தமிழ்ப்பொதுவேட்பாளரின் தேர்தல் முடிவு தேசக்கட்டுமானத்திற்கு வாய்ப்பு வழங்குகிறதா? -ஐ.வி.மகாசேனன்-
கடந்த இரண்டு மாதங்களாக இலங்கையின் உயர்ந்தபட்ச ஜனநாயக திருவிழாவான ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி முழு இலங்கைத் தீவும் பரபரப்பாக காணப்பட்டிருந்தது. இது, 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத அரசியல் பொருளாதார நெருக்கடி மற்றும் அரகலயவை தொடர்ந்து இடம்பெற்ற முதலாவது மக்கள் தேர்தலாக அமைகின்றது. இவ்அடிப்படையில் தென்னிலங்கையில் புதிய மாற்றங்கள் ஆரம்பம் முதலே எதிர்கூறப்பட்டது. அதேவேளை தமிழ் அரசியல் பரப்பும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இம்முறை அதிக குழப்பங்களையும் கரிசனைகளையும் வெளிப்படுத்தி இருந்தது. கடந்த 15 ஆண்டுகளாக கருத்தியலாக மட்டுப்பட்டிருந்த தமிழ்ப் பொதுவேட்பாளர், தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பினால் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. வெற்றி என்ற எண்கணிய இலக்குகளைக் கடந்து, தமிழ்த் தேசிய கட்டுமானம் என்பது தமிழ்ப் பொது வேட்பாளர் அரசியலில் முதன்மையான உரையாடலை பெற்றிருந்தது. இக்கட்டுரை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தமிழ்ப் பொது வேட்பாளரின் தேச கட்டுமானத்துக்கு வாய்ப்பை உருவாக்கியுள்ளதா என்பதை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர்-21அன்று நடைபெற்ற இலங்கை ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் முழுமையாக செப்டம்பர்-22அன்று மாலை தேர்தல் ஆணை குழுவினால் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழ்த் தேசிய அரசியலில், ஈழத்தமிழர்களின் மரபுவழி தாயகமாக அடையாளப்படுத்தப்படும் வடக்கு கிழக்கில் தமிழ்ப் பொதுவேட்பாளர் கணிசமான வாக்குகளை பெற்றிருந்தார். முழு இலங்கையில் 226,343 வாக்குகளை பெற்றதுடன் 39 வேட்பாளர்களில் ஐந்தாவது நிலையை தமிழ்ப் பொதுவேட்பாளர் நிலை நிறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் 116,688 வாக்குகளையும், வன்னியில் 36,377 வாக்குகளையும், திருகோணமலையில் 18,524 வாக்குகளையும், மட்டக்களப்பில் 36,905வாக்குகளையும், அம்பாறையில் 9,985 வாக்குகளையும் பெற்றிருந்தார். ஜந்து இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பினால் எதிர்வுகூறப்பட்ட போதிலும், இரண்டரை இலட்சத்துக்கு குறைவான வாக்குகளையே தமிழ்ப் பொதுவேட்பாளரால் பெறமுடிந்துள்ளது.
தேர்தல் முடிவுகளின் பின்னர், தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ம.அ.சுமந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், தமிழ்ப் பொதுவேட்பாளர் கருத்தியல் தோல்வியடைந்துள்ளதாக பிரச்சாரம் செய்கின்றனர். இதனை மறுத்துள்ள தமிழ் மக்கள் பொதுச்சபை, “தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது என்ற கோஷத்தோடு களமிறக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளர் கிழக்கிலிருந்து தெரிவு செய்யப்பட்டார். அவர் சட்ட ரீதியாகப் பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கை உணர்வுபூர்வமாக இணைக்கும் ஒரு குறியீடாக எழுச்சி பெற்றுள்ளார். வடக்கில் அவருக்கு கிடைத்த வாக்குகள் தாயக ஒருமைப்பாட்டை பலப்படுத்த விரும்புபவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுபவை” என நேரான பார்வையினை தேர்தல் முடிவுகள் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர். அவ்வாறே, தேர்தல் காலங்களில் தமிழ்ப் பொதுவேட்பாளர் கருத்தியலுக்கு எதிராக பிச்சாரத்தை மேற்கொண்டிருந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான வாக்குகள் தமிழ் மக்களின் தமிழ்த்தேசக் கோரிக்கையினை உறுதி செய்துள்ளதாக கருத்துரைத்துள்ளார்.
தேர்தல் பிரச்சார காலப்பகுதி போன்றே, தேர்தல் முடிவுகளின் பின்னரும் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஈழத்தமிழரசியல்வாதிகளை கதிகலங்க வைத்துள்ளது. இதனையே, அ.ம.சுமந்திரனின் எதிர்ப்பும், கஜேந்திரகுமாரின் ஆதரவும் உறுதிசெய்கின்றது. அரசியல்வாதிகளுக்கு நெருக்குவாரத்தை உருவாக்கி உள்ளமைக்கு அப்பால், தமிழ்ப் பொதுவேட்பாளர் தனது தூரநோக்கான தமிழ்த்தேசிய கட்டுமானத்துக்கு அளித்துள்ள பங்களிப்பை நுணுக்கமாக அவதானிக்க வேண்டியுள்ளது.
முதலாவது தமிழ் மக்களிடையே தன்னியக்க எழுச்சியை தமிழ்ப் பொது வேட்பாளர் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்ப் பொது வேட்பாளர் சார்ந்த பிரச்சார நடவடிக்கைகள் பெருமளவு தமிழ் மக்களின் தன்னெழுச்சியான செயற்பாடுகளாலேயே வடிவமைக்கப்பட்டிருந்தது. தமிழ்ப் பொதுவேட்பாளர் நடைமுறையாக்கம் வடக்கு-கிழக்கு சிவில் சமுகங்களின் கூட்டிணைவில் அடையாளப்படுத்தப்பட்டதாக, தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பலப்படுத்தும் ஒரு தேர்தல் களம் என்ற முனைப்பிலேயே பிரச்சார நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தது. இது மக்களிடையே தன்னியல்பான தன்னெழுச்சியான செயற்பாடுகளை அனுமதித்ததது. அதனால் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும், தாயகத்திலும் தமிழ் மக்கள் அவரவர் கொள்ளளவுக்கு ஏற்பவும்; அவரவர் சக்திக்கு ஏற்பவும்; விருப்பத்திற்கு ஏற்பவும்; அவரவர் அரசியல் புரிதல்களுக்கு ஏற்படவும் பிரச்சார நடவடிக்கைகளில் பங்களித்திருக்கிறார்கள். தமிழ் மக்களின் தன்னெழுச்சி, மக்களிடையே ஆழமாக வேரூன்றிய தமிழ்த்தேசிய பற்றுறுதியை பல நெகிழ்வான சம்பவங்களில் வெளிப்படுத்தியிருந்தது. தமிழ்ப் பொதுவேட்பாளரின் இலக்கு வெற்றியடைய ஒருவர் தூக்கு காவடி எடுத்திருந்தார். கிளிநொச்சியில் ஒரு குடும்பத்தில் இளைய சகோதரன் தென்னிலங்கை வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கையில், குடும்ப கௌரவத்தை பாதுகாக்க மூத்த சகோதரன் தனது செலவில் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக துண்டுப்பிரசுரத்தை தனது பிரதேசத்தில் விநியோகித்திருந்தார். இந்த பின்னணியில், மக்களிடையே நீண்டகாலத்திற்கு பிறகு தமிழ்த்தேசியத்தை மையப்படுத்தி தன்னார்வ எழுச்சிக்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாவது கடந்த 15 ஆண்டுகளில் தாயகத்திலும் புலத்திலும் ஈழத்தமிழர்களிடையே ஒப்பீட்டளவில் கணிசமான அளவில், தமிழ்த்தேசிய கொள்கை சார்ந்து ஒற்றுமை
அடையாளம் காணப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர், தமிழ் அரசியல் பரப்பு காலத்துக்கு காலம் அணுகுமுறை முரண்பாடுகளால் விரிசல் அடைந்து கொண்டு வந்துள்ளது. இது தாயகத்திற்கும் தமிழ் மக்கள் செறிந்து வாழும் புலம்பெயர் தேசங்களுக்கும் பொதுவான இயல்பாக காணப்பட்டது. இந்நிலையில் தமிழ்ப் பொது வேட்பாளர் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தாயகத்தில் வடக்கு கிழக்கு தழுவிய ஒரு சிவில் சமூக கூட்டிணைவிலிருந்து எடுக்கப்பட்ட முயற்சிகள் யாவும் தமிழ் மக்களின் ஒற்றுமையையே உறுதிப்படுத்தி வருகின்றது. பிரதானமாக வடக்கு-கிழக்கு பிரதேசவாத உரையாடல்களை சில தமிழ் அரசியல்வாதிகளில் கடந்த காலங்களில் முன்னெடுத்து வருகின்றனர். இதனை தகர்க்கும் வகையில் தமிழ்ப்பொதுவேட்பாளராக முன்னிறுத்தப்பட்டிருந்த, கிழக்கினை சேர்ந்த பா.அரியநேத்திரனுக்கு கணிசமான வாக்கு வடக்கில் கிடைக்க பெற்றுள்ளது. அதுமட்டுமன்றி நீர்கொழும்பு, கொழும்பு போன்ற இடங்களிலும் தமிழ்ப் பொதுவேட்பாளர் குறிப்பிட்டளவு வாக்கினை பெற்றிருந்தார். இது தாயகத்தில் தமிழ் மக்களிடையே ஆழமாக தமிழ்த் தேசியத்தின் அடிப்படையில் காணப்படும் ஒற்றுமையை உறுதி செய்கிறது. மேலும், புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியிலும் தமிழ்ப் பொது வேட்பாளர் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் ஒப்பீட்டளவில் ஏதோ ஓர் ஒருங்கிணைவை தமிழ்ப் பொதுவேட்பாளர் ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன் தாயகமும் புலம்பெயர் சமுகமும் ஒருங்கிணைந்து தமிழ்ப் பொதுவேட்பாளருக்காக செயலாற்றி உள்ளது. தாயகத்தில் தமது உறவுகளின் ஊடாக பொது வேட்பாளரை பலப்படுத்துவதில் புலம்பெயர் சமுகம் அதிகம் பங்களித்துள்ளார்கள். தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் பல வழிகளிலும் உதவிகளைப் புரிந்திருக்கிறார்கள்.
மூன்றாவது, தமிழ் தேச கட்டுமானத்துக்கு ஆதாரமான தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு என்பது உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் அரசியல் தலைமைகளின் சுயநல அரசியல் போக்குகளால், தமிழ் மக்கள் மெய்ப்பானற்ற மந்திகளாக காணப்பட்டிருந்தார்கள். இதனை நிவர்த்தி செய்வதற்காக தமிழ் மக்களிடையே பொது கட்டமைப்பு ஒன்றின் தேவைப்பாடு நீண்ட காலம் விவாதிக்கப்பட்டு வருகின்றது. அதன் ஓர் அங்கமாகவே 2016ஆம் ஆண்டு தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கம் அமைந்திருந்தது. எனினும் தமிழ் மக்கள் பேரவையில் காணப்பட்ட கட்டமைப்பு வலு, அதனை சீர்குலைத்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் தோல்வியின் பின்னர், புதியதொரு பொதுக் கட்டமைப்பு உருவாக்கம் அதிக சந்தேகத்துக்குரிய நிலையையே பொதுப்பரப்பில் உருவாக்கி இருந்தது. இந்நிலையிலேயே தமிழ்ப் பொது வேட்பாளர் சார்ந்த நடைமுறையாக்கம்; அது சார்ந்த உரையாடல்; அது சார்ந்த மக்கள் ஆதரவு தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு என்பதனை சாத்தியப்படுத்தியுள்ளது. இது, வடக்கு-கிழக்கு சிவில் சமுகங்களின் கூட்டிணைவான தமிழ் மக்கள் பொதுச்சபை மற்றும் அரசியல் கட்சிகளின் சமவலு அதிகாரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது பொதுவேட்பாளரின் தேசக்கட்மானத்துக்கான பங்களிப்பாக அமைகின்ற போதிலும், இதன் நிலைத்திருப்புக்கு சில சீர்திருத்தங்கள் கோரப்படுகிறது. யாவற்றுக்கும் அடிப்படையாக, தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் சில, ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் கட்டமைப்பின் இணக்கங்களை மீறி செயற்பட்டுள்ளார்கள். அவர்கள் உரிய விசாரணைக்கு உட்படுத்தப்படுவதும், தண்டிக்கப்படுவதுமே தமிழ் மக்களிடையே தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு சார் நம்பிக்கையை தொடர்ச்சியாக வலுப்படுத்த ஏதுவாக அமையும்.
எனவே, குறைகளை கடந்து தமிழ்த் தேசக்கட்டுமான பணிக்கான ஆதாரத்தை தமிழ்ப் பொதுவேட்பாளர் வழங்கியுள்ளது. இதனை இறுகப்பற்றி தேசக் கட்டுமானத்தை நகர்த்த வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ் மக்கள் பொதுச்சபையிடமே பாரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான வாக்குகள் தமிழ்த்தேசிய அலை ஏற்படுத்திய தமிழ் மக்களின் தன்னெழுச்சியாகும். இதனை தமிழ் மக்களே உரிமை கோர முடியும். இதனை உணர்ந்து சிவில் சமுகங்களின் கூட்டிணைவான தமிழ் மக்கள் பொதுச்சபை எதிர்கால திட்டமிடல்களை வகுக்க வேண்டும். தேசக் கட்டுமானம் ஜனாதிபதி தேர்தலோடு சுருங்குவதில்லை. தமிழ் மக்கள் பொதுச்சபை தமது அறிக்கையில் குறிப்பிடுவது போன்று, “தேர்தல் நடவடிக்கைகள் தேசத்தை கட்டி எழுப்பும் நடவடிக்கைகளில் ஒரு பகுதி மட்டுமே. அதற்குமப்பால் தேசத்தை கட்டியெழுப்புவது என்பது அதைவிட ஆழமான பொருளில், பரந்தகன்ற தளத்தில், நீண்ட கால அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒரு தொடர்ச்சியான அரசியல் முன்னெடுப்பு” ஆகும். இதனை செயற்பாட்டு தளத்திலும் தமிழ் மக்கள் பொதுச்சபை முன்னகர்த்துவதே அவசியமானதாகும்.
Comments
Post a Comment