பன்மைத் தேசிய அரசு அதிகார குவிப்பா? அதிகாரப் பகிர்வா? -ஐ.வி.மகாசேனன்-
இலங்கை அரசியலில் ஜனாதிபதி தேர்தல்களை மையப்படுத்தி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் பிரதான உரையாடலை மற்றும் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது. குறிப்பாக தென்னிலங்கை கட்சிகளின் தேர்தல் விஞ்ஞானங்கள் முழுமையாக இலங்கையின் பிரச்சினையை பொருளாதாரத்திற்குள் முடக்கி உள்ளது. இலங்கையில் நூற்றாண்டு கால வரலாற்றைப் பகிரும் தேசிய இனப் பிரச்சினையை முற்றுமுழுதாக மறைக்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு பற்றிய உரையாடல்கள் இணைக்கப்பட்டுள்ள போதிலும், அதில் தேசிய இனப் பிரச்சினை பற்றிய சொல்லாடலோ அல்லது தமிழர்களின் கோரிக்கைகளோ உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. அரசியலமைப்பில் ஏற்கனவே காணப்படும் 13ஆம் திருத்தம் பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பில் முன்னைய பத்திகளில் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ் மக்களின் தேசிய அபிலாசையை முன்னுறுத்தி களமிறக்கப்பட்டுள்ள தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் அறிக்கை மாத்திரமே தமிழர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை அடையாளப்படுத்தியுள்ளதுடன், தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்துவதாய் அமைந்துள்ளது. எனினும் அது தொடர்பிலும் சில எதிர் விமர்சனங்கள் தென்இலங்கை வேட்பாளர்களை ஆதரிக்கும் தரப்பினரால் முன்வைக்கப்படுவதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது. இக்கட்டுரை தமிழ் பொது வேட்பாளரை களமிறக்கியுள்ள தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் தேர்தல் அறிக்கையின் உள்ளடக்கங்களை பரிசீலிப்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர்-03ஆம் திகதி தமிழ்ப் பொதுவேட்பாளின் தேர்தல் விஞ்ஞாபனம், தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பினால் 'தேர்தல் அறிக்கை' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்தது. தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை, பாரம்பரிய தேர்தல் விஞ்ஞாபனங்களில் இருந்து வேறுபட்டதாகும். தமிழ்ப் பொதுவேட்பாளர் அடிப்படையில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். இலங்கை ஜனாதிபதி தேர்தலை மூலோபாய ரீதியாக கையாளும் ஓர் முயற்சியாகும். இந்த அடிப்படையிலேயே தேர்தல் அறிக்கை, தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருந்து வேறுபடுகின்றது. குறிப்பாக தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை உள்ளடக்கியதாகவும், தமிழ் மக்களின் தேவைகளை அடையாளப்படுத்துவதாகுமே அமைகின்றது. தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான வாக்குகள் தமிழ் மக்கள் தங்கள் அரசியல் கோரிக்கையை முன்வைக்கும் அரசியல் போராட்டமாகும். அத்தகைய கோரிக்கையையே தேர்தல் அறிக்கை பிரதிபலிப்பதாக அமைகின்றதென்பதே தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பினது கருத்தாக அமைகின்றது. தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை உருவாக்க குழுவின் உறுப்பினர் அரசியல் கருத்தியலாளர் ம.நிலாந்தன் அவர்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வைத்து உரையாற்றுகையில், 'தமிழ் மக்கள் மீண்டும் ஒரே குரலில் பொது நிலைப்பாட்டின் கீழ் ஒன்று திரளப் போகின்றார்கள் என்பதை முன்னறிவிக்கும் ஆவணம் இது' என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் தேர்தல் அறிக்கையின் அமைப்பினை நோக்குவது அவசியமாகும். தேர்தல் அறிக்கை ஆரம்பத்தில், தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் உருவாக்கம் மற்றும் கட்டமைப்பு வடிவத்தை அடையாளப்படுத்தியுள்ளது. இதனூடாக களமிறக்கப்படும் தமிழ்ப் பொது வேட்பாளர், தமிழ் மக்களின் பொது நிலைப்பாட்டில் இருந்து களமிறக்கப்படுவதனை உறுதி செய்கின்றனர். குறிப்பாக தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பு என்பது வடக்கு கிழக்கு சிவில் சமூகங்களின் கூட்டிணைவான தமிழ் மக்கள் பொதுச்சபை மற்றும் தமிழ் பொது வேட்பாளர் கருத்தியலை ஆதரிக்கும் ஏழு தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து சமவலு பிரதிநிதித்துவத்தை வழங்கி கட்டமைக்கப்பட்டதாகும். இப்பின்னணியிலே தமிழ்ப் பொது வேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளமையை தேர்தல் அறிக்கை விவரிக்கின்றது. தொடர்ந்து சர்வதேச அரங்கில் தமிழ் மக்களின் நீதிக் கோரிக்கை பெற்றுள்ள அங்கீகாரம் விவரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் மக்கள் மீது இலங்கை அரசாங்கத்தால் நிகழ்த்தப்பட்ட தமிழ் இனப்படுகொலை சர்வதேச அளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை அடையாளப்படுத்தப்படுகின்றது. தொடர்ச்சியாக 2009க்கு பிறகு வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக இடம்பெறும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகள் 14 விடயங்களில் குறிப்பிடப்படுகின்றது. தேர்தல் அறிக்கையில் அடுத்த கட்டமாக, 2024ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களம் இறங்கியுள்ள தென்னிலங்கை வேட்பாளர்கள் தேசிய இனப் பிரச்சினையை தவிர்த்து, இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினையை முதன்மைப்படுத்தியுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழர்களின் அரசியல் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, ஈழத் தமிழர்களின் வாக்குகள் வெற்றுக் காசோலையாக்கப்பட்டுள்ளமை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈழத் தமிழர்களின் சமகால சர்வதேச மற்றும் உள்ளக அரசியல் சூழல்களையும் நெருக்கடிகளையும் அடையாளப்படுத்துவதனூடாக தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளமை நியாயப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அடிப்படையிலேயே, தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வாக தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகள் முன்னிறுத்திய பத்து விடயங்கள் உள்வாங்கப்பட்டுள்ளது.
குறித்த பத்து விடயங்கள் தொடர்பிலேயே, ஒரு சிலர் தங்களுடைய எண்ணங்களுக்குள் பொருள்கோடலை செய்ய முற்படுகின்றனர். குறிப்பாக, தனியார் ஊடகம் ஒன்றின் நேர்காணலில் தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஆ.சுமந்திரன், 'ஏன் எங்களுக்கு வெளியக சுயநிர்ணயஉரிமை இருக்கென்று சொல்லவில்லை' என்றவாறு காரணங்களை குறிப்பிட்டு இதுவோர் பலவீனமான தேர்தல் அறிக்கையென விமர்சித்துள்ளார். எனினும் முதலாவது கோரிக்கையிலேயே, 'இனப்பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கத்தோடு உருவாக்க வேண்டிய இலங்கைத்தீவின் புதிய யாப்பானது தமிழ் மக்களை இறைமையும் சுயநிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்' எனக்குறிப்பிடுகின்றது. இங்கு தமக்கு இசைவான பொய்ப்பிரச்சாரங்களையே ஒருசிலர் முன்னெடுத்து வருகின்றனர். ம.ஆ.சுமந்திரனின் பொய்ப்பிரச்சாரங்கள் நீண்ட வரலாற்றை பகிர்கிறது. அண்மையில் காக்கா அண்ணா என அழைக்கப்படும் விடுதலைப்புலிகளின் மூத்த போராளி மணோகர் ஊடக நேர்காணல் ஒன்றில், '2010ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் பிரச்சார இறுதி நாளன்று சுமந்திரன் பிரச்சாரத்தில், மயிலந்தனை படுகொலையில் ஈடுபட்ட இராணுவத்திற்கு ஆதரவாக கஜேந்திரகுமார் நீதிமன்றத்திற்கு ஆஜரானர் எனும் பொய்ப்பிரச்சாரத்தை முன்வைத்தார்' எனக்குற்றஞ்சாட்டியுள்ளார். இத்தகையதொரு பொய்ப்பிரச்சாரத்தையே பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை தொடர்பிலும் முன்வைத்துள்ளார். மேலும் அதேநேர்காணலில், ஏற்கனவே வலுவான ஒற்றையாட்சி கட்டமைப்பை கொண்ட இலங்கையின் அரசியலமைப்பில், பிரதான வேட்பாளர்கள் எவரும் ஒற்றையாட்சியை பாதுகாப்பேன் என கூறவில்லையென்பதை சாதனையாய் ம.அ.சுமந்திரன் விதந்துத்துள்ளமையும் புரிந்து கொள்வது அவசியமாகிறது.
தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பன்மைத் தேசிய அரசு (Plurinational State) புதிய உரையாடலாக அதிக சச்சரவுகளை உருவாக்கியுள்ளது. சில ஊடகவியலாளர்கள் தென்அமெரிக்கா நாடானா பொலிவியா பன்மைத்தேசிய அரசாகவும் அரசியலமைப்பின் பிரகாரம் ஒற்றையாட்சி அலகாகவும் காணப்படுவதனை சுட்டிக்காட்டி, தமிழ்தேசிய பொதுக்கட்டமைப்பு பன்மைத் தேசிய அரசை குறிப்பிடுவதனூடாக ஒற்றையாட்சிக்கு உட்பட்ட இலங்கையை ஆதரிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். இத்தகைய பொருள்கோடலுக்கு வாய்ப்பளிக்காத வகையிலேயே, 'ஒற்றையாட்சிக்கு உட்பட்ட எந்த ஒரு அரசியல் தீர்வாலும் தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை ஒருபோதும் திருப்திப்படுத்த முடியாது' என பன்மைத் தேசிய அரசு குறிப்பை தொடர்ந்தே தேர்தல் அறிக்கையில் அழுத்தமாக குறிப்பிடப்பட்டுள்ளது. சொற்கள் நிலையான கருத்தை கொண்டிருப்பதில்லை. சந்தர்ப்பங்களும் வரையறைகளுமே குறித்த சொல்லின் கருத்தை தீர்மானிக்கின்றது. தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பில் தேர்தல் அறிக்கையில், 'தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டால் தான் இலங்கைத் தீவின் பல்லினத் தன்மையை உறுதிப்படுத்தலாம். எனவே புதிய யாப்பு ஆனது இலங்கைத் தீவின் பன்மைத் தேசியப் பண்பை உறுதிப்படுத்தும் விதத்தில் தேசங்களின் ஒன்றிணைவாக அமைய வேண்டும். அதாவது புதிய யாப்பானது இலங்கைத் தீவு ஒரு பன்மைத் தேசிய அரசாகக் (Plurinational State) கட்டமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்' என்றவாறே குறிப்பிட்டுள்ளது. ஈழத்தமிழர்களை தேசிய இனமாக உறுதிப்படுத்துவதனூடாக அவர்களது சுயநிர்ணய உரிமை மற்றும் இறைமை அங்கீகரிக்கப்படுகின்றது. மேலும், தேசங்களின் ஒன்றிணைவு என்பது ஒற்றையாட்சிக்கு அப்பாற்பட்ட அதிகார பகிர்வையே குறிக்கின்றது. யாவற்றுக்கும் மேலாக தொடர்ச்சியாகவே ஒற்றையாட்சியை நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்தபின்னணியில் தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பின் பன்மைத் தேசிய அரசு என்பது ஒற்றையாட்சியை மறுதலிக்கும், ஈழத்தமிழர்களை தேசிய இனமாக ஏற்றுக்கொண்ட அதிகார பகிர்வை குறிக்கும் கட்டமைப்பாகவே வரையறுக்கப்படுகிறது.
பொலிவியாவின் நடைமுறைக்கு வெளியேயும், பன்மைத் தேசிய அரசு அதிகார பகிர்வு பொறிமுறையாக புலமை தளத்திலும், சர்வதேச அரசியலிலும் விவாதிக்கப்படும் சிந்தனையாகவே அமைகின்றது. குறிப்பாக பொலிவியா, ஈக்வடார் போன்ற அரசுகளில் ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள் காணப்படும் பன்மைத் தேசிய அரசு சிந்தனை, கனடாவில் சமஷ்டி கட்டமைப்புக்குள் காணப்படுகின்றது. நவீன உலகில் தேசியம் மற்றும் அரசியல் ஒழுங்கின் சிக்கல்களைப் புரிந்துகொள்வதற்கு, கூட்டாட்சி அல்லது ஒற்றையாட்சி என்ற சீரான ஒழுங்கை அடிப்படையாகக் கொண்ட அரசின் பழைய மாதிரிகளைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்ற வாதம் சர்வதேச அளவில் அறிவியல் தளத்தில் முதன்மை பெற்றுள்ளது. பன்மைத் தேசிய அரசு என்ற கருத்து யதார்த்தத்தை படம்பிடிக்க நெருங்குகிறது. ஆனால் இன்னும் முழுமையான திருப்திகரமான நிலையை பெறாத வளர்ந்துவரும் கருத்தியலாகவே காணப்படுகிறது.
பன்மை தேசியவாதத்தில் (Plurinationality) தேசியத்தின் கருத்து பன்மை மற்றும் வெவ்வறு சூழல்களில் வெவ்வேறு அர்த்தங்களை பெறுவதாகவே அபெர்டீன் பல்கலைக்கழகத்தில் (University of Aberdeen) அரசியல் துறையின் வாழ்நாள் பேராசிரியர் மைக்கேல் கீட்டிங் தெரிவித்துள்ளார். பன்மைத்தேசிய அரசு என்பது பன்மைத் தேசியவாதம் என்ற கருத்தின் விரிவாக்கமாகவே அமைகின்றது. இது ஒரு மக்கள் சமுகம் மற்றும் ஒற்றையாட்சி மக்கள் கட்டமைப்பை தாண்டி பல அரசியல் சமூகங்களின் இருப்பைக் குறிக்கிறது. இந்த வழியில் அரசைக் கருத்தில் கொள்வது ஒற்றையாட்சிக் கொள்கையை விட இணைந்த செயலை வலியுறுத்தும் வரலாற்று அணுகுமுறைகளுடன் ஒத்துப்போகிறது. இது அரசியலமைப்பு சமச்சீரற்ற தன்மையின் வாய்ப்பையும் திறக்கிறது. இதனூடான தேசங்களின் தனித்தன்மை கூடியளவில் அங்கீகரிக்கும் வாய்ப்பை சுட்டுகின்றது என்றாறே வாழ்நாள் பேராசிரியர் மைக்கேல் கீட்டிங் பன்மை தேசிய அரசை வரையறுக்கின்றது. பன்மை தேசியம் என்பது அடிப்படையில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசியங்களின் இருப்பையே பொருள்கோடல் ரீதியாகவும் குறித்து நிற்கின்றது. சமகாலத்தில் அதிகாரப் பகிர்வு கூட்டாட்சி அல்லது சமஷ்டி என்பதாகவோ சொற்களுக்குள் சுருங்குவதில்லை. அரசுகளின் இயல்புகளுக்கும் தேசங்களின் தேவைகளுக்கும் ஏற்ப பல பரிமானங்களில் பரிணமித்து வருகின்றது. எடுத்துக்காட்டாக, ஸ்பெயினில் சாத்தியமில்லாத கூட்டாட்சி சீர்திருத்தத்தின் அம்சங்களை தவிர்த்து, தேசிய யதார்த்தங்களுக்கு மிகவும் வசதியான மற்றும் செயல்பாட்டு பொருத்தத்தை வழங்குவதற்காக, தற்போதைய அரசியலமைப்பு மாதிரியான 'சுயாட்சிகளின் நிலை' (Estado de las Autonomias) என்பதை அனுமதித்துள்ளது.
சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்களென விடுதலைக்கு போராடும் தேசிய இனம், தமக்கு தனித்துவமான தீர்வை தமது அரசியல் சமுக பொருளாதார சூழலை பகுப்பாய்வதனூடாகவே அடையாளப்படுத்த வேண்டும். தமக்கான அரசியல் தீர்வை தமது வரையறைகளுக்குள்ளே அடையாளப்படுத்துவதாக அமைதல் வேண்டும். அதனை தவிர்த்து பிறரின் சிந்தனைக்குள் தமக்குரிய தீர்வீனை தேடுவார்களாயின், இன்னொரு வடிவில் இன்னொரு அடக்குமுறைக்குள் பயணிக்க வேண்டிய சூழலே உருவாகும். குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் காலனித்துவ விடுதலை பெற்ற அரசுகள் தமது தேசியவாத சிந்தனையையும், அரசு உருவாக்கத்தையும் மேற்கத்தேய பல்கலைக்கழக கற்கை மற்றும் கருத்தியலினூடாகவே பெற்றிருந்தனர். இது காலனித்துத்துவத்திற்கு பிந்தைய காலத்திலும் (Post-Colonial) மேற்கத்தேயே ஆதிக்கம் ஆசிய, ஆபிரிக்க, இலத்தின் அமெரிக்க நாடுகளை தொடர காரணமாகியது. தற்போது காலனித்துவ நீக்கம் (De-colonial) பற்றி உரையாடி வருகின்றார்கள். ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கான வரையறைகளும் ஈழத்தமிழ் பரப்பிலிருந்தே வரவேண்டும். மாறாக பிற அரசுகளின் நடைமுறைகளை வைத்து வரையறுப்பது பொருத்தமாக அமையாது. இதனை சமகாலத்தில் பொலிவியாவை உதாரணங்காட்டி ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு உள்ளடக்கங்களுக்கு விளக்கம் கூறுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே, தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை 2009ஆம் ஆண்டு யுக மாற்றத்திற்கு பின்னராக, ஈழத்தமிழர்களின் அரசியல்; அபிலாசைகளை முன்னிறுத்தும் பொது ஆவணமாக உருவாக்கம் பெற்றுள்ளது. இதற்கான பொருள்கோடல்கள் தமிழ்ப் பரப்பிலிருந்தான கடந்த கால அனுபவங்களை மையப்படுத்தியே அமையப் பெற்றுள்ளது. தீர்வுக்கான உள்ளடக்கங்களாக பத்து விடயங்களும் ஒன்றை மற்றொன்று சார்ந்ததாகவும் தொடர்புறுவதுமாகவே அமைக்கப்பெற்றுள்ளது. தனித்தனியே ஒவ்வொன்றை விமர்சிப்பது மற்றும் குறை கூறுவதென்பது வெறுமனவே எதிர்ப்பு நடவடிக்கையாகவே அமைகின்றது. மாறாக தமிழ்த் தேசிய அரசியல் ஆரோக்கியத்தை உருவாக்குவதாக அமையவில்லை. விமர்சனங்கள் ஆரோக்கியமானதாக அமைகையிலேயே அது வளர்ச்சிக்கு வழிகோலும். தமிழ்ப் பொதுவேட்பாளரையும், தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கையையும் தொடர்ச்சியாக ஒற்றைக்குள் பார்ப்பவர்களின் சிந்தனைக்குள்ளேயே ஒற்றையாட்சி பற்றிய எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும் அதிகம் குவிந்துள்ளது எனும் சந்தேகங்கள் காணப்படுகின்றது. மகாபரதத்தில் துரியோதனினின் பார்வைக்கு உலகம் அநீதியானதாகவும், தர்மரின் பார்வைக்குள் உலகம் நீதியானதாயும் புலப்பட்டதையே, தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பிக் தேர்தல் அறிக்கை மீதான ஒற்றையாட்சி விமர்சனங்களும் பிரதிபலிக்கின்றது.
Comments
Post a Comment