ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நெருக்கடிகளும் புதிய அரசதலைவரின் முன்னுள்ள சவாலும்! -ஐ.வி.மகாசேனன்-
2009ஆம் ஆண்டுக்கு பின்னர், மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் இலங்கை அரசியலில் தென்னிலங்கை அரசாங்கம் மற்றும் ஈழத்தமிழ் அரசியல் கொதிநிலையாக காணப்படும். இக்கொதிநிலை ஈழத்தமிழ் அரசியலை பொறுத்தவரை மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களுக்கு பின்னர் நீர்த்துப் போவதாக அமையும். அதேநேரம் இலங்கை அரசாங்கங்கள் அரசுடைய தரப்பாக அக்கொதிநிலையை நிரந்தரமாக நீர்த்துப்போவதற்கான செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதுண்டு. அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுவது போன்று, இக்காலம் ஜெனிவா திருவிழா காலப்பகுதியாகும். 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஈழத்தமிழர்களின் அரசியல் தரப்பினர் முட்டி மோதிக்கொண்டு இருப்பதனால், ஈழத்தமிழர்கள் ஜெனிவா திருவிழாவிற்கு அதிக அக்கறையை செலுத்த தவறியுள்ளார்கள். எனினும் இலங்கை அரசாங்கம் வழமை போன்றே ஐ.நா மனித உரிமைகள் பேரவையை உறுப்பு நாடுகளை கையாளவும், தீர்மானத்திற்கு எதிர்வினையாற்றவும் குழுவொன்றை ஜெனிவாவிற்கு அனுப்பியுள்ளது. இக்கட்டுரை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான அறிக்கையின் உள்ளடக்கங்களை பரிசீலிப்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர்-22 புதிய அரசாங்கத்தின் தலைவராக தெரிவு செய்யப்படும், இலங்கையின் ஜனாதிபதி ஏற்கனவே குறைநிரப்பாக உள்ள விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தக் கடமைப்பட்டுள்ளார். பொருளாதார உறுதிப்பாடின்மை பிரதான சவாலாக அமைகின்றது. இலங்கை ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களும் தென்னிலங்கையில் அதனை மையப்படுத்தியே கட்டமைக்கப்பட்டிருந்தது. சர்வதேச நாணய நிதியமும் மக்களால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியுடன் இணைந்து செல்வதற்கான உறுதிப்பாட்டை தெரிவித்துள்ளார்கள். மறுதளத்தில் இலங்கையில் ஆழமாக வேரூன்றியுள்ள தேசிய இனபிரச்சினைக்கான தீர்வு. அதிகாரப் பரவலாக்கலை அடிப்படையாகக் கொண்ட நிலைபேறான அரசியல் தீர்வொன்றின் ஊடாக நீண்டகால இனநெருக்கடியைத் தீர்த்துவைக்க வேண்டிய தேவையும் அமையவிருக்கும் புதிய அரசாங்கம் முன்னிலையில் வைத்துக் கவனிக்க வேண்டிய ஒரு சவாலாகும். தென்னிலங்கையின் தேர்தல் பிரச்சாரங்களில் தேசிய இனப்பிரச்சினை போதிய நிலையை பெறாத போதிலும், இதுதொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு 2012ஆம் ஆண்டு முதல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தொடர்ச்சியாக அழுத்தம் நீடிக்கப்பட்டு வருகின்றது.
இலங்கை தேசிய இனப்பிரச்சினையை தவறாக முறையில் கையாளும் போது, காலத்துக்கு காலம் சர்வதேச நெருக்கடிகள் உருவாகியுள்ளது. குறிப்பாக 2010ஆம் ஆண்டு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டி, இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்பட்டிருந்த ஜி.எஸ்.பி பிளஸ் (GSP+) வரிச்சலுகை இடைநிறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே 2012ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக 2009ஆம் ஆண்டு போர்க்குற்றத்தை தொடர்புபடுத்தி முதலாவது தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இலங்கையின் சமகால பொருளாதார நெருக்கடியில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இடைநிறுத்தப்பட்டமையும் பாரியளவில் தாக்கம் செலுத்தியுள்ளது. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையானது இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தகுதியான பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் பூஜ்ஜிய இறக்குமதி வரிகளை வழங்குகிறது. இது இலங்கை குறைந்த விலையில் ஐரோப்பிய சந்தைகளுக்குள் நுழைய வாய்ப்பாகியது. இலங்கையின் பொருளாதாரத்தின் முக்கிய துறைகளில் ஒன்றாக ஆடை உற்பத்தி ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையால் அதிக நன்மையை பெற்றிருந்தது. எனினும் 2010ஆம் ஆண்டு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இடைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து, பங்களாதேஷ் ஆடை உற்பத்திக்கான ஐரோப்பா சந்தையை நிரப்பிக் கொண்டது. 2017ஆம் ஆண்டு மீள ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை அந்தஸ்தை இலங்கை பெற்றுள்ள போதிலும், பழைய சந்தைப் பொலிவை பெற முடியவில்லை. 2022இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் ஆடை உற்பத்தி வீழ்ச்சியும் ஒரு பொலிவான காரணமாகும். ஆடை உற்பத்தி வீழ்ச்சியில் 2010 தொடக்கம் 2017ஆம் ஆண்டு வரையில் இடைநிறுத்தப்பட் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையும், ஐரோப்பிய சந்தை இழப்பும் ஓர் பகுதியளவு காரணமாகும்.
2012ஆம் ஆண்டு தொடக்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட போர்க்குற்ற தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்து வந்தது. இது அரசியல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் இலங்கை அரசிற்கு சர்வதேச ரீதியாக நெருக்கடிகளை உருவாக்கி வந்தது. இத்தகைய சவாலுக்குள்ளேயே 2015ஆம் ஆண்டு தேர்தலும் ஆட்சி மாற்றமும் உருவாகி இருந்தது. குறிப்பாக இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக, இலங்கையின் பாராம்பரிய அரசியல் கட்சி முறைமை சிதைக்கப்பட்டு, பிரதான இருமுனை அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கி கொண்டது. இதன் பின்னால் புதிய அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியாக இலங்கை அரசு எதிர்கொண்டிருந்த அரசியல் பொருளாதார நெருக்கடியை சீர்செய்ய வேண்டிய தேவை காணப்பட்டது. அதற்கான சாதகமான வெளிப்பாட்டை இராஜதந்திர ரீதியாக மைத்திரி-ரணில் தேசிய அரசாங்கமும் வெளிப்படுத்தியிருந்தது. குறிப்பாக குறித்த அரசாங்கத்திற்கு தமிழ் மக்களின் அரசியல் ஏக பிரதிநித்துவத்தை வழங்கிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரின் ஆதரவும் காணப்பட்டிருந்தது. பிரதான எதிர்க்கட்சியாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு காணப்பட்ட போதிலும், தேசிய அரசாங்கத்தின் பங்களிகளாகவே உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் செயற்பட்டிருந்தனர். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கம், 'உள்ளக பொறிமுறைகளுக்குள் தீர்வினை காண்பதாக மனித உரிமைகள், தொழிலாளர் தரநிலைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி தொடர்பான 27 முக்கிய சர்வதேச உடன்படிக்கைகளை' அங்கீகரித்திருந்தது. தேசிய அரசாங்கம் இலங்கையின் தமிழ் அரசியல் பிரதிநிதிகளுடன் கொண்ட இதயத்தாலான ஒப்பந்தம் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான இலங்கை மீதெழுந்த சர்வதேச நெருக்கடியை நீர்த்துப் போகச் செய்தது. அத்துடன் 2017ஆம் ஆண்டு மீள ஜி.எஸ்.பி பிளஸ் அந்தஸ்தை பெற வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததுடன், இலங்கையின் பொருளாதார மீளெழுச்சிக்கும் உறுதுணையாக இருந்தது. 2022ஆம் ஆண்டில், இலங்கையிலிருந்து 66மூ ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையின் கீழ் குறைக்கப்பட்ட வரிகளால் பயனடைந்தமை குறிப்பிடத்தக்கது.
2019ஆம் ஆண்டு இலங்கை அரசியல், 2018ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டு வெடிப்பு நெருக்கடியின் சூழமைவின் தொடர்ச்சியாகவே அமைந்திருந்தது. அது தேர்தலில் தேசிய பாதுகாப்பையே முன்னிறுத்தியிருந்தது. மாறாக இலங்கையின் பொருளாதாரம் மற்றும் ஆழமாக வேருன்றியுள்ள தேசிய இனப்பிரச்சினைகளை நிராகரித்திருந்து. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தீர்மானங்களை 2019ஆம் ஆண்டு முதல் மீள நிராகரிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்திருந்தது. இது மீள இலங்கைக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையில் நெருக்கடியான சூழமைவை உருவாக்கியிருந்தது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் இலங்கையின் உள்ளக பொறிமுறைகளை நிராகரித்து சர்வதேச பொறிமுறைகளின் தேவையை வலியுறுத்துவதாக வலுப்பெற்று வந்தது. குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் அழிவடையும் சூழலில் அதனை திரட்டுவதற்கான சர்வதேச பொறிமுறையும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானங்களில் 2019ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன்மை பெற்றிருந்தது. அக்காலப்பகுதியில் மீள ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை இடைநிறுத்துவது தொடர்பான வாதங்களும் மேலெழுந்திருந்தது. எனினும் 2020ஆம் ஆண்டு கொரோனா உலகத்தை முடக்கியதுடன், 2021-2022ஆம் ஆண்டுகளில் இலங்கை வரலாறு அரசியல் பொருளாதார நெருக்கடிகளால் 2019ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசாங்கம் தனது ஸ்திரத்தை இழந்திருந்தது. இதனால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையாலும் இலங்கை மீது பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் தீர்மானங்களையே நிறைவேற்ற முடிந்ததேயன்றி, நடைமுறைப்படுத்த முடியவில்லை. தீர்மானத்தை பலவீனப்படுத்துவதற்கும், இழுத்தடிப்பு செய்வதற்கும் இலங்கை அரசின் அரசியல் ஸ்திரமின்மையையே தென்னிலங்கை ஐ.நா மனித உரிமை அரங்கில் ஒப்பித்து வந்தன.
தற்போது இலங்கையின் தேர்தல் காலப்பகுதியில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 57வது கூட்டத்தொடர் செப்டெம்பர்-09 முதல் நடைபெற்று வருகின்றது. இதில் இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தலைப்பிலான 51/1 தீர்மானத்தின் உள்ளடக்க அமுலாக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைவரம் என்பன தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் உரையாற்றினார். இதில் மனித உரிமைகள் பாதுகாப்பு முறையை சீர்திருத்துவதாக உறுதியளித்த போதிலும், இலங்கை அரசாங்கம் அதனை இன்னும் செய்யாமல் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதேவேளை 2023 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்கள் மற்றும் மசோதாக்கள் மூலம் பாதுகாப்புப் படைகளுக்கு பரந்த அதிகாரங்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கருத்து சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்படுத்தல் மீதான கட்டுப்பாடுகளையும் இலங்கை அரசாங்கம் விரிவுபடுத்தியுள்ளதாகவும், ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகவும், கைதிகளுக்கு எதிரான சித்திரவதைகள் அதனால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டியிருந்தார். பரந்த அளவில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான சொற்களையே உயர் ஸ்தானிகரின் அறிக்கை கொண்டமைந்துள்ளது. பிரதானமாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரிற்காக நீதி கோருவோர் மீது இலங்கை அரசாங்கம் அரச இயந்திரத்தினூடாக ஒடுக்குமுறைகள் மேற்கொள்வது தொடர்பில் உயர் ஸ்தானிகரின் அறிக்கை உயர் கரிசணையை வெளிப்படுத்தியுள்ளது. இது பகுதியளவில் இலங்கை அரசாங்கத்துக்கு சவாலானதாகவே அமைகின்றது.
எனினும், இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக ஐ.நா மனித உரிமைகள் குற்றச்சாட்டை மறுதலித்ததுடன், தேர்தலை காரணங்காட்டி ஒத்திவைப்பதற்கான கோரிக்கையையும் முன்வைத்துள்ளது. இலங்கை தமிழ்த் தரப்பிலும் 57வது கூட்டத்தொடரில் பாரிய கரிசணை இல்லாத நிலையில் தீர்மானம் கால ஒத்திவைப்புக்கு செல்லக்கூடிய சூழலே பரிசீலிக்கப்படுகின்றது. இலங்கை தொடர்பில் 46/1 தீர்மானம், பின்னர் 51/1 ஆக காலநீடிப்புச் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், அத்தீர்மானம் இம்மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. அதனையடுத்து புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவருவது பற்றி முன்னர் ஆராய்யப்பட்ட போதிலும், இலங்கையில் இது தேர்தல் ஆண்டு என்பதால் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மேலும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குக் காலநீடிப்புச் செய்வதற்கான சாத்தியப்பாடு குறித்து பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் ஆராய்ந்து வருகின்றன. அநேகமாக ஓராண்டுக்கு ஒத்திவைத்து தேர்தலுக்கு பின்னர் உருவாகக்கூடிய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய முனைப்புகள் காணப்படுகின்றது.
எனவே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அழுத்தம் தேர்தல் காலப்பகுதியில் மலினமடைந்தாலும், அதன் தொடர்ச்சியான கால நீடிப்பு புதிய அரசாங்கத்திற்கு சவாலுக்குரியதாக அமையும். ஒக்டோபர் 2022 மற்றும் ஜூலை 2024இல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 51ஃ1 ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு இடையில் இலங்கையில் மனித உரிமைகளை ஆவணப்படுத்தும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கடுமையான அறிக்கையையே 57வது அமர்வு வெளிப்படுத்தியுள்ளது. 'இலங்கையின் பாதுகாப்புப் படையினரால் தமிழ் ஆர்வலர்களுக்கு எதிரான பாலியல் துஷ;பிரயோகம் மற்றும் மிரட்டல்களின் பரவலானது குறித்து அறிக்கை விவரிக்கிறது. அத்துடன் வடக்கு-கிழக்கு முழுவதும் நினைவிடம் மீதான தொடர்ச்சியான அடக்குமுறை பற்றிய கவலைகள்; வெளிப்படுத்துகிறது.' இது பரந்த அடிப்படையில் ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரச இயந்திரத்தின் ஒடுக்குமுறையை கண்காணித்துள்ளது. இக்கண்காணிப்பின் சவாலுக்குள்ளேயே தேர்தலின் முடிவிலிருந்து அரச தலைவர் தெரிவாகின்றார். கடந்த கால ஸ்திரமின்மையை, மக்கள் தேர்தலின் பின்பும் அரசாங்கத்தால் கூறி கடந்து செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 57வது கூட்டத்தொடரின் உயர் ஸ்தானிகரின் அறிக்கை, இலங்கை அரசாங்கத்தின் மீதான சர்வதேச நெருக்கடியின் விம்பமாகவே அமைகின்றது. இந்நெருக்கடி தேர்தலுக்கு பின்னர் பதவியேற்க உள்ள அரச தலைவரிடமே பொறுப்பிக்கப்பட உள்ளது. இப்பின்னணியில், நாட்டுக்கு நிலையான அமைதியையும் கொண்டுவருவதற்கு இந்த பிரச்சினைக்கு பதவியேற்கும் ஜனாதிபதி முன்னுரிமை கொடுக்கவேண்டும்.
Comments
Post a Comment