கொரோனா ஐ.நாவை பிளவுபடுத்துமா? -ஐ.வி.மகாசேனன்-

இரண்டாம் உலகப்போருக்கு பின்னரான உலக ஒழுங்கிற்கான மாற்றம் இன்னுமோர் உலகப்போர் ஏற்படுமாயினேயே சாத்தியம் எனப்பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. சமகாலத்தில் உலக நாடுகள் யாவிலும் பேரழிவை ஏற்படுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கமும் பெரும் போராகவே யாவராலும் அவதானிக்கப்படுகின்றது. இந்நிலையில் உலகப்போருக்கு பின்னர் ஏற்பட்ட உலக ஓழுங்கை முழுமையாய் மாற்றுவதற்கான வாய்ப்பை கொரோனா வைரஸின் தாக்கம் உருவாக்கியுள்ளதோ என்பதே சமகால சர்வதேச அரசறிவியலாளர்களின் தேடலாக காணப்படுகின்றது. அதற்கு வலுச்சேர்ப்பதாகவே சர்வதேச அமைப்புக்களின் அதிகார நிலைப்பாட்டில் ஏற்படும் மாற்றங்களும் நோக்கப்படுகின்றது. உலக சுகாதார அமைப்பின் சமீபகால அறிக்கைகள் யாவும் சீனா நலன் சார்ந்ததாகவே காணப்படுகின்றமை அதற்கான சான்றாகும். ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திலும் கொரோனா பரவுகைக்கு முன்னதாகவே சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டக்கூடிய ஏற்பாடுகளை செய்து வந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவிற்கு பின்னரான உலக ஓழுங்கில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தில் அமெரிக்காவின் அதிகார நிலையினை சீனா கைப்பற்றுமா? என்பதை தேடுதாகவே குறித்த கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உருவாக்கப்பட்ட சர்வதேச நிறுவனங்களில் முதன்மையானதாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் காணப்படுகின்றது. 1945ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் நிறைவுக்கு வந்திருந்த நிலையில் உலக ஒழுங்கில் கூட்டு நடவடிக்கைகளின் மூலம் ஆக்கிரமிப்புக்களை ஒடுக்குதல், சர்வதேச சட்டத்தின்படி நாடுகளுக்கிடையே ஏற்படும் தகராறுகளை தீர்த்து உலக அமைதியை ஏற்படுத்துதல், மக்களின் சம உரிமைகளையும் சுயநிர்ணய உரிமைகளையும் மதித்தல் உள்ளிட்ட இலக்குகளை வரித்து 1945ஆம் ஆண்டு ஒக்டோபரில் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. அவ்வாறே பின்னாளில் அதன் உபகூறுகளாய் வேறுபட்ட நோக்கங்களை மையப்படுத்தி பல சர்வதேச நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. எனிலும் உலக ஏகாதிபத்தியம் தனது ஏகாதிபத்திய நலனை நிலைநாட்டுவதற்காகவே ஐ.நா உட்பட அனைத்து சர்வதேச நிறுவனங்களை கையாண்டு வந்துள்ளது. பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற நூலை எழுதிய ஜான் பெர்கின்ஸ் தனது நூலில் சர்வதேச நிறுவனங்களை கையாண்டு அமெரிக்கா எவ்வாறு தனது ஏகாதிபத்தியத்தை நிலைநாட்டி வருகின்றது என்பதை இரத்தமும் சதையுமாக விபரித்துள்ளார்.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் காலனித்துவ உலக ஓழுங்கு மறைந்த சூழலில் ஏகாதிபத்தியம் தனது அதிகாரத்தை ஏனைய நாடுகள் மீது வலுவாக நிலைநாட்ட கையாண்ட ஊடகமாகவே ஐ.நாவும், ஏனைய சர்வதேச நிறுவனங்களும் காணப்படுகின்றன. 1889ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி வரை இருதுருவ அரசியல் ஒழுங்கில் ஐக்கியநாடுகள் ஸ்தாபனம் இரு துருவங்களுக்கிடையில் பயணம் மேற்கொண்டது. எனிலும் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின் ஏற்பட்ட அமெரிக்க தலைமையிலான ஒற்றைமைய அரசியலில் ஐ.நாவும் அதன் உப நிறுவனங்களும் முழுமையாக அமெரிக்காவின் விருப்பினை நிறைவு செய்யும் கட்டமைப்பாகவும் அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை பாதுகாக்கும் கவசமாகவும் பரிணாமம் பெற்றிருந்தது. அமெரிக்கா தனது எதிர் நாடுகள் மீது பொருளாதார தடைகளை விதிக்கவும், போர் தொடுக்கவும் ஓர் கூட்டு தன்மையை உறுதிப்படுத்தும் அமைப்பாகவே ஐ.நா செயற்பட்டு வருகின்றது. இடையிடையே ஐ.நா கூட்டுத்தன்மையை வழங்காத போது நேட்டோ என்ற கட்டமைப்பின் கூட்டுத்தன்மையுடன் எதிர்நாடுகள் மீது அமெரிக்கா போர் தொடுக்கையில் ஐ.நா பார்வையாளராகவே கடந்து செல்கிறது. அமெரிக்காவிற்கு எதிராக இறுக்கமான நடைமுறைகளை நகர்த்த முன்வருவதில்லை.

ஐ.நா முதலான சர்வதேச நிறுவனங்கள் செயற்றிறன் அற்றிருப்பதற்கு, சர்வதேச நிறுவனங்களின் உயர் நிர்வாக கட்டமைப்பில் வல்லரசு நாடுகள் உறுப்புரிமையை கொண்டிருப்பதும், சர்வதேச நிறுவனங்களின் இயக்கத்தின் பின்னணியில் வல்லரசு நாடுகளின் நிதிப்பங்களிப்பு செல்வாக்கு செலுத்துகின்றதுமே காரணமாக அமைகின்றது. ஜ.நா மற்றும் அதன் உப நிறுவனங்களிற்கான நிதிப்பங்களிப்பில் முதன்மையான நிலையை அமெரிக்க கொண்டுள்ளது. மேலும் தனது வலுவான வீட்டோ அதிகாரத்தின் மூலமும் பொருளாதார ரீதியாகவும் பல நாடுகளுக்கு உதவிகளை செய்து தன் பக்கம் பலமான அணியை கொண்டுள்ளமையே அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர காரணமாகியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை வீழ்த்தி விட பலமாக போராடும் சீனா, ஜ.நா மற்றும் அதன் உப நிறுவனங்களில் அமெரிக்காவின் முதன்மையை வலுவிழக்க செய்து தனது அதிகாரத்தை முதன்மைப்படுத்துவதற்கான செயற்பாடுகளை கொரோனா பரவுகைக்கு முன்னரே ஆரம்பித்து விட்டது. கொரோனா அதற்கு உரமாகி விரைவான அறுவடையை ஏற்படுத்துகின்றதா? என்பதுவே கட்டுரையாளரின் தேடலாக காணப்படுகின்றது.

1971ஆம் ஆண்டில் ஐ.நாவில் சீன மக்கள் குடியரசின் உறுப்புரிமைக்கு ஆதரவாக உறுப்பு நாடுகள் வாக்களித்தபோதுஇ 1 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டை விலத்தி வெளியே விடக்கூடாது என்பது பிரதான கருத்தாக காணப்பட்டது. சீனா விரைவில் சர்வதேச சமூகத்தில் சேர்க்கப்பட்டது. முன்னதாக அது சர்வதேச விதிமுறைகளுடன் விளையாடுவதைக் கற்றுக் கொள்ளும் வாதம் சென்றது. ஆயினும் சீனாவின் தற்போதைய நடவடிக்கைகள் வேறுவிதமாகக் குறிக்கின்றன. சர்வதேச விதிமுறைகளை உருவாக்கும் விளையாட்டில் சீனா தன்னை முதன்மைப்படுத்த முயலுகின்றது.
ஐ.நாவில் சீனா தன் பங்களிப்பை உயர்த்துவதன் மூலம் ஐ.நாவை கட்டுப்படுத்த முயலுகின்றது. ஐ.நாவிற்கான நிதி பங்களிப்பில் சீனா இப்போது இரண்டாவது பெரிய நாடாக அமைகின்றது. (ஐ.நாவின் 2020ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 12.005%). ஐ.நாவின் அமைதி காக்கும் நடவடிக்கைகளிலும் அதன் பங்களிப்பு உயரளவில் காணப்படுகின்றது. (29.02.2020 ஐ.நாவின் தரவின்படி 2550 களவீரர்கள்) நிதி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் உயரளவில் பங்களிப்பு செய்வதில் முதன்மையான நாடாக சீனா காணப்படுகின்றது. (சீனா பல சந்தர்ப்பங்களில் முழு முன்னணி எதிர்ப்பைத் தவிர்த்தது, இப்போது ஐ.நா. வரவுசெலவுத் திட்டத்தில் அதன் செல்வாக்கின் மூலம் தீர்மானம் எடுக்கையில் பின்பக்க நடவடிக்கைகளை விரும்புகிறது.) 

ஐ.நாவின் நிறுவனங்களில் சீனா தன் சார்பானவர்களை உயர் பதவிகளில் நிறுத்த முயலுகின்றது. 2007ஆம் ஆண்டு முதல், ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான (DESA-டெசா) பொதுச்செயலாளர் பதவி சீன தொழில் இராஜதந்திரிகளால் வகிக்கப்பட்டுள்ளது. இது ஐ.நாவின் அபிவிருத்தி திட்டங்களை அதன் நலன்களுக்கு ஏற்ப மறுவடிவமைக்க சீன அரசாங்கத்திற்கு வாய்ப்புகளை வழங்குகிறது. ஐ.நாவின் நிலைபேண் அபிவிருத்தி இலக்குகளின் (SDGs) போர்வையில் சீனா தனது பட்டி மற்றும் சாலையை (Belt & Road - BRI) ஊக்குவித்து வருவதாக ஒரு புதிய அமெரிக்க பாதுகாப்பு மையம் (Centre for New American Security - CNAS) தெரிவித்துள்ளது. ஐ.நாவின் நிலைபேண் அபிவிருத்தி இலக்குகளின் நோக்கங்களை பி.ஆர்.ஐ ஒரு உயர் மட்ட எண்ணக்கருவில் வழங்குகிறது என்று டெசாவின் தற்போதைய தலைவரான லியூ ஜென்மின் வெளிப்படையாகக் கூறினார். இலக்குகளை அடைவதில் பி.ஆர்.ஐ யின் விளைவை அங்கீகரிப்பதற்காக, சீனாவின் நிதியுதவி திட்டமானது ஐ.நாவின் நிலைபேண் அபிவிருத்தி இலக்குகளின் நோக்கங்களை நோக்கி பி.ஆர்.ஐ உடன் கூட்டாக உருவாக்குதல் திட்டத்தையும் டெசா ஒப்புதல் அளித்தது. மேலும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ், 2017 பட்டி மற்றும் சாலை மன்றத்தில் நிலைபேண் அபிவிருத்தி இலக்குகளினை அடைய பெய்ஜிங்குடன் ஐ.நா அமைப்பு தயாராக உள்ளது என்று உறுதியளித்தார்.

2019 ஆம் ஆண்டில் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (கFAO) ஒன்பதாவது இயக்குநரராக சீன வேட்பாளரான கியூ டோங்யூ தேர்ந்தெடுக்கப்பட்டார். க்யூ வின் வெற்றி பனிப்பாறையின் முனை மட்டுமே. ஐ.நா.வின் 15 சிறப்பு நிறுவனங்களில் 4 இல் அதன் தலைமையினை சீனா பெற்றுள்ளது. அத்துடன் சீன மூத்த அதிகாரிகள் தலைமையிலான ஏராளமான துணை அலுவலகங்கள், ஐ.நா.வில் சீனத் தலைமை மற்றும் சீனாவின் தேசிய நலன்களைப் பாதுகாத்து வருகிறது. கொரோனா தொற்று பரவுகை அதன் உருவாக்கத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான உயிர்களை அழித்துவிட்டது. சீனா வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவில்லை மற்றும் உலக சுகாதார நிறுவனம் சீன ஆதரவுடன் உண்மையை மறைத்து விட்டது என அமெரிக்க கடுமையாக சாடி வருகின்றது. செயலாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், உறுப்பு நாடுகள் சீனாவிலிருந்து பயணத்திற்கு தடை விதிக்கத் தேவையில்லை என்று பலமுறை பரிந்துரைத்தார். சீனாவின் தாமதமான கடும் நடவடிக்கைகளை பாராட்டினார். மேலும் அது ஒரு தொற்றுநோயாக மாறும் வரை வெடிப்பின் தீவிரத்தை குறைத்து மதிப்பிட்டார் என குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்பட்டுள்ளது. சில விமர்சகர்கள் உலக சுகாதார நிறுவனத்தை சீன சுகாதார அமைப்பு (CHO) என்று மறுபெயரிட்டும் விமர்சிக்கின்றனர். எனிலும் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் சீனா ஆதரவு நிலைப்பாட்டையே இறுக்கமாக தொடர்கின்றது. இதற்கு டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இன் பதவி நியமனத்தின் பின்ணனியில் சீனாவின் தலையீடு கடுமையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐ.நாவின் நிறுவனங்களில் சீனாவின் அதிகார கட்டமைப்பு காணப்படல் ஐ.நாவின் அதிகாரத்தை சீன பக்கம் சாய்க்க வலுவான காரணியாகிறது.

உறுப்பு நாடுகளை தன் பக்கம் இழுத்து அமெரிக்காவிற்கு எதிரான கூட்டை உருவாக்குவதில் சீனா முன்னின்று செயற்படுகின்றது. சீனா ஐ.நா.வின் தலைமைக்கு ஈடாக உறுப்பு நாடுகளுக்கு பொருளாதார சலுகைகளை வழங்குகிறது. 2019 ஆம் ஆண்டில் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் இயக்குநர் ஜெனரல் தெரிவில், கேமஷரூனிய அரசாங்கத்திற்கான ஆதரவு நிலைப்பாட்டில் கேமஷரூனிய அரசாங்கத்தால் செலுத்த வேண்டிய 78 மில்லியன் டாலர் கடனை சீனா குறைத்தது. எனிலும் பின்னர் அதன் வேட்பாளர் வேட்பாளர் தற்செயலாக தனது முயற்சியைத் திரும்பப் பெற்றார். தனது வீட்டோ அதிகாரத்தை உறுப்பு நாடுகளுக்கு ஆதரவாக பயன்படுத்தியும் வலுவான கூட்டை உருவாக்க சீனா முயல்கின்றது. ஐ.நாவின் தரவின் படி கடந்த சில ஆண்டுகளில் வீட்டோவை ரஷ்யாவை விட குறைவாக, ஆனால் ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் மேற்கத்திய நிரந்தர உறுப்பினர்களைக் காட்டிலும் அதிகமாக சீனா பயன்படுத்தியுள்ளது. மேலும் சமகாலத்தில் கொரோனா அபத்த காலத்தில் சுகாதார உதவிகள் மூலம் ஐ.நா உறுப்பு நாடுகளிடையே தனக்கான வலுவான கூட்டை உருவாக்கவும் முயலுகின்றது.

தைவான்-ஆசியா பரிவர்த்தனை அறக்கட்டளையில் உதவி ஆராய்ச்சி உறுப்பினராக உள்ள துங் செங்-சியா மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ள டாக்டர் ஆலன் எச். யாங் அவரர்கள் தி டிப்ளோமற் (The Diplomat) பத்திரிகையில் சீனா எப்படி ஐ.நாவை அதன் சொந்த படத்திற்கு மீள்பரிணாமம் செய்கிறது என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் ஐ.நாவில் வலுப்பெறும் சீனாவின் அதிகாரம், ஐ.நாவின் நடுநிலைக்கொள்வை சிதைவதாக கவலை கொள்கின்றனர். மறுதலையாய் அமெரிக்காவின் தலையீட்டை ஆதரித்தும் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் இலாபகரமாக அமெரிக்காவின் தலையீட்டால் சிதைக்கப்படும் ஜ.நாவின் கொள்கையை மறந்து விடுகின்றனர். இவ்வாறான ஓர் பக்க பார்வையிலேயே சீனா எதிர்ப்பாளர்கள் ஐ.நா மீதான சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பை நோக்குகின்றனரௌ. கொரோனா வைரஸ் தொற்றுக்கு முதலே சீனா ஐ.நாவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டக்கூடிய ஏற்பாடுகளை செவ்வனவே செய்து விட்டது. கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்த உள்ள உலக ஒழுங்கு மாற்றானது, துரிதமாக ஐ.நாவில் சீனாவின் அதிகார மையத்தை ஏற்படுத்துகின்றது என்பதே வெளிப்படையாகும். ஐ.நாவின் நடுநிலைக்கொள்கையை உறுதிப்படுத்த அவா கொள்வோர் சீனா மாத்திரமின்றி அமெரிக்காவின் தலையீட்டையும் களையக்கூடிய வகையில் சீர்திருத்தத்தை ஐ.நாவில் ஏற்படுத்த வேண்டும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-