிபாகத்தை நிலைநாட்டியது. ஆதலால் 20ஆம் நூற்றாண்டு அமெரிக்க நூற்றாண்டு என அழைக்கப்படலாயிற்று.

21ஆம் நூற்றாண்டின் ஆசியாவின் வகிபாகம் தொடர்பான உரையாடலில் பிரதானமாக சீனா மற்றும் இந்தியா பற்றிய வளர்ச்சியே முதன்மை பெறுகின்றது. 1950களிலே உலகின் அரைப்பங்கிற்கும் அதிகமான மக்கள் தொகை ஆசியாவில் காணப்பட்ட போதிலும் மொத்த உற்பத்தியில் 20% மாத்திரமே ஆசியாவிடம் காணப்பட்டது. எனிலும் 1980களின் பிற்பகுதியிலிருந்து இந்நிலை மாற்றமடைந்துள்ளது. 1988ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசின் தலைவர் டெங் சியாவோப்பிங் மற்றும் இந்தியாவின் பிரதம மந்திரி ராஜிவ் காந்தியும் சந்தித்த போதும் 21ஆம் நூற்றாண்டு ஆசிய நூற்றாண்டு என்ற உரையாடல் முதன்மைபெறலாயிற்று. எனிலும் அதற்கு முன்னரே 1985ஆம் ஆண்டில் அமெரிக்க செனட்டின் வெளியுறவுக்குழு 21ஆம் நூற்றாண்டை ஆசியாவின் நூற்றாண்டு என்ற உரையாடலை ஆரம்பித்து விட்டார்கள்.

உலகளவிலே கொரோனா வைரஸ் பரவுகை ஏற்படுத்தியுள்ள தாக்கமும் ஒப்பீட்டளவில் ஆசியாவின் பாதிப்பு நிலை குறைவும் 21ஆம் நூற்றாண்டில் ஆசியாவின் வகிபாகத்தை உறுதி செய்வதாக காணப்படுகின்றது. ஐரோப்பாவில் 13லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர். அமெரிக்காவில் 10லட்சத்திற்கு அதிமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர். எனிலும்  ஆசியாவில் 5 லட்சம் வரையான மக்களே பாதிக்கப்பட்டுள்ளதுடன் இருபதாயிரத்துக்கும் உட்பட்ட மக்களே இறந்துள்ளனர். உலக நாடுகள் பலதும் கொரோனா வைரஸ் பரவுகையின் அபாயத்துக்குள் முடங்கி இருக்கையில், ஆசியாவின் பொருளாதாரத்தில் முதன்மையாய் உள்ள சீனா கொரோனா வைரஸிலிருந்து முழுமையாய் நீங்கி தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளது. உலக நாடுகளுக்கு சுகாதார பொருட்களையும் பெருமளவில் ஏற்றுமதி செய்கின்றது.

வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் சீனா ஏற்கனவே அமெரிக்காவை விட பெரிய பொருளாதாரமாக உள்ளது. இது 2019ஆம் ஆண்டில் உலகளாவிய உற்பத்தியில் 19சதவீதமாக உள்ளது. சீனா அடுத்த தசாப்தத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விதிமுறைகளில் அமெரிக்காவை வீழ்த்தும் என பொருளாதார நிபுணர்களால் ஏற்கனவே எதிரர்வு கூறப்பட்டது. எனிலும் கொரோனா அதனை விரைவுபடுத்தியுள்ள நிலைமையே இன்று காணப்படுகின்றது. சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் இப்போது சீனாவின் முதல்நிலை எதிரியாக கருதப்படும் அமெரிக்காவினையே நிர்மூலமாக்கி கொண்டுள்ளது. சீனா தனது பொருளாதாரத்தை பலப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. ஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி, கனடா உட்பட 100க்கும் அதிகமான நாடுகளுக்கு மருத்துவ உபகரண பொருட்களை சீனா ஏற்றுமதி செய்கின்றது. குறைந்த விலைக்கு தனது பொருட்களை சந்தைப்படுத்தி வளர்ச்சியடைந்த நாடுளின் நிறுவனங்களை செயலிழக்க செய்து, அந்த நாடுகளின் பொருளாதாரத்தை சீனா மிகச்சாதுரியமாக சீர்குலைத்து முன்னேறுகிறது. அண்மையில் சீனா விமானம் ஒன்றில் 16 தொன் மருத்துவ உபகணங்கள் சீனாவிலிருந்து இலங்கைக்கு எடுத்து வரப்பட்டன.

ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்கள் மீதும் சீனாவின் ஆதிக்கம் வளர்ச்சியடைந்து வருகின்றது. ஐரோப்பாவின் 1000க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் நிர்வாக சபையில் அதிக முதலீடுகளை மேற்கொண்டு சீனர்கள் வலுப்பெற தொடங்கி உள்ளனர். எடுத்துக்காட்டாக கணினி சிப்ஸ்களை தயாரிக்கும் ஐரோப்பிய நிறுவனமான இமாஜினேஸன்(IMAGINATION) நிறுவனத்தின் 4 நிர்வாக சபை உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை சீனா பெற முயல்கின்றது. அதனடிப்படையில் அந்நிறுவனத்தை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை சீனா பெறக்கூடியதாக இருக்கும். பிரித்தானிய அரசின் தலையீட்டில் அது இழுபறி உடையதாக காணப்படுகின்றது. இந்நிலையில் தற்போது ஐரோப்பிய நிறுவனங்கள் தங்கள் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அந்நிய முதலீட்டை கட்டுப்படுத்தும் சட்டங்களை உருவாக்கி வருகின்றனர்.

மேலும் ஏற்கனவே சர்வதேச நிறுவனங்கள் மீது தனது ஆதிக்கத்தை மறைமுகமாக பலப்படுத்தி வந்த சீனா கொரோனா அபத்த காலத்தில் நேரடியாக அறுவடை செய்கின்றது. சீனா ஏனைய வளர்முக நாடுகளுடன் உறுதியான கூட்டணியினையும் உருவாக்கி கொண்டு ஐ.நாவின் பல்வேறு நிறுவனங்களின் உயர்பதவி தெரிவின் போது அந்நாட்டு வேட்பாளர்களை ஆதரித்தது. இந்நிலையிலேயே தன் நட்பு நாடான  எதியோப்பியாவை சேர்ந்த ரெட்டோஸை உலக சுகாதார நிறுவனத்தின் தலைவராகவும் உருவாக்கியது. இன்று உலக சுகாதார நிறுவனம் சீனாவின் பக்கம் பலமாக இருக்க இந்நட்பே காரணமாகின்றது. அமெரிக்க உலக சுகாதர நிறுவனத்திற்கான நிதியை நிறுத்தியதும் சீனா 30மில்லியன் அமெரிக்க டொலர்களை மேலதிகமாக வழங்கியுள்ளது. அத்துடன் ஏற்கனவே ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்கு இரண்டாவாது பெரிய நிதிப்பங்களிப்பை (15.21%) வழங்கும் நாடாக சீனா காணப்படுகின்றது.

21ஆம் நூற்றாண்டு ஆசிய நூற்றாண்டு என்பதை ஏற்றுக்கொள்ளும் மேற்குலகு கொம்யூனிச நாடான சீனாவின் வளர்ச்சியை ஏற்க மறுக்கின்றது. அதன் வெளிப்பாடே கொரோனா அபத்தத்தில் உலக நாடுகள் யாவும் சிக்கி தவிக்கும் நிலையிலும் தென்சீனக்கடலில் ஓர் போர் முழக்கத்தை சீனாவுக்கு எதிராக அமெரிக்காவும் அவுஸ்ரேலியாவும் சேர்ந்து மேற்கொள்வது உர்ஜிதப்படுத்துகின்றது. மேலும் சீனாவை புறந்தள்ளி அமெரிக்க ஆசியாவில் இந்தியாவை வலுப்படுத்த பிரயத்தனம் மேற்கொள்கின்றது. கொரோனா அபத்த காலத்தில் மருந்து மற்றும் மருத்துவ பொருட்களுக்கான உதவியினை அமெரிக்க இந்தியாவிடமிருந்தே பெறுகின்றது. கடந்த மார்ச்31 மற்றும் ஏப்ரல்23 ஆகிய திகதிகளில் அமெரிக்க மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்குமிடையில் மருந்து மற்றும் மருத்துவ பொருட்களை கிடைப்பதை உறுதி செய்யும் இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக்கல் ஆர் போம்போ மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்குமிடையில் தொலைபேசி உரையாடல் மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே இந்துமா சமுத்திரத்தின் கட்டுப்பாடு, பிராந்திய அரசியல் மற்றும் கடல்சார் இராஜதந்திர செயற்பாடுகளில் இந்திய - அமெரிக்க உறவு நெருக்கமானது. தற்போதைய வைரஸ் நெருக்கடியில் முன்பிருந்ததை விட நெருக்கமான ஓர் உறவை இந்தியாவுடன் பேண அமெரிக்க முயல்கிறது.

கொரோனா பரவுகை தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு சீனா பதிலளிக்க தயக்கம் காட்டுகின்றமை.; உயிரிழப்பு குறித்த மாறுபட்ட எண்ணிக்கையை சீனா வழங்குகின்றமை.; சர்வதேச ஊடகங்களை சீனா வெளியேற்றியமை. போன்றன ஐரோப்பிய நாடுகளையும் சீனா மீது விசனம் கொள்ள வைத்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் மருத்துவ உதவி பொருட்களை கொள்வனவு செய்கின்ற போதிலும் சீனாவின் போலித்தன்மை மற்றும் வர்த்தக சூழ்ச்சிகளால் சீனாவிலிருந்து நிறுவனங்களை வெளியேற்ற தீர்மானித்துள்ளனர். சீனாவிற்கு நிகரான சந்தையை இந்தியாவே கொண்டுள்ளமையால் சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவில் அமைப்பதற்கே வாய்ப்பு உள்ளது. பிஸினஸ் ருடே பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் இந்தியாவிற்கு நிறுவனங்களை மாற்ற 1000இற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதுடன் 300இற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மிகுந்த ஈடுபாடுடன் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. கொரோனா பற்றிய சர்ச்சை நீடீப்பால் ஐப்பான் தனது நிறுவனங்களை உடனடியாக சீனாவிலிருந்து வெளியேறுமாறு கோரியுள்ளது. ஏற்படும் இழப்புகளுக்கு 200 கோடி வரை தருவதாகவும் கூறியுள்ளது. 

தரவுகள் கொரோனா கால சூழல்கள் 21ஆம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு தான் என்பதை தெளிவாக உர்ஜிதப்படுத்துகின்றது. எனிலும் இங்கு ஆசியாவில் பொருளாதார ரீதியாக ஆதிக்கத்தை நிலைநாட்டப்போவது வலதுசாரி இந்தியாவா? கொம்யூனிச சீனாவா? என்பதுவே போட்டி நிறைந்ததாக காணப்படுகின்றது. சீனாவை வீழ்த்த வலதுசாரி மேற்குலகு நாடுகள் யாவும் இந்தியா பக்கம் சேரினும் சீனா பலமாக தனது அடித்தளத்தை அரசியல் பொருளாதார ரீதியில் சர்வதேச நிறுவனங்களிலும் புதிய பட்டுப்பாதை திட்டத்திலும் அமைத்துள்ளமை சீனாவுக்கு ஓர் சாதாகமான தன்மையையே காட்டுகின்றது. ட்ராகன் உலகை விழுங்குமா என்பதை காத்திருப்பே பதில் சொல்லும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-