மக்கள் எழுச்சிபெறும் தமிழ்ப்பொதுவேட்பாளரும் ; நெருக்கடிக்கு உள்ளாகும் அரசியல் கட்சிகள்! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் மும்மரமாக இடம்பெற்று வருகின்றது. அதேவேளை இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பிராந்திய மற்றும் சர்வதேச அரசுகள் அதிக முனைப்புடன் கண்காணித்து வருவதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது. 1982ஆம் ஆண்டு முதல் இடம்பெற்றுவரும் ஜனாதிபதி தேர்தல்களில் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் என்பது முழு இலங்கையிலும் பல குழப்பங்களையும் எதிர்பாராத மாற்றங்களையும் உருவாக்குவதாக அமைகின்றது. குறிப்பாக ஈழத்தமிழர் அரசியலில் ஜனாதிபதி தேர்தல் பற்றிய உரையாடலுக்கு சமாந்தரமாக உரையாடலைப்பெற்ற தமிழ்ப் பொதுவேட்பாளர் தேர்தலை அண்மித்து எழுச்சி பெற்று வருவதனை களச்சூழல்கள் வெளிப்படுத்துகின்றது. ஆகஸ்ட்-18அன்று முல்லைத்தீவில் தமிழ்ப்பொதுவேட்பாளர் அறிமுக கூட்டத்தின் தமிழ் மக்களிடையே தமிழ்ப் பொதுவேட்பாளர் தொடர்பான எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருந்தது. தற்போது செப்டெம்பர்-8அன்று வவுனியாவில் இடம்பெற்ற தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்குபற்றியிருந்தனர். இதனைவிட சிவில் சமுகங்கள் பல தன்னார்வமாக தமது பிரதேசங்களில் பொதுவேட்பாளருக்கான பிரச்சார கூட்டங்களை மற்றும் சந்திப்புக்களை முன்னெடுத்து வருகின்றனர். இவை தமிழ்ப் பொதுவேட்பாளர் அதிர்வு, அலையாக பரிணமிக்கப்படுவதனையே எதிர்வுகூறுகிறது. இக்கட்டுரை தமிழ்ப் பொதுவேட்பாளர் எழுச்சிக்கான சூழலை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டத்திற்கு பின்னர் தமிழ் மக்களின் அரசியல் ஏகபோக உரிமை தமிழ்த்தேசிய கூட்டமைப்பிடம் பாரப்படுத்தப்பட்டது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீதான தமிழ் மக்களின் அரசியல் நம்பிக்கையும், தமிழ்த் தேசியத்தின் மீது கொண்ட பற்றுதலின் காரணமாகவே கட்டமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக 2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம் மற்றும் அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான அங்கீகாரம் என்பன விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்டதாக நம்பப்படுகின்றது. இந்த பின்னணியிலேயே 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், தமிழ் மக்கள் தமது அரசியல் ஏகபோக உரிமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கியிருந்தார்கள். எனினும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமை 2009க்கு பின்னர் தமது அரசியல் பொறிமுறையை மாற்றிக்கொண்டது. தென்னிலங்கை அரசாங்கங்களுடன் இணக்கமான அரசியலை நகர்த்துவதன் ஊடாகவே தமிழர்களின் அரசியல் இருப்பை பாதுகாக்கலாம் என்ற எண்ணங்களுடன் அரசியலை நகர்த்திருந்தார்கள். தென்னிலங்கைக்கு இணக்கத்தை வெளிப்படுத்த செயற்பாட்டில் தமிழ்த் தேசிய நீக்க அரசியலை முன்னெடுத்திருந்தார்கள். தேர்தல் காலப் பகுதிகளில் தமிழ் மக்களின் வாக்குகளை சேகரிப்பதற்கு மாத்திரமே தமிழ்த் தேசியம் தேர்தல் பிரச்சார உத்தியாக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டது. இதன் விளைவையே 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சி உறுதிப்படுத்தப்படுத்தியது. தமிழ் மக்களின் ஒரு பகுதியினர் தமது தேசிய அபிலாசைகளை முன் நிறுத்த கூடியவர்களையும், பூர்த்தி செய்யக் கூடியவர்களையும் தேடும் களமாகவும், பிறிதொரு பகுதியினர் தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட அரசியல் கட்சிகள் மீதான வெறுப்பை வெளிப்படுத்தும் களமாக 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தலையும், 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலையும் பயன்படுத்தியிருந்தார்கள்.
தேசிய அபிலாசை தமிழ் மக்களிடம் தொடர்ச்சியான நிலையானதாகவே இருந்து வந்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ்கள், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணி, தமிழ் இனப்படுகொலை நினைவு தினம், திலீபன் போன்ற தியாகிகள் நினைவு தினங்கள், மாவீரர் தினங்கள் என்பவற்றில் மக்களின் தன்னெழுச்சி ஈடுபாடு தமிழ் மக்களின் தேசியம் பற்றிய இலட்சியபூர்வ வவேட்யின் வெளிப்பாடாகவே அமைகின்றது. இந்த வரிசையில் தமிழ்ப் பொதுவேட்பாளர் அரசியலும் ஒரு வகையில் தமிழ் மக்களின் தன்னார்வ முயற்சியிலேயே இன்று செயலாக்கத்தை பெற்றுள்ளது என்பது ஆழமான புரிதலில் விளங்கி கொள்ளக்கூடியதாகும். தமிழ்ப் பொதுவேட்பாளரின் சமகால செயலாக்க வெற்றி வடக்கு-கிழக்கு சிவில் சமுகங்களின் கூட்டு முயற்சியினாலேயே சாத்தியமாகியது. சிவில் சமூகம் என்பது, ‘மக்கள் தமது நலன்கள், யோசனைகள் மற்றும் சித்தாந்தங்களை முன்னேற்றுவதற்காக தங்கள் குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் வணிகங்களுக்கு வெளியே தன்னார்வ சங்கங்களை உருவாக்கும் குழுமமாகும்.’ ஆனது. இது அரசுக்கும் சமூகத்துக்கும் இடையே உள்ள ஒரு நடவடிக்கைக் கோளமாகும். இவ்அடிப்படையில் தமிழ்ப் பொதுவேட்பாளரை முன்னிறுத்துவதற்கான சிவில் சமுகத்தின் முனைப்பானது, தமிழ் மக்கள் தமது தேசிய நலன்களை வெற்றி கொள்ள தன்முனைப்பாக எடுத்த முயற்சியாகவே அமைகின்றது. அஃதே குறுகிய காலத்தில் தமிழ்ப் பொதுவேட்பாளரின் அரசியல் தாக்கம் பல தரப்பினரையும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. இதனை ஆழமாக நோக்குதல் அவசியமாகின்றது.
முதலாவது, தமிழ்ப் பொதுவேட்பாளரின் எழுச்சி தமிழ் அரசியல் கட்சிகளின் கடந்த கால ஏகபோக உரிமையை சவாலுக்குட்படுத்தக்கூடியதென்ற அச்சம், அரசியல் கட்சிகளிடையே உருவாகியுள்ளது. ஒருசில தரப்பினர் தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்புடன் வலிந்து இணைந்துள்ளமையும், இன்னும் சில அரசியல்வாதிகள் தமது அரசியல் கட்சியின் தீர்மானத்தை மீறி தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரிப்பதும், வேறுசிலர் தமிழ்ப் பொதுவேட்பாளர் மீது பொய்யான பிரச்சாரங்களை முன்வைத்து தோற்கடிக்க முயல்வதும் தமிழ் அரசியல் கட்சிகளின் அச்சத்தையே உறுதி செய்கின்றது. தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் கூட்டுத் தீர்மானத்தை மீறி, தென்னிலங்கையின் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடன் உரையாடல்களை மேற்கொண்டு இருந்தார்கள். தென்னிலங்கையுடன் பேரம் பேசுவதற்கான எண்ணங்களுடனேயே செயற்பட்டிருந்தார்கள். எனினும் அதனை அவர்களால் தொடர்ச்சியாக செயல்படுத்தியிருக்க முடியவில்லை. மீள தமிழ்ப் பொதுவேட்பாளருக்குள் இணைந்து கொண்டார்கள். தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பின் கூட்டுச்செயற்பாடுகளுக்குள் இணங்குவதாக தெரிவித்து கொண்டார்கள். தமிழரசு கட்சியின் ஒரு பகுதியினர் தென்னிலங்கை வேட்பாளரான சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் முடிவினை கட்சி முடிவாக பிரகடனப்படுத்தியிருந்தார்கள். எனினும் தமிழரசு கட்சியின் மாவட்ட கிளைகள் சில தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் தீர்மானத்தை சுயாதீனமாக எடுத்துள்ளன. அவ்வாறே பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றார்கள். தமிழரசு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவான நிலைப்பாட்டுடனேயே காணப்படுகிறார்கள். வலிகாமத்தை சேர்ந்த தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர், தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவான துண்டுப்பிரசுரம் கொண்டு சென்ற பல்கலைக்கழக இளைஞனிடம், ‘தனது வாக்கு அரிநேத்திரனுக்கு தான்’ என்பதை அவருக்கு தெரியப்படுத்துமாறு கூறியுள்ளார். இது தமிழரசுக் கட்சியின் தென்னிலங்கை வேட்பாளர் சார்ந்த முடிவை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. பொதுவேட்பாளரை ஆதரிக்க எடுத்துள்ள இம்முடிவுகள் மக்களுடன் தாம் இசைந்து செல்வதை தமிழ் அரசியல் கட்சிகள் வெளிப்படுத்த முயல்வதாகவே அமைகின்றது. இன்னொரு தளத்தில் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு எதிரான பொய் பிரச்சாரங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைப்பதன் ஊடாக தமிழ்ப் பொதுவேட்பாளர் முயற்சியை தோற்கடிப்பதற்கான செயற்பாட்டை ஒரு சில தமிழ் அரசியல் தரப்பினர் மேற்கொள்கின்றார்கள். குறிப்பாக தமிழரசு கட்சியின் சுமந்திரன்-சாணக்கியன் அணியினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் அவ்வாறான செயற்பாட்டையே மேற்கொள்கின்றார்கள். தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தென்இலங்கை வேட்பாளர்கள் தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை உள்வாங்க தயாரில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததே தேர்தல் புறக்கணிப்பு அரசியலை ஆரம்பத்தில் வெளிப்படுத்தியிருந்தார்கள். எனினும் சமகாலத்தில் முன்னணியின் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரம் என்பது பொது வேட்பாளர் மீதான ஆதாரங்களற்ற எதிர் விமர்சனங்களாகவே காணப்படுகின்றது. அதிகரிக்கும் தமிழ் அரசியல் தரப்பின் ஆதரவும், ஆதாரமற்ற பொய்ப் பிரச்சாரங்களும் தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ் மக்களின் மத்தியில் எழுச்சி பெற்று வருகின்றமையும், அது சார்ந்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தையும் உறுதி செய்கின்றது.
இரண்டாவது, தென்இலங்கையின் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமிழ் மக்களின் வாக்குகளுக்காக வடக்கு-கிழக்கில் முகாமிட்டு உள்ளதுடன், பிரச்சாரங்களில் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் என்ற தொனியில் பிரச்சார யுக்திகளையும் கையாண்டு வருகின்றார்கள். குறிப்பாக கடந்த இரண்டு வாரங்கள் தென் இலங்கையின் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, அவர் பாரியார்; தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க; சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் நாமல் ராஜபக்ஷா ஆகியோர் வடக்கு-கிழக்கில் முகாமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்கள். தென்னிலங்கை வேட்பாளர்களின் தேர்தல் அலுவலகங்களும் வடக்கு-கிழக்கில் திறக்கப்படுகின்றன. ஆகஸ்ட் இறுதி வாரம் முதல் சஜித் பிரேமதாசா வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டு பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தார். தொடர்ச்சியாக செப்டெம்பர்-10அன்று சஜித் பிரேமதாசாவின் மனைவி ஜலனி பிரேமதாசா மற்றும் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் வருகை தந்திருந்தனர். அவ்வாறே ரணில் விக்கிரமசிங்காவும் கடந்த வாரம் முழுக்க வடக்கு-கிழக்கு என தமிழர் தாயகத்தை மையப்படுத்தியே பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். வடக்கு-கிழக்கை முகாமிட்டுள்ள போதிலும், தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை ஏற்றுக்கொள்ளாத மனநிலையே பிரச்சார உள்ளடக்கங்களில் காணப்படுகிறது. பொருளாதாரம், அபிவிருத்தியை மையப்படுத்தியே பிரச்சாரங்கள் கட்டமைக்கப்படுகின்றது. அதேவேளை தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் என்ற வெற்று விம்பத்தை கட்டமைக்க முயல்வதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது. குறிப்பாக அனுரகுமார திசநாயக்கவின் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், “இந்த தேர்தலில் மாற்றம் ஒன்று ஏற்ப வேண்டும் என மக்கள் சிந்திக்கின்றார்கள். அவ்வாறான மாற்றத்தை உருவாக்க வேண்டும். அதற்கு விசேடமாக வடக்கில் உள்ள மக்களிடம் மாற்றம் ஏற்பட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த பிரச்சாரத்தில் அநுரகுமார திசநாயக்க தமிழ் மக்களுக்கு மிரட்டலாக, “தெற்கில் உள்ள மக்கள் தமக்கு வாக்களிப்பதற்கு அணிதிரண்டிருக்கிறார்கள். அந்த மாற்றத்திற்கு எதிராக நீங்கள் இருந்தால் தெற்கு மக்கள் மத்தியில் எவ்வாறான மனநிலை ஏற்படும் என சிந்தியுங்கள் எனக் கூறியுள்ளார்” என ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாண பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார். மேலும், “யாழ்ப்பாணத்தில் வைத்து மிரட்டல் விடுப்பதா? வடக்கு மக்களிடம் அனுர மன்னிப்பு கேட்க வேண்டும்” எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். இதே யாழ்ப்பாணத்திற்கு ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் தலைமையில் வந்த சிங்கள காடையர்கள் யாழ்ப்பாண பொது நூலகத்தை அழித்து இனப்படுகொலையை செய்திருந்தார்கள். இதுவரை நீதி கிடைக்கப் பெறவில்லை. தற்போது தமிழ் மக்களின் மீது அக்கறை போன்ற போலி விம்பத்தை உருவாக்க முயல்கின்றார். தென்னிலங்கை வேட்பாளர்களின் வடக்கு-கிழக்கு மீதான கவன குவிப்பு தமிழ்ப் பொதுவேட்பாளர் தென்னிலங்கை வேட்பாளர்களின் வெற்றி வாக்கை சிதைப்பதே காரணமாகும்.
மூன்றாவது, சர்வதேச பிராந்திய அரசுகள் தமிழ்ப் பொதுவேட்பாளரை குழப்புவதற்கான முயற்சிகளையும், அதேவேளையில் தென்னிலங்கையில் தமது நலனுக்கு உகந்த வேட்பாளரின் ஆதரவு தளத்தை பலப்படுத்துவதற்கான செயற்பாடுகளை இராஜீக உரையாடலூடாக முன்னெடுத்து வருகின்றனர். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலின் இலங்கை விஜயமும்; ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் சிறுபான்மை தேசிய இனங்களின் அரசியல் கட்சி பிரதிதிகளை சந்தித்து கலந்துரையாடியமையும்; இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பிராந்திய அரசின் நாட்டம் தொடர்பிலான கேள்விகளை அரசியல் அவதானிகள் மத்தியில் உருவாக்கியுள்ளது. அதிகரித்து வருவதாக சந்தேகிக்கப்படும் அனுரகுமார திசநாயக்காவின் வெற்றி வாய்ப்பை சிதைக்கும் வகையிலும், சஜித் பிரேமதாசவிற்கான ஆதரவு தளத்தை உருவாக்கும் முனைப்பில் இந்திய தனது இராஜதந்திர செயற்பாடுகளை முன்னெடுப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இப்பின்னணியில் ரணில் விக்கிரசிங்காவையும் சஜித் பிரேமதாசவையும் இணைப்பதற்கான உரையாடல்கள் முழு வீச்சாக மேற்கொள்ளப்படுவதாக தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் உரையாடப்படுகிறது. அதேவேளை தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் சஜித் பிரேமதாசாவின் வாக்குகளை திரட்டுவதற்கான செயற்பாகளையும் பிராந்திய அரசு மேற்கொள்கிறது. தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து எழுந்துள்ள சிந்தனை என்பதனால், அரசியல் கட்சிகளை விலை பேசுபவதனால் தமிழ்ப் பொது வேட்பாளர் கருத்தியலை இலகுவில் சிதைக்க முடியவில்லை. இந்நிலையிலேயே தமிழ் அரசியல் கட்சிகளை சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவாக திசை திருப்புவதில் பிராந்திய அரசு முயல்கிறது. செப்டம்பர்-1அன்று அவசரமாக தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு சஜித் பிரேமதாசாவிற்கான ஆதரவை வெளியிட்டது. இக்கூட்டத்தில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடனான சந்திப்பு உரையாடல்களும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. மேலும் செப்டம்பர்-04அன்று யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதுவர் சமத்துவ கட்சி செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாருடன் சந்தித்து ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடி உள்ளார். அதேவேளை செப்டம்பர்-2அன்று சமத்துவக்கட்சி சஜித் பிரேமதாசவிற்கான ஆதரவை தெரிவித்திருந்தது. சமத்துவ கட்சி கிளிநொச்சியில் இரண்டாம் நிலையில் ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக காணப்படுகிறது. தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்டக்கிளை தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக தீர்மானம் எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பிராந்திய அரசு உயர்வீச்சில் தமிழ்ப்பொது வேட்பாளருக்கு எதிரானவர்களை அணிதிரட்டுவது, தமிழ்ப் பொதுவேட்பாளரின் தன்னியக்க எழுச்சி, இந்திய நலன்சார் ஜனாதிபதியை இலங்கைக்கு கொண்டுவருவதில் நெருக்குவாரத்தை உருவாக்கியுள்ளமையையே உறுதி செய்யக் கூடியதாக உள்ளது.
எனவே, ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய சமகால போக்கு தமிழ்ப் பொதுவேட்பாளர் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் பொறியாக எழுச்சி பெறுவதையே அடையாளங் காணக்கூடியதாக உள்ளது. தமிழ்ப் பொது வேட்பாளர் அரசியல் தமிழ் தேசியத்தை பேணக்கூடிய அல்லது வலுப்படுத்தக்கூடிய ஒரு மூலோபாய முயற்சியாக மக்கள் மத்தியில் வலுவான பிணைப்பை பெற்று வருகின்றது. இந்த பின்னணியிலேயே பல அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் வலிந்து தமிழ்ப் பொது வேட்பாளருடன் இணைந்து பயணிக்கும் சூழல் காணப்படுகின்றது. தொடர்ச்சியாக தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் எதிர் விமர்சனங்களை முன்வைக்கும் தரப்பினர், தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பு என்ற கட்டமைப்பு எனும் எல்லைக்குள் தமிழ்ப் பொதுவேட்பாளரை சுருக்குவதே காரணமாகின்றது. தமிழ்த்தேசியத்திற்கு தமிழ்ப் பொதுவேட்பாளர் அரசியலின் தேவைப்பாட்டை உணர்ந்த பலரும் தன்னார்வமாய் தமிழ்ப் பொதுவேட்பாளரை சமுகமயப்படுத்துவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. வடமாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் அவ்வாறானதொரு தன்னார்வ செயற்பாட்டையே முன்னெடுக்கின்றார். மக்களிடமிருந்து தமது நலனை மையப்படுத்தி கொண்டு வந்த கருத்தியல், பொதுவெளியில் செயலாக்கத்துடன் மக்கள் எழுச்சியை பெற்று வருகின்றது. இதனை புறக்கணிப்பவர்கள், அடிப்படையில் தமிழ் மக்களிடமிருந்து தாம் விலகி இருப்பதையே உறுதி செய்கின்றார்கள். எதிர்காலங்களில் அவர்கள் அரசியலில் இருந்தும் ஒதுக்கப்படுவதற்கான வாய்ப்புகளே காணப்படுகின்றது. அரசியல் மக்களுக்கானது.
Comments
Post a Comment