இலங்கையின் பாரம்பரிய அரசியல் தரப்பின் தோல்வி; அநுரகுமார திசாநாயக்கவை பலப்படுத்துகிறதா? -சேனன்-
இடதுசாரி விம்பத்தை கொண்டதொரு அரசியல் கூட்டணி, இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் ஒரு வலுவான போட்டியாளராக வெளிப்பட்டுள்ளது. ஜே.வி.பி புரட்சி குழுவாக ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், 1982ஆம் ஆண்டு முதலாவது ஜனாதிபதி தேர்தலை அதன் ஸ்தாபக தலைவர் ரோஹண விஜயவீர எதிர்கொண்டிருந்தார். எனினும், 4.19சதவீத வாக்குகளையே பெற்றியிருந்தார். இலங்கையின் முன்னோடியில்லாத அரசியல் பொருளாதார நெருக்கடி, பாரம்பரிய அரசியல் கட்சிகள் மீது ஏமாற்றத்தை ஏற்படுத்திய போது, மில்லியன் கணக்கான மக்கள் அழைப்பு விடுத்த மாற்றத்தின் முகவராக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தேசிய மக்கள் சக்தியின் விம்பத்தில் அறிவித்துக்கொண்டுள்ளார். அநுரகுமார திசாநாயக்க Associated Press ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில், 'எங்கள் நாட்டு மக்கள் ஒரு மாற்றத்திற்காக பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். அவர்கள் ஒரு மாற்றத்தை விரும்பினர். நாங்கள் அந்த மாற்றத்தின் முகவர்கள். மற்ற அனைத்து வேட்பாளர்களும் பழைய, தோல்வியுற்ற, பாரம்பரிய அமைப்பின் முகவர்கள்' எனக்குறிப்பிட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரமும் மாற்றத்தின் முகவர்களாகவே முதன்மைப்படுத்தப்படுகின்றது. இக்கட்டுரை தேசிய மக்கள் சக்தியின் எழுச்சிக்கு வாய்ப்பை உருவாக்கி கொடுத்த களச்சூழலை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி கடந்த 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் 3.84சதவீத வாக்குகளுடன் மூன்றாம் நிலையை பெற்றிருந்தது. ஆளுந்தரப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 59.09சதவீத வாக்குகளை பெற்றிருந்ததுடன், பிரதான எதிர்க்கட்சியை பெற்றிருந்த ஐக்கிய மக்கள் சக்தி 23.90சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. நான்கு ஆண்டு கால இடைவெளியில் இலங்கை மக்களிடையே முரண் நிலையான எதிர்பார்ப்பு மாற்றம் உருவாகியுள்ளது. மூன்றாம் நிலையினை பெற்றிருந்த தேசிய மக்கள் சக்திகளின் தலைவர் அநுரகுமார திசாநாயக்காவின் ஜனாதிக்கான வெற்றி வாய்ப்பு அதிகளவில் எதிர்வுகூறப்படுகின்றது. முதல் நிலையினை பெற்றிருந்த ஸ்ரீலங்க பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சா கட்சியின் இருப்பை பாதுகாப்பதற்கான வேட்பளராக களமிறக்கப்பட்டுள்ளார். பிரதான எதிர்க்கட்சி தொடர்ச்சியாக இரண்டாம் நிலையில தொடரக்கூடிய சூழலையே கருத்துக் கணிப்பு முடிவுகளும், ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி தென்னிலங்கையில் எழுந்துள்ள வாதங்களும் உறுதி செய்கின்றது.
அண்மையில் குருணாகல் மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில், பார்வையாள் ஒருவர் சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்காவிடம், 'நாம் சிறுகாலம் முதல் கண்டுள்ளோம். ஆளும் கட்சி மற்றுமு; வலுவான எதிர்க்கட்சி இருக்கும். ஜே.வி.பி என்பது இலங்கைக்குள் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திய கட்சி. திடீரென இந்தக் கட்சி திசைகாட்டி என வருகின்றது. இந்தளவு போராட்டம், அலை ஒன்று ஏற்படக் காரணம் என்ன?' என கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதலளித்த ரணில் விக்கிரமசிங்க, 'வழமையான எதிர்க்கட்சியால் முறையாக செயற்பட முடியாமல் போனதாலேயே திசைகாட்டி முன்னேறியது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா ஒருபோதும் வேறொரு கட்சி முன்னேற்றமடைவதற்கு இடமளித்திருக்க கூடாது. டட்லி சேனநாயக்க, பண்டாரநாயக்க அம்மையார், ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, மகிந்த ராஜபக்ச மற்றும் நான் அதற்கு இடமளிக்கவில்லை. நீங்கள் ஒரு எதிர்க்கட்சி தலைவராக இருந்து கொண்டு மற்றுமொரு கட்சி முன்வர இடமளிப்பீர்கள் என்றால் என்ற செய்வது?' என்றவாறு குறிப்பிட்டிருந்தார்.
ரணில் விக்கிரமசிங்க தேர்தல் பிரச்சார களத்தில் தனது நிலையை உயர்த்தி பேசி உள்ள போதிலும், நடைமுறையில் ரணில் விக்கிரமசிங்காவிற்கு சவால்மிக்கவராகவே அநுரகுமார திசாநாயக்கவின் எழுச்சி அடையாளப்படுத்தப்படுகின்றது. கடந்த எட்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும், நாட்டின் இரண்டு முக்கிய அரசியல் முகாம்களான மத்திய இடது பாரம்பரியமான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) மற்றும் மத்திய வலது பாரம்பரியமான ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அல்லது அவற்றின் அரசியல் கிளைகள் தலா ஒரு வேட்பாளரை நிறுத்தி உள்ளன. இருமுனை போட்டியாக தேர்தல் நகர்த்தப்பட்டுள்ளது. எனினும் பாரம்பரிய கட்சிகளின் சிதைவும், தவறுகளும் மற்றும் பாரம்பரிய அரசியல் கலாசாரத்தில் ஏற்பட்ட குறைபாடுகளுமே முறைமை மாற்ற கோரிக்கை அனுரகுமார திசாநாயக்கவை பலப்படுத்தியுள்ளது எனலாம். இதனை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது.
முதலாவது, அரகலயவினை ரணில் விக்கிரமசிங்க தோற்கடித்தமை, அநுரகுமார திசாநாயக்காவின் மாற்றத்திற்கான கோரிக்கையை வலுப்படுத்துகின்றது. இலங்கையில் ஏற்பட்ட அரகலயவின் இயல்புகளுடன், பங்களாதேஷpல் ஏற்பட்ட புரட்சியும் விளைவும் ஆட்சி மாற்றத்தை உறுதிப்படுத்தியிருந்தது. பங்களாதேஷ; பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியதுடன், முழுமையான அரசாங்கமும் வலுவிழந்துள்ளது. எதிர்க்கட்சி முழுமையான ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. பிரதம ஆலோசகர் கலாநிதி முகமட் யூனுஸ் தலைமையில் ஆட்சி இடம்பெற்று வருகின்றது. முன்னாள் பிரமதர் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு விசாரணைக்கான முனைப்புக்களும் இடம்பெற்றுள்ளது. பங்களாதேஷ; பாகுபாட்டுக்கு எதிரான மாணவர் இயக்கத்தின் போராட்டம் சரி பிழை என்ற வாதங்களுக்கு அப்பால், போராட்டம் ஆட்சி மாற்றத்தையும், கடந்த கால தவறுகளுக்கு கடந்த கால ஆட்சியாளர்களுக்கு எதிரான நீதி விசாரணைகளை முன்னெடுப்பதனூடாக முழுமை பெற்றுள்ளது. எனினும் அரகலய ராஜபக்சாக்களை குறுகிய காலத்துக்கு வெளிப்படையான அரசியல் அதிகாரத்திலிருந்து வெளியேற்றியிருந்தது என்றவாறே விளக்க முடியும். முழுமையான ஆட்சி மாற்றத்தையோ, இலங்கை அரசின் பொருளாதார வங்குரோத்துக்கு காரணமானவர்களை நீதிக்கு முன்னால் நிறுத்தும் பொறிமுறையையோ சாத்தியப்படுத்தியிருக்க முடியவில்லை. இது அரகலயின் தோல்வியையே உறுதிசெய்கின்றது. இத்தோல்வியை ஏற்படுத்தியவராக, கோத்தபாய ராஜபக்சாவின் வெளியேற்றத்தை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்கவே காணப்படுகின்றார்.
இரண்டாவது, அரகலய போராட்டத்தின் விளைவாக ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய ரணில் விக்கிரமசிங்க, அரகலயவின் கோரிக்கைகளை உள்வாங்கமால், அதனை அரச இயந்திரத்தினூடாக மிலேச்சத்தனமாக அடக்கியிருந்தார். கோத்தபாய ராஜபக்சாவின் அரசாங்கத்தில் பொருளாதார வங்குரோத்துக்கு காரணமான சட்ட உருவாக்கங்களுக்கு ஆதரவு வழங்கிய பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் தலைவராகவே ரணில் விக்கிரமசிங்க கடந்த இரண்டரை வருட ஜனாதிபதி பதவியை தக்கவைத்திருந்தார். கோத்தபாய ராஜபக்ச அரசாங்கத்தில் நீதியமைச்சராக இருந்த அலிசப்ரி, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராக செயற்பட்டிருந்தார். இதுவே ரணில் விக்கிரமசிங்கவின் உயர்ந்தபட்ச ஆட்சி மாற்றமாக அமைந்திருந்தது. மேலும், மக்கள் பொருட்களின் விலை உயர்வு சார்ந்த நெருக்கடிகளை அனுபவிக்கும் அதேவேளை வங்குரோத்துக்கு காரணமான அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சலுகைகக்குள்ளேயே வாழ்ந்திருந்தார்கள். நாட்டைவிட்டு வெளியேறிய கோத்தபாய ராஜபக்சாவின் வெளிநாட்டு பிரயாணச் செலவுகளை அரசாங்கமே ஏற்றிருந்தது. போராட்டக்காரர்களால் அடித்து உடைத்து எரிக்கப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதிகளின் வீடுகளை திருத்துவதற்கான செலவு அரச நிதியிலேயே வழங்கப்பட்டிருந்தது. உயர்ந்தபட்சமாக தேர்தல் காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறுவதற்காக மதுபானசாலை உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றது. ஒட்டுமொத்தத்தில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமும் அரச நிதியை மக்கள் நலனுக்கு வெளியே செலவு செய்வதிலும், ஊழல் நடவடிக்கைகளுக்கு துணைபோவதாகவே அமைந்திருந்தது.
மூன்றாவது, அரகலய எதிர்பார்த்திருந்த நீதியும் கிடைக்கப் பெற்றிருக்கவில்லை. ஆட்சி மாற்றத்தையும் ஜனநாயக மறுசீரமைப்பையும் கோரியிருந்த போராட்டக்காரர்கள் மீதே நீதி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. எனினும் நாட்டின் பொருளாதார வங்குரோத்துக்கு காரணமானவர்களுக்கு எத்தகைய நீதிப்பொறிமுறையும் மேற்கொண்டிருக்கவில்லை. நாட்டின் பொருளாதார வங்குரோத்திற்கு ராஜபக்சாக்கள் மீது குற்றம் சுமத்தி, கல்வியாளர்கள் மற்றும் சிவில் உரிமை ஆர்வலர்கள் தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பில் தீர்ப்பளித்திருந்த உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அவை, 'இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட பலம் வாய்ந்த ராஜபக்ச சகோதரர்கள் பொருளாதாரத்தை தவறாகக் கையாண்டதன் மூலம் இலங்கைத்தீவின் மோசமான நிதி நெருக்கடியைத் தூண்டியதற்காக குற்றவாளிகள்' என அடையாளத் தீர்ப்பை வழங்கியிருந்தது. எனினும் அதுதொடர்பில் கூட உரிய நடவடிக்கைகளை நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டிருக்கவில்லை. கடந்த இரண்டரை வருட காலமும் ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்ச விக்கிரமசிங்கவாக செயற்பட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டுக்களே பொதுவெளியில் காணப்படுகின்றது.
நான்காவது, ரணில் விக்கிரமசிங்க தேர்தல் மேடைகளில் பொருளாதாரத்தை சீர்படுத்தியதாக பிரச்சாரம் செய்கின்ற போதிலும், நடைமுறையில் பொருளாதார நெருக்கடியின் விளைவுகளுக்குள்ளேயே சாதாரண மக்கள் வாழ்கின்றார்கள். கொள்கைப் பகுப்பாய்விற்கான நிலையத்தின் கருத்துக்கணிப்பில், 54.5சதவீதமான மக்கள் 2022ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்தததை விட தங்கள் பொருளாதார நிலை மோசமடைந்துள்ளதாகவே தெரிவித்துள்ளார்கள். 45சதவீனமானவர்கள் குடும்ப பொருளாதார நிலை மேம்பட்டுள்ளது அல்லது அதேநிலை நிலையில் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர். 3 பில்லியன் டாலர் சர்வதேச நாணய நிதியத் திட்டத்தால் வடிவமைக்கப்பட்ட தனது அரசாங்கத்தின் தற்போதைய பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கான ஆணையை ரணில் விக்கிரமசிங்க நாடியுள்ளார். அவரது ஆதரவாளர்கள் சாலைகளில் இருந்து எரிபொருள் வரிசைகளை அகற்றி, சில நிதி நிலைத்தன்மையை கொண்டு வந்ததற்காக அவருக்கு பெருமை சேர்க்கின்றார்கள். எனினும், வலிமிகுந்த சிக்கன நடவடிக்கைகளை மறைக்கின்றனர். எரிசக்தி மற்றும் எரிபொருள் விலைகள் இரட்டிப்பாகி உள்ளன. மறைமுக வரிகள் 18சதவீதமாக உயர்ந்துள்ளன. பொருட்களை கண்டுபிடிப்பது இப்போது கடினமாக இல்லை. ஆனால் அதனை வீட்டுக்கு கொண்டுவருவதிலேயே மக்கள் சிரமப்படுகின்றார்கள்.
ஐந்தாவது, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, எதிர்க்கட்சிக்குரிய வகிபாகத்தை செய்ய தவறியுள்ளமையும், அவ்விடத்தை தேசிய மக்கள் சக்தி நிரப்பியுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பலவீனத்திலிருந்தே அடையாளப்படுத்த வேண்டி உள்ளது. ஜனநாயக அரசியல் களத்தில் எதிர்க்கட்சியின் அரசியல் வகிபாகம் முக்கியமானதாகும். அது அரசாங்கத்தின் நிழல் அரசாங்கமாக செயற்பட வேண்டிய கட்டமைப்பாகும். அரசாங்கம் மக்கள் விரோத அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்குகையில் அதனை தடுத்து நிறுத்தக்கூடியதாகவும், அரசாங்கத்தின் மக்கள் நலன் செயற்பாடுகளுக்கு பலம் சேர்ப்பதாகவும் அமைதல் வேண்டும். எனினும் நடைமுறையில் ஐக்கிய மக்க் சக்தியிடம் அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் நிலைப்பாட்டை ஒன்றுசேர்க்கக்கூடிய ஆளுமை அடையாளப்படுத்தப்பட்டிருக்கவில்லை. 2022ஆம் இலங்கை அரசின் பொருளாதார வங்குரோத்து நிலைக்கு அரசாங்கத்தை காரணங்காட்டி மக்கள் போராட்டம் வலுப்பெறுகையில், அதனை எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தியால் ஒருங்கிணைத்திருக்க முடியவில்லை. அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் எதிர்ப்பை வேடிக்கை பார்க்கும் நிலையிலேயே பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி காணப்பட்டது. அதனை பயன்படுத்தியே பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை பெற்றிருந்த ரணில் விக்கிரமசிங்க ஆட்சியை கைப்பற்றிக்கொண்டார். அதேவேளை மூன்றாம் நிலையிலிருந்த தேசிய மக்கள் சக்தி அரகலயவின் மாற்றத்திற்கான கோரிக்கையை தனக்கு சாதகமாக்கி கொண்டு எழுச்சியடைந்துள்ளது.
எனவே, அநுரகுமார திசாநாயக்க சார்ந்த அதிர்வலையின் எழுச்சி, இலங்கையின் பாரம்பரிய அரசியலின் தோல்வியின் விளைவாகவே அமைகின்றது. பாரம்பரிய அரசியல் இயல்புக்குள் ஒன்றை விட்டால் மற்றொன்று என்ற எண்ணங்களுக்குள் தென்னிலங்கையின் பிரதான கட்சிகள் மக்களின் நலன்களையும் கோரிக்கைகளையும் உதாசீனப்படுத்தியிருந்தார்கள். தென்னிலங்கை மக்களின் தன்னார்வ எழுச்சியில் கட்டமைக்கப்பட்ட அரகலயவை உதாசீனப்படுத்தியிருந்தார்கள். இது அநுரகுமார திசாநாயக்கவிற்கான வாய்ப்பான களத்தை உருவாக்கியுள்ளது. ஆட்சி மாற்றம், அரசாங்க மாற்றம் என்ற பிரச்சாரங்கள் களையப்பட்டு அமைப்பு மாற்றம் முதன்மையை பெற்றது. அமைப்பு மாற்றம் என்பது பாரம்பரியத்தை நிராகரிப்பதாகவே அமைகின்றது. பாரம்பரிய அமைப்பே இலங்கையின் பொருளாதார வங்குரோத்துக்கான காரணமாக தென்னிலங்கை மக்களால் நம்பப்படுகின்றது. இந்த பின்னணியிலேயே அனுரகுமார திசாநாயக்கவின் ஜே.வி.பி விம்பம் களையப்பட்டு, தேசிய மக்கள் சக்தி விம்பத்தில் புதியவராக அவரது ஆதரவாளர்கள் சிலாகிப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தேசிய மக்கள் சக்தியின் யுக்தி பகுதியளவில் வெற்றி பெற்றுள்ளதாகவே நம்பப்படுகின்றது. எனினும் ஜனாதிபதி பதவியை 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திசாநாயக்காவினால் வெற்றி பெறமுடியுமா என்பதில் பார்வையாளர்களிடையே சந்தேகங்களே காணப்படுகின்றது. இலங்கை ஜனாதிபதி தேர்தல் இலங்கை மக்களின் தேசிய இறையாண்மையுடன் தொடர்புபட்டதாயினும், அமெரிக்க-சீனா-இந்தியா போன்ற சர்வதேச பிராந்திய அரசுகளின் தேசிய நலன்களுடன் முரண்படுவதாக அமைகின்றது. இம்முரண்பாடே இலங்கையின் ஜனாதிபதியினை தீர்மானிப்பதில் உயரளவில் தாக்கம் செலுத்தக்கூடிய காரணியாக அமைகின்றது என்பதே நிதர்சனமாகும். கடந்த காலங்களில் இலங்கை ஜனாதிபதி தேர்தல்களில் பிராந்திய அரசே தாக்கம் செலுத்தியுள்ள முன்அனுபவங்களில், அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றி உறுதியற்றதாகவே நோக்கப்படுகின்றது.
Comments
Post a Comment