தமிழரசுக்கட்சியின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு 13மைனசிற்குள் சுருங்குகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

இலங்கையில் பாரம்பரிய கட்சிகளின் சிதைவும், அரசியல் கட்சிகளின் ஆதிக்க வீழ்ச்சியும் புதியதொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்குகின்றது. ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க பாரம்பரியமான ஐக்கிய தேசிய கட்சி இல்லாது, சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி உள்ளார். பிரதான ஜனாதிபதி வேட்பாளராக அவதானிக்கப்படும் சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அனுரகுமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தியும் தமது பாரம்பரிய அரசியலை கலைந்து புதிய அரசியல் கட்சியில் பயணிப்பவையாகும். இவ்அரசியல் கலாச்சார இயல்பு 2020ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழ் அரசியல் பரப்பிலும் மெல்ல புலப்பட்டிருந்தது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வீழ்ச்சியும், தமித்தேசிய கூட்டமைப்புக்கு வெளியே பாராளுமன்ற ஆசனங்கள் சென்றிருந்தது. தற்போது ஜனாதிபதி தேர்தலில் சிவில் சமுகங்களின் கூட்டிணைவான தமிழ் மக்கள் பொதுச்சபையின் முன்னெடுப்பில் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்த தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பினூடாக ஜனாதிபதி தேர்தலை கையாள்வது அரசியல் கட்சிகளின் ஆதிக்கம் வீழ்ச்சியடைந்துள்ளமையையே வெளிப்படுத்துகின்றது. சுயேட்சை வேட்பாளராக சங்கு சின்னத்தில் களமிறக்கப்பட்டுள்ள பொதுவேட்பாளரின் வெற்றி தமிழ் அரசியலையும் புதிய பாதைக்கு நகர்த்தக் கூடியதாக அவதானிக்கப்படுகிறது. இந்நிலையிலேயே தமிழ் அரசியல் கட்சிகளிடையே தனியன்களாக தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான ஆதரவு அதிகரித்து வருகின்றது. எனினும் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தமிழரசுக்கட்சியின் ஆ.ம.சுமந்திரன் மத்திய செயற்குழுவின் முடிவாக தமிழ்ப் பொதுவேட்பாளரை நிராகரிப்பதுடன், சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். இக்கட்டுரை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுவின் முடிவாக ஆ.ம.சுமந்திரனின் அறிவிப்பு சார்ந்த அரசியலை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர்-01அன்று வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில், தமிழரசுக்கட்சி ஜனாதிபதி தேர்தலில் வினையாற்றுவது தொடர்பிலான முடிவு எடுக்கப்பட்டது. குறித்த மத்திய செயற்குழு கூட்டதில் 26 பேர் கலந்து கொண்டிருந்தனர். தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளாத நிலையில் மூத்த துணைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழரசு கட்சி வினையாற்றுவது தொடர்பில் இரு விருப்புகள் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிப்பது மற்றும் தென்னிலங்கை வேட்பாளர்களில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பது என்பதாகும். இவ்விருப்புக்களில் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் உட்பட ஐந்து பேர் தமிழ்ப் பொதுவேட்பாளர் தொடர்பான ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்கள். யாழ்ப்பாணம்-கிளிநொச்சி தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மத்திய செயற்குழுவில் கலந்து கொள்ளாத போதிலும், தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக கடிதம் அனுப்பியுள்ளார். அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்களான ஆ.ம.சுமந்திரன், இரா.சாணக்கியன் மற்றும் த.கலையரசன் உட்பட பதினாறு பேர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்கள். மற்றும் சி.வி.கே.சிவஞானம் உட்பட நான்கு பேர் மௌனம் காத்தனர். தமிழரசுக்கட்சியின் கொழும்பு கிளை தலைவர் வே.தவராசா தீர்மானத்திற்கு முன்னர் இடையில் விலகி இருந்தார். மத்திய செயற்குழுவில் கலந்து கொண்டோர்களின் பெரும்பான்மையோரின் முடிவாக தமிழரசுக்கட்சி சஜித் பிரேமதாசாவினை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தமிழரசுக்கட்சி வெளிப்படுத்தியுள்ளது.

தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆ.ம.சுமந்திரன், 'ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பா.அரியநேத்திரனை ஆதரிப்பதில்லை எனத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. அத்துடன், எமது கட்சி உறுப்பினராகிய அரியநேத்திரன் ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம். அதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது' எனத்தெரிவித்திருந்தார். 

அநேகமாக செப்டெம்பர்-03அன்று பாராளுமன்றத்தில் மூன்றாம் வாசிப்புக்கு சமர்ப்பிக்கப்பட உள்ள மாகாணசபை தேர்தல் திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரே, தமிழரசுக் கட்சி ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் செப்டெம்பர்-1 நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில், அவசரகதியாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய செயற்குழு கூட்டத்தில் சிரேஷ்ட தலைவர்கள் பலர் கலந்து கொள்ளாத நிலையிலேயே முடிவெடுக்கப்பட்டதுடன், கட்சி தலைவருக்கு உத்தியோகபூர்வமாக தெரியப்படுத்த முன்னரே ஊடகத்தில் அவசரமாக தமிழரசுக்கட்சியின் ஜனாதிபதித் தேர்தலில் வினையாற்றும் முடிவை அறிவித்திருந்தார்கள். தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக தொடர்ச்சியாக கருத்துரைத்து வரும் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் வெளிநாடு சென்றுள்ளார்கள். தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உடல்நிலை சீரின்மையால் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவ்வாறே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன் மற்றும் ஸ்ரீநேசன் ஆகியோரும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையிலேயே மத்திய செயற்குழு அவசரமாக முடிவு எடுத்துள்ளது.

மத்திய செயற்குழுவின் ஜனாதிபதி தேர்தல் முடிவு தொடர்பில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா செப்டெம்பர்-1 மாலையில் கருத்து தெரிவிக்கையில்,  'ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது என்பது கட்சி முடிவல்ல. அது சுமந்திரனின் தனிப்பட்ட முடிவு. கட்சியின் நிலை இதுவரை தனக்கு உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் எதுவும் கிடைக்கவில்லை' எனக் குறிப்பிட்டிருந்தார். எனினும் மறுநாள் செப்டெம்பர்-2அன்று, 'மத்திய செயற்குழுவின் முடிவுகளை இணைந்து நடைமுறைப்படுத்துவோம்' எனத்தெரிவித்திருந்தார். மாவை சேனாதிராசாவின் முரண்பாடான கருத்துக்கள் தமிழரசுக்கட்சியின் அவசர முடிவு தொடர்பில் சந்தேகங்களை அதிகரிப்பதாகவே அமைந்துள்ளது.

தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தென்னிலங்கை வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது தொடர்பிலும், தமிழ்ப் பொதுவேட்பாளரை நிராகரிப்ப தொடர்பிலும் எடுத்துள்ள முடிவுகளின் அரசியல் பின்புலத்தை ஆழமாக நோக்குதல் அவசியமாகின்றது.

முதலாவது, தமிழரசுக்கட்சி மீளவும் தமிழர்களை ஏமாற்றும் முனைப்புடன் தென்னிலங்கையின் நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.  தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் அணியினர் தமிழ்ப் பொதுவேட்பாளரை நிராகரிக்கையில், தென்னிலங்கை வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பரிசீலனை செய்து முடிவெடுப்பதாகவே தெரிவித்திருந்தார்கள். அத்துடன் செப்டெம்பர்-1க்கு முதல் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டங்களில் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான ஆதரவும் தென்னிலங்கை வேட்பாளர்களுக்கான ஆதரவும் கடுமையான மோதலாக அமைந்தது. இந்நிலையிலேயே இறுதியாக நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் தமிழரசுக்கட்சி ஜனாதிபதி தேர்தலில் எதிர்வினையாற்றுவது தொடர்பில் தீர்மானமெடுக்க குழுவொன்றும் உருவாக்கப்பட்டிருந்தது. எனினும் செப்டெம்பர்-1 நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில், கடந்த கால மத்திய செயற்குழு கூட்டத்தின் தீர்மானங்கள் ஏதும் கருத்திற்கொள்ளாது, தன்னிச்சையான முடிவு சிறுகுழுவினரால் எடுக்கப்பட்டுள்ளது. எனினும், சஜித் பிரேமதாசா சமஷ;டியையோ அல்லது ஆகக்குறைந்த 13ஆம் திருத்தத்தையோ முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித்திருக்கவில்லை. தற்போது நடைமுறையில் காணப்படும் 13ஆம் திருத்தம் என்பது, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா காலம் முதல் சீர்செய்யப்பட்டு பல அதிகாரங்கள் நீக்கப்பட்டதொரு வடிவத்திலேயே காணப்படுகின்றது. இப்பின்னணியில் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 13ஆம் திருத்தமானது, '13மைனஸ்' குறித்து நிற்கின்றது. சஜித் பிரேமதாசாவிற்கான தமிழரசுக்கட்சியின் ஒரு சிறுகுழுத் தீர்மானமானது ஒற்றையாட்சிக்குள் '13மைனஸிற்குள்' இணங்கிச் செல்வதாகவே அமைகின்றது.

இரண்டாவது, தமிழ்ப்பொதுவேட்பாளர் ஏற்படுத்தியிருந்த தமிழ் மக்களின் வாக்கிற்கான பெறுமதியையும் தமிழரசுக்கட்சியின் தீர்மானம் தொடர்ச்சியாக வெற்றுக் காசோலையாக்கும் செயற்பாட்டுக்கு நகர்த்தியுள்ளனர். 2024ஆம் ஆண்டுக்கான இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் பற்றிய ஆரம்ப உரையாடல்கள் அனைவராலும் சாதாரண உரையாடலாகவும், கேலிக்கைக்குரியதாகவுமே நோக்கப்பட்டது. எனினும் சிவில் சமுகத் தரப்பின் ஈடுபாடும் தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பு உருவாக்கமும், தமிழ்ப் பொதுவேட்பாளரின் செயலாக்கத்திற்கான நம்பிக்கையை உருவாக்கியது. இது இதுவரை காலமும் தமிழ் மக்களின் வாக்குகளை வெற்றுக் காசோலையாக பயன்படுத்தி வந்திருந்த தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு கடும் நெருக்கடியை உருவாக்கியிருந்தது. இந்த பின்னணியிலேயே சிறிது காலம் வடக்கு-கிழக்கு தென்னிலங்கை பிரதான வேட்பாளர்களின் விருப்பத்திற்குரிய இடமாக மாறியது. ஈழத்தமிழர்களை நோக்கி தொடர்ச்சியாக படையெடுத்தனர். இது தமிழ்ப் பொதுவேட்பாளர் களம் தமிழ் மக்களின் வாக்கு பலத்தை உயர்த்தியதன் விளைவாகவே அமைந்திருந்தது. எனினும் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சாணக்கியன் போன்றோர் தொடர்ச்சியாக தமிழ்ப் பொதுவேட்பாளரை தொடர்ச்சியாக நிராகரித்ததுடன், தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு ஆதரிக்கும் நிலைப்பாட்டையே வெளிப்படுத்தி வந்தார்கள். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட தென்னிலங்கை வேட்பாளர்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களில் முழுமையாக தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வையும், ஈழத்தமிழர்களின் கோரிக்கையையும் நிராகரித்திருந்தனர். இந்நிலையில் தமிழரசுக்கட்சி மீளவும் ஒருமுறை வெற்றுக் காசோலையாக தமிழ் மக்களின் வாக்கினை தென்னிலங்கைக்கு வழங்க எடுத்துள்ள தீர்மானமானது, ஈழத்தமிழர்களை பலவீனப்படுத்த தமிழரசுக்கட்சி விரும்புவதையே எடுத்துக்காட்டுகிறது.

மூன்றாவது, தமிழரசுக்கட்சி சிறுகுழு ஆதிக்கத்திற்குள் ஆழமாக பிணைக்கப்பட்டுள்ளது மீளவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அறுவரில் மூன்று பேர் தமிழப் பொதுவேட்பாளருக்கான ஆதரவை பொதுவெளியில் வெளிப்படுத்தி வருகின்றார்கள். அத்துடன் தமிழரசுக்கட்சியின் ஒன்பது மாவட்ட கிளையில் இரண்டு மாவட்ட கிளைகளான திருகோணமலை கிளை மற்றும் கிளிநொச்சி கிளை ஆகியன தமிழ்ப் பொதுவேட்பாளரை தமிழரசுக்கட்சி ஆதரிக்க வேண்டுமென ஏகமனதாக தீர்மானமெடுத்துள்ளார்கள். மிகுதி கிளைகள் எவ்வித முடிவையுமே வெளிப்படுத்தியிருக்கவில்லை. அதாவது ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக்கட்சியின் எதிர்வினை தொடர்பில் எத்தகைய கூட்டத்தையுமே ஒழுங்கமைத்திருக்கவில்லை. இரு கிளைகள் தங்கள் விருப்பை தன்னார்வமாக வெளிப்படுத்தியுள்ள நிலையில், ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக்கட்சியின் எதிர்வினை தொடர்பான தீர்மானத்தை மத்திய செயற்குழு எனும் மேல்மட்ட முடிவாக சுருக்கி விட முடியாத நிலையே காணப்படுகின்றது. தங்களை உயர்ந்த ஜனநாயகவாதிகளாக சித்திரிக்கும் தமிழரசுக்கட்சியின் உயர்மட்ட தலைவர்கள், தமிழரசுக்கட்சியின் மாவட்ட மட்ட உறுப்பினர்களின் எண்ணங்களை நிராகரிப்பதாகவே ஜனாதிபதி தேர்தல் ஆதரவு தொடர்பான முடிவு அறிவிப்பு காணப்படுகின்றது. இது தமிழரசுக்கட்சிக்குள் காணப்படும் சிறுகுழு ஆதிக்கத்தையே பிரதிபலிக்கிறது.

நான்காவது, தமிழரசுக்கட்சியின் ஜனாதிபதி தேர்தலுக்கு எதிர்வினையாற்றுவது தொடர்பிலான முடிவு தமிழரசுக்கட்சியை பிளவுபடுத்தியுள்ளது. தமிழரசுக்கட்சி 2024ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தலைவர் தெரிவுக்கான தேர்தலை எதிர்கொள்ளும் போதே பலரும் தமிழரசுக்கட்சிக்குள் ஏற்படக்கூடிய எதிர்கால பிளவுகளை அடையாளப்படுத்தியிருந்தார்கள். குறிப்பாக தமிழரசுக்கட்சி தன்னை தமிழ்த் தேசிய கட்சியாக விம்பப்படுத்துகின்ற போதிலும், தலைமைத்துவத்திற்கான தேர்தலில் தமிழ்த் தேசியவாதி மற்றும் தமிழ்த் தேசியவாதத்திற்கு எதிரானவர் என்ற பிளவும் விமர்சனங்களும், தமிழரசுக்கட்சியின் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டையே கேள்விக்குட்படுத்தியிருந்தது. சமகாலத்தில தேர்தல் தொடர்பிலான ஆதரவு முடிவுகளை வைத்து, தென்னிலங்கைக்கு ஆதரவானவர்கள் மற்றும் தமிழ்த்தேசிய ஆதரவானவர்கள் என மீளவும் தமிழரசுக்கட்சியின் தமிழ்த்தேசிய நிலைப்பாடு கேள்விக்குட்படுத்தப்படுகின்றது. தம்மை தமிழ்த் தேசியவாதியாகவும், எதிர்த்தரப்பை தமிழ்த் தேசியவாதத்திற்கு எதிரானவர்களாகவும் விம்பப்படுத்துவர்களின் தமிழ்த்தேசிய நிலையும் கேள்விக்குறியாகவே அமைகின்றது. அவர்களும் வெறுமனவே தமிழ்த்தேசியத்தை பெயர்பலகையாகவே சூடிக்கொள்கின்றார்கள். செயற்பாட்டுக்குள் அதனை நகர்த்த தயாரில்லை. செயற்பாட்டுக்குள் இவர்களால் தமிழ்த்தேசியவாதத்திற்கு எதிரானவர்கள் என அடையாளப்படுத்துவர்களோடு இணங்கி செல்வதாகவும், தமிழ்த்தேசிய விரோத செயற்பாட்டு விமர்சனங்களை அவர்கள் மீது பாரப்படுத்துவதாகவுமே அமைகின்றது. குறிப்பாக கடந்த காலங்களில் சித்திரா பௌர்ணமிக்காக மத்திய செயற்குழு கூட்டங்களை பிற்போட வலியுறுத்தியவர்கள், பிரதான தீர்மானமெடுக்கக்கூடிய சூழலை அறிந்தும் தனது விருப்பை கடிதத்தின் மூலமாக தெரியப்படுத்தியவர், கூட்டத்தை பிற்போடுவதற்கான எந்தக்கோரிக்கையும் முன்வைக்கவில்லை. மேலும், உரிய காலத்திற்கு முன்னர் கூட்டத்திற்கான அறிவிப்பு வரவில்லை எனும் குற்றச்சாட்டு காணப்படுகின்றது. அதனை முன்னிறுத்தி மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்கு இடைக்கால தடைக்கான எவ்வித ஏற்பாடுகளும் முன்னெடுக்கவில்லை. இது தமிழரசுக்கட்சிக்குள் தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிப்பவர்கள், தமிழரசுக்கட்சியாக சஜித் பிரேமதாசா ஆதரவினை விரும்புகின்றார்களோ என்ற சந்தேகத்தையே உருவாக்குகிறது.

எனவே, தமிழரசுக்கட்சியின் உத்தியோகபூர்வ முடிவு என்பது, சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதுடன், தமிழ்ப் பொதுவேட்பாளரை நிராகரிப்பதாகவே அமைகின்றது. இது தமிழரசுக்கட்சி ஒற்றையாட்சிக்கு உட்பட்ட '13மைனஸை' ஏற்றுக்கொள்வதையே உறுதி செய்கின்றது. அதேவேளை தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் அறிக்கையில், ஈழத்தமிழர்களினை தேசிய இனமாகவும் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய இனமாகவும் அடையாளப்படுத்துவதால் வலியுறுத்தப்படும் உயர்ந்தபட்ச அதிகார கோரிக்கையை நிராகரிப்பதாகவுமே அமைகின்றது. ஸ்தாபக தமிழரசுக்கட்சியின் பெயர்ப் பதிவு 'சமஷ;டி கட்சியாகவே' அமைகின்றது. ஈழத்தமிழரசியலில் ஒற்றையாட்சி கட்டமைப்பை நிராகரித்து அதிகாரப்பகிர்வு சார் கட்டமைப்பான சமஷ;டியை அறிமுகப்படுத்திய தமிழரசுக்கட்சி, 75 ஆண்டு கால இடைவெளியில் அதிகார பகிர்வை நிராகரித்து ஒற்றையாட்சிக்குள் பயணிக்க ஆரம்பித்துள்ளது. ஈழத்தமிழரசியில் தாயக கோட்பாட்டையும் தேசிய கோட்பாட்டையும் நடைமுறை அரசியலில் புகுத்தியிருந்த தமிழரசுக்கட்சி, தற்போது தாயகம்-தேசியம்-சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் பொதுவேட்பாளரை நிராகரிப்பதனூடாக தாயகம்-தேசியம் என்பதை நிராகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. தமிழரசுக்கட்சியின் இத்தகைய சீரழிந்த கொள்கை நிலை மாறலுக்கு தமிழரசுக்கட்சியின் ஒட்டுமொத்த அடிமட்ட ஆதரவாளர்கள் வரை காரணமாய் உள்ளனர். தமிழரசுக்கட்சி என்பது தனிமனித அல்லது சிறுகுழுவின் ஆதிக்க கட்சி அல்ல. தமிழரசுக்கட்சி தனது கொள்கைக்கு புறம்பாக பயணிக்கையில் அதனை ஏற்றுக்கொள்ளாதவர்கள், அதனை நிராகரித்து தமிழரசுக்கட்சியினை கொள்கைக்குள் பயணிக்கும் சூழலை உருவாக்க கடமைப்பட்டுள்ளார்கள். இதுவரை அவ்வாறானதொரு புரட்சிகள் நிகழ்ந்ததில்லை. தனிநபர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நகர்ந்து செல்வதையே மரபாக்கியுள்ளனர். அஃதே அச்சிறுகுழுவும் தொடர்ச்சியாக தான்தோன்றித்தனமாக தமிழரசுக்கட்சியின் கொள்கையை சீரழித்து, கட்சியையும் அழித்து வருகின்றனர். தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம், ஈழத்தமிழரசியலை கடவுளிடம் பரப்படுத்தியது போன்று, தமிழரசு கட்சியை கடவுளிடம் பாரப்படுத்தியும் காப்பாற்ற முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-