கொரோனாவிலிருந்து பாடம் கற்க மறுக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் -ஐ.வி.மகாசேனன்-
கொரோனா என்ற ஒற்றை வார்த்தையின் ஆக்கிரமிப்பினுள்ளேயே உலகம் சுழலுகின்றது. உலகளவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு பத்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர். அவ்வாறே இலங்கையிலும் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளிகளாக நூற்றுக்கு மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நால்வர் இறந்துள்ளார்கள். கொரோனா வைரஸின் ஆபத்துக்கள் அதிகரித்து கொண்டே செல்கின்றதே தவிர குறையக்கூடிய சாத்தியங்கள் எதுவும் தென்படவில்லை. இலங்கையில் குறிப்பாக தமிழ் மக்களிடையே கொரோனா வைரஸின் வீரியம் புரியவில்லை என்பதற்கு அப்பால் தமிழ் மக்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்க போட்டியிடும் அரசியல் தலைமைகளும் ஓர் கொடிய ஆபத்தான சூழலில் தங்களது செயற்பாடுகளை முழுமையாய் புரியாதவர்களாய் செயற்படுவது தமிழர்களை மேலும் மேலும் அழிவிற்கே நகர்த்துவதாக அமைகின்றது. சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் முகநூலில், “வடக்கு மக்களுக்கு தமிழ் அரசியல் கட்சி கிடையாது. வாக்களித்த ஜனாதிபதி வேட்பாளரும் கிடையாது. புலம்பெயர் தமிழர்களும் கிடையாது. இருப்பது சிங்கள இராணுவம் மாத்திரமே.” எனப்பதிவிட்டுள்ளார். அதனடிப்படையில் குறித்த கட்டுரை தமிழ் மக்களின் தேவைகளையும் அதுசார்ந்து தமிழ் அரசியல் தலைமைகள் நகர வேண்டிய பாதையையும் எடுத்துக்காட்டுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் கொரோனாவின் ஆபத்தின் வீரியம் அதிகரிக்கப்பட்ட போக்கினூடாக நாம் படிப்பினை கற்று எம்மை நெறிப்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும். அமெரிக்காவிலும் கொரோனா பாதிப்பின் ஆரம்ப வாரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான தரவு குறைவானதாகவே காணப்பட்டது. எனிலும் இன்று ஒரே நாளில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதுடன் 500இற்கும் மேற்பட்டோர் இறக்கும் நிலையும் காணப்படுகின்றது. இதனை நாம் பொருட்படுத்தாது நமது கொரோனா பாதிப்பு தரவு குறைவாகவே உள்ளது. குறிப்பாக தமிழ்ப்பகுதியில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் நால்வரே காணப்படுகின்றார்கள். என நாம் அசண்டை செய்வோமெனில் எம் தரவுகளும் நாளை அதிகரித்து செல்லக்கூடியதாகவே காணப்படும்.
யாழ்ப்பாணத்தில் கொரோனா பரவுகையை தடுப்பதற்காக அமுலாக்கப்பட்டுள்ள இறுக்கமான ஊரடங்களில் மக்கள் பெரும் சிரமங்களுக்குள் உள்ளாகின்றனர். குறிப்பாக அன்றாட கூலித்தொழிலில் ஈடுபடுவோர் உணவுப் பொருட்களுக்காகவும் மற்றும் விவசாயிகள் மரக்கறிகளை விற்பனை செய்வதிலும் பெரும் சிரமப்படுகின்றனர். மேலும் அரச நிர்வாகத்தின் குழப்பமான கருத்துக்களில் மக்கள் காவல்துறையின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இவற்றிலிருந்து மக்களை பாதுகாக்க தமிழ் அரசியல் தலைமைகள் மேற்கொண்டுள்ள செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகம் எழுகின்றது. அண்மையிலும் “அடித்து துன்புறுத்துவதை விடுத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கி வீடுகளில் இருக்கச் செய்யுங்கள்.” என அரசிற்கான அவசர கோரிக்கையை தமிழ் அரசியல் தவைர் ஒருவர் முன்வைத்துள்ளார். இன்றைய சூழலில் தமிழ் அரசியல் தலைமைகளின் அறிக்கையிடல் மட்டும் போதுமானதாக காணப்படுகின்றதா? தமிழ் தலைமைகளே தங்கள் செயற்பாடுகளை சிந்திக்க வேண்டி உள்ளது.
இங்கு தமிழ் மக்களை சரியா நெறிப்படுத்துபவர்களாய் எம் அரசியல் தலைமைகள் காணப்படுகின்றார்களோ என்பது சந்தேசத்திற்குரியதாகவே காணப்படுகின்றது. கடந்த காலங்களில் மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்களை மக்கள் முன்னெடுக்கையில், தலைமை தாங்க வேண்டிய அரசியல் தலைமைகள் எவ்வாறு பார்வையாளர்களாய் கடந்து சென்றார்களோ அவ்வாறே இன்றும் மக்கள் உலகப்பேரிடர் ஒன்றில் சிக்குண்டு இருக்கையில் தமிழ் அரசியல் தலைமைகள் பார்வையாளர்களாய் இங்கு அறிக்கை அரசியலையே நகர்த்தி செல்கின்றார்கள். ஒரு சில சந்தர்ப்பங்களில் அரசியலுக்காய் மக்களுக்கு உதவி செய்வதாய் காட்சியளிக்கின்றார்கள். எனிலும் ஒரு குறிப்பிட்ட இளைஞர் அணியே தமிழ் மக்களுக்கு தேவையான செயற்பாடுகளை அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுத்து செல்கின்றார்கள். கடந்த காலங்களில் வன்னியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்காக இளைஞர்கள் ஓய்வின்றி பணியாற்றியது போன்றே இன்றும் இளைஞர்களே, தங்களுக்கே உரித்தான குறுகிய வலைப் பின்னல்களூடாக மக்களுக்கு தேவையான அடிப்படை பொருட்களை பரிமாறுவதில் முன்னின்று செயற்படுகிறார்கள். இளைஞர்களிடம் தேவைகள் சார்ந்து பூரண தரவுகளோ மற்றும் தேவைப்படுவோர் அனைவருக்கும் உதவியை வழங்கக்கூடிய நிதி வளத்தையே கொண்டிராமையால் முழுமையாக மக்களின் தேவைகளை இளைஞர்களால் பூர்த்தி செய்ய முடியாது என்பதுவே நிஜம். தேவைசார்ந்த முழுமையான தரவுகளை பெறக்கூடிய வசதிகளோ மற்றும் நிதிவளங்களோ போதுமானதாய் அரசியல் கட்சியிடமே காணப்படுகின்றது. ஆயினும் அரசியல் கட்சிகளும் தலைமைகளும் அரசியல் நலன் கடந்து முழுமையானதொரு செயற்பாட்டு தளத்தில் இறங்காமை தமிழரின் துயரின் தொடர்ச்சியாகவே காணப்படுகின்றது.
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் காலவரையறையற்று தொடர்ச்சியாக ஊரடங்கு அமுலாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் வலிதெற்கு பிரதேசசபை மற்றும் நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் ஊரடங்கு நேரத்தில் மக்களின் உணவுப் பொருட்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கிராமங்களில் சந்தைகளை பரவலாக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இச்செயற்பாட்டை சிந்தித்ததிலிருந்து முன்னெடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைளையும் குறித்த பிரதேசத்தை சேர்ந்த ஒரு தொகுதி இளைஞர்களே முன்னெடுத்தனர். அனுமதியை பெற்று கொடுக்கும் செயற்பாட்டையே அதிகார சக்தி என்ற ரீதியில் பிரதேச சபை தவிசாளர் மேற்கொண்டிருந்தார். தொடர்ச்சியாக ஒலிபெருக்கி ஊடாக வலிதெற்கு பிரதேச சபை எல்லைக்குள் கிராம சந்தைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களை அறிவித்தனர். அதேநேரம் ஊடக செய்தியிடலிலும் தவிசாளர் தங்கள் பிரதேசசபையின் செயற்பாடாய் கூறியிருந்தார். எனிலும் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென ஊரடங்கை இறுக்கப்படுத்தி கிராமிய சந்தைகளை நடாத்தி கொண்டிருந்த சில இளைஞர்கள் காவல்துறையினரால் தாக்கப்படுகையில் குறித்த பிரதேச சபை உறுப்பினர்கள் அவ்விடத்தில் இல்லை. இத்தகு பிரதேச சபை உறுப்பினர்களின் வங்குரோத்து அரசியல் செயற்பாடுகள், சேவையாற்ற முன்வரும் இளைஞர்களின் செயற்பாடுகளையும் தடுப்பதாக அமைகின்றது.
இப்பேரிடரிலில் காலவரையற்று நீண்ட ஊரடங்கு போடப்பட்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் செயற்பாடுகளே கணதியானதாக காணப்படல் வேண்டும். கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலானது வட்டார அடிப்படையில் இடம்பெற்றது என்ற ரீதியல் ஒரு சிறு தொகை குடும்பத்தினருக்கு ஒரு உறுப்பினர் காணப்படுவார். அவருக்கு தனது வட்டார மக்களின் குடும்ப நிலைப்பாடுகள் நிச்சயம் தெரிந்திருத்தல் வேண்டும். இதனடிப்படையில் தினசரி கூலி வேலை மூலம் குடும்ப சுமையை கவணிக்கும் குடும்பங்களுக்கான அடிப்படை தேவைகளை கட்சி நிதியிலிருந்தோ பரந்து காணப்படும் கொடையாளர்களிடம் இருந்தோ பெற்று உதவி செய்திட முன்வர வேண்டும். ஆயினும் தமிழரசுக்கட்சியின் தலைவர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் ஆகியோர் பிரதேச சபைகளின் நிதியை இவ்இடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்க பயன்படுத்த ஆளுநரிடம் அனுமதி கேட்டு காத்திருப்பது கேலிக்கையாக உள்ளது. குறித்த கட்சி தேர்தல்களுக்கு பயன்படுத்த கட்சி நிதி காணப்படுகிறதாயின் மக்களிற்கான நிவாரணங்களை வழங்க மக்களின் வரிப்பணத்தையே பயன்படுத்துவோம்னு காத்திருக்கும் செயற்பாடானது, அரசியல் என்பதை எம் தமிழ் அரசியல் தலைவர்கள் எவ்வாறாக புரிந்து வைத்துள்ளார்கள் என்பதை உணர்த்துகின்றது. இது எம் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறி தான் என்பதை உறுதியாக்கிறது. உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாய் இன்று அனைத்து தமிழ் கட்சிகளுமே உள்ளனர். அனைவருமே ஒரே பாதையிலேயே செல்கின்றார்கள். விதிவிலக்காய் செயற்படும் உறுப்பினர்களும் உள்ளனர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தேவப்பெருமா மக்களுடன் இறங்கி மக்களுக்காக சேவையாற்றுகையில் அவ்வாறானதொரு சேவையயை எம் தமிழ் அரசியல் தலைமைகள் இவ்இடர்பாட்டிலும் செய்ய முன்வருதாய் தெரியவில்லை. ஊடகங்களிலேயே எம் அரசியல் தலைமைகளின் முகங்களை மக்கள் பார்க்க வேண்டி உள்ளது. மக்களுக்காக மக்களோடு இறங்காம அறிக்கை அரசியல் செய்வது துயரமாகும். தமிழ் அரசியல் தலைமைகள் கட்சி பேதமின்ற மக்கள் நலனுக்காய் கூட்டிணைந்து செயற்பட வேண்டிய காலமிது. மக்களுக்கான விழிப்புணர்வை எவ்வாறு முன்னெடுப்பது? மக்களுக்கான அடிப்படை தேவைகளை எவ்வாறு கூட்டிணைந்து பூர்த்தி செய்வது? என்பன தொடர்பிலே அரசியல் தலைமைகள் கூடி செயற்பட வேண்டும். எனிலும் இதுவரை அதற்கான எந்த முன்நடவடிக்கைகளும் எடுத்தாற் போல தெரியவில்லை.
தமிழ் மக்களுக்கான பாதுகாப்பு சார்ந்த நிர்வாக செயற்பாடுகளாவது சரியாக இடம்பெறுகின்றதா என்பதையாவது எம் அரசியல் தலைமைகள் விழிப்புடன் கவணிக்க தவறுகின்றது. வாழைச்சேனை பிரதேசத்தில் அரச நிவாரணம் வழங்குவதில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவகர்கள் அசமந்த போக்குடன் செயற்பட்டுள்ளனர். சமுர்த்தி நன்மை பெறுபவர்கள் மற்றும் சமுர்த்தி அட்டை உரிமையாளர்களுக்கு ரூ.10,000 வட்டியில்லா கடனை வழங்குமாறு ஜனாதிபதி கட்டளையிட்ட போதிலும் குறித்த கடன்கள் முறையாக வழங்கப்படவில்லை. ரூ.10,000 கடன் வழங்காமல் ரூ.5,000 கடன் வழங்கப்படுகிறது.; சென்ற வருடம் சித்திரை புத்தாண்டிற்காக கடன் பெற்றவர்களுக்கு நிவாரண கடன் வழங்கப்படவில்லை.; சிலருக்கு முன்னுரிமை அடிப்படையில் சலுகைகள் வழங்கல் என துஷ்பிரயோகங்கள் இடம்பெறுகின்றது. இது ஊடகத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்த விடயம் ஆகும். இதைவிட வெளிக்கொணராத விடயங்கள் பல உள்ளன. அரசியல் தலைமைகளே விழிப்புடன் மக்களுக்கான நிர்வாக செயற்பாடுகள் சரியாக இடம்பெறுகின்றதா என்பதை உன்னிப்புடன் அவதானிக்க வேண்டும்.
மேலும் தென்னிலங்கை பகுதியில் அரசியல்வாதிகளுடன் விகாரைகள் இணைந்து மக்களுக்கான நிவாரண பணி தேவைகளை பூர்த்தி செய்கின்றது. யாழ்ப்பாணத்திலும் முன்மாதிரியாக இளவாலை ஆனைவிழுந்தான் விநாயகர் ஆலய மஹோற்சவம் கொரனாத் தொற்றுக் காரணமாக இடைநிறுத்தபட்டமையினால், ஆலய 12 திருவிழா உபயகாரர்களும் திருவிழாவின் போதான அன்னதானத்திற்கு வழங்க இருந்த நிதியினை தேவையுடைய மற்றும் அன்றாட உழைப்பில் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கான உலர்உணவ வழங்கும் திட்டத்திற்கு வழங்க தீர்மானித்துள்ளனர். இச்செயற்பாடு இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்க இளைஞர்களின் முன்முயற்சியில் மேற்கொள்ளப்படுகின்றது. பல ஆலயங்களின் மகோற்சவ காலம் இது என்பதால் இன்னும் பல ஆலயங்கள் இச்சேவையை தொடரும் என எதிர்பார்க்கலாம். இதனை அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் ஒருங்கிணைப்பாரௌகளாயின் அதிகளவு மக்களிற்கு பயனுடையதாய் மேற்கொள்ளக்கூடியதாக காணப்படும்.
அரசியல் என்பது தொழில் அல்ல அது மக்களுக்கான உன்னதமான சேவையாகும். பிளேட்டோவின் இலட்சிய அரசை கனவு காண்பது இன்று மடமையாக இருக்கலாம். அயினும் என்றுமே அரசியலானது மக்களுக்கானது என்ற அடிப்படையை உணர்ந்தாவது மக்களுக்கான சேவையை எம் தலைமைகள் முன்னகர்த்த முன்வரவேண்டும். ஏற்கனவே எவ்வித எதிர்பார்ப்புமற்று மக்களுக்கான சேவைகளை செய்து வரும் தலைவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் அதேபோல தன்னலமற்று சேவை செய்யும் இளைஞர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். அதிகாரம் சார்ந்தும் நிதிவளம் சார்ந்தும் நிறைவான தொடர்புடைய எம் அரசியல் தலைமைகள் தேர்தல் காலங்களில் வெற்றிக்காக எவ்வாறு போராடுகிறார்களோ அவ்வாறே இன்று மக்களை பாதுகாக்கவும் போராடுவர்களாயினேயே தமிழ் மக்களால் ஊரடங்கையும் சமாளிக்க முடியும் கொரோனா போரிலிருந்தும் மீள முடியும்.
Comments
Post a Comment