ஜனாதிபதி தேர்தல் 2024 : ஜனநாயக உரிமையான வாக்குரிமையை தமிழ் மக்கள் பயன்படுத்த வேண்டும்! -ஐ.வி.மகாசேனன்-
இன்று உலகம் ஜனநாயகத்தை தேர்தல்களுக்கு உள்ளேயே சுருக்கியுள்ளது. அந்த அடிப்படையில் இலங்கையின் ஆட்சித் தலைவருக்கான ஜனநாயகத் திருவிழா அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் பிரச்சாரங்கள் செப்டம்பர்-18ஆம் திகதியுடன் நிறைவுறுகின்றது. செப்டம்பர்-21ஆம் திகதி மக்கள் வாக்குச்சாவடிகளில் தங்களது தெரிவை நிகழ்த்த உள்ளார்கள். செப்டம்பர்-22ஆம் திகதி இலங்கை தேர்தல் ஆணைக்குழு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சித் தலைவரை தெரிவிக்க உள்ளது. கடந்த எட்டு ஜனாதிபதி தேர்தல்களிலிருந்து வேறுபட்ட வகையில், ஈழத்தமிழர்கள் இம்முறை இலங்கை ஜனாதிபதி தேர்தலை புதியதொரு போராட்டமாக பரிட்சித்து பார்த்து உள்ளார்கள். தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை திரட்சியாக வெளிப்படுத்தும் களமாக இலங்கை ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்த முற்பட்டுள்ளார்கள். தமிழ் மக்களின் தேசிய திரட்சி, தமிழ் மக்களை பிரித்தாள்பவர்களுக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளது. ஆதலால் தமிழ்ப் பொதுவேட்பாளர் தொடர்பில் முரணான சதிக்கோட்பாடுகளையும் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தார்கள். எனினும் மக்கள் எழுச்சி சதிக்கோட்பாடுகளை தகர்த்துள்ளதாகவே அரசியல் அவதானிகளின் கருத்தாக அமைகின்றது. இக்கட்டுரை தமிழ்த் தேசியத்தின் எதிர்கால அரசியல் போக்கில் தமிழ்ப் பொது வேட்பாளரின் வகிபாகத்தை அடையாளம் காண்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அரசியலில் ஜனநாயகம் தனித்துவமான, உறுதியான நிலை பெறுகின்றது. இன்று மறுசீரமைப்பு ஜனநாயகம் பற்றிய உரையாடல்கள் மேலெழுவதும், அடிப்படையில் அரசியலில் ஜனநாயகம் தவிர்க்க முடியாது என்பதையே உறுதி செய்கின்றது. சமகாலத்துக்கு ஏற்ப அதன் மாற்றங்களை உள்வாங்கவும், கடந்த கால பலவீனங்களை சீர்செய்யவுமே மறுசீரமைப்பு விவாதிக்கப்படுகிறது. வரலாற்றில் சிதறுண்டிருந்த ஐரோப்பாவும், அமெரிக்காவும் பின்னாட்களில் உலகின் ஆதிக்க சக்தியாக வளர்வதில் ஜனநாயகத்தின் பிரவேசமும், அது ஏற்படுத்திய பொதுநிலைப்பாட்டுக்கான திரட்சியுமே அடிப்படையாகும். இன்றும் அமெரிக்காவின் மேலாதிக்கம் நேட்டோ என்ற கூட்டின் துணை கொண்டே சாத்தியப்படுத்துகிறது. இது ஜனநாயகம் ஏற்படுத்திய திரட்சியின் முக்கியத்துவத்தையே வெளிப்படுத்துகிள்றது. தேசியம் என்பது திரட்சியின் அடிப்படையில் கட்மைக்கப்படும் சிந்தனையாக அமைகிறது. இந்த ஒழுங்கில் தேசிய இனங்கள் தம் இருப்பை உறுதிப்படுத்த ஜனநாயகத்தை அல்லது பொதுவிருப்பை உறுதி செய்வது அவசியமாகின்றது. இந்த விம்பங்களில் சர்வதேச அரசியல் ஜனநாயகத்தின் பெயராலேயே இயங்குகிது. இந்த பின்னணில், உரிமைக்காக போராடும் தேசிய இனங்களும் ஜனநாயகப் பொறிமுறைகளுக்கூடாக தமது அரசியல் அபிலாசைகளை முன்னிறுத்துகையிலேயே, அதன் பெறுமதி வலுப்பெறுகிறது.
2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்தில், தமிழ் ஆயுதப் போராட்டக் குழுவின் பங்களிப்பு அத்தகையதொரு ஜனநாயக பொறிமுறையை வெளிப்படுத்தும் யுக்தியாகவே அமைகிறது. 2001ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், 'சர்வதேச மூன்றாம் தரப்பு ஈடுபாட்டுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் உடனான பேச்சுவார்த்தை செயல்முறை உடனடியாக ஆரம்பம்' எனக்குறிப்பிடுவதனூடாக ஜனநாயக பொறிமுறையினூடாக விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என அடையாளப்படுத்தப்பட்டனர். காலனித்துவ விடுதலைக்கு பின்னரான இலங்கை வரலாற்றில், ஈழத்தமிழர் தங்கள் உரிமைக்கான அஹிம்சை போராட்டத்திலும் சரி, ஆயுதப் போராட்டத்திலும் சரி ஜனநாயக பொறிமுறைகளை அனுசரித்து செல்வதில் கரிசனையுடன் செயற்பட்டுள்ளார்கள் என்பதை வரலாறு உறுதி செய்கின்றது.
கடந்தகால வரலாற்று அனுபவங்களின் தொடர்ச்சியாகவே, இம்முறை ஜனாதிபதி தேர்தலை ஈழத்தமிழரசியல் தரப்பு தந்திரோபாயமாக கையாளக்கூடிய சூழல் விபரிக்கப்பட்டது. 2001ஆம் ஆண்டு பொதுத்தேர்தலூடாக தமிழ் மக்களின் உயர்ந்தபட்ட கோரிக்கைகளை முன்வைத்த ஏகப்பிரதிநிதித்துவம், 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்ட மௌனிப்புடன் அழிக்கப்பட்டதென இலங்கை அரசாங்கங்கள் கூறி வருகின்றன. இது ஒரு யுக மாற்றத்திற்குரிய காலப்பகுதியாகும். இந்த பின்னணியிலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, தென்னிலங்கைக்கு இணக்கத்தை வெளிப்படுத்த எவ் இழிநிலைக்கும் செல்ல தயாரெனும் கொள்கையை வரித்துக்கொண்டு, அரசியல் அரங்கில் தமிழ்த்தேசிய நீக்கத்தை செய்ய முற்பட்டார்கள். தேர்தல் பிரச்சாரங்களில் மாத்திரமே தமிழ்த்தேசியம் சுருங்கியது. மாறாக கருத்தியலாளர்கள் மட்டத்தில் புது யுக மாற்றத்தில், மக்களின் தேசிய அரசியல் அபிலாசைகளை ஜனநாயக அரங்கில் மீள வெளிப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளரை முன்னிறுத்த வேண்டியதன் தேவைப்பாடு தொடர்பில் தமிழ்த்தேசிய மூத்த அரசியல் வரலாற்று ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் நீண்டதொரு அறிக்கையை அன்றைய தமிழ்த்தேசிய ஊடகப் பேச்சாளரூடாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைப்பு சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் ஏற்கனவே தமிழ்த்தேசிய நீக்க அரசியலலை வரித்துக்கொண்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை, தமிழ்த்தேசிய திரட்சியை ஏற்படுத்தக்கூடிய தமிழ்ப் பொதுவேட்பாளர் கருத்தியலை நிராகரித்திருந்தார். அதுமட்டுமன்றி சாத்தன்களுடன் இணங்கி செல்வதை ஏற்று, நல்ல பேய் கொள்கைக்குள் ஜனாதிபதி தேர்தல் தெரிவுகளை பழக்கப்படுத்தி கொண்டார்கள்.
நல்ல பேய் என்ற அடிப்படையில், கடந்த மூன்று தேர்தல்களிலும் சரத் பொன்சேகா, மைத்திரிபால சிறிசேனா மற்றும் சஜித் பிரேமதாசா என போர்க்கால இரணுவ தளபதி, போர்க்கால பாதுகாப்பு அமைச்சர் மற்றும் போர்க்கால முப்படைகளின் தளபதிகளினதும் பாதுகாப்பு அரணாக செயற்படுபவர்களுக்கே தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தல்களில் வாக்களித்து வந்துள்ளார்கள். இது தமிழ் மக்களின் இனப்படுகொலை நீதிக்கோரிக்கையை மலினப்படுத்தும் செயலாகவே அமைகின்றது. இதற்கு தமிழ் மக்களை நெறிப்படுத்தியவர்களாக, 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழ் மக்களுக்கு ஏகபிரதிநிதித்துவத்தை வழங்கிய தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரே ஆகும். அவர்களது தேசிய நீக்க அரசியல் தமிழ் மக்களின் திரட்சியை மாத்திரமின்றி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பையும், தற்போது 75வருட கால பாரம்பரியத்தை கொண்ட தமிழரசுக்கட்சியின் திரட்சியையும் சிதைத்துள்ளது. தமிழ் மக்கள் தேசிய உரிமையை கோருகின்ற போதிலும், சிதறுண்ட இனம் என்ற போர்வை, தமிழ் மக்களின் தேசிய கோரிக்கையை பலவீனப்படுத்துவதாக அமைகின்றது.
தமிழ் மக்களின் சமகால அரசியல் முக்கியத்துவம், அவர்களது திரட்சியிலேயே வடிவமைக்கக்கூடியதாகும். சர்வதேச தூதரக செயற்பாட்டாளர்களும், இராஜதந்திரிகளும் தமிழ் மக்களின் திரட்சியின்மையை காரணங்காட்டியே, தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கையை புறமொதுக்கும் சூழல் காணப்படுகின்றது. இவ்வாறான சூழலிலேயே தமிழ் மக்களின் திரட்சியை உறுதிப்படுத்துவதனூடாக, தமிழ் மக்களிடம் ஆழமாக பொருந்தியுள்ள தாயகம், தேசியம் மற்றும் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தேசிய அபிலாசைகளை பொதுவெளியில் மீளவும் வலியுறுத்துவதற்கான களமாக 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை கையாள்வது தமிழ் மக்களிடையே விவாதிக்கப்பட்டது. இந்த பின்னணியிலேயே தமிழ்ப் பொதுவேட்பாளரை தமிழ் மக்களின் அரசியல் குறியீடாக முன்னிறுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2009களுக்கு பின்னர் எழுக தமிழ்கள் மற்றும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணிகள் என்பவற்றில் தமிழ் மக்கள் திரட்சியாக ஜனநாயக வழியில் தமது தேசிய அபிலாசைகளை முன்னிறுத்தியுள்ளார்கள். எனினும் சர்வதேச அரசியலில் தேர்தல் ஜனநாயகத்தின் உச்சமான பொறிமுறையாக அவதானிக்கப்படுகின்றது. ஜனநாயகத்தின் அளவீடு காலத்துக்கு காலம் இடம்பெறும் தேர்தல்கள் மூலமே தீர்மானிக்கப்படுகின்றது. எனவே, தமிழ் மக்கள் இலங்கை ஜனாதிபதி தேர்தலை தமது தேசிய அபிலாசையை முன்னிறுத்துவதற்கான களமாக பயன்படுத்த தேர்வு செய்துள்ளமை தந்திரோபாய முயற்சியாகும்.
தமிழ்த்தேசியம் பிளவுபட்டுள்ள நிலையில், தமிழ்ப் பொதுவேட்பாளர் முயற்சி விபரீதமானது என்ற வாதத்தை சில தமிழரசியல் தரப்பினர் முன்வைக்கின்றார்கள். இவ்வாதம் மறுதளத்தில் அவர்களும் தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை பொதுநிலைப்பாட்டில் அடையாளப்படுத்துவதில் தமிழ்ப் பொதுவேட்பாளரின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்வதாகவே அமைகின்றது. ஆயினும் இவ்விவாதத்தை முன்வைப்பவர்களின் ஆதரவு தளம் தென்னிலங்கை வேட்பாளர்களுக்கானதாகவே அமைகின்றது. எனவே, அடிப்படையில் தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகள் பொதுநிலைப்பாடாக பொது அரங்கில் அடையாளப்படுத்தப்பட கூடாது என்பதிலேயே அவர்களது அக்கறை காணப்படுகின்றது. தமிழ்த் தேசிய மூலாத்தை பூசிக் கொண்டே தமிழ்த் தேசிய நீக்க அரசியலை செய்ய முடியுமென்ற நிலை, தமிழ் மக்களிடம் தேசியம் சார் எண்ணம் உயர்வாக காணப்படுகின்றது என்பதனையே அடையாளப்படுத்துகிறது. தேர்தல் என்பது எண்ணிக்கை சார்ந்த வெற்றி தோல்வி விளையாட்டாகும். எனினும் தமிழ்ப் பொதுவேட்பாளர் அரசியல், தமிழ் மக்களின் தேசிய அபிலாசையை முன்னிறுத்தும் குறியீட்டு அரசியலாகும். இங்கு எண்ணிக்கைகள் வெற்றி தோல்வியை தீர்மானிக்கப் போவதில்லை. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அரசியல் அரங்கிற்கு உயிர்ப்புடன் கொண்டு செல்வதே வெற்றியாகும்.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் களத்த்தில், ஒரு தரப்பு புறக்கணிப்பு அரசியலை முன்னிறுத்தி தமிழ்ப் பொதுவேட்பாளரையும் தென்னிலங்கையின் நிகழ்ச்சி நிரலுக்குள் பிணைக்கும் வாதத்தை முன்வைக்கின்றார்கள். இது அவர்களது அரசியல் அறியாமை என்பதற்கு அப்பால், தமது கட்சி அரசியல் தோல்வியின் அச்சத்தின் வெளிப்பாடாகவே அமைகின்றது. குறிப்பாக தங்களது உரைகளில், 'சஜித் பிரேமதாசாவிற்கான தென்னிலங்கை வாக்குகளை தமிழ்ப் பொதுவேட்பாளர் அரசியலின் தமிழ்த்தேசியவாத எழுச்சி குழப்பி, தென்னிலங்கை பேரினவாத வாக்குகளால் ரணில் விக்கிரமசிங்காவை வெற்றி பெற வைக்கும் முயற்சி' என விபரிக்கின்றார்கள். இவர்களது விபரணம், சஜித் பிரேமதாசாவின் தோல்விக்கான கவலையாகவே புலப்படுகின்றது. எனவே புறக்கணிப்பு அரசியல் சஜித் பிரேமதாசவுக்கான ஆதரவுத்தளமா? என்ற கேள்வி, தமிழ்ப் பொதுவேட்பாளர் தொடர்பான அவர்களது குற்றச்hட்டிலிருந்து மறுபக்கமாக எழக்கூடியதாகும். 1982ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் எ.ஜே.வில்சன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற ஜே.ஆர்.ஜெயவர்த்தன மற்றும் அமிர்தலிங்கத்திற்கு இடையிலான சந்திப்பில், ஜே.ஆர்.ஜெயவர்த்தன தனது வெற்றிக்காக தமிழ்த்தரப்பு ஆதரிக்காவிடின் புறக்கணிப்பு செய்வதை ஏற்றுக்கொண்டார். இதனை எ.ஜே.வில்சன் தனது 'The Break-up of Sri Lanka' என்ற நூலில் விபரித்துள்ளார். 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிதாமகர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன புறக்கணிப்பை ஏற்றுக்கொள்வது, இது தென்னிலங்கைக்கு சேவகம் செய்யக்கூடியததையே உறுதி செய்கின்றது. புறக்கணிப்பு, தமிழ்ப் பொதுவேட்பாளர் அரசியல் என எத்தகைய அரசியலை தமிழ் மக்கள் மேற்கொண்டாலும், தென்னிலங்கையிலிருந்து ஒரு ஜனாதிபதி வருவது நிலையான செயற்பாடேயாகும். தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தில் எது காலத்திற்கு தேவையான தந்திரோபாய முயற்சி எனச் சிந்திப்பதே ஆரோக்கியமானமதாகும். அந்தவகையில் தமிழ்ப் பொதுவேட்பாளர் தென்னிலங்கை பேரினவாத வேட்பாளர்களை புறக்கணிப்பதோடு, தமிழ் மக்களின் தேசிய அபிலாசையை முன்னிறுத்துகிறது. இது புறக்கணிப்பு அரசியலின் முற்போக்கான போராட்டமாகவே அமைகின்றது.
எனவே, 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் ஈழத்தமிழ் அரசியலில் முக்கியமான பரிசோதனைக்களமாக மாறியுள்ளது. தமிழ் மக்கள் 1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தல், 2001ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு பின்னராக தமிழ் மக்களின் தேசிய அபிலாசையை முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொள்ளும் களமாக 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் அமைகின்றது. இதில் தமிழ் மக்களின் அரசியல் பங்குபற்றலும், தமிழ்ப் பொதுவேட்பாளரின் பின்னான அணிதிரளலும் தமிழ் மக்களின் உயர்ந்தபட்ச ஜனநாயக விழுமியத்தையும், அதனூடாக தமிழ் மக்களின் திரட்சியையும் உறுதி செய்யக்கூடியதாக அமையும். தேர்தல் காலங்களில் சமுக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படும் அரசியல் கருத்தியல்களில், 'உனக்கான அரசியலை நீ பேசவில்லையெனில், நீ வெறுக்கும் அரசியலால் ஆளப்படுவாய்' எனும் லெனினின் கருத்து தமிழ் அரசியலில் சமகால பொருத்தப்பாட்டை விளக்குகின்றது.
Comments
Post a Comment