கொரோனா தொற்றை தவிர்க்க புத்தரின் போதனை வழியில் செயற்படுமா இலங்கை? -ஐ.வி.மகாசேனன்-

இலங்கை ஏதோ ஓர் சுழலில் கொரோனா வைரஸ் அபாயத்துக்குள் சென்று கொண்டுள்ளது என்பதையே அண்மைய தரவுகள் தெளிவுபடுத்துகின்றன. சடுதியாக 3 நாட்களுல் 200இற்கும் மேற்பட்டவர்களில் கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையின் சுகாதார சபை செஞ்சிலுவைச்சங்கத்திடம் 1000 பிரேத பைகளை கேட்டுள்ளமையும் இலங்கை மக்களை மேலும் பீதிக்குள்ளும் தள்ளியுள்ளது. இன்றைய சூழலில் தீர்க்கமான வகையில் இலங்கையில் கொரோனா பரவுகையை கட்டுப்படுத்துவது தொடர்பிலேயே பரந்த மட்டத்தில் கலந்துரையாடப்பட வேண்டி உள்ளது. இலங்கையின் இயல்பில் விரும்பியோ விரும்பாமலோ மதரீதியான செல்வாக்கு அதீதமாக காணப்படுவதனால் கொரோனா பரவுகையை கட்டுப்படுத்துவதில் மதரீதியான பங்களிப்பினையும் ஆராய வேண்டி உள்ளது. இலங்கை அரசியலமைப்பு ரீதியாகவே புத்த பகவானின் பின்தோன்றலான பௌத்தத்தை இறுக்க கட்டி கொண்டு விட்டது. புத்த பகவானின் சித்தாந்தத்தையும் இறுக பின்பற்றினேயே இலங்கையின் பல பிரச்சினைகள் தீர்க்க கூடியதாக காணப்படும். ஆயினும் பௌத்தத்தை இறுக அணைத்துள்ள இலங்கை அரசு பௌத்த சித்தாந்தத்தை தள்ளியே வைத்துள்ளமை துர்ப்பாக்கியமே ஆகும். கொரோனா பரவுகையின் பின்னர் தமிழர்களின் வாழ்க்கைமுறை மீள புதுப்பொலிவு பெற்றது. அதேதன்மை பௌத்த சித்தாந்தத்திலும் செறிந்து காணப்படுகின்றது. அரசாங்கமும் மக்களும் தூய பௌத்த சித்தாந்தத்தை பின்பற்றுவார்களாயின் கொரோனா பரவுகையையும் துரிதமாக கட்டுப்படுத்துவது இலகுவாகும். இதனடிப்படையிலே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பௌத்த சித்தாந்த வழியை விபரிப்பதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 26ஏப்ரல் இலங்கை சனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிரிவெஹெஹ விகாரையை தரிசித்து, “தற்போது நம்மை ஆட்கொண்டிருக்கும் இந்த கொடிய நோயிலிருந்து நம் நாட்டையும் முழு உலகத்தையும் விடுவிக்குமாறு பிரார்த்தித்தேன்.” என தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். பிரார்த்தனைகளுக்கு அப்பால் சித்தாந்தங்களையும் சற்றே கடைப்பிடிப்பார்களாயின் பிரார்த்தனைகளும் நிறைவேறக்கூடியதாக காணப்படும். இங்கு பிரார்த்தனைகளே முதன்மை பெறுகின்றனவே தவிர, சித்தாந்தங்கள் இலங்கை பௌத்த துறவிகள் பலருக்கே மறந்து போய்விட்டது. இக்கொடிய அனர்த்த சூழ்நிலையிலும் பௌத்த சங்கங்களும் தேர்தல் அரசியல் தொடர்பிலேயே அரச தரப்புடன் முதன்மையாக உரையாடுகிறார்கள். பௌத்த வழி சித்தாந்தங்கள் பேசுபொருளாகவில்லை. அமைதியை கூறும் புத்த பகவானை பெருமளவில் பின்பற்றும் மக்கள் வாழும் இலங்கையில் அமைதியிழந்து காணப்படுவதே இலங்கையில் பௌத்த சித்தாந்தம் ஏற்கனவே காலாவதியானதேயே நிரூபிக்கின்றது.

இலங்கையில் மத ரீதியாக பௌத்தத்திற்கு அளிக்கப்படும் முன்னுரிமை பௌத்த சித்தாந்தத்திற்கு அளிக்கப்படுகின்றதா என்பது என்றும் கேள்விக்குறியாகவே இருந்து வந்துள்ளது. பௌத்தத்தின் சித்தாந்தங்களில் முதன்மையானது கணபங்கவாத கோட்பாடு கூறும் நிலைபேறற்ற தன்மையே ஆகும். அதாவது மாற்றங்களை உள்வாங்க வேண்டும் என பௌத்த சித்தாந்தம் வலியுறுத்துகின்றது. எனிலும் அடிப்படையிலேயே இலங்கை மாற்றங்கள் உள்வாங்காத வரலாறே நீடிக்கின்றது. இலங்கையின் வரலாற்றை கூறும் நுலாக கருதப்படும் மகாவம்ச நெறியில் இன்றும் நீடிப்பதே இலங்கையின் நிலைத்த இனப்பிரச்சினைக்கு காரணமாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவுகை கட்டுப்படுத்தலை போராக கருதி இராணுவத்தை பிரதானமாக கையாள்வதும் இலங்கையின் மாற்றமற்ற தன்மையையே புலப்படுத்துகின்றது. ராஜபக்ஷ அரசாங்கத்தின் அரசியல் இருப்பிற்கு இராணுவ போர்வெற்றியை பிரதான காரணமாகும். அதனடிப்படையிலேயே மாற்றமின்றி கொரோனா கட்டுப்படுத்தலினையும் போராக கருதி இராணுவத்தையே பெருமெடுப்பில் பயன்படுத்துகின்றனர். அரசாங்கத்தின் இவ்நடைமுறையின் தவறையே இன்று இலங்கை மக்கள் அனுபவித்து வருகின்றனர். இனியாவது கொரோனா வைரஸ் பரவுகை சுகாதாரப் பிரச்சினை என்பதை உணர்ந்து மாற்றத்தை உள்வாங்குவார்களாயின் கொரோனா வைரஸ் பரவுகை தடுப்பில் முன்னேற்றத்தைக் காணலாம்.

இலங்கையில் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த பௌத்த தேரர்கள் பலரும் பிரித்தோதி கைகளில் நூல்களை கட்டிவிடுகின்றார்கள். மேலும் வீடு, வளவுகளில் பிரித்தோதி தண்ணீர் தெளிக்கிறார்கள். விசேட ஆராதனைகளை மேற்கொள்கின்றார்கள். அவ்வாறானதொரு ஆராதனையிலேயே கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை சனாதிபதியும் குடும்பமாய் கலந்து கொண்டு மக்கள் நலனிற்காக பிரார்த்தனை செய்தார்கள். இது பௌத்த சிந்தனைக்கு முரணானது என்பதை பௌத்த துறவிகளும் மறந்துள்ளமையே இலங்கையின் பௌத்தத்தின் நிலைமை. இந்து மதத்தில் காணப்பட்ட மூடநம்பிக்கைகளை எதிர்த்தே சித்தார்த்தன் துறவறம் பூண்டு புத்தரானார். புத்தர் என்றும் தன்னை இறைதூதராக காட்டி கொண்டதில்லை. அற்புதங்களை நிகழ்த்தவில்லை. மனிதர்களுல் புனிதராக வாழ்ந்தார். அதனையே தனது சீடர்களுக்கும் புகட்டினார். சோதிடம் விலங்கு அறிவியல் என வர்ணித்தார். சடங்குகளால் பயனில்லை என்பதை கூறினார். அம்பேத்கரிடம் பௌத்த மதத்திற்கு மாறியதற்கான காரணத்தை கேட்கையில், “புத்தரின் கொள்கைள் நவீனமானவை, அறிவுசார்ந்தவை, அதில் மூட நம்பிக்கைகள் கிடையாது. அவர் நம்மை சிந்தித்தும் தெளிவுபடுத்தியும் வாழச்சொல்கிறார்.” எனக்கூறுகின்றார். அதுவே நிதர்சனம். பௌத்த துறவிகள் போலியான நம்பிக்கையை மக்களிடம் திணிக்காது கொரோனாவிலிருந்து பாதுகாத்து கொள்ள சுகாதார ஆலோசனையினை கேட்டு சிந்தித்து தெளிவுடன் செயற்பட தூண்ட வேண்டும்.

பௌத்தத்தின் பஞ்சசீலக்கோட்பாடு மக்கள் பின்பற்ற வேண்டிய அற ஒழுக்கமாக காணப்படுகின்றது. கொலை, களவு, பொய், கள், காமம் என்பவற்றை தவிர்த்து வாழ வேண்டும் என்பதுவே பஞ்சசீலக்கோட்பாடு ஆகும். பஞ்சசீலக்கோட்பாட்டின் முக்கியத்துவம் கொரோனா அபத்த காலத்தில் ஏற்படும் உடல், உளவியல் பிரச்சினைகளை சீர்செய்ய பெரிதும் உதவுகின்றது. கொரோனா வைரஸ் பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் சமூக இடைவெளியை உறுதிப்படுத்த அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் களவு, குடும்ப உறவுகளிடையே காமச்செயற்பாடுகள் என்பது அதீதமாக பதிவாகியது. இது மக்களின் அறத்தை கேள்விக்குறியாக்கின்றது. கொரோனா தொற்றிலும் அதிகமான அபத்தத்தை ஊரடங்கு கால குடும்ப பிணக்குகள் தோற்றியுள்ளது. மேலும் வைத்திய ஆலோசனை மதுவினை அருந்துவது கோவிட்19 தொற்று நோய்க்கு ஆபத்தானது என்பதாகும். இந்நிலையில் கொரோனா பரவுகையிலிருந்தும் அதுவழி ஏற்படும் பிணக்குகளிலிருந்தும் தற்பாதுகாத்து கொள்ள புத்தரின் பஞ்சசீலக்கோட்பாடு மக்களுக்கு உறுதுணையளிக்கும் இதனையே போதகர்களும் மக்களுக்கு தெளிவூட்ட வேண்டும்.

புத்தர் போதித்துள்ள அன்பும் இன்றைய சூழலில் முதன்மையாகின்றது. கொரோனா அபத்தத்தில் மரணத்திலும் உளவியல் பிரச்சினையே அதீதமாக காணப்படுகின்றது. கொரோனா வைரஸ் பரவுகை பற்றிய செய்திகள், உலகளவில் அதன் தாக்கம் பற்றிய செய்திகள் வாழும் மனிதர்களை உளவியல் ரீதியாக பெரும் அச்சத்திற்குள் உள்ளாக்கின்றது. இவ்அச்சத்தை போக்க அன்பே முதன்மையாகின்றது. ஆயினும் இலங்கையில் மக்களின் அச்சத்தை போக்குவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் எவ்வித ஆக்கபூர்வமான செயற்பாட்டையும் மேற்கொள்ளவில்லை. உலகளாவில் இன்று பேசுபொருளாகியுள்ள பெண்தலைமைத்துவ நாடுகளின் கொரோனா பரவுகை கட்டுப்படுத்தலின் வெற்றியில் மக்கள் மீதான ஆட்சியாளர்களின் அன்பும் முதன்மையாகின்றது. நோர்வேயின் பிரதம மந்திரி கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்கும் பொறிமுறையிளுன் சிறுவர்களிடம் அச்ச உணர்வின் தேவைப்பாட்டை விளக்குவது தொடர்பிலே சிறுவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டார். எம் நாட்டு அரச தலைவர்கள் மாத்திரமின்றி மதத்லைவர்கள் எவருக்குமே மக்களுடன் அன்பு பாராட்ட நேரம் கிடைப்பதில்லை. 

புத்தர் அடித்தட்டு மக்கள் மீது அக்கறை கொண்டார். ஏற்றத்தாழ்வுகளை சமப்படுத்த விரும்பினார். வறுமையை இனங்கண்டு சுட்டிக்காட்டியதோடு அது குறித்து விவாதிக்க முற்பட்ட தத்துவமாக பௌத்தம் காணப்படுகின்றது. ஏழைகள் குறித்து மட்டுமல்ல ஆதரவற்றோர், பலவீனமானோர், அடித்தட்டு வகுப்பைச் சேர்ந்தோர் என்று புறக்கணிக்கப்பட்டு வந்த பெருந்திரளான மக்கள் குறித்து புத்தர் சிந்தித்தார். இன்றைய கொரோனா அபத்த காலத்திலும் புத்தரை போன்ற சிந்தனை அவசியமாகின்றது. கொரோனா அபத்தத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டம் தினசரி கூலி மற்றும் பலரின் பொருளாதாரத்தையும் பெரிதும் நசித்துள்ளது. கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள கோவிட்19 தொற்று நோய் தாக்கத்துக்கு சமாந்தரமாகவே வறுமையும் பெரும் ருத்ர தாண்டவமாடி கொண்டுள்ளது. வறுமையை போக்க ஆக்கபூர்வமான செயற்பாட்டினை அரசாங்கத்தோடு இணைந்து இருக்கிறவர்கள் இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும். ஆலயங்களும் இவ்ஆக்கபூர்வ செயற்பாட்டில் பெறுமதியான பங்களிப்பை வழங்க வேண்டும்.

“ஒரு துளி தண்ணீர் எக்காலத்திலும் காய்ந்து போய்விடாமல் காப்பது எப்படி?” என்று ஒருமுறை புத்தர் தன் சீடர்களிடம் வினாவி இருந்தார். எவர்க்கும் வழி தெரியவில்லை. புத்தரே வழியும் தெரிவித்தார். “அதை கடலுள் சேர்ப்பதால் எக்காலத்திலும் காய்ந்து விடாது காத்திடலாம்.” என்றார். உண்மைதான். மனிதன் தன்னை மானிட சமூகமாகிய கடலுக்குள் சேர்த்து கொள்ளாவிட்டால் வரண்டுதான் போவான். இது ஆட்சியாளர்களுக்கும், அரச உயர் அதிகாரிகளுக்கும் சாலப்பொருத்தமான உபதேசமாக காணப்படுகின்றது. இலங்கையில் கொரோனா அபத்த கால நிவாரண திட்டங்கள் யாவும் முழுமையாக மக்களுக்கு பலனளிக்காமைக்கு, திட்டத்தை அறிவித்தோர் மக்களுடன் சேர்ந்து கொள்ளாமையால் மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளாமையே காரணம் ஆகும். ஆட்சியாளர்கள், அரச உயரதிகாரிகள் மக்களுடன் இணைந்து செயற்படுவோராய் காணப்படுதல் வேண்டும். யாழ்ப்பாணத்தில் அண்மையில் மக்கள் அடர்த்தி கூடிய கோப்பாயில் அமைக்கப்பட இருந்த தனிமைப்படுத்தல் முகாமிற்கு எதிராக மக்களை ஆர்ப்பாட்டத்திற்கு நகர்த்தியதும் அரச உயரதிகாரிகளே ஆவார். மக்களோடு ஒன்றித்த அரச உயரதிகாரிகள் காணப்படுவார்களாயின் மக்கள் போராட்டத்திற்கு முன்னரே அதன் சூழலை அறிந்து அங்கு தனிமைப்படுத்தல் முகாம் அமைக்கும் ஏற்பாட்டை நிறுத்தியிருப்பர்கள்.

இலங்கை அரசாங்கம் முதன்மைப்படுத்தும் பௌத்தத்தை சீராக பயன்படுத்தவார்களாயினேயே கொரோனா பரவுகை உட்பட இலங்கையின் பல பிணக்குகளை தீர்க்கக்கூடியதாக காணப்படும். புத்தர் மனித வாழ்வை நிறைவு செய்யும் வரை மக்களுக்கான உபதேசத்தையே வழங்கி சென்றுள்ளார். புத்தருடைய இறுதி உபதேசம், “உங்களுடைய விமோசனத்திற்காக இடைவிடாமல் கருத்தோடு உழையுங்கள்.” என்பதேயாகும். கொரோனா பரவுகையானது அனைவருக்குமே பேரிடரான பிரச்சினையே ஆகும். பிறர் மீது மாத்திரம் பழியை சுமத்தாது நாமும் எமது சொந்த முயற்சியாலேயே எமது துக்கத்திலிருந்து விடுதலைபெற போராடுவோம்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-