அமெரிக்காவின் உலக எஜமான் மகுடம் பறிபோகிறதா? -ஐ.வி.மகாசேனன்-
உலகம் நீயா? நானா? என முட்டி மோதிக்கொண்டிருக்கையில் கண்ணுக்கு புலப்படாத நுண்ணுயிர் உங்கள் அனைவரிலும் நான் தான் சர்வவல்லமை பொருந்தியவன் என வெளிப்படுத்தி நிற்கின்றது. உலகளவில் 210 பிரதேசங்களினை படையெடுத்து ஆக்கிரமித்துள்ள கொரோனா வைரஸ், இரண்டாம் உலகப்போருக்கு பின்னரான இருதுருவ அரசியல் ஒழுங்கிலும் 1989ஆம் ஆண்டுகளுக்கு பிற்பட்ட ஒற்றைமைய அரசியலிலும் வல்லரசாக திகழ்ந்து வரும் அமெரிக்கா பேரரசையே ஆட்டம் காண வைத்துள்ளது. அமெரிக்க பேரரசில் கொரோனா வைரஸ் தொற்றின் அதிகரிப்பிற்கு அமெரிக்க பேரரசன் டொனால்ட் ட்ரம்பின் பலவீனமான ஆட்சி இயல்பே காரணம் என அமெரிக்காவின் எதிர்க்கட்சிகள், மக்கள் மற்றும் அமெரிக்க ஊடகங்கள் மாத்திரமின்றி உலக சுகாதார அமைப்பும் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்நிலையில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க சனாதிபதி தேர்தல் ட்ரம்பிற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. அதனடிப்படையிலேயே குறித்த கட்டுரையானது அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு காரணமான ட்ரம்பின் பலவீனமான ஆட்சி இயல்பை விபரிப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் சீனாவில் அடையாளங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றானது, அமெரிக்காவில் பெப்ரவரி 15இற்கு பிறகு பெருமளவில் அடையாளம் காணப்பட்ட போதிலும் ஒரு மாதம் கழித்து மார்ச் 15இற்கு பிற்படவே கொரோனா வைரஸ் தொற்றினால் இழப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா இழப்பு சனவரி ஆரம்ப பகுதியில் அதிகரிக்கப்பட்டு ஒரு மாதங்களுக்கு பின்னரே அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்ட போதிலும் இன்று உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா காணப்படுகின்றது. இன்று சராசரியாக தினசரி இருபதாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாவதோடு ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டோர் இறந்து வருகின்றனர். இதுவரை அமெரிக்காவில் ஆறு லட்சத்திற்கு மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அமெரிக்கா மத்திய பொதுசுகாதார பாதுகாப்பு முகவரான நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மைய முன்னாள் இயக்குனர் டாம் பிரியெடென், “அமெரிக்க மக்கள் தொகையில் பாதி பேருக்கு கோவிட்19 நோய் ஏற்படும் எனவும் ஒரு மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் மரணம் அடைவார்கள்” எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றானது அமெரிக்காவை பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ கூட்டு ரீதியாக சிதைத்துள்ளது. அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஆய்வு செய்யும் பொருளியல் நிபுணர்கள் அமெரிக்காவின் பொருளாதாரம் 70ஆண்டுகள் பின்னோக்கி நகரக்கூடிய சூழல் காணப்படுவதாக குறிப்பிடுகின்றார்கள். அமெரிக்காவின் கொரோனா தொற்று அதிகரிப்பிற்கும் அதுசார்ந்து இழப்பீடு அதிகரிப்பதற்கும் ட்ரம்பின் பலவீனமான ஆட்சி இயல்பே காரணமாகின்றது.
ஆரம்பத்திலிலுந்து ட்ரம்ப் கொரோனா தொடர்பிலே அசண்டையான போக்கையே கையாண்டுள்ளார். சனவரி 20ஆம் திகதி அமெரிக்காவில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்று நோயாளி அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து வைரஸ் பரவுகை தொடர்பிலே வெளியிடப்பட்ட அக்கறைகளை முற்றாக அலட்சியம் செய்தார். டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப்பொருளாதார அமைப்பு மாநாட்டின் போது சி.என்.பி.சிக்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப், “நாங்கள் அதை முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம். சீனாவில் இருந்து வந்த ஒருவருக்கே தொற்று ஏற்பட்டிருந்தது. இப்போது அதுவும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டது” எனக் கூறி இருந்தார். அதேநேரம் அப்பேட்டியில் சீனாவின் வெளிப்படைத்தன்மையை பாராட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் கோரதாண்டவம் ஆடுகையில், ‘அரசியல் புரளி’ என அசண்டையுடன் கடந்து சென்றார். இவ்அசண்டையே அமெரிக்காவின் பேரழிவுக்கு அச்சாணியாகியது.
ட்ரம்ப் இயல்பாய் பொருளாதார சிந்தனையை முதன்மையாய் கொண்ட வலதுசாரியாவார். அதனடிப்படையில் ட்ரம்பின் நிர்வாக செயற்பாடுகள் பொருளாதார நலனை மையப்படுத்தியதாகவே காணப்பட்டு வருகின்றது. கொடிய கொரோனா வைரஸ் தாக்கத்தின் போதிலும் ட்ரம்ப் மக்கள் நலன்களை புறந்தள்ளி அதிக அளவில் பொருளாதார நலனுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார். கொரோனா வைரஸ் பரவுகையை முடக்குவதற்கு சீன அனுபவத்தை கொண்டு உலக சுகாதார நிறுவனம் சமூக இடைவெளியை உறுதிப்படுத்தும் வகையில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரிய போதிலும் பொருளாதார நலனை முதன்மைப்படுத்தி ட்ரம்ப் அதில் முழுமையான ஈடுபாட்டை கொண்டிருக்கவில்லை. அமெரிக்காவின் தேசிய தொற்று நோய் மற்றும் ஒவ்வாமை நோய் அமைப்பின் இயக்குனர் மருத்துவர் அந்தோனி பாஸி ட்ரம்ப் பொருளாதாரத்துக்காக கொரோனாவை அக்கறையுடன் எடுத்துக்கொள்ளவில்லை, இன்னும் கடும் நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டுமென சூசகமாக குறிப்பிட்டிருந்தார்.
ட்ரம்ப் உறுதியான முடிவுளை எடுக்க முடியாமையும் அமெரிக்காவின் கொரோனா வைரஸ் தாண்டவம் அதிகரிக்க காரணமாயிற்று. அமெரிக்க சனாதிபதி ட்ரம்ப் நியூயோர்க் நகரத்தை தனிமைப்படுத்துவதே அமெரிக்காவில் பரவும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவதற்கான சிறந்த தீர்மானம் என பரிசீலனை செய்த போது, நியூயோர்க் நகர ஆளுநர்அன்ட்ரூ கூமுவின் எதிர்ப்பை தொடர்ந்து அம்முடிவு ஆரம்பத்தில் கைவிடப்பட்டிருந்தது. அன்ட்ரூ கூமு நியூயோர்க்கை தனிமைப்படுத்தும் முடிவானது அமெரிக்காவின் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்குமென கூறி அம்முடிவை கடுமையாக விமர்சித்திருந்தார். அமெரிக்காவில் நியூயோர்க்கிலேயே அதிகளவு பாதிப்பு காணப்படுகின்றது. அமெரிக்காவின் மொத்த பாதிப்பில் மூன்றில் ஒரு பங்கு நியூயோர்க் மாநிலத்தை சேர்ந்தவர்களாவார். கொரோனா கட்டுக்குள் வராத சூழலிலும் நியூயோர்க் நகரத்தில் போடப்பட்டுள்ள முடக்கத்தை நீக்குவது தொடர்பிலே பரிசீலிப்பதாக நியூயோர்க் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் ட்ரம்ப் ட்விட்டரில், முடக்கத்தை தளர்த்துவது என்பது அந்தந்த மாநில ஆளுநர்களுக்கு உட்பட்டது. அதற்குரிய அதிகாரத்தை வழங்கியிருக்கிறேன். அவர்களுக்கு துணையான ஆலோசனை வழங்குவோம்.” என பதிவிட்டுள்ளார். இது உலகாளும் அமெரிக்க தலைமைக்குரிய வல்லமையை கேள்விக்குறியாக்கின்றது.
அமெரிக்காவின் மருத்துவ துறையில் போதிய அக்கறை காட்டாத தலைவராக ட்ரம்ப் காணப்படுகின்றார். வைத்தியர்களுககான சரியான பாதுகாப்பு அங்கிகளே போதிய அளவில் காணப்படவில்லை என்ற விமர்சனம் அமெரிக்க மருத்துவ சங்கங்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் டேவிட் வாலஸ் வெல்ஸ் எனும் பத்திரிகையாளர் அமெரிக்க முறிவடைகின்றது எனும் கட்டுரையில், “அமெரிக்காவில் பெரிய அளவில் தொற்று நோய் பரவும் நிலையில் தேவையான மருத்துவ ஆதரவுகளும் தனியார் நிறுவனங்கள் மற்றும் நல்ல மனது கொண்ட கொடையாளிகளின் தயவை நம்பியிருக்க வேண்டியுள்ளதே, என்பது கவலைக்குரிய செயற்பாடற்ற நிலையை காட்டுவதாக இருக்கிறது.” என விசனம் தெரிவித்துள்ளார். வேகமாக செயற்பட வேண்டிய சூழலில் காணப்படும் ட்ரம்ப் இலவச பரிசோதனை உள்ளடங்களாக குறைந்தளவு விடயங்களை உள்ளடங்கிய திட்டத்திற்கே தற்போது கையெழுத்திட்டு செயற்படுத்தி உள்ளார்.
தனது பலவீனத்தை மூடிமறைப்பதற்காக ட்ரம்ப் சீனா மீதும் உலக சுகாதார நிறுவனம் மீதும் காட்டமான அறிக்கைகளை விட்டு நாகரீகமற்ற அரசியல் விளையாட்டை கொரோனா அபத்த காலத்தில் விளையாடுகின்றார். சனவரி 25ஆம் திகதி கொரோனா வைரஸ் தொடர்பான சீனாவின் வெளிப்படைத்தன்மையை பாராட்டிய ட்ரம்ப் ஏப்ரல் மாதத்தில், கொரோனா வைரஸ் பரவுகை குறித்தான தகவல்களை சீனா மறைத்துள்ளது. கொரோனா வைரஸ் குறித்து முன்கூட்டியே போதுமான எச்சரிக்கை அறிவிப்புக்களை உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கவில்லை. சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயற்படுவதாகவும் அதற்கு வழங்குகின்ற நிதியை நிறுத்த போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதற்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரால் அதானம் கெப்ரியேசஸ் கொரோனாவால் அதிக சவப்பெட்டிகளை சுமக்க விரும்பவில்லையெனில் அரசியல் செய்யாதீர்கள் என பதிலடி கொடுத்துள்ளார். உலக எஜமானாய் அதிகளவு நிதியினை வழங்கி பொது நிறுவனங்களை ஆக்கிரமித்து அதிகாரத்தை நிலைநாட்டிய அமெரிக்கா தலைமை இன்று மூக்குடைக்கப்பட்டு உள்ளமை ட்ரம்பின் பலவீனத்தையே உறுதிப்படுத்துகின்றது. மேலும் உலக சுகாதார நிறுவனம் என்பது தனித்து ஆலோசனை வழங்கும் அமைப்பாகவே திகழ்கின்றது. அதனால் இறைமைமிக்க நாட்டினுள் புகுந்து அதிகாரத்தை பிரயோகிக்க இயலாது அந்நிலையில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் செயற்படாமைக்கு உலக சுகாதார நிறுவனம் மீது சினம் கொள்வது விவேகத்துடனானதாகவோ அல்லது அனுபவ முதிர்ச்சியின் செயற்பாடாக அமையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப்பின் பலவீனமான ஆட்சி இயல்பினால் அமெரிக்கா ஒற்றைமைய உலக அரசியலின் சக்கரவர்த்தி என்ற மகுடம் பறிபோகும் நிலை காணப்படுகின்றது. உலக அரசியல் ஒழுங்கில் எஜமானாக இருந்த அமெரிக்காவின் அரசியல், பொருளாதாரம் மற்றும் இராணுவ கூட்டுக்களை கொரோனா வைரஸின் தாக்கம் சிதைத்துள்ளது. இது நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க சனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் மீது பாரிய தாக்கத்தை செலுத்தும் என எதிர்பார்க்கலாம். ட்ரம்ப் 2016ஆம் ஆண்டு சனாதிபதி தேர்தலை சந்திக்கும் போதே பலவீனமான தலைமை என கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தார். ட்ரம்பின் வெற்றியை எவரும் கணிக்கவில்லை. எனிலும் ட்ரம்ப் அமெரிக்காவின் 58வது சனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று 45வது சனாதிபதியாக பதவியேற்றார். பதவியேற்பின் பின்னரும் ட்ரம்பிற்கு எதிரான போராட்டங்கள் தலைதூக்கின. காங்கிரஸில் நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. யாவற்றையும் கடந்து முழுமையான முதலாவது காலப்பகுதியை நிறைவு செய்யும் தருவாயில் கண்ணுக்கு புலப்படாத நுண்ணிய கிருமியினால் ட்ரம்ப் மீள பிரச்சினையை எதிர்கொண்டுள்ளார். மக்களால், எதிர்க்கட்சியினால் செய்ய முடியாததனை கொரோனா வைரஸ் செய்யுமா? என்பதை நவம்பர் தேர்தல் முடிவுகளில் தான் அறிய முடியும்.
Comments
Post a Comment