இலங்கையில் ஏற்பட்டுள்ளது அமைப்பு மாற்றமா? ஆட்சி மாற்றமா? -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி மாற்றம் உள்நாட்டிலும், பிராந்தியத்திலும் மற்றும் சர்வதேசத்திலும் அரசியல் ரீதியாக அதிக விவாதங்களை உருவாக்கியுள்ளது. அநுரகுமார திசநாயக்காவின் வெற்றியும், இடதுசாரி மரபுடைய ஜே.வி.பி.யின் எழுச்சியும் அதிக கவனத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை ஆட்சி மாற்றம் தொடர்பான 'அமைப்பு மாற்றம்' எனும் விபரிப்புகள் சாத்தியப்படுத்தக்கூடியதா எனும் தேடல்களும் பொதுஆய்வு பரப்பில் உருவாகியுள்ளது. இலங்கையில் கடந்த காலங்களிலும் ஆட்சி மாற்றங்கள் சில சிறப்பு பெயரிடல்களால் விபரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 1994ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தில் சந்திரிக்கா குமாரதுங்கா அமைதிப் புறாவாக சித்தரிக்கப்பட்டிருந்தார். 2015ஆம் ஆண்டு ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கமாக பெயரிடப்பட்டது. எனினும் ஆட்சிக்காலப்பகுதிகள் கருப்பன் வெள்ளையாக இருந்த நிலைமையினையே பிரதிபலித்திருந்தது. பெயரிடலுக்கும் ஆட்சி இயல்புகளுக்கும் பொருத்தப்பாடு இருந்ததில்லை. தற்போது 2024இல் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றமும், அனுரகுமார திசநாயக்க ஜனாதிபதி ஆகியுள்ளமையும் அமைப்பு மாற்றத்திற்கான (System Change) ஆதாரமாக சுட்டிக்காட்டப்படுகின்றது. இக்கட்டுரை இலங்கையின் முறைமை மாற்றத்திற்கான சூழமைவுகளை அடையாளம் காண்பதாக உருவாக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான ஆரம்ப புள்ளி, 2022ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட அரகலயவை தொடர்ந்து ஏற்பட்ட ஒன்றாகும். தேசிய சமாதானப் பேரவையின் நிர்வாக இயக்குனர் ஜெகான் பெரேரா, 'அரகலயா ஜனாதிபதி தேர்தலிலேயே முழுமையடைந்துள்ளது' என்று சாரப்பட தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டின் முன்னரைப்பகுதியின் இறுதியில் ஏறத்தாழ மூன்று மாதங்களுக்கும் மேலாக, இலங்கையின் பொருளாதார வங்குரோத்துக்கு அரசாங்கத்தை குற்றம் சுமர்த்தி இளையோர்கள் அரகலயவை முன்னெடுத்திருந்தனர். 1948ஆம் ஆண்டு காலனித்துவ விடுதலைக்கு பின்னர், இலங்கை வரலாற்றில் முக்கியமான பதிவை அரகலய வெளிப்படுத்தியது. எதிர்ப்பாளர்கள் நிறைவேற்றுத்துறையான ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவையும், சட்டவாக்கத்துறையான பாராளுமன்ற உறுப்பினர்களையும் முழுமையாக இராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தியிருந்தனர். எனினும் அரசாங்கம் ஆட்சியாளர் முகங்களை மாற்றி பொதுஜன பெரமுனவின் நிழலிலேயே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியை கடந்த இரண்டரை வருடங்களாக தொடர்ந்திருந்தது. இந்நிலையிலேயே, கடந்த செப்டம்பர்-21அன்று நடந்த தேர்தல் மூலம் புதிய ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் வரையில், அரகலய எதிர்பார்த்த அரசாங்க மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க முடியவில்லை.
தற்போது அசாதாரண திருப்பமாக, இலங்கை மக்கள் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசநாயக்கவிற்கு ஆணையை வழங்கியுள்ளனர். இலங்கை அரசயலமைப்பின் பிரகாரம் 'ஜனநாயகமற்ற ஜனநாயக முறைமையின்' கீழ் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க இலங்கையின் அரசியலில் கடந்த ஏழு தசாப்தங்களான ஆதிக்கம் செலுத்திய பிரதான அரசியல் கட்சிகளுக்கு வெளியே இருந்து வந்தவராக காணப்படுகின்றார். இது அடிப்படையில், வேறு எந்த வேட்பாளரையும் விட, அனுரகுமார திசநாயக்க 2022ஆம் ஆண்டின் அரகலய எதிர்ப்பு இயக்கத்தின் உணர்வைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் என்பதையே உறுதிசெய்கின்றது. அரகலய எதிர்ப்பு இயக்கம் 'அமைப்பு மாற்றம்' மற்றும் 'அரசியலில் புதிய முகங்களுக்கு' அழைப்பு விடுத்தது. இந்த இரண்டு கோரிக்கைகளின் அடிப்படையிலும் ஊழலற்ற அரசாங்கத்தின் கோரிக்கை வலுவாக அமைந்திருந்தது. அனுரகுமார திசநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபன முன்;னுரையிலும், 'இன்று இலங்கைக்கு அவசியமாகியுள்ள சமூக மாற்றமானது வெறுமனே அரசாங்கத்தை மாற்றுவதோ ஆட்சிக்குழு வீட்டுக்கு செல்வதன் காரணமாக வெற்றிடமாகின்ற ஆட்சிக்குழுக்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் வெற்றிடத்தை மற்றுமொரு குழு மூலமாக நிரப்புவது மாத்திரமல்ல. அது பிரமாண்டமான சமூக நிலைமாற்றமாகும். சுதந்திரத்திற்கு 76 வருடங்களுக்கு பின்னர் ஒரு துறையின் மாற்றத்திற்கோ அல்லது ஒரு சிலவற்றின் மாற்றத்திற்கோ அப்பால் சென்ற ஒட்டுமொத்த சமூக நிலைமாற்றமாகும் மறுமலர்ச்சியாகும்' என அமைப்பு மாற்றத்திற்கான அழைப்பை முதன்மைப்படுத்தியது.
அரகலயவை முழுமையாக தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியாக விம்பப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளமையே தேர்தல் முடிவுகளும் உறுதிசெய்கின்றது. எனினும் அரகலயவும் தேசிய மக்கள் சக்தியும் அமைப்பு மாற்றத்தை சரியாக வரையறுக்க தவறியுள்ளார்கள். அரசுடைய தரப்பாகிய தென்னிலங்கை, அரசாங்கத்தில் காணப்படும் பொருளாதார சீர்கேடுகளை களைவதனையே அமைப்பு மாற்றமாக கருதுகின்றார்கள். அதனை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவே தேசிய மக்கள் சக்தியின் உரையாடல்களும் அமைகின்றது. மாறாக இலங்கையில் ஆழமாக வேரூன்றியுள்ள தேசிய இனப்பிரச்சினை பற்றிய எந்த கரிசனையும் அமைப்பு மாற்றத்திற்குள் உள்வாங்க தயாரில்லாத நிலைமைகளே காணப்படுகின்றது. இதனை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது.
முதலாவது, 2002ஆம் ஆண்டு இடம்பெற்ற அரகலயவு எதிர்ப்பு இயக்கமும் சரி, அதன் அறுவடையை அனுபவிக்கும் தேசிய மக்கள் சக்தியும் சரி, இலங்கையில் 2021ஃ2022ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார நெருக்கடியை வெறுமனமே பொருளாதார காரணிகளுக்கு உள்ளேயே மட்டுப்படுத்துகின்றனர். குறிப்பாக ஊழல்வாதிகளை சீர்செய்வதனூடாக இலங்கையில் அமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். செயலாற்றியும் வருகின்றார்கள். கடந்த வாரம் இடம்பெற்ற ஆளுநர் நியமனங்கள், அமைச்சரவை செயலாளர் நியமனங்கள் மற்றும் காபந்து அமைச்சரவை உருவாக்கம் என்பன ஊழலுக்கு எதிரான செயற்பாட்டு விம்பத்தை பிரதிபலிக்கிறது. அது பாராட்டத்தக்க விடயமாகும். எனினும் அரசியல் பொருளாதார நெருக்கடியை சீர் செய்வதும், அமைப்பு மாற்றத்தை உருவாக்குவது என்பதும் ஊழலை ஒழிப்பது மாத்திரம் அல்ல. அல்லது பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வது மாத்திரம் அல்ல. மாறாக இலங்கையில் ஆழமாக வேரூன்றியுள்ள தேசிய இனப் பிரச்சினையை சீர் செய்ய வேண்டிய தேவைப்பாடு அமைப்பு மாற்றத்துக்குள் காணப்படுகின்றது. 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் வெளிப்படுத்தப்படும் வரைபடம் 'இலங்கை இரு தேசமாக' சிந்திக்கின்றது என்பதையே மீளமீள உறுதி செய்கின்றது. பேரினவாத மற்றும் சிறுபான்மையின சிந்தனைக்குள் அமைப்பு மாற்றத்தை உருவாக்க முடியாது. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தென்னிலங்கை வேட்பாளர்களால் இனவாதம் பிரச்சாரங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக சிலாகிக்கப்பட்டு வருகின்றது. எனினும் தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார மனநிலை பேரினவாத எண்ணங்களுக்குள் ஆழமாக இணைந்துள்ளமையையே, யாழ்ப்பாணத்தில் அனுரகுமார திசநாயக்க வெளிப்படுத்திய கருத்து ஒன்று பிரதிபலித்து இருந்தது. 'நாட்டின் பெரும்பான்மை மக்கள் மாற்றத்தை வேண்டிநிற்கும் இவ்வேளையில் யாழ் மக்களான நீங்கள் மாத்திரம் அதற்கு எதிராக எவ்வாறு செயற்படுவீர்கள்?' என தென்னிலங்கை சிங்கள மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு விரோதமாக தமிழ் மக்கள் செயற்படக்கூடாது எனும் தொனியில் யாழ்ப்பாண தேர்தல் பிரச்சாரத்தில் அனுரகுமார திசநாயக்க உரையாற்றியிருந்தார். இது அடிப்படையில் ஆழமாக பதியப்பட்டுள்ள பேரினவாத மனநிலையின் வெளிப்பாடு என்பதையே உறுதி செய்கின்றது.
இரண்டாவது, அனுரகுமார திசநாயக்க ஜனாதிபதியாக மக்களுக்கு வழங்கியுள்ள விசேட உரையில், 'நாம் இலங்கைப் பிரஜைகள் என்று பெருமையுடன் வாழக்கூடிய நடைமுறைச்சாத்தியமான ஒரு நாடு உருவாகும் வரை, இந்த நாடு தோல்வியடையுமே தவிர வெற்றியடையாது' எனக் குறிப்பிட்டிருந்தார். எனினும், தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கான நீதி, தற்போதும் நிகழ்த்தப்படும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதி மற்றும் அரசியல் தீர்வு கோரிக்கையான அதிகாரப் பகிர்வு தொடர்பில் எந்தவொரு உறுதியான நிலைப்பாட்டையும் தொடர்ச்சியாக நிராகரிக்கும் போக்கையே பின்பற்றுகின்றார். விசேட உரையில் பொருளாதார மற்றும் சமுக மாற்றங்கள் பற்றி மாத்திரமே அனுரகுமார திசநாயக்க வழங்கியிருந்தார். மாறாக இலங்கையில் நிலைத்துள்ள தேசிய இனப்பிரச்சினையை தெளிவாக அடையாளப்படுத்தவோ, அதற்கான தீர்வு தொடர்பிலோ எவ்வித உள்ளடக்கங்களையும் கொண்டிருக்கவில்லை. அனுரகுமார திசநாயக்க தேசிய இனப்பிரச்சினைசார் உரையாடலை தவிர்த்து செல்ல முற்படுகின்றார். இது ஒருவகையில் ஈழத்தமிழர்களையும், அவர்களது அரசியல் அபிலாசைகளையும் புறமொதுக்குபவையாகவே காணப்படுகின்றார்கள். ஈழத்தமிழர்கள் அனுரகுமார திசநாயக்கவின் அரசியல் வெற்றி மற்றும் ஊழலுக்கு எதிரான போரை தென்னிலங்கையுடன் இணைந்து வரவேற்கின்றார்கள். அதேவேளை அரசுடைய தென்னிலங்கை தரப்பின் எதிர்பார்ப்பு தமது அரச இயந்திரத்தை சீர்செய்வது மாத்திரமாக அமையும். ஆயினும் ஈழத்தமிழர் ஒடுக்குமுறைக்கெதிராக போராடும் தேசிய இனமாக மேலதிகமாக தமது அரசியல் ஸ்திர உறுதிப்பாட்டையும் கோரிக்கை எதிர்பார்த்துள்ளார்கள். முதல் 100 நாள் வேலைத்திட்டத்துக்குள் புதிய அரசாங்கம் குறைந்தபட்சம் அரசியல் கைதிகள் விடுதலை, வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான உரிய தீர்வு, காணி விடுவிப்பு போன்ற நாளாந்த பிரச்சினைகளுக்காவது தீர்வை வழங்க வேண்டும். அதனை தென்னிலங்கை மக்களும் ஏற்றுக்கொள்வார்களாயினேயே, அமைப்பு மாற்றத்தினை உண்மையான அர்த்தத்தில் எதிர்பார்க்க முடியும்.
மூன்றாவது, இலங்கையின் பாதுகாப்பு கட்டமைப்பு இனப்படுகொலையின் ஆதாரமாகவே அமைகின்றது அதனை மறுசீரமைக்காத வரை அமைப்பு மாற்றம் பற்றிய உரையாடல்கள் வெறுமனவே தேர்தல் பிரச்சார வார்த்தை அலங்காரமாகவே காணப்படும். இலங்கையின் பாதுகாப்பு கட்டமைப்பு பேரினவாத மனநிலை மற்றும் தமிழ் எதிர்ப்பு வாத சிந்தனையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதல்; அதன் பின்னரான தேடல்களிலும் விசாரணை பொறிமுறைளிலும் பயங்கரவாத தடைச் சட்டம் அதிகம் ஈழத் தமிழர்களை குறிவைத்திருந்தமை; (அக்காலப்பகுதியிலேயே யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் புலி மீளுருவாக்க குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்தனர். ஏறத்தாழ 5 வருட வழக்கு விசாரணைகளின் பின்னர் குற்றமற்றவர்களென விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.) மற்றும் ஈழத்தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுக்கும் முனைப்புடன் இலங்கை பாதுகாப்பு கட்டமைப்பு தொடர்ச்சியாக செயல்படுகின்றமை என்பன இலங்கை பாதுகாப்பு கட்டமைப்பின் தமிழ் எதிர்ப்பு மற்றும் பேரினவாத மனநிலையையே உறுதிசெய்கின்றது. அனுரகுமார திசநாயக்கவும் இனப்படுகொலை போர்க்குற்றவாளிகளை புனிதப்படுத்தும் கடந்தகால அரசாங்கங்களின் தொடர்ச்சியை பின்பற்றுபவராகவே அமைகின்றார். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் போர்க்குற்றவாளி இராணுவ பிரமுகர் சம்பத் துயகொண்டாவை, இலங்கையின் ஜனாதிபதியாக தனது முதல் செயல்களில் ஒன்றாக, புதிய பாதுகாப்பு செயலாளராக நியமித்துள்ளார். அட்டூழியங்களுக்குப் பிறகு ஒரு நேர்காணலில் துயகொண்டா, 'வன்னி களத்தில் அவர்களின் முன்னணி வரிசையில் நாங்கள் குழப்பத்தை ஏற்படுத்தினோம்' என்று பெருமையாகக் கூறினார். இறுதிக்கட்ட ஆயுத மோதலின் போது மட்டும் சுமார் 60 பணிகளில் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டதாக அவர் கூறினார். இவரது இனப்படுகொலையை பாராட்டி கடந்தகால அரசாங்கங்களும் இராஜதந்திர பணியை ஒப்படைத்திருந்தது. பாகிஸ்தானுக்கான இலங்கை பாதுகாப்பு இணைப்பாளராக துயகொண்டா செயற்பட்டுள்ளார்.
எனவே, அனுரகுமார திசாநாயக்காவின் ஆரம்ப ஆட்சி செயற்பாடுகள் சில முற்போக்கான விம்பங்களை பிரதிபலிக்கின்ற போதிலும், நிலையான அமைப்பு மாற்றத்துக்கான விடயங்களை கொண்டிருக்கவில்லை. அனுரகுமார திசநாயக்கவின் ஆட்சி இயல்புகளும் முதலாளித்துவத்தின் 'ஜனரஞ்சக அரசியல் கவர்ச்சி' உத்தியையே அதிகம் முதன்மைப்படுத்துகிறது. மாறாக உள்ளடக்கங்கள் வெறுமையான காற்று அடைக்கப்பட்ட பலூன்களை பிரதிபலிப்பதாகவே அமைகின்றது. மாக்ஸிசம் இன்று நவமாக்ஸிசத்தில் வர்க்க முரண்பாட்டில் பொருளாதார காரணிகளுக்கு அப்பால் பல அரசியல் சமுக காரணிகளை சிந்திக்க ஆரம்பித்து விட்டது. எனினும் மாக்சிச லெனினிச மரபாக சித்தரிக்கும் அனுரகுமார திசநாயக்க அமைப்பு மாற்றத்தை பொருளாதார காரணிக்குள் சுருக்குவதே ஏமாற்றத்தின் உச்சமாகவே அமைகின்றது. அத்துடன் மாக்சிசம் மத நம்பிக்கைகளை நிராகரிக்கிறது. எனினும் அனுரகுமார திசநாயக்க தொடர்ச்சியாக உரைகளிலும் வணக்கத்திலும் பௌத்தத்திற்கான முன்னுரிமையுடன் சரணாகதி அடைகின்றார். இது அனுரகுமார திசநாயக்க அதிகம் சித்தாந்தங்களற்ற வெறும் பெயர்ப்பலகைகளுடன் திரிவதையே உறுதி செய்கிறது. இப்பின்னணியில் அரசியல் மாற்றமும் வெறுமனவே ஆட்சி மாற்றமா எனும் சந்தேகங்கள் பொதுவெளியில் அரசியல் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
Comments
Post a Comment