பெண்கள் மீதான புதிய பார்வை..! கொரோனா நடவடிக்கைகளால் உச்சத்தை தொட்டவர்கள். -ஐ.வி.மகாசேனன்-

கொரோனா தொற்று பரவல் பல மாற்றங்களையும் புதிய பார்வைகளையும் உலகுக்கு தினம் தினம் வழங்கி வருகின்றது. கொரோனாவினால் மக்கள் முடங்கி இருக்கையில் இயற்கை தன் அழகை மீளப்பெற்று வருவதும் மறுக்க முடியாத உண்மையாய் காணப்படுகின்றது. பெண்கள் வீட்டுக்குள் முடங்கிய காலம் மாறி அதிகாரத்தை நிலைநாட்டும் உச்சம் தொட்ட போதிலும் ஆட்சியதிகார திறமையானது பெண்களினிலும் ஆண்களிடமே அதிகமாய் உண்டு என்ற பார்வையே சமூகப்பரப்பில் அதிகமாக காணப்படுகின்றது. எனிலும் கொரோனா வைரஸ் பரவுகை பெண்கள் மீதான பார்வையிலும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக வல்லரசுகளையே கொரோனா வைரஸ் தொற்று கதிகலங்க செய்துள்ள சூழலில் பெண்கள் தலைமைதாங்கும் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் உலகநாடுகளே வியந்து பார்க்கின்றன. இக்கட்டுரையும் உலக அரங்கில் பெண் தலைமைத்துவ நாடுகள் கொரோனா வைரஸ் பரவுகையை கட்டுப்படுத்துவதால் ஏற்படுத்திய புதிய பார்வையையே விபரிப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது.

சில தசாப்தங்களுக்கு முன்னர் மெக்கின்டோசின்(1985) குறிப்பில், உறுதியான நடவடிக்கை குறித்த விவாதம் ஒன்றின் போது ஒரு பெண் உளவியலாளரின் கருத்து பிரபலமாக மேற்கோள் காட்டப்பட்டது, “என்னைப் பொறுத்தவரை, உறுதியான நடவடிக்கையின் உண்மையான சோதனை என்னவென்றால், 20 ஆண்டுகளில் நான் இங்கு எழுந்து நின்று சமமான சாதாரண பெண்கள் மற்றும் சாதாரண ஆண்களைப் பார்க்கலாமா என்பதுதான்.” ஒரு பெண் உயர் நிலையை அடைய, சிறந்து விளங்க வேண்டும் என்ற விழிப்புணர்வு தேவைப்படுகிறது. இன்று கோவிட்19 பெண்ணின் உயர்நிலையை உணர்த்தியூள்ளதாகவே தோன்றுகின்றது. 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், மற்றும் பிரேசிலிய அதிபர் ஜெய்ர் போல்சனாரோ உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் கொரோனா வைரஸ் தாக்கததால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு பதிலளிக்க திணறுகின்ற நிலையிலே, பெண் தலைவர்களின் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நகர்வுகள் உலகை வியப்பிற்குள் ஆழ்த்தியுள்ளது. பெண் தலைமைத்துவத்தால் ஆளப்படும் நாடுகளான ஜெர்மனி, நோர்வே, நியூசிலாந்து, தைவான், பின்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் டென்மார்க் ஆகியன ஒரு கொடிய தொற்றுநோயால் மறுவடிவமைக்கப்பட்ட ஒரு உலகத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை உலகுக்குக் காண்பிப்பதற்கு பெண்கள் தலைமையில் முன்னேறுவதைக் காணலாம். 

அவுஸ்ரேலியாவின் அங்கிகாரம் பெற்ற முகாமைத்துவ செயற்பாட்டாளர்களின் ஒன்றிணைந்த நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கோவிட்19 என்கின்ற கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டப்படுத்தும் செயற்றிட்டத்தில் உலக நாட்டின் தலைவர்களின் பங்கும் அவர்கள் பெறும் நிலையினை சார்ந்த ஆய்வொன்றினை கடந்த ஏப்ரல்14ஆம் திகதி வெளியிட்டிருந்தது. இந்த தரவுப்பட்டியலில் அமெரிக்க (89வது இடம்), ரஷ்ய (50வது இடம்), சீனா (61வது இடம்) மற்றும் பிரித்தானிய (89வது இடம்) போன்ற வல்லாதிக்க நாடுகள் மிகவும் பின்தள்ளப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. பெண் தலைமைத்துவ நாடுகளான ஜேர்மனி (16வது இடம்), நோர்வே (6வது இடம்), நியூசிலாந்து (1வது இடம்), தைவான் (9வது இடம்), பின்லாந்து (5வது இடம்), ஐஸ்லாந்து (3வது இடம்) மற்றும் டென்மார்க் (21வது இடம்) போன்றன முன்னிலையிலும் காணப்படுகின்றன.

உலகளாவிய பாலின சமநிலை ஆலோசனையான 20-முதல் (20-First) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அவிவா விட்டன்பெர்க்-காஸ் என்பவர் ஃபோர்ப்ஸ் (Forbes) எனும் பத்திரிகையில் சமீபத்தில் எழுதிய கட்டுரையில் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் பெண் தலைமைத்துவ நாடுகள் முன்னிலை பெற்றுள்ளமைக்கு காரணமாக பிரதானமாக 4 தலைமைத்துவ நுட்பங்களை விபரித்துள்ளார்.

முதலாவது உண்மையாகும். மக்களுக்கு உண்மையாக வெளிப்படையாக காணப்படுவோராய் உள்ளனர். ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மேர்க்கெலின் கொரோனா ஆபத்தை துல்லியமாய் புரிந்து மக்களுடன் வெளிப்படையாய் உரையாடினார். இரண்டாம் உலகப்போருக்கு பின்னரான மிகவும் ஆபத்தான காலமாக மக்களுக்கு தெளிவுபடுத்தினார். இது ஒரு கடுமையான ஆபத்து என்றும் 70% மக்கள் வரை பாதிக்கும். “இது தீவிரமானது, அதை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார். அவரும் அதனை தீவிரமாக எடுத்து தன்னை கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தினார். மக்களும் தலைமையை தொடர்ந்தனர். ஐரோப்பாவில் மிகப்பெரிய அளவிலான கொரோனா வைரஸ் சோதனை திட்டத்தை ஜெர்மனி மேற்பார்வையிட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் 350,000 சோதனைகளை நடத்தி, நோயாளிகளை தனிமைப்படுத்தவும் திறம்பட சிகிச்சையளிக்கவும் போதுமான அளவு வைரஸைக் கண்டறிந்துள்ளது. நாட்டின் எண்கள் அதன் ஐரோப்பிய அண்டை நாடுகளை விட மிகக் குறைவாக உள்ளன. மேலும் இது விரைவில் கட்டுப்பாடுகளை தளர்த்தத் தொடங்குவதற்கான அறிகுறிகள் உள்ளன.

இரண்டாவது தீர்க்கமான தன்மையாகும். கொரோனா அபத்தம் உலக நாடுகள் பலவற்றிலும் அதிகரிக்க பிரதான காரணமே முன்னாயர்த்தமின்மையே ஆகும். எனிலும் பெண் தலைமைத்துவ நாடுகள் அதில் விழிப்புடன் செயற்பட்டுள்ளனர். தைவானின் தலைவர் சாய் இங்-வென் என்பவர் வினைத்திறனுடன் ஜனவரி மாதத்தில், ஒரு புதிய நோயின் முதல் அறிகுறியை கண்டதுமே பிற இடங்களில் பொதுவானதாக இருக்கும் பூட்டுதல்களை நாடாமல் பரவலைத் தடுக்க “124 நடவடிக்கைகள்” எனும் செயல்முறையை அறிமுகப்படுத்தினார். தைவான் பெய்ஜிங்கால் அதன் பிரதேசமாகக் கூறப்படுகிறது. மற்றும் உலக சுகாதார அமைப்பால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே சீனாவின் பிரதான நிலப்பரப்பில் தோன்றிய ஒரு தொற்றுநோயால் அது மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் தைவான் அதிபர் சாய் இங்-வென் கடந்த ஆண்டு டிசம்பரில் வூஹான் குடிமக்களுக்கு ஒரு மர்மமான புதிய வைரஸ் பாதித்ததைப் பற்றி கேள்விப்பட்டபோது, உடனடியாக வூஹானிலிருந்து வரும் அனைத்து விமானங்களையும் பரிசோதிக்கும்படி உத்தரவிட்டார். பின்னர் அவர் ஒரு தொற்றுநோய் கட்டளை மையத்தை அமைத்தார். முகமூடிகள் போன்ற தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தியை அதிகரித்தார் மற்றும் சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவ் ஆகிய நாடுகளிலிருந்து வரும் அனைத்து விமானங்களையும் தடை செய்தார். மேலும் தைவான் கொரோனா வைரஸ் பரவுகையை கண்டறிய தமது புலனாய்வு பிரிவினை முதன்மையாய் பயன்படுத்தியது. இதனூடாக கொரோனா வைரஸை தைவான் கட்டுப்படுத்தியது.

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன்,  இரக்கமுள்ள ஆனால் கடினமான ஒரு முடிவெடுப்பதற்கான வெளிப்படையான கட்டமைப்பை கொண்ட ஒரு கொள்கையை கொரோனா பரவுகைக்கு எதிராக வழிநடத்தியுள்ளார். நியூசிலாந்து கிட்டத்தட்ட ஐந்து மில்லியனுக்கும் அதிகமான தீவு நாடு. இது சுற்றுலாவை பெரிதும் நம்பியுள்ளது. முழு நாட்டிலும் வெறும் 6 வழக்குகள் இருந்தபோது, ஆச்சரியப்படும் விதமாக நியூசிலாந்திற்குள் நுழைந்த மக்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டார்கள். மேலும் வெளிநாட்டவர்கள் விரைவில் உள்ளே நுழைவதை தடைசெய்தார். மார்ச் 19 அன்று நியூசிலாந்தின் எல்லைகளை வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு மூடிவிட்டு, மார்ச் 23 அன்று நாட்டை நான்கு வாரங்கள் பூட்டுவதாக அறிவித்தார். தெளிவும் தீர்மானமும் நியூசிலாந்தை புயலிலிருந்து காப்பாற்றுகின்றன. “ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நாம் கண்ட மனித ஆரோக்கியம் மிகப்பெரிய அச்சுறுத்தல் எதிர்கொண்டுள்ள நிலையில், கிவிஸ் அமைதியாகவும் கூட்டாகவும் நாடு தழுவிய பாதுகாப்புச் சுவரைச் செயல்படுத்தியுள்ளது” என்று ஆர்டெர்ன் வியாழக்கிழமை தேசத்திற்கு ஆற்றிய உரையில் கூறினார்.

ஜெர்மனியின் வடக்கு எல்லையில் டென்மார்க் உள்ளது. அதன் பிரதம மந்திரி மெட்டே ஃபிரடெரிக்சன் ஆவார். இவர் தொற்றுநோயை எதிர்கொண்டு தனது நாட்டின் எல்லைகளை மூடிய முதல் ஐரோப்பிய அரச தலைவராக இருந்தார். டென்மார்க் தனது பள்ளிகளையும் பொது நிறுவனங்களையும் மூடுவதனையும், பெரிய கூட்டங்களைத் தடை செய்தவதனையும் முதன்மையான செயற்பாடாக மேற்கொண்டது. வைரஸின் பரவல் கட்டுப்பாட்டில் இருப்பதால், கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை ஃபிரடெரிக்சன் சமீபத்தில் அறிவித்தார். கடந்த 15ஆம் திகதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன.

மூன்றாவது கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தொழில்நுட்ப கையாள்கையும் முதன்மை பெறுகின்றது. ஐஸ்லாந்தின் பிரதமர் கத்ரான் ஜாகோப்ஸ்டாட்டிர் 360,000 மக்கள் மட்டுமே வாழும்  ஒரு சிறிய, தீவூ நாட்டை  ஆளுகிறார். பெரும்பாலான நாடுகளில் கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சோதனை உள்ளது. ஆயினும் ஐஸ்லாந்தில் பிரதமர் தலைமையில், அதன் அனைத்து குடிமக்களுக்கும் இலவச கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. ஏனெனில் வைரஸஷுக்கு நேர்மறையானதை சோதிக்கும் அனைத்து மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அறிகுறியற்றவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் முழுமையான கண்காணிப்பு முறையை நிறுவியுள்ளது. அதாவது அவர்கள் பள்ளிகளைப் பூட்டவோ அல்லது மூடவோ இல்லை.

பின்லாந்தின் பிரதம மந்திரி, 34 வயதான சன்னா மரின், உலகின் இளைய தலைவராக உள்ளார். ஆனால் அவர் தொற்றுநோய்க்கான தயார்நிலைக்கு பின்லாந்தில் 85% ஒப்புதல் மதிப்பீட்டைக் கொண்டுள்ளார். மக்களுக்கு செய்தியை கொரோனா விழிப்புணர்வு தகவல்களை கொண்டு செல்வதில் புதிய தொழில்நுட்பத்தை கையாண்டார். எல்லோரும் பத்திரிகைகளைப் படிப்பதில்லை என்பதை உணர்ந்து, தொற்றுநோயை நிர்வகிப்பது குறித்த உண்மை அடிப்படையிலான தகவல்களைப் பரப்புவதற்கு எந்த வயதினராயினும் சமூக ஊடகத்தில் செல்வாக்கு செலுத்துபவர்களுக்கு அழைப்பு விடுத்தார். கொரோனா வைரஸ் நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதில் சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்களை முக்கிய முகவர்களாகப் பயன்படுத்தி தகவல்களை பரப்பினார்.

நான்காவது மக்கள் மீதான அன்பு கொரோனா தொற்று பரவுகையிலிருந்து மக்களை ஆட்சி தலைவர்கள் பாதுகாப்பதில் பிரதானமாகிறது. மக்கள் மீது நலன் கொண்ட ஆட்சி தலைவர்களாளேயே மக்களை பாதுகாக்க கூடிய திட்டங்களை நகர்த்த முடியும். அதனை பெண் தலைமைகள் செவ்வனவே செய்துள்ளனர். நோர்வே அரசாங்கம் மக்கள் மீது மிகவும் கரிசனையுடன் செயற்படுகின்றது. கொரோனா தொற்று சிறிய அளவில் இருப்பதாக உணருபவர்களை வீட்டிலேயே தம்மை பாதுகாத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள். அவர்களை தொலைபேசியில் காணொளி மூலம் அடிக்கடி உரையாடி அவர்களின் நிலையை கண்காணிப்பதுடன் சிகிச்சை முறைகளையும் வழிகாட்டி வருகின்றார்கள். அப்படியானவர்களே 50,000க்கும் மேற்பட்டோர் உள்ளனர். மேலும் நோர்வேயின் பிரதம மந்திரி எர்னா சோல்பெர்க்குக்கு தனது நாட்டின் குழந்தைகளுடன் நேரடியாக பேச தொலைக்காட்சியைப் பயன்படுத்துவதற்கான புதுமையான யோசனை இருந்தது. சோல்பெர்க் ஒரு பிரத்யேக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அங்கு பெரியவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. நாடு முழுவதிலுமிருந்து வரும் குழந்தைகளின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அச்ச உணர்வின் தேவைப்பாடடை விளக்கியிருந்தார். இம்முயற்சி குழந்தைகளின் உளவியலை பாதுகாக்கும் ஆக்கபூர்வமான செயற்பாடாகும். இதற்கு முன்மாதிரியாக டென்மார்க் பிரதமர் மெட்டீ ஃபிரெடிக்சனும் சிறுவர்களுக்கான 3 நிமிட குறுகிய செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தி இருந்தார்.

“தலைமைத்துவம் ஒரு பொறுப்பாகும். இது பொறுப்பில் இருப்பது பற்றியது அல்ல. இது உங்கள் பொறுப்பில் இருப்பவர்களை கவணித்து கொள்வது பற்றியது.” என சைமன் சினெக் குறிப்பிட்டுள்ளார். உலகில் பல தலைவர்கள் கொரோனா அபத்த காலத்தில் தங்கள் பொறுப்புக்களை மறந்தமையினாலேயே இன்று உலகம் இப்பெரும் அழிவிலிருந்து மீள முடியாதுள்ளது. பாலின வேறுபாடுகள் உண்மையில் தலைமைத்துவ பாணிகளில் வேறுபாடுகளை ஏற்படுத்துகின்றனவா என்று முடிவு செய்வது மிகவும் கடினம். ஆயினும் கொரோனாவின் பரவலை கட்டுப்படுத்தும் அரச தலைவர்களாக, நிலைமையைச் சமாளிக்கும் பெண்கள் எவ்வாறு சிறந்தவர்களாகத் வேறுபட்டு தெரிகிறார்கள் என்பது, இன்று அவர்களை உலகம் வியந்து பார்த்து முன்மாதிரியாய் செயற்பட தூண்டப்படுவதிலிருந்து புலப்படுகின்றது. எனிலும் ஆசியா, அபிரிக்க, இலத்தின் அமெரிக்க நாடுகளில் இவ்வாறான முன்மாதிரியான பெண் அரசியல் தலைமைகள் தேடவேண்டியோராய் உள்ளமை துர்ப்பாக்கியமே.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-