ரணில், சஜித் தேர்தல் விஞ்ஞாபனங்கள் அதிகாரப் பகிர்வும் இல்லை! 13உம் முழுமை இல்லை! -சேனன்-

இலங்கை தேர்தல் பற்றிய வாதப்பிரதிவாதங்கள் தேர்தல் பிரச்சாரங்களுடன் கொதிநிலையை உருவாக்கி வருகின்றது. இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டவராகவும், மீட்கக்கூடியவர்களாகவும் தென்னிலங்கையின் ஜனாதிபதி வேட்பாளர்கள் பொருளாதார நிபுணர்களாக தேர்தல் மேடைகளை அலங்கரித்து வருகின்றார்கள். மாறாக இலங்கையின் பொருளாதார பிரச்சினைகளுக்கு அடிப்படையான அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் போதிய உரையாடலை முன்வைக்க தவறுகின்றார்கள். தேசிய இனப்பிரச்சினையை வடக்கு-கிழக்குடனேயே மட்டுப்படுத்தியுள்ளார்கள். தென்னிலங்கைக்கு சேவகம் செய்ய துடிக்கும் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்டவர்கள், தமிழ்ப் பொதுவேட்பாளர் ஏற்படுத்தியுள்ள தமிழ்த்தேசிய எழுச்சியால், தென்னிலங்கையை ஆதரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையிலேயே தென்னிலங்கை வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை மதிப்பீடு செய்து முடிவெடுப்பதாக தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஆ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது. இக்கட்டுரை தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் தேசிய இனப்பிரச்சினை தீர்வு சார்ந்து முன்வைக்கப்பட்டுள்ள உள்ளடக்கங்களை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட்-28அன்று இலங்கையின் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவரது தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,  'ரணிலுடன் இணைந்து நாட்டை வெல்வதற்கான ஐந்தாண்டுகள்' என்ற தொனிப்பொருளில் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார். தேரவாத வர்த்தகப் பொருளாதாரம், 2025இற்கு அப்பால் செல்லும் செயல்முறை,  ஒளிமயமான சமுதாயத்தை நோக்கி, வெற்றிபெறும் தாய்நாடு, ஒன்றிணைந்த இலங்கை ஆகிய 5 பிரதான விடயங்களை இந்த தேர்தல் விஞ்ஞாபனம் உள்ளடக்கியுள்ளது. அவ்வாறே ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, 'சகலருக்கும் வெற்றி' எனும் தொனிப்பொருளில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் பிரதம மகாநாயக்க தேரர்களுக்கு கைளியத்து தேர்தல் விஞ்ஞாபனத்தை கண்டியில் வெளியிட்டுள்ளார். வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல், அனைத்துப் பிரஜைகளையும் வலுப்படுத்தல், அரச துறையை மேம்படுத்தல், வாழ்க்கைத் தரத்தை பாதுகாத்தல், தேசிய பாதுகாப்பு என்றவாறு ஐந்து பிரதான தலைப்புக்களுக்குள் தேர்தல் விஞ்ஞாபன உள்ளடக்கங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கையின் பிரதான இரு வேட்பாளர்களும் அடிப்படையில், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பொருளாதார நிபுணர்களாக தம்மை அடையாளப்படுத்துவதிலேயே தேர்தல் விஞ்ஞாபன உருவாக்கத்தில் கவனம் செலுத்தியுள்ளார்கள். அரசியல் பிரச்சினையை இறுதிப்பகுதிக்கே நகர்த்தியுள்ளார்கள். ஈழத்தமிழர்களின் அரசியலில் முதன்மையான விவாதப்பொருளாகியுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுசார் வாதம், தென்னிலங்கை அரசியலில் இறுதி நிலையில் உள்ளமையையே தேர்தல் விஞ்ஞாபனங்களின் உள்ளடக்க கட்டமைப்பு உறுதிசெய்கின்றது. இந்த பின்னணியில் தேர்தல் விஞ்ஞாபனங்களில் தேசிய இனப்பிரச்சினை தீர்வுப்பொதி தொடர்பில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை அவதானித்தல் அவசியமாகின்றது.

ஒன்று, ரணில் விக்கிரமசிங்காவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒன்றிணைந்த இலங்கை என்ற தலைப்பின் கீழான உள்ளடக்கங்களிலேயே தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுசார்ந்த விடயங்கள் உரையாடப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலேயே குறிப்பிட்டுள்ளார். இரண்டரை வருடங்கள் நிறைவேற்றுத்துறையை முழுமையாக அனுபவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஏற்கனவே அரசியலமைப்பில் காணப்படும் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு புதியதொரு வாய்ப்பை கோருவது, ஈழத்தமிழர்களினை தொடர்ச்சியாக முட்டாளாகா கருதும் செயலாகவே அமைகின்றது. 13வது திருத்தம் தொடர்பில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயமாவது;

'அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் நாம் முன்வைத்துள்ள பிரேரணைகளின் அடிப்படையில்;

1. அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்போம். தற்போது மத்திய அரசாங்கத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அட்டவணை 1இன் கீழ் வரும் மாகாண சபைகளின் அதிகாரங்கள் மீண்டும் மாகாண சபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

2. பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதற்கான தீர்மானம் புதிய பாராளுமன்றத்தினால் தீர்மானிக்கப்படும்.

3. கட்சித் தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்ட அட்டவணை 3இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படும்.'

பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தை பாரப்படுத்துவது, ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தினூடாக பாராளுமன்ற தேர்தல் ஆதரவையும் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளமையையே வெளிப்படுத்துகின்றது. தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கு பள்ளிக் கல்வி, தொழில் பயிற்சி, பட்டம் வழங்கும் நிறுவனங்கள் (தேவைப்பட்டால், பின்னர் பல்கலைக்கழக நிலைக்கு மேம்படுத்தும் திறனுடன்), மாகாண சுற்றுலா மேம்பாடு, விவசாய நவீனமயமாக்கல் தொடர்பான பகுதிகள் வழங்குப்படும் எனவும், இவை தொடர்பாக தேவையான சட்டங்கள் இயற்றப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 'மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை அமைக்க நடவடிக்கை எடுப்போம். சிங்களவர், தமிழ், முஸ்லீம், மலாய், பூர்வகுடி அல்லது பிற சமூகம் எதுவாக இருந்தாலும், வௌ;வேறு கருத்துக்கள் இருந்தபோதிலும் ஒரு தேசத்தின் உறுப்பினர்கள் என்ற வகையில் சுதந்திரமாகச் செயல்படும் உரிமை ஒவ்வொரு சமூகத்திற்கும் உண்டு. மத்திய அரசாங்கத்திடம் இருந்து மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் வகையில் புதிய சட்டங்கள் உருவாக்கப்படும். இது 2025ஆம் ஆண்டில் உள்ளூராட்சி முறைமையை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நகர சபைகளை மறுசீரமைத்து மாநகர சபைகளாக தரமுயர்த்துவோம். பிரதேச சபைகள் மற்றும் மாநகர சபைகள் ஊடாக அதிகாரத்தை நிறைவேற்றும் முறைமை அறிமுகப்படுத்தப்படும்' என அதிகாரப்பகிர்வின் உள்ளூராட்சி சபை மட்டம் விபரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய அரசியலமைப்புக்கான முயற்சியும் ரணில் விக்கிரமசிங்காவில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் உள்ளடக்கங்கள் பற்றி பாரிய விளக்கத்தை அளிக்காத போதிலும், பாராளுமன்றத்தின் இரண்டாவது சபை உருவாக்கப்படுவது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவது அரச சபையானது அரசியலமைப்பு சபையின் அறிக்கையின்படி மாகாண சபை மற்றும் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளைக் கொண்டுள்ளது. அரசியலமைப்பு மற்றும் ஏனைய சட்டங்களினால் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நிறைவேற்றுவதை மேற்பார்வை செய்யும் பொறுப்பு இந்த சபைக்கு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு, சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் இறுதிப்பகுதியான தேசிய பாதுகாப்பு எனும் பகுதியில் ஷஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துதல்' எனும் தலைப்பின் கீழ் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுப்பொதி சார்ந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாசவும் 13வது திருத்த நடைமுறையாக்கத்தையே தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக பிரேரித்துள்ளார். தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயமாவது; 

'மதத் தலைவர்கள், பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் ஆகியோரிடமிருந்து முறையாக கருத்துக்களைப் பெற்று, தற்போதைய அரசியலமைப்பை மாற்றி புதிய அரசியலமைப்பை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தி/ ஐக்கிய மக்கள் கூட்டணி அர்ப்பணிப்புடன் உள்ளது. இந்த செயல்முறையில், எமது கொள்கை என்னவென்றால், தற்போதைய அரசியல் முறையை ஒரே நாட்டுக்குள் 13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில், அதிகபட்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய பாராளுமன்ற முறைமைக்கு மாற்றுவதாகும். 

முடிவெடுக்கும் செயல்முறையில் குடிமக்களை செயலில் கிராம அரசு மற்றும் நகர அரசு எனப்படும் சமூக அடிப்படையிலான ஜனநாயக நிறுவனங்கள் உருவாக்கப்படும். 

புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்படும் வரை, 13வது திருத்தம் உட்பட தற்போதைய அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. அரசியலமைப்பு மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை ஜனாதிபதியினால் ஒருதலைப்பட்சமாக மீண்டும் பொறுப்பெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை வலுப்படுத்தி, மாகாண சபைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவோம்.'

என்றவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு, உயர்ந்தபட்ச அதிகாரப்பகிர்வு எனும் சொற்கள் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள போதிலும், அதன் உள்ளடக்கங்களையும் 13வது அரசியலமைப்பின் அடிப்படையில் கட்டமைக்க உள்ளதாகவே குறிப்பிட்டுள்ளார். 13வது திருத்தத்தின் தற்போதைய வடிவம் என்பதும் பாரிய சச்சரவானதாகவே அமைகின்றது. 1987ஆம் ஆண்டு வடிவத்திலிருந்து ரணசிங்க பிரேமதாசா முதல் காலத்திற்கு காலம் வந்த அரசாங்கங்களால் 13இன் உள்ளடக்கங்கள் பலவும் நீக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இது தொடர்பில் பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய குறைநிரப்பு வடிவத்தை வழங்குவது தொடர்பிலேயே சஜித் பிரேமதாசவின் தீர்வுப்பொதி அமைகின்றது.

ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதசாவின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் கடந்த 37ஆண்டு அரசியல் ஏமாற்றத்தை தொடரும் யுக்தியையே கையாண்டுள்ளது. 13வது திருத்தம் பிறக்கையிலேயே உயிரற்று மரணித்தே பிறந்திருந்தது. கடந்த 37ஆண்டுகளாக இறந்த தீர்வுப்பொதியை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரப்பகிர்வு என்பது மீளப்பெறமுடியாத சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழர்களின் மரபுவழி தாயகத்தை ஏற்றுக்கொள்வதாக அமைய வேண்டுமென்பதுவே ஈழத்தமிழர்களின் தொடர்ச்சியான கோரிக்கை ஆகும். 13வது திருத்தம் என்பது 1987ஆம் ஆண்டு அரசியலமைப்பில் இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட விடயமாகும். அதனை நடைமுறைப்படுத்துவதை தேசிய இனப்பிரச்சினை தீர்வாகவும், தமிழர்களின் சகவாழ்வுக்கான ஏற்பாடாகவும் தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்கள் பிரேரிப்பது, தொடர்ச்சியாக ஈழத்தமிழர்களை உதாசினப்படுத்தும் யுக்தியாகவே அமைகின்றது. 13வது திருத்தம் நடைமுறையிலிருக்கும் காலப்பகுதியிலேயே 2009ஆம் ஆண்டு இனப்படுகொலையில் தமிழ் மக்கள் கொத்தாக கொல்லப்பட்டுள்ளார்கள். மரபுவழி தாயகத்தை அரச இயந்திர ஆக்கிரமிப்பினூடாக தொடர்ச்சியாக இழந்து கொண்டு சென்றுள்ளார்கள். இதனை தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுப்பொதியாக தென்னிலங்கையின் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் முன்வைப்பதன் பின்னால் ஈழத்தமிழர்களின் அரசியல் பலவீனங்களும் காரணமாக அமைகின்றது.

2009ஆம் ஆண்டுக்கு பின்னரான தென்னிலங்கை அரசாங்கங்கள் ஈழத்தமிழ் அரசியல் பிரதிநிதிகளுடன் 13வது திருத்தத்தை மையப்படுத்தியே உரையாடி வருகின்றார்கள். அதனை ஏற்றுக்கொண்டு சகவாழ்வு வாழலாம் என்ற பிரச்சாரங்களுடனேயே ஈழத்தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் கடந்த 15 ஆண்டு கால இலங்கை அரசாங்கங்கங்களுடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வந்துள்ளனர். உயர்ந்தபட்சமாக 2015-2019 ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கத்தின் அரசியலமைப்பு முயற்சியில் பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட ஏக்கிய இராச்சிய வரைபை தமிழ் அரசியல் பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டனர். அதில் மாவட்ட அபிவிருத்திக்குழுக்களை உருவாக்குவது மற்றும் உள்ளூராட்சி அதிகார மட்டங்களுக்கு மத்திய அரசின் நெறியாள்கையில் அதிகாரங்கள் பகிர்வதையே பிரதான உள்ளடக்கமாக கொண்டிருந்தது. அதனை ஈழத்தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டிருந்தனர். அந்த பின்னணியிலேயே தற்போது ரணில் விக்கிரமசிங்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளூராட்சி கட்டமைப்புக்களுக்கு அதிகாரங்கள் பகிர்வது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறே சஜித் பிரேமதாசவிற்கு ஈழத்தமிழர்களின் வாக்குகள் தேவைப்படுகின்ற போதிலும், 13வது திருத்தத்துடன் மட்டுப்பவதற்கு சுமந்திரன் போன்ற ஈழத்தமிழரசியல்வாதிகள் அளித்துள்ள கடந்த கால நம்பிக்கைகளே உந்துசக்தியாக அமைகின்றது. 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை ஈழத்தமிழர்கள் கையாள்வது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒழுங்குபடுத்தலில் மேற்கொள்ளப்பட்ட தமிழ்க் கட்சிகளின் கூட்டுத்தீர்மானத்தில், சமஷ்டியை வலியுறுத்தி 13 அம்ச கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எனினும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அம்முயற்சியை நிராகரித்து, எத்தகைய உறுதியான தீர்வையும் பரிந்துரைக்காத சஜித் பிரேமதாசவை ஆதரித்திருந்தனர். 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் தமிழ் மக்கள் தமது தேசிய அபிலாசைகளை முன்னிறுத்தும் மூலோபாய நகர்வான தமிழ்ப் பொதுவேட்பாளரை நிராகரித்து, தென்னிலங்கை வேட்பாளர்களையே ஆதரிக்க வேண்டுமென்ற உறுதியுடன் சுமந்திரன்-சாணக்கியன் உள்ளார்கள். இத்தகைய ஈழத்தமிழ் அரசியல்வாதிகளின் பலவீனமான இயல்புகளினாலேயே தென்னிலங்கை அரசியல்வாதிகள் ஈழத்தமிழர்களை இலகுவாக கையாளலாம் என்ற முனைப்புடனேயே தொடர்ச்சியாக செயற்படுகின்றார்கள்.

ஏற்கனவே அரசியலமைப்பில் காணப்படுவதும், தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டதுமான 13வது திருத்தத்தையே ஈழத்தமிழர்களின் அடிப்படை தீர்வாக தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்கள் வழங்கியுள்ள போதிலும், இதனை ஆதரித்து பிரச்சாரம் செய்யவும் ஈழத்தமிழரசியலில் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட முகாம்களிலிருந்து சில தென்னிலங்கை சேவக அரசியல்வாதிகள் முயலலாம். கடந்த காலங்களில் ஏக்கிய இராச்சியத்துக்குள் சமஷ்டி பண்புகளை விபரித்த மேதாவிகள் ஈழத்தமிழரசியலில் அதிகமாக உள்ளனர். கதிரை அரசியலுக்காக அவர்களுக்கு சேவகம் செய்யும் தொண்டர்களும் காணப்படவே உள்ளார்கள் என்பதுவே ஈழத்தமிழரசியலின் அவலாகும். தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் தமிழ்ப் பொதுவேட்பாளரை நிராகரித்து, ஆளுநரின் வழியில் ஜனாதிபதியிடம் மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்பட்ட ஒற்றையாட்சி 13வது திருத்தத்திற்கு ஆதரவாக மேடையேறுவது, ஈழத்தமிழரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கு செய்யும் பெருந்துரோகமாகும்.

எனவே, தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்ச்சியாக ஈழத்தமிழர்களின் அரசியல் கோரிக்கையை உதாசினப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தென்னிலங்கையில் போட்டி அதிகமாக காணப்படுவதனால், சிறுபான்மை தேசிய இனங்களின் வாக்கு செல்வாக்கு செலுத்தக்கூடியதென்பது பரவலாக உரையாடப்பட்டு வருகின்றது. தென்னிலங்கை வேட்பாளர்களில் நல்ல சாத்தானை தேடியவர்களும் அவ்வாறான கருத்தை முன்வைத்தே, தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழ் மக்களின் வாக்குகளை வீணடிப்பதாக கருத்துரைத்திருந்தார்கள். எனினும் தென்னிலங்கை பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களை உதாசீனப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. தமிழ் மக்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்பை நிராகரித்து சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி வருகின்றனர். எனினும் தமிழ் மக்களின் வாக்குகளை கோரும் தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்கள் இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பினுள ஏற்கனவே காணப்படும் 13ஆம் திருத்தத்தை மீள நடைமுறைப்படுத்துவது தொடர்பில் குறிப்பிட்டுள்ளது. இது தென்னிலங்கை தமிழர்கள் மீது கரிசணையற்றவர்கள் என்பதையே மீளவும் உறுதிசெய்துள்ளது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-