தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான வலுப்பெறும் மக்களின் ஆதரவு தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கிறது? -ஐ.வி.மகாசேனன்-

ஈழத்தமிழர் அரசியலில், இலங்கையின் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வலுவான மூலோபாய அரசியலை நோக்கி நகர்கின்றது. தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான மக்களின் ஆதரவு, அரசியல் கட்சிகளை தமிழ்ப் பொதுவேட்பாளரை நிராகரிக்க இயலாத பொறிமுறையாக மாற்றுகின்றது. கடந்த காலங்களில் தமிழ்ப் பொதுவேட்பாளர் கருத்தியல்ரீதியான உரையாடலை பெற்ற போதிலும், நடைமுறையாக்கத்தை பெற்றிருக்கவில்லை. இவ்அனுபவத்தினடிப்படையில், ஜனாதிபதி தேர்தலை ஈழத்தமிழர்கள் கையாள்வது தொடர்பிலான ஆரம்ப உரையாடல்களில், தமிழ்ப் பொதுவேட்பாளரின் நடைமுறையாக்கம் தொடர்பில் சந்தேகங்களே காணப்பட்டது. எனினும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளரை முன்னிறுத்துவதை மையப்படுத்தி, வடக்கு-கிழக்கு சிவில் சமுகங்களின் கூட்டிணைவான தமிழ் மக்கள் பொதுச்சபையின் உருவாக்கமும், தொடர்ந்து அரசியல் கட்சிகளின் கூட்டிணைவுடனான தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் உருவாக்கமும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான ஈழத்தமிழர்களின் மூலோபாய நகர்வை பலப்படுத்தியது எனலாம். எனினும் தற்போது நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்து அவரும் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான நாட்டம், தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பை கட்டுறுதியாக்குகின்றது என்பதே அண்மைய செய்திகள் புலப்படுத்துகின்றது. இக்கட்டுரை வலுப்பெறும் தமிழ் பொது வேட்பாளரிற்கான ஆதரவுத் தளங்களை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான அமுலாக்கம் தமிழ் மக்கள் பொதுச்சபை மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டிணைவான தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பினாலேயே முன்னிறுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்புக்குள் எழக்கூடிய முரண்பாடுகள், தமிழ்ப் பொதுவேட்பாளரின் நிலைப்பாட்டிற்கு நெருக்கடியை உருவாக்கக்கூடியதாகும். தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சில அரசியல் கட்சிகளின் தன்னிலையான செயற்பாடுகள் தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பிலான சந்தேகங்களையும், அதன் இருப்பு தொடர்பிலான அச்சங்களையும் பொதுவெளியில் உருவாக்கி இருந்தது. தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்புடனான சந்திப்புக்கு தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோர் அழைப்பு விடுத்திருந்தனர். சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரலைக்கோரி தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு கூட்டாக தவிர்த்திருந்தது. எனினும் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (புளொட்) மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகள், தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பின் கூட்டு முடிவை நிராகரித்து ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து இருந்தனர். இது தமிழ் பொது வேட்பாளரை நிராகரிக்கும் தரப்பினருக்கு வலுவான அரசியல் பிரச்சாரமாக அமைந்திருந்தது. தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு பிளவுற்றதாகவும், அதனால் முன்னனெடுக்கப்பட்டுள்ள தமிழ்ப் பொதுவேட்பாளர் வலுவிழந்ததாகவும் பிரச்சாரப்படுத்தினார்கள். அதேவேளை தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் பொதுக்கட்டமைப்புக்களிடம் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் ஐயப்பாடுகளையும், சீற்றத்தையும் உருவாக்கி இருந்தது. எனினும் கருத்தியல்ரீதியாக தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேவைப்பாடு உணரப்பட்டதால் அதனை வலுப்படுத்துவதையே முதன்மைப்படுத்தியிருந்தனர். 

'நமக்கு நாமே' எனும் மையப்பொருளில் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரு தளங்களில் தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றது. ஒன்று, வடக்கு-கிழக்கு முழுமையாக தமிழ்ப் பொதுவேட்பாளர் அரியநேந்திரனை அறிமுகப்படுத்தும் வகையில் பொலிகண்டி தொடக்கம் பொத்துவில் வரையில் தமிழ்ப்பொதுவேட்பாளர் பயணிக்கும் பிரச்சாரம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இது யாழ்ப்பாணத்தில் முடிவுற்று ஆகஸ்ட்-27 தியாக தீபம் திலீபனுக்கான அஞ்சலியுடன் கிளிநொச்சி நோக்கி நகர்ந்திருந்தது. இரண்டு, வடக்கு-கிழக்கு முழுவதும் தமிழ்ப் பொதுவேட்பாளர் கருத்தியலை ஆதரிக்கும் சிவில் சமுக தரப்பினர், அரசியல் கட்சியினர் மற்றும் சமுகப் பெரியவர்கள் தன்னார்வமாக தத்தமது பிரதேசங்களில் மக்கள் சந்திப்புக்கள் மற்றும் பொதுக்கூட்டங்களை ஒழுங்கமைத்து தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இப்பிரச்சார நடவடிக்கைகளில் மக்களின் தன்னார்வ பங்கேற்பு மற்றும் தமிழ்ப்பொதுவேட்பாளர் தொடர்பான மக்களின் நாட்டம் அரசியல் கட்சிகளை தமிழ்ப்பொதுவேட்பாளர் தொடர்பில் கட்டுறுதியான நிலைப்பாட்டை உருவாக்கியுள்ளது.

முதலாவது, தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பில் நிலையற்று செயற்பட்டிருந்த அரசியல் கட்சிகள் மீள கூட்டிணைவுடன் செயற்படுவதற்கான உறுதிப்பாட்டை வழங்கியுள்ளார்கள். ஆகஸ்ட்-27அன்று யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடிய தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் பிரதிநிதிகள், 'தென்னிலங்கையில் இருந்து வருகின்ற அழைப்புக்கனை ஏற்பதா இல்லையா என்பதை ஒருமித்து முடிவெடுப்பது' என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு எதிரான பிரச்சார செயற்பாட்டாளர்கள், தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு ஆதரவான அறிக்கையை வெளியிடலாமெனும் ஆதாரபூர்வமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தனர். இந்நிலையில் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்த ரெலோ தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான தொடர்ச்சியான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதுடன், தென்னிலங்கை வேட்பாளர்களை நிராகரிப்பதற்கான காரணங்களையும் சுட்டிக்காட்டியுள்ளது. 'தமிழீழ விடுதலை இயக்கம் ஒருபோதும் ரணிலை ஆதரிக்காது. அத்துடன் ஜே.வி.பியினர் தமிழர்களின் அடித்தளத்தையே உடைத்து வடக்கு, கிழக்கைப் பிரித்தவர்கள். அவர்களுக்கும் தமிழர்கள் வாக்களிக்கமாட்டார்கள்' என ரெலோவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மேலும், 'ரெலோ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவினை சந்தித்தமை மற்றும் இலங்கைக்கான சுவிஸ் தூதருடனான பொதுக்கட்டமைப்பு சந்திப்பில் ரெலோ பங்கு கொள்ளாமை' ஆகியன தொடர்பில் சிலர் விஷம பிரச்சாரங்களை மேற்கொள்வதாக ரெலோவின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்ப் பொதுவேட்பாளர் தொடர்பிலான ரெலோவின் அண்மைய செய்திகள் சில விஷம பிரச்சாரிகளால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளால் எழுந்த சந்தேகங்களை தீர்க்க வழி செய்யக்கூடியதாக அமைந்துள்ளது.

இரண்டாவது, தமிழரசுக்கட்சிக்குள்ளும் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான ஆதரவு அதிகரித்து வருகின்றமையையே தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான பிரச்சார களங்களில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இறுதியாக நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக தமிழரசுக்கட்சியினர் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாதென பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியிருந்தார். இது கூட்ட தீர்மானமாகவும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் மக்களுக்கானதே அரசியல் என்ற அரசியலின் மையக்கோட்பாட்டடிப்படையில் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் பலரும் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரனுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் ஆகஸ்ட்-22அன்று இடம்பெற்றிருந்தது. இச்சந்திப்புக்கு பின்னரான சிறிதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக எனது ஆதரவு அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும். தமிழ் மக்கள் காத்திரமான ஒரு செய்தியை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வழங்க வேண்டும். இலங்கை தமிழரசுக் கட்சி என்ன முடிவை எப்போது எடுத்தாலும் தனிப்பட்ட முறையில் எனது ஆதரவு அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும். கட்சி முடிவை எடுக்கிறதோ எடுக்கவில்லையோ அல்லது எடுக்கும் முடிவு மக்களிடமிருந்து எவ்வளவு தூரம் எம்மை தள்ளப்போகிறது என்பதை தமிழ் மக்கள் தீர்மானிப்பார்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், பொதுவேட்பாளருக்கு ஆதரவாக பொதுத்தளங்களில் பிரச்சார நடவடிக்கைகளிலும் மற்றும் புலம்பெயர் தேசங்களில் தமிழ் பொது வேட்பாளருக்கான தேர்தல் நிதி சேகரிப்பிலும் சிறிதரன் தனது பங்களிப்பை ஈடுபடுத்தி வருகின்றார். அத்துடன் மட்டக்களப்பில் தமிழ் மக்கள் பொதுச்சபை ஏற்பாடு செய்த, தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான பிரசார முன்னாயர்த்தக் கலந்துரையாடலிலே உரையாற்றியிருந்த தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன், 'வரலாற்று முக்கியத்துவமிக்க தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிக்காது, வரலாற்றுத் தவறை தமிழரசுக் கட்சி இழைத்தால், தமிழ்த் தேசிய அரசியல்பரப்பில் கட்சி காணாமல் போகும்' எனும் எச்சரிக்கையை வழங்கியுள்ளார். தமிழரசுக்கட்சியின் சிரேஷ;ட தலைவர்கள் மாத்திரமின்றி இளைஞரணி செயற்பாட்டாளர்களும் தமிழ்ப் பொதுவேட்பாளருடன் இணைந்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமையை செய்திகளில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

மூன்றாவது, தென்னிலங்கை அரசியல் கட்சிகளாலும் தமிழ்ப்பரப்பில் நேரடியாக தமக்கான ஆதரவை திரட்ட முடியாத நிலைமையையே தென்னிலங்கையின் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமிழ்ப் பொதுவேட்பாளர் தொடர்பில் கையாளும் அணுகுமுறை புலப்படுத்துகிறது. கடந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தல்களில் தென்னிலங்கைக்கான வாக்கு சேகரிப்பை தமிழ் அரசியல் கட்சிகள் மேற்கொண்டிருந்தன. எனினும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்ப் பொதுவேட்பாளர் எனும் மூலோபாய நகர்வை தேர்வு செய்துள்ளமையால், தென்னிலங்கை வேட்பாளர்களுக்கான பகிரங்க ஆதரவை தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளால் வெளிப்படுத்த முடியவில்லை. அதேவேளை தமிழ்ப் பொதுவேட்பாளரை முன்னிறுத்தியுள்ள தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு தமிழ் மக்கள் பொதுச்சபை மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டிணைவான கட்டமைப்பு ஆதலால், தென்னிலங்கை வேட்பாளர்களால் தமது எண்ணங்களுக்கு சார்பாக அதனை திசை திருப்ப முடியவில்லை. இந்நிலையிலேயே தென்னிலங்கை வேட்பாளர்கள் சிங்கள, முஸ்லீம் மற்றும் மலையக மக்களின் வாக்குகளை சேகரிப்பது தொடர்பில் பலப்பரிட்சையை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் அறிவிப்புகளுக்கு முன்னர் வடக்கு-கிழக்கு நோக்கி படையெடுத்த தென்னிலங்கை வேட்பாளர்களின் பிரசன்னம் தற்போது குறைந்துள்ளது. தமிழ்ப் பொதுவேட்பாளரின் வெற்றியை பகுதியளவில் ஏற்றுள்ள நிலைமைகளே காணப்படுகின்றது. ஊஐஐ அமைப்பின் இணைப்பாளர் சட்டத்தரணி கார்த்திகாவின் அனுசாரணையில் இளைஞர் யுவதிகளுக்கு தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு ஆகஸ்ட்-28அன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்ட இளைஞர் யுவதிகளிடையே தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பான கருத்துக்களே வலுவாக காணப்பட்டது. அதனை நிராகரிக்க முடியாத சூழலில், தென்னிலங்கை அரசியல் கட்சியின் பிரதிச்செயலாளர் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு சார்பான கருத்தை முன்வைத்திருந்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ;, 'பொதுவேட்பாளர் என்பது எங்களது இனத்தினுடைய அடையாளம். அந்த பொதுவேட்பாளரை தெரிவு செய்கின்ற உங்களுடைய உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். கௌரவப்படுத்துகின்றோம். அது உங்களுடைய சர்வதேசரீதியாக  இருப்பை காட்டுகின்ற முயற்சியாகவே சொல்கின்றார்கள்' எனத் தெரிவித்திருந்தார்.

நான்காவது, தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு எதிரான பிரச்சாரமென்பது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரிடமும், தமிழரசுக்கட்சிக்குள் சுமந்திரன்-சாணக்கியன் அணியிடரிடமே சுருக்கமடைந்துள்ளது. குறிப்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் புறக்கணிப்பு அரசியலின் முதிர்ச்சியான வடிவமே தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற அடிப்படையில், முன்னணியின் புறக்கணிப்பு பிரச்சாரம் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான ஆரம்ப பிரச்சாரமாக அமையக்கூடியதாகவே அமையவுள்ளது. தமிழ்த்தேசிய முலாமை பூசிக்கொண்டு தொடர்ச்சியாக தென்னிலங்கைக்கு சேவகம் செய்ய முற்படும் சுமந்திரன்-சாணக்கியன் தொடர்பிலேயே தமிழ் மக்கள் விழிப்படைவது அவசியமாகின்றது. தமிழ்த்தேசிய அரசியல் பரப்பு கடந்த கால ஏமாற்றங்களை பாடமாக கொண்டு, தென்னிலங்கை வேட்பாளர்களை புறக்கணிப்பது தொடர்பில் ஒருமித்த நிலைப்பாட்டுக்குள் வந்துள்ளார்கள். தமிழரசுக்கட்சியின் முகாமுக்குள் தொடர்ச்சியாக தென்னிலங்கை வேட்பாளர்களையே முன்னிறுத்தும் சுமந்திரன் மற்றும் சாணக்கியனின் அரசியல் தமிழ்த்தேசியத்துக்கு வெளியே தென்னிலங்கையுடனேயே அதிகம் பிணைந்துள்ளது. குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அரசியல் பிரவேசமானது 2013ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மையப்படுத்தியதாகவே ஆரம்பித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்ட பட்டிருப்பு தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளராக சாணக்கியன், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சாவின் வெற்றிக்காக தீவிர பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். அவ்வாறே பாராளுமன்ற உறுப்பினர் ம.ஆ.சுமந்திரன் யாழ்ப்பாணம்-கிளிநொச்சி தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக காணப்படுகின்ற போதிலும், கொழும்பு மைய சூழலிலே வளர்ந்துள்ளார். அத்துடன் தென்னிலங்கையின் ஜனநாயகத்தை பாதுகாப்பதிலும், தென்னிலங்கை அரசாங்கங்களை நெருக்கடியிலிருந்து மீட்பதிலேயே அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார். சுமந்திரனது தொழில் அதிகம் தென்னிலங்கை அரசாங்கத்தை சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரணில்-மைத்திரி தேசிய அரசாங்க காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தின் பல ஒப்பந்தங்களின் வழக்காளர் குழும பணியை சுமந்திரனின் தொழில் நிறுவனமே மேற்கொண்டுள்ளதாக அவரே ஏற்றுகொண்டுள்ளார். இவ்வாறான கடந்தகால வரலாறு மற்றும் நிகழ்காலத்தின் தொடர்ச்சியாகவே தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரிப்பதில் சுமந்திரன்-சாணக்கியன் அணி முழுவீச்சாக உள்ளது.

எனவே, தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான தமிழ் மக்களின் ஆதரவு அரசியல் தரப்புக்களை அதன் பின்னால் கட்டுறுதியாக பிணைத்துள்ளது. இது தொடர்ச்சியாக உறுதியான நிலைப்பாட்டில் பயணிப்பதில் தமிழ் மக்கள் பொதுச்சபையினை பலப்படுத்தல் அவசியமாகின்றது. தமிழ் மக்கள் பொதுச்சபை தமிழ் மக்களின் தன்னார்வ கட்டமைப்பின் பிரதிபலிப்பாகும். ஏறக்குறைய வடக்கு-கிழக்கின் எண்பதுக்கும் மேற்பட்ட சிவில் அமைப்புக்கள் மற்றும் தன்னார்வளர்களின் சேர்க்கையாகவே தமிழ் மக்கள் பொதுச்சபை கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த பின்னணியிலேயே அரசியல் கட்சிகளும் தமிழ்ப் பொதுவேட்பாளரை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளனர். தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் வாக்குகளுக்கு சேவை செய்யவேண்டியவர்கள். மக்கள் தன்னார்வமாக பொதுவேட்பாளரை நோக்கி நகருகையிலேயே மக்கள் பின்னால் அரசியல் கட்சிகள் இழுத்தடிக்கப்பட்டுள்ளார்கள். தொடர்ச்சியாக மக்கள் தமது பொதுச்சபையை வலுப்படுத்துவதனூடாக அரசியல் கட்சிகளை சுயநலன்களுக்கு அப்பால் தமிழ் மக்களின் நலனுக்குள் செயற்படக்கூடிய இறுக்கத்தை பேணக்கூடியதாக அமையும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-