பங்களாதேஷ் மாணவர் போராட்டமும் பங்களாதேஷின் தேசியவாத முரண்பாட்டு அரசியலும்! -சேனன்-

பங்களாதேஷின் அரசியல் வரலாறு என்பது இந்திய உபகண்டத்தின் தொடர்ச்சியானதாகவே அமைகின்றது. பங்களாதேஷ் அரசு உருவாக்கம் 1971ஆம் ஆண்டு பங்களாதேஷ் சுதந்திரப் போரின் விளைவிலானதாகவே சாத்தியமாகியது. 1947ஆம் ஆண்டு வரை இந்தியா புவிசார் எல்லையில் ஒரு பகுதியாகவே பங்களாதேஷின் அமைவிடம் அமைந்திருந்தது. பாகிஷ்தான் பிரிவினைக்கு பின்னர், பாகிஷ்தானின் புவிசார் எல்லைக்குள் கிழக்கு பாகிஸ்தானாக 1971ஆம் வரையில் காணப்பட்டது. இந்த பின்னணியில் பங்களாதேஷின் அரசியல் கலாச்சாரம், அரசியல் இயல்பு என்பன இந்திய இலக்கணங்களுக்குள்ளேயே பகுப்பாய்வு செய்ய வேண்டிய விடயமாக அமைகின்றது. அப்பிரதிமைகளே தென்னாசிய நாடுகளில் விரவி காணப்படுகின்றது. 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனநாயக தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஆட்சி 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மக்கள் புரட்சியினால் அகற்றப்பட்டுள்ளது. இது ஜனநாயக எழுச்சியாகவும், தேசியவாத மோதலாகவும் அரசியல் ஆய்வாரள்கள் மத்தியில் பல தரப்பட்ட ஆய்வுகள் மேலெழுந்துள்ளது. இதில் பங்களாதேஷின் ஐம்பதாண்டு கால அரசியல் வரலாற்றுடன், சுதந்திர போராட்ட வரலாற்றையும் அணுக வேண்டியுள்ளது. இக்கட்டுரை வரலாற்று பின்புலத்தில் பங்களாதேஷின் சமகால அரசியல் நிலைமைகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷின் உருவாக்கத்தில் தேசியவாதம் முரண்நிலையான வாதத்துக்குள் கட்டமைக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் மக்கள் தங்கள் மொழி, கலாச்சார மற்றும் அரசியல் விசுவாசத்துடன் தொடர்புடைய அடையாள நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். பங்களாதேஷ் உருவாக்கம் மொழியை அடிப்படையாகக் கொண்ட கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தான் நெருக்கடியிலேயே எழுச்சியுற்றது. கிழக்கு பாகிஸ்தானில் பங்கள (Bangla) மொழி பேசும் மக்களும், மேற்கு பாகிஸ்தானில் உருது மொழி பேசும் மக்கள் அடர்த்தியாக வாழ்ந்தார்கள். ஜனவரி-27, 1952அன்று, பாகிஸ்தான் பிரதமர் கவாஜா நஜிமுதீன், முகமது அலி ஜின்னாவின் எண்ணப்படி, பாகிஸ்தானின் ஒரே அரசு மொழி உருது மட்டுமே என்று அறிவித்தார். இது கிழக்கு பாகிஸ்தானில் குழப்பத்தை உருவாக்கியது. அதைத் தொடர்ந்து நடந்த அடக்குமுறையில் அப்துஸ் சலாம், ரபீக் உதீன் அகமது, ஷபியுர் ரஹ்மான், அபுல் பர்கத் மற்றும் அப்துல் ஜப்பார் ஆகியோர் 'மொழி தியாகிகள்' ஆனார்கள்.  பங்களாதேஷpன் விடுதலைப்போராட்டம் மொழிவாத அடிப்படையிலேயே கட்டக்கப்பட்டது. இவ்விடுதலைப்போராட்டத்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலைமை வழங்கினார். ஜூலை-9, 1953அன்று, கிழக்கு பாகிஸ்தான் அவாமி முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளராக முஜிபுர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பங்களாதேஷ் விடுதலையில் அவாமி முஸ்லீம் லீக் அரசியல் கட்சியாகவும், போராட்ட இயக்கமாகவும் தாக்கம் செலுத்தியிருந்தது.

அவாமி முஸ்லீம் லீக், அக்டோபர்-21, 1955அன்று நடந்த சிறப்பு பேரவை கூட்டத்தில், தனது பெயரிலிருந்து 'முஸ்லிம்' என்பதை நீக்கியது. பாகிஸ்தானின் விடுதலை இயக்கமான முஸ்லீம் லீக்கில் இருந்து அரசியல் முறிவையும், அதன் காலச்சார பிணைப்பு இயல்பையும் முறித்து கொண்டது. அவாமி லீக் தலைமையிலான கிழக்கு பாகிஸ்தான் விடுதலை இயக்கம் மதச்சார்பற்றதாக 'பெங்காலி தேசியவாதத்தை' (Bengali Nationalism) கட்டைமைத்து, பங்களாதேஷ் தனிநாட்டு உருவாக்கத்தை வலியுறுத்தியிருந்தார்கள். மேற்கு பாகிஸ்தான் பங்கள இனக்குழுமத்தில் மத அடிப்படையில் இஸ்லாம் மக்கள் பெரும்பான்மையாகவும், இந்து மக்கள் சிறுபான்மையாகவும் காணப்பட்டனர். இஸ்லாம் மக்களின் சுன்னி பிரிவினர் ஆதிக்கம் செலுத்துபவர்களாக காணப்பட்டனர். இம்மத முரண்பாடு பங்களாதேஷ் விடுதலைப்போராட்டத்தை குழப்பாத வகையிலேயே பங்களாதேஷ் தேசியவாதம் மொழி அடிப்படையிலான இன உணர்வின் எழுச்சியுடன் பெங்காலி தேசியவாதமாக கட்டமைக்கப்பட்டது. முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினரை பயமுறுத்தக் கூடாது என்பதில் அவர்கள் அக்கறை கொண்டிருந்தனர். பெங்காலி தேசியவாதம், சமய நோக்குநிலையைப் பொருட்படுத்தாமல் அனைத்து வங்களிகளின் அனுபவங்கள், மொழி மற்றும் இலக்கியங்களை கணக்கில் எடுத்துக் கொண்ட ஒரு கூட்டு அடையாளத்திற்காக நின்றது.  

ஷேக் முஜிபுர் ரஹ்மான் பெங்காலி தேசியவாதத்தின் சிறந்த ஆரம்ப ஒருங்கிணைப்பாளர்களில்  ஒருவராக செயற்பட்டார். ஆனால் பெங்காலி தேசியவாத எழுச்சி என்பது, அரச மொழிப் பிரச்சினையில் மாணவர்களின் செயல்பாட்டின் மூலம், கிழக்கு பாகிஸ்தான் மக்களிடமிருந்து தன்னியக்கமாக வெளிப்பட்டது. மொழி இயக்கம், ஒடுக்குமுறை அரசின் எதிர்ப்பையும் மீறி தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் ஆதரவைப் பெற்றது. 1971ஆம் ஆண்டு பங்களாதேஷ் விடுதலைப் போரின் போது சிறந்த ஆதாரமாகவும் அமைந்திருந்தது. பங்களாதேஷ் உருவாக்கத்திற்கு பின்னர், பங்களாதேஷ் விடுதலை இயக்கமான அவாமி லீக்கின் எழுச்சிக்கான ஆதாரமாக பெங்காலி தேசியவாதம் பாதுகாக்கப்படுகிறது. முஜிபுரின் மரணத்திற்கு பின்பும், நவீன அரசியலில் சேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக், மதசார்பற்ற பிளவற்ற பெங்காலி தேசியவாதத்தை முன்னிறுத்துகிறது.

எனினும், பங்களாதேஷ் உருவாக்கத்திற்கு பின்னர் தேசியவாத வரையறை சச்சரவுக்கு உள்ளானது. ஒரு பகுதி மக்களை கவரக்கூடிய வகையில் 'பங்களாதேசி தேசியவாதம்' (Bangaladeshi Nationalism) பற்றிய கருத்தியலும் புத்தெழுச்சி பெற்றுள்ளது. ஷேக் முஜிபுர் ரஹ்மான் படுகொலையினை தொடர்ந்து, 1975ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய இராணுவ அரசாங்கம், பெங்காலி தேசியவாதத்தை நிராகரித்து, பங்களாதேசி தேசியவாதத்தை அறிமுகப்படுத்தி கொண்டது. இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜியா உர்-ரஹ்மான் பங்களாதேஷ் தேசியவாதம் பற்றிய சொற்பொழிவை 1976இல் தொடக்கினார். 1976, பெப்ரவரி-21அன்று தேசிய மொழி தினத்தில் பங்களா அகடமியால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில், மேஜர் ஜெனரல் ஜியாவின் கீழ் பங்களாதேசி தேசியவாதத்திற்கான தத்துவார்த்த அடிப்படையை கோண்ட்கர் அப்துல் ஹமீத் வழங்கினார். 

'நமது தேசியத்தை 'பங்களாதேசி' தேசியம் என்று பொருத்தமாக அழைக்க வேண்டும், ஏனெனில் இந்த தேசம் ஒரு புகழ்பெற்ற அடையாளம், மரபு, வரலாற்று பாரம்பரியம், நம்பிக்கை, மொழி, கலை, இலக்கியம், சிற்பம், இசை மற்றும் பலவற்றைப் பெற்றுள்ளது.  பங்களாதேசி மனதிலும் வாழ்க்கையிலும் எண்ணற்ற அம்சங்கள் உள்ளன. அவை இந்த தேசத்தை உலகின் பிற பகுதிகளிலிருந்து வேறுபடுத்தி மற்ற பகுதிகளிலிருந்து வேறுபடுத்துகின்றன.'

என பங்களாதேசி தேசியவாதத்தை வரையறை செய்திருந்தனர். அடிப்படையில் பங்களாதேஷ் சுதந்திரத்திற்கு பின்னர் இராணுவ ஆட்சிக்கு ஆதாரமாகவே பங்களாதேசி தேசியவாதம் வடிவமைக்கப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட இந்த சித்தாந்தமானது பழைய சித்தாந்தமான பெங்காலி தேசியவாதத்திற்கு முற்றிலும் எதிராக கட்டமைக்கப்பட்டது. பழமையானது மொழி அடிப்படையிலும், பிந்தையது மதம் சார்ந்தது ஆகும். குறிப்பாக பங்களாதேஷின் பெரும்பான்மை மதமான இஸ்லாமிற்கு வலுச்சேர்க்கிறது. ஜியா தன்னுடைய ஆட்சிக் காலப்குதியில் பங்களாதேசி தேசியவாதத்தை பங்களாதேஷின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாக மாற்றியபோது, பங்களாதேஷின் மதச்சார்பின்மைக் கொள்கையை அகற்றினார். அத்துடன் 'சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வின் மீது முழுமையான நம்பிக்கை மற்றும் நம்பிக்கை' என்ற வரியை அடிப்படை கொள்கையில் இணைத்து கொண்டார். இது பங்களாதேசி தேசியவாதத்தின் மதச்சார்பை தெளிவாக அடையாளப்படுத்துகின்றது. ஆளும்வர்க்கம் தமது ஆட்சியதிகாரத்தை பாதுகாத்துக்கொள்ள மக்களிடமிருந்து ஆதரவை திரட்ட பயன்படுத்தும் கருவியாக சுதந்திர பங்களாதேசில் மதம் நிலையானது. 1976இல் ஜியா, தன்னை சிவிலியன் தலைவராக வெளிப்படுத்தும் முனைப்பில், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியை (BNP) உருவாக்கினார். இதன் பின்னர் பங்களாதேசி தேசியவாதத்தின் பார்வையும் வலுப்படுத்தப்பட்டது. 

பெங்காலி மற்றும் பங்களாதேசி அடையாள முரண்பாட்டை, பங்களாதேஷின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளான அவாமி லீக் மற்றும் பங்களாதேஷ் தேசியவாத கட்சி ஆகியன தமது அரசியல் போட்டிக்கான களமாக பயன்படுத்தி வருகிறார்கள். அவாமி லீக் பங்களாதேஷின் சுதந்திர போராட்டத்தை உரிமை கோருபவர்களாக, அதனை கட்டமைத்த பெங்காலி தேசியவாதத்தை முதன்மைப்படுத்தி வருகின்றார்கள். அவாமி லீக்கின் மிக முக்கியமான அரசியல் சாதனைகள் பாகிஸ்தான் எதிர்ப்பு இயக்கத்தில் உட்பொதிக்கப்பட்டுள்ளன. பங்களாதேஷ் தேசியவாத கட்சியின், பங்காதேசி தேசியவாத பதிப்பு, மத அடையாளத்தின் பயன்பாட்டுடன், பாகிஸ்தான் பிரிவினையின் இயக்கமான முஸ்லீம் லீக் ஒரு நனவான முயற்சியாக அமைகிறது.

பங்களாதேஷ் தேசியவாத தேசியவாத முரண்பாட்டுக்குள், பிராந்திய மேலாதிக்கத்தின் பிரச்சனையும் அடையாளங் காணக்கூடியதாக உள்ளது. 1950-60களில் மேற்கு பாகிஸ்தானிற்கு கிழக்கு பாகிஸ்தானால் ஏற்பட்ட நெருக்கடிகளும், இந்தியாவின் ஆதரவும், இந்தியா மீது சந்தேகத்தையோ அச்சத்தையோ உருவாக்கக்கூடிய சூழல் காணப்படவில்லை. ஒத்துழைப்பு அரசாகவே அவதானிக்கப்பட்டது. 1971-க்குப் பிந்தைய இந்திய ஆதிக்கம் பற்றிய கருத்து வேறுபட்ட நிலையை உருவாக்கியது. 1978ஆம் ஆண்டில், 'பங்காளதேஷத்தில் தேசிய அடையாளத்தின் பிரச்சனை' பற்றிய ஒரு உரையில், ஜியா, 'பங்காளதேசிகள் இந்தியாவின் பெங்காலிகளிடமிருந்து வேறுபட்டவர்கள் என்பதால், கலாச்சாரம் மற்றும் மொழி அடிப்படையில், அது சொந்த வழி  வார்ப்பு' வேண்டும் என்று  பரிந்துரைத்தார். ஏனெனில் இந்தியாவின் மேற்கு பங்களாவில், பங்களாதேஷpன் சிறுபான்மை பெங்காலி இந்துக்களே பெரும்பான்மையாகவும், பங்களாதேஷpன் பெரும்பான்மை இஸ்லாம் சிறுபான்மையாகவும் உள்ளார்கள். இவ்நிலையை சாதகாமாக்கியே மதவாத பங்களாதேசி தேசியவாதம் கட்டமைக்கப்படுகின்றது. 

இவ்இருமுனை தேசியவாத பிளவுசார் விளைவுகள், 2024ஆம் பங்களாதேசை உலுக்கியுள்ள மாணவர் போராட்டத்திலும், பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி உள்ளமையிலும் தாக்கம் செலுத்தியதாக சந்தேகிக்கப்படுகின்றது. 2024ஆம் ஆண்டு ஜனவரியில் இடம்பெற்ற தேர்தலில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருந்தது. எனினும், எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை குறுகிய காலத்தில் மாணவர் போராட்டம் ஷேக் ஹசீனா ஆட்சியை நீக்கியுள்ளது.அநீண்டகாலமாக நீடிக்கும் இடஒதுக்கீடு விவகாரம் 2024-ஜூன் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் மீள அரங்குக்கு வந்தமை, மாணவர் எதிர்ப்பு போராட்டத்தை உருவாக்கியது. ஷேக் ஹசீனாவின் தந்தை முஜிபூர் ரஹ்மானால் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு 30சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. காலப்போக்கில் இது அவாமி லீக்கின் ஆட்சியை நிலைநிறுத்தும் அதிகாரத்துவமாக அல்லது சிவில் சேவையில் அவாமி லீக்கிற்கு நெருக்கமானவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக மாறியுள்ளது என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டது. இவ்முறையற்ற இடஒதுக்கீட்டை எதிர்ப்பதாகவே மாணவ போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றார்கள். எனினும், மாணவ போராட்டக்காரர்கள் மீது, பங்களாதேஷ் சுதந்திர போராட்டத்தில் பாகிஸ்தான் இராணுவத்திற்கு ஆதரவளித்த துரோகிகளுக்கு வழங்கப்பட்ட 'ராசாக்காரர்கள்' (Razakars) என்ற வார்த்தை பிரயோகத்தை ஷேக் ஹசீனா பயன்படுத்தியமை போராட்டத்தை மோதலாக தூண்டியது. இது பங்காளதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இராஜினாமா செய்து ஆகஸ்ட்-5 அன்று நாட்டை விட்டு வெளியேறி தூண்டியது. நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், மாணவர் போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையை நிறைவேற்றி இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை தாங்கி உள்ளார். அதேவேளை முன்னாள் பிரதமரும், பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா மற்றும் சிறையில் அடைக்கப்பட்ட போராட்டக்காரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஷேக் ஹசீனா மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.

மாணவர் போராட்டம் ஏற்படுத்தியுள்ள இம்மாற்றங்கள் கட்சி முரண்பாட்டு அடையாளத்துடன், பெங்காலி தேசியவாதத்திற்கு எதிரான பங்களாதேசி தேசியவாதத்தின் முனைப்பாக சிலர் தேட முற்படுகின்றார்கள். குறிப்பாக, ஷேக் ஹசினா போராட்டக்காரர்களுக்கு அவ்வாறானதொரு விம்பத்தையே கொடுத்திருந்தார். குறிப்பாக அவாமி லீக்கை நிரகாரிப்பது என்பது எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற கட்சிகளின் ஆதரவு செயற்பாடாகவே விமர்சிக்கப்பட்டது. போராட்டத்தின் பின் கலிதா ஜியா விடுதலை மற்றும் புதிய இடைக்கால அரசாங்கத்தில் அவாமி லீக் தவிர்ந்த ஏனைய கட்சிகள் உள்வாங்கப்பட்டுள்ளமை அதனை உறுதி செய்யும் சூழல்களையே பிரதிபலிக்கின்றது. பெங்கலி தேசியவாதம் முஜிபுர் ரஹ்மான் விம்பத்திலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த பின்னணியிலேயே அவாமி லீக் அதனை உரிமை கோருகின்றது. மாணவர் போராட்டத்தில் முஜிபுர் ரஹ்மான் சிலை உடைக்கப்பட்டுள்ளது. இது பெங்கலி தேசியவாதத்தினை உடைக்கும் செயலாகவே அவதானிக்கப்படுகின்றது. இருப்பினும், மாணவர் இயக்கம் பெங்காலி தேசியவாதத்தை நிராகரித்தாலும், அவர்கள் பங்களாதேசி தேசியவாதத்தை ஏற்றுக்கொண்டார்களா என்ற சந்தேகமும் காணப்படுகின்றது. போராட்டங்களுக்குப் பிறகு, பங்களாதேசி தேசியவாதத்திற்கு முன்னுரிமை அளித்த எதிர்க்கட்சிகளின் தலைமையில் அரசாங்கம் அமைக்கப்படவில்லை. அதே சமயம் மாணவர் போராட்டக்காரர்கள் புதிய கட்சி தொடங்குவது குறித்து செய்திகளை அறியக்கூடியதாக உள்ளது. இதற்கிடையில், பங்களாதேஷின் தற்போதைய இடைக்கால ஜனாதிபதியான யூனுஸ், 2007ஆம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்கும் யோசனையை முன்மொழிந்தார். இரண்டு முக்கிய கட்சிகளான ஹசீனாவின் தலைமையிலான அவாமி லீக் மற்றும் கலிதா ஜியா தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாத கட்சிகளின் தோல்வியால், பெருகிவரும் ஊழல் மற்றும் அதிகரித்து வரும் வருமான சமத்துவமின்மையை நிவர்த்தி செய்வதற்கான யூனிஸின் ஆரம்ப யோசனை வந்தது. பங்களாதேஷில் தேசியவாதத்தை கட்சிகள் தங்களை அடையாளப்படுத்தும் ஒரு உத்தியாகப் பயன்படுத்துகின்றன. எனவே மாணவர் போராட்டம் ஒரு புதிய தேசியவாதத்தை அடையாளப்படுத்துகிறதா என்பது அரசியல் அவதானிகளின் தேடலாகும்.

சிட்டகாங் மலைப்பகுதி மக்களைத் தவிர, அனைத்து தோற்றங்களுக்கும் பங்களாதேஷ் மக்கள் மொழி மற்றும் கலாச்சார ரீதியாக ஒரே மாதிரியான குழுவாக உள்ளனர்.  ஆயினும்கூட, பங்களாதேஷ் மக்கள் தங்கள் மொழியியல், கலாச்சாரம் மற்றும் அரசியல் அடையாளத்தைப் பற்றிய அவர்களின் உணர்வின் அடிப்படையில் உண்மையில் பன்முகத்தன்மை கொண்டவர்கள் என்பது வெளிப்படுகிறது.  'பெங்காலி' மற்றும் 'பங்களாதேசி' தேசியவாதம் குறித்த சர்ச்சை அவர்களின் அடையாளத்தின் பன்முகத்தன்மையை உள்ளடக்கியது. தேசியவாதம் அடையாளங்களை முதன்மைப்படுத்தி உணர்வுடன் பிணைகிறது. 18ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற அறிவொளி தத்துவஞானி டேவிட் ஹியூம் ஒவ்வொரு தேசத்திற்கும் ஒரு இயற்கையான தன்மை இருப்பதாக நம்பினார். 'சுவிஸ் நேர்மையானவர்கள், பிரெஞ்சுக்காரர்கள் வேடிக்கையானவர்கள், ஆங்கிலேயர்கள் புத்திசாலிகள்.'  இக்கூற்றுக்களின் அறிவியல் செல்லுபடியாக்கம் சந்தேகத்திற்குரியது. ஆனால் தேசியவாதம் பற்றிய கருத்து துல்லியமாக இத்தகைய நம்பிக்கைகளையே அடிப்படையாகக் கொண்டது என விளக்குகின்றார். பங்களாதேஷின் தேசிய தன்மை ஒருபோதும் சரியாக வரையறுக்கப்படவில்லை.  பங்களாதேஷின் வரலாறு அதன் அடையாளத் தேர்வு செயல்முறை அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட கலாச்சார குறிப்பான்கள் நிலையானதாக அமையவில்லை. இப்பின்னணியிலேயே பங்களாதேஷ் அடையாள முரண்பாடு குழப்புகின்றது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-