இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் இந்திய நலன்சார் நெருக்கடிகள்! -ஐ.வி.மகாசேனன்-

சர்வதேச உறவுகளில் தென்னாசிய பிராந்தியம் இந்தியாவின் விம்பத்திலேயே பிரதிபலிக்கப்படுகின்றது. எனினும் நடைமுறையில் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான உறவுகளில், இந்தியா சார்ந்து எதிரான மனநிலைகளே கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்திய சார்ந்து காணப்படும் பிராந்திய அரசாங்கங்கள் இந்திய திணிப்பில் உருவாக்கப்பட்டதாகவே அமைகின்றது. இதுவும் ஒரு வகையில் பிராந்தியத்தில் இந்திய எதிர் மனநிலை வளர காரணமாகிறது எனலாம். ஏற்கனவே பாகிஸ்தானுடன் எல்லை முதல் மோதல் தென்னாசியா பிராந்தியத்தின் ஒற்றுமையையே சீர்குலைப்பதாக அமைந்துள்ளது. இதனை விட சமீபத்தில் மாலைதீவு ஆப்கானிஸ்தான் என்ற வரிசையில் தற்போது பங்களாதேஷ் அரசாங்கமும் இந்தியா எதிர் நிலைப்பாட்டில் கட்டமைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையிலேயே செப்டம்பர்-21இல் நடைபெற உள்ள இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இந்திய உயர் கரிசனை செலுத்துவதை அவதானிக்க கூடியதாகும் உள்ளது. தேர்தலுக்கு அண்ணளவாக ஒரு மாதம் இருக்கும் நிலையில் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகரின் இலங்கைக்கான விஜயமும், அதன் தொடர்ச்சியான தமிழக பயணமும் ஆளுநர் சந்திப்பும் அதிக சந்தேகங்களை பொது வழியில் உருவாக்கியுள்ளது. இக்கட்டுரை இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இந்தியாக்கு காணப்படும் கரிசனைக்கான அரசியல் பின்புலங்களை தேவைப்பாடுகளை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆகஸ்ட் 29,30ஆம் திகதிகளில், கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இலங்கை வந்திருந்தார். இது இந்தியா, இலங்கை, மாலைதீவு, மொரிசீயஸ், பங்களாதேஷ் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு பாதுகாப்புக் குழுவின் கூட்டம் ஆகும். இந்து சமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்புசார் ஒத்துழைப்பை மையப்படுத்தியதாகும். இக்கூட்டத்தில் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் செயற்பாட்டை முறைப்படுத்தும் வகையில் விரைவில் கொழும்பில் செயலகம் அமைப்பது தொடர்பில் கூட்டு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. சமதளத்தில் இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான இந்தியாவின் கரிசணையையும் அஜிண் டோவல் வெளிப்படுத்தியிருந்தார். ஜனாதிபதி தேர்தலின் பிரதான வேட்பாளர்களான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திசநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாமல் ராஜபக்ச ஆகியோரை தனித்தனியாக சந்தித்துள்ளார். மேலும், இவ்வருட ஜனாதிபதி தேர்தலில் தீர்மான சக்திகளாக எதிர்பார்க்கப்படும் சிறுபான்மை தேசிய இனங்களினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ், முஸ்லீம் மற்றும் மலையக அரசியல் கட்சியினரையும் சந்தித்துள்ளார். சந்திப்புக்களில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான நடத்தைகளை உரையாடியுள்ளார். இலங்கைப் பயணத்தை முடித்துக்கொண்டு ஆகஸ்ட் 31ஆம் திகதி சென்னை  சென்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் இந்திய தேசிய பாதுகாப்பு தொடர்பாக நீண்டநேரம் விவாதித்துள்ளார்.

அஜித் டோவலின் வருகையை தொடர்ந்து, இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இந்தியாவின் தலையீடு அதிக விவாதத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவை சஜித் பிரேமதாசவுடன் இணைப்பதற்கான உரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. அவ்வாறே செப்டெம்பர்-01 ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான தமிழரசுக் கட்சியின் முடிவினை வெளிப்படுத்துவதற்கான மத்தியகுழு செயற்கூட்டத்தில் அஜித் டோவலின் உரையாடல்கள் பகிரப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த பின்னணியிலேயே தமிழரசு கட்சியும் அவசர கதியில் சஜித் பிரேமதாசவிற்கான ஆதரவை தெரிவித்ததாக நம்பப்படுகின்றது. இந்தியாவின் கணிப்புகளில் சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திசாநாயக்க முதன்மை போட்டியாளர்களாக உள்ளனர். இலங்கையின் கருத்து கணிப்புக்களும் அவ்வாறானதொரு விம்பத்தையே உருவாக்கி உள்ளது. இலங்கையின் அரசியல் கலாசார மரபுகளில் இடதுசாரி அரசியலுக்கான அங்கீகாரம் பலவீனமானதாகவே உள்ளது. எனினும் இலங்கையின் அண்மைய அரசியல் கலாசாரம் பல மாறுபாடுகளுக்குள்ளேயே பயணிக்கிறது. மரபுகள் சிதைக்கப்படுகிறது. அதன் வெளிப்பாடே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சுதந்திர கட்சியின் 73வது ஆண்டு விழாவிற்கு சிறப்பு அதிதியாக அழைக்கப்பட்டுள்ளார். இலங்கையின் பாரம்பரிய அரசியல் கட்சிகளின் வடிவங்கள் பலவீனப்பட்டுள்ளது. மேலும் இலங்கையின் இடதுசாரிகள் அதிக இனவாதிகளாகவே செயற்பட்டு வந்துள்ளனர். இப்பின்னணிகளில் அநுரகுமார திசாநாயக்க தொடர்பிலான கருத்து கணிப்பு எதிர்பார்க்கைகள் முழுமையாக நிராகரிக்க முடியாத நிலைமைகளே காணப்படுகின்றது. இந்தியா ஒப்பீட்டளவில் அநுரகுமார திசாநாயக்காவின் இடதுசாரி விம்பங்களினால் நிராகரிக்கும் நிலைமைகளும், முன்னணியில் உள்ள சஜித் பிரேமதாசாவின் வருகையை விரும்பும் நிலைமைகளே அவதானிக்கப்படுகின்றது. இந்திய சுதந்திர தினத்திற்கு இலங்கையில் அரசியல் தலைவர்கள் எக்ஸ் தளத்தில் பதிவு செய்து வாழ்த்துகளில், சஜித் பிரேமதாசாவின் வாழ்த்துக்கு பதிலளித்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, 'எங்கள் உறவுகள் இன்னும் உயரத்திற்கு தயாராக உள்ளன!' எனக்கூறி நன்றி தெரிவித்திருந்தார். இப்பதிவுகளின் உள்ளார்ந்த அரசியலும் அதிக விவாதத்தை உருவாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான முன்அனுபவங்களிலேயே அஜித் டோவலின் பயணமும் சந்திப்புக்களும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான இந்திய கரிசணையை முன்னுக்கு கொண்டு வந்துள்ளது.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலின், தனிப்பட்ட விபரம் இந்திய தேசிய பாதுகாப்பு சார்ந்த அவரது கடந்த கால வரலாறும் பதிவுகளும் உயர்வானதாகும். அஜித் டோவல் பதற்றம் நிறைந்த, நெருக்கடியான சூழ்நிலைகளில் இந்திய உளவுத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவராக காணப்படுகின்றார். பாகிஸ்தானில் 7 ஆண்டுகள் உளவாளியாக தங்கியிருந்து தீவிரவாதிகளின் தாக்குதல் திட்டங்களையும், செயல்பாடுகளையும் இந்திய இராணுவத்திற்கு தெரிவித்தார். அதேபோல கந்தகார் விமானக்கடத்தல் தொடங்கி மொத்தம் 15 விமானக் கடத்தல்களில் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிணையக் கைதிகளின் விடுதலைக்கு காரணமாக இருந்தார். இராஜதந்திரியாகவும் பேச்சுவார்த்தை நுணுக்கங்களை சாமார்த்தியமாக நெறிப்படுத்துபவராக உள்ளார்.  இவரது இராஜதந்திரத்தால் பதவி இழந்தவர்களில் நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி.ஒலியும் ஒருவராகும். இவ்அனுபவங்களின் தொகுப்புடனேயே இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நம்பிக்கைக்குரியவராக, அவர் பதவியேற்றதிலிருந்து இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வருகின்றார். இப்பின்னணிகளுடனேயே இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கு அண்மித்த காலத்தில் அஜித் டோவலின் இலங்கைக்கான பயணத்தையும் ஜனாதிபதி வேட்பாளர்களுடனான சந்திப்பையும் அணுக வேண்டியுள்ளது.

தேசிய பாதுகாப்பு தரப்பினரிடம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பில், இலங்கையின் புவிசார் அரசியல் அமைவிடம் சார்ந்து இயல்பாகவே கரிசணை உயர்வாகவே காணக்கூடியாகும். கொழும்பு மாநாட்டின் முக்கியத்துவமும் அதுசார்ந்ததாகவே அமைகின்றது. சர்வதேச அரசியல் சமுத்திரங்களையும் தீவுகளையும் நோக்கியே நகர்கின்றது. இந்த பின்னணியில் சர்வதேச வர்த்தக தடத்தில் இந்து சமுத்திரமும் அப்பிராந்தியத்தின் தீவாக இலங்கையும் பிரதான புவிசார் அரசியல் நிலையை பெறுகின்றன. இந்து சமுத்திர உலகளாவிய வணிக ஓட்டங்களின் மையத்தில் உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 100,000 கப்பல்கள் உலகின் 30 சதவீத சரக்கு கொள்கலன்களை ஏற்றிக்கொண்டு இவ்வழித்தடத்தில் பயணிக்கின்றது. அதேவேளை இந்து சமுத்திர பிராந்தியத்தில் சுமார் 40 நாடுகள் உள்ளதுடன், உலக மக்கள்தொகையில் 40 சதவீதத்தை கொண்டுள்ளது. உலகின் பெரிய மக்கள்தொகைக்கு அதன் முக்கியத்துவம் காரணமாக, இந்தியப் பெருங்கடல் பகுதி மிக முக்கியமான புவிசார் அரசியல் நரம்பு மையங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இங்கு மிகப்பெரிய பொருளாதாரம் மற்றும் இராணுவம் என்ற அடிப்படையில், இந்தியா இயற்கையாகவே ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இவ் அடிப்படையில் தனது இருப்பை இப்பிராந்தியத்தில் பாதுகாப்பதில் உயர் அக்கறையை வெளிப்படுத்துகின்றது. பிராந்திய அரசுகளுடன் இறுக்கமான பிணைப்பை பேண முயலுகின்றது. 2015ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் வெளிப்படுத்தப்பட்ட 'பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி' (Security and Growth for All in the Region-SAGAR) என்ற என்ற கருத்தாக்கத்தின் மூலம் இந்து சமுத்திரப் பிராந்தியம் மீதான அக்கறையையுமே வெளிப்படுத்துகிறது. இந்து சமுத்திர பிராந்தியத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இந்தியாவின் பங்கு பற்றிப் பேசும் போது பிரதமர் மோடி, 'எங்கள் பகுதி' என்று விளிக்கின்றார். இந்தியாவின் புவியியலை நாம் கணக்கில் எடுத்துக் கொண்டால், அவரது பார்வையின் பின்னணியில் உள்ள தர்க்கம் மிகவும் தெளிவாகிறது. சுமார் 1,200 தீவுகள் மற்றும் 2.4 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பிரத்தியேக பொருளாதார மண்டலத்துடன் இந்து சமுத்திரத்தை தொடும் 7,500 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையை இந்தியா கொண்டுள்ளது. இந்தியாவின் 90 சதவீத வர்த்தகம் அளவிலும், 90 சதவீத எண்ணெய் இறக்குமதியும் இதன் வழியாகவே நடைபெறுவதால், இந்தியாவின் பொருளாதாரப் பாதுகாப்பிற்கும் இப்பகுதி முக்கியமானது.

இலங்கை இந்து சமுத்திரத்தின் கடல்வழிப் பயணத்தின் மத்தியிலும் இந்தியாவிற்கு அண்மையிலும் அமைந்துள்ளதாய் புவிசார் முக்கியத்துவத்தை பெறுகின்றது. இலங்கை இந்தியாவின் நலன்களுக்குள் பயணிப்பது இந்தியாவுக்கு அவசியப்படுகின்றது. இலங்கை இந்தியாவின் எதிர்ச்சக்திகளின் களமாகின்ற போது, இந்து சமுத்திர பிராந்தியத்தில் இந்தியாவின் சுதந்திர ஈடுபாடும், இந்தியாவின் தேசிய பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய அபாயம் உள்ளது. குறிப்பாக இலங்கை-சீனா உறவும், இந்து சமுத்திர பிராந்தியத்தில் அதிகரிக்கப்படும் சீனாவின் பிரசன்னத்தையும் இந்தியா அச்சுறுத்தலாகவே நோக்குகின்றது. கடந்த வாரம் சீன இராணுவப் படைக்கு சொந்தமான He Fei, Wuzhishan மற்றும் Qilianshan ஆகிய மூன்று கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டன. அதே காலப்பகுதியில், இலங்கை கடற்படையால் இயக்கப்படும் டோர்னியர் கடல்சார் கண்காணிப்பு விமானத்திற்கான உதிரி பாகங்கள் மற்றும் பிற பொருட்களை வழங்குவதற்காக இந்திய போர்க்கப்பலான INS மும்பையும் அதே துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அண்டை நாடுகளுக்கு சீன கப்பல்களின் வழக்கமான வருகைகள் இந்தியாவிற்கு உடனடி கவலையை ஏற்படுத்தக்கூடியதாகவே உள்ளது. இதுசார்ந்து இலங்கை அரசாங்கத்துக்கு சில காலங்களில் சில நெருக்குவாரங்களையும் இந்தியா வழங்கியுள்ளது.  அதே வேளையில், இந்து சமுத்திரப் பகுதியில் இன்னும் பெரிய பணிப் படையை நிலைநிறுத்துவதன் மூலம் சீனா தனது இருப்பை ஆதரிக்கத் திட்டமிட்டுள்ளதால், வரும் ஆண்டுகளில் சீனாவின் சவால் அதிகரிக்கப் போகும் சூழலே சர்வதேச அரசியல் போக்குகளில் அவதானிக்கப்படுகின்றது. அத்துடன் சில அறிக்கைகளின்படி, 2028-29க்குள் இந்தியாவின் மேற்கு கடற்படைக் கட்டளைக்கு இணையான சொத்துக்களை பாகிஸ்தான் கொண்டிருக்கும் எனக்கருதப்படுகின்றது. இதன் அர்த்தம், நிலத்தொடர்ச்சி எல்லைகளுடன் கடலிலும் இந்தியா இரண்டு முன்னணி சவாலை எதிர்கொள்ள தயாராக உள்ளது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சவால்களைக் கருத்தில் கொண்டு, கொழும்பு மாநாடு போன்ற இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுடான ஒத்துழைப்பு முயற்சிகளில் இந்திய கரிசணை செலுத்துகின்றது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் தனது ஸ்திரத்தை உறுதிப்படுத்தும் ஒரு பகுதியாவே, கொழும்பை மையப்படுத்திய நிரந்தர செயலகம் உருவாக்குவதற்கான கூட்டு ஒப்பந்தத்திற்கு இந்தியா சென்றுள்ளது. இந்த பின்னணியில் இந்து சமுத்திரத்தில் இந்திய தனது ஸ்திரத்தை உறுதிப்படுத்த இலங்கை அவசியமாகின்றது.

தென்னாசிய பிராந்தியத்தில் ஆட்சி மாற்றங்களின் தொடர்ச்சியாக அயல் நாடுகளின் உறவில் இந்திய கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றது. பாகிஸ்தான்-இந்தியா தென்னாசியாவில் இரு அணுஆயுத நாடுகள் என்ற அடிப்படையிலும் அதன் முரண்பாட்டு களம் வரலாற்றோடு பிணைகின்றது. ஏனைய அரசுகள் சிறு அரசுகள் தம்பிகளாகவும், இந்தியா பெரிய அரசாக பெரிய அண்ணன் நிலையிலும் தென்னாசிய பிராந்தியத்தில் இந்தியாவிற்கும் ஏனைய அரசுகளுக்கும் இடையிலான உறவு வடிவமைக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது தென்னாசிய பிராந்திய அரசுகளின் அரசாங்கங்கள் பெரும்பாலும் அண்ணனோடு முரண்டுபிடிக்கும் தம்பிகளாகவே உள்ளனர். 2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இந்திய-ஆப்கானிஸ்தான் உறவு நெருக்கடியானதாக அமைகின்றது. 2023ஆம் ஆண்டு மாலைதீவு ஜனாதிபதி தேர்தலில் இந்திய எதிர்ப்புவாத பிரச்சாரத்தினூடாக வெற்றி பெற்ற முகமது முய்சுவின் ஆட்சியில் மாலைதீவு இந்தியாவிலிருந்து விலகி செல்வதாக அமைகின்றது. 2024-மார்ச் முதல் வாரங்களில் ஆளும் கூட்டணியில் இருந்து இந்தியா சார்பு நேபாளி காங்கிரஸ் வெளியேறியதும், சீனாவுக்கு ஆதரவான CPN-UML மீண்டும் ஆட்சிக்கு வருவதால், நேபாளத்தின் இராஜதந்திரம் சீன சார்பு நிலைக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. 2024இல் பங்களாதேஷில் ஏற்பட்ட மாணவர் புரட்சியினூடாக ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், புதிய ஆட்சியை உருவாக்கியுள்ள எதிர்க்கட்சி இந்து எதிர்ப்பினை மையப்படுத்தியதாகும். இது இந்திய அரசுடனான இணக்கமான உறவுக்கு சவாலானதாகவே காணப்படுகின்றது. அத்துடன் ஷேக் ஹசீனாவிற்கு இந்தியா அளித்துள்ள பாதுகாப்பும் பங்களாதேஷின் புதிய அரசாங்கத்தால் விமர்சிக்கப்படுகின்றது. இது இந்திய-பங்களாதேஷ் உறவில் ஏற்பட்டுள்ள முறிவையே அடையாளப்படுத்துகின்றது. தென்னாசியாவில் இந்தியாவுடன் முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ள புதிய அரசாங்கங்கள் யாவும் சீனாவுடன் நெருக்கமான உறவை பேணுகின்றது. இந்த பின்னணியிலேயே இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் இந்தியாவிற்கு அதிக முக்கியத்துவத்தை பெறுகின்றது. கருத்துக்கணிப்புகளில் முன்னிலை வகிக்கும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க, தேர்தல் காலத்தில் இந்திய-இலங்கை உறவு தொடர்பில் சாதகமான கருத்தை வெளிப்படுத்துகின்றார். எனினும் தேசிய மக்கள் சக்தியின் மூல அரசியலான ஜே.வி.பி முழுமையாக இந்திய எதிர்ப்புவாதத்தால் கட்டமைக்கப்பட்டதாகும். அத்துடன் சீன மாக்ஸிச தத்துவத்தை அடிப்படை பிரச்சாரமாக கொண்டு பரிணமிக்கப்பட்டதாகும். ஆதாலால் அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றி கணிப்புக்கள் இந்தியாவிற்கு அச்சத்தை கொடுக்கக்கூடியது என்பது மறுக்க முடியாததாகும்.

எனவே, 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இலங்கை களத்தில் மாத்திரமின்றி பிராந்தியத்திலும் அதிக கவன ஈர்ப்பை பெற்றுள்ளதாகவே அமைகின்றது. குறிப்பாக பிராந்திய அரசில் கையாளக்கூடிய அரசாங்கங்களை உருவாக்குவதனூடாக தமது நலன்களை பாதுகாக்கும் யுக்தியை நடைமுறைப்படுத்தும் இந்தியாவிற்கும் நெருக்குவாரத்தை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே தென்னாசிய பிராந்தியம் மற்றும் இந்து சமுத்திர பிராந்தியத்தில் இந்தியாவைச் சுற்றி வளைக்கும் சீனாவின் முத்துச் சரம் உத்தி புதுதில்லிக்கு நிரந்தர மூலோபாய கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சீன மாக்ஸிச கட்சி வேட்பாளர் ஒருவர் இலங்கை ஜனாதிபதி தேர்தல் கருத்து கணிப்புக்களில் முன்னிலை பெற்றுள்ளமை தொடர்ச்சியான நெருக்கடி எதிர்வுகூறலாக அமைகின்றது. இந்நெருக்கடிகளின் பிரதிபலிப்பாகவே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் இலங்கைக்கான நேரடி விஜயமும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தலையீடும் அவதானிக்கப்படுகின்றது. நேபாளத்தின் கே.பி.ஒலியின் ஆட்சி மாற்றத்தில் வெற்றி பெற்ற அஜித் டோவாலால் இலங்கையின் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறமுடியுமா என்பதிலேயே அரசியல் ஆய்வாளர்களின் கவனம் குவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-