கொரோனா தொற்றின் அதிகரிப்பிற்கு காரணம்: ஆட்சியாளர்களதும் மக்களதும் அசமந்த போக்கு? -ஐ.வி.மகாசேனன்-

2020ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து உலகம் தொடர்ச்சியாக இயற்கையா ஆகவும் செயற்கையாகவும் பல பேரிடர்களில் சுழன்று வருகின்றது. அவற்றுள் கொரோனா வைரஸின் பரவுகையால் மக்கள் உயிரை பறிக்கும் கோவிட்19 நோய் தீர்வற்ற சுமையாய் தொடர்கின்றது. 2020இன் ஆரம்பத்தில் கொரோனா வைரஸின் தொற்றானது சீன பெருநிலப்பரப்பில் மாத்திரமே கொலைத்தாண்டவத்தை அரங்கேற்றி யது. ஆயினும் உலக நாடுகளின் அசமந்த போக்கினால் இன்று 206 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் வரையில் கொரோனோ வைரஸின் தொற்று பரவியுள்ளது. உலக வல்லரசுகளையே ஆட்டம் காண வைத்துள்ளது. உலக அளவில் பதினாறு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர். உலக நாடுகளில் ஆட்சியாளர்கள் மற்றும் மக்களின் அசமந்த போக்குடன் தாராள சனநாயக ஆட்சி பண்புகளும் உலகமயமாக்கலின் வளர்ச்சியுமே கொரோனா வைரஸ் பரவுகையை கட்டுப்படுத்த முடியாது போனதுக்கு காரணமாகியுள்ளது. இதனடிப்படையில் குறித்த கட்டுரையானது உலக நாடுகளில் நிலவிய அசண்டைகளால் கொரோனா வைரஸ் பரவுகை கட்டுப்படுத்த முடியாது சென்றுள்ளமையை விபரிக்கின்றது.

கொரோனா வைரஸின் ஆரம்ப பரவலானது சீனாவின் வூஹான் நகரை மையப்படுத்தியே இடம்பெற்றது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் திகதி முதல்முதலாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. எனிலும் சனவரி 14ஆம் திகதி வரை எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சீன அரசு பிரத்தியோகமாக மேற்கொண்டிருக்க இல்லை. உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையையடுத்து “கட்டுப்படுத்தி விடலாம், குணப்படுத்தக்கூடியது” எனக்கூறி அசண்டையாய் கடந்து சென்றது. சனவரி மாதம் சீனர்களின் புத்தாண்டு மாதம். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காய் வூஹான் நகரிலிருந்து சொந்த நகரங்களுக்கு மக்கள் சென்றிருந்தனர். அதேவேளை விடுமுறை கொண்டாட்டங்களுக்காக வெளிநாடுகளுக்கும் சென்றிருந்தனர். சீன அரசு எவ்வித கட்டுப்பாடுகளையூம் மேற்கொள்ளவில்லை. சனவரி 21ஆம் திகதி சீனாவின் பிரதான நகரமான சங்காய் உள்ளிட்ட பிரதான நகரங்களில் கொரோனா தாக்கம் இருப்பதை கண்டறியப்பட்டதை தொடர்ந்தே சனவரி 23ஆம் திகதி முதன்முதலாக சீன அரசு கொரோனா வைரஸ் பரவுகைக்கு எதிராக இறுக்கமான முடிவினை எடுத்தது. சுமார் 93கோடி மக்கள் வாழும் வூஹான் நகரம் அமையப்பெற்ற ஹீபே மாகாணம் தனிமைப்படுத்தப்பட்டன. ஆயினும் இம்முடிவு காலதாமதமான முடிவாகவே காணப்பட்டது. ஏனெனில் ஏற்கனவே சீனாவின் பிற மாகாணங்களிற்கும் வெளிநாடுக ளிற்கும் கொரோனா வைரஸ் ஏற்கனவே பயணித்து விட்டது. கொரோனா வைரஸ் ஒருவரை பாதித்தால் அந்த நபரிடமிருந்து மூன்று நபர்களுக்கு பரவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது. டிசம்பர் 8ஆம் திகதி அடையாளங்காணப்பட்ட வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த சீன அரசு சனவரி 23ஆம் திகதியே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாயின் சீன அரசின் அசண்டையை உலக நாடுகள் எச்சரிப்பதில் தவறில்லை என்ற நியாயப்பாடு ஆழமாக புரிகின்றது. அத்தோடு முன்னெச்சரிக்கையாய் சார்ஸ் போன்ற வைரஸ் பரவுவதாக எச்சரித்த மருத்துவர் வர் லி வென்லியாங்க்கு சீன அரசு தண்டனை அளித்தது. பின்னர் குறித்த மருத்துவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்து விட்டார். சீன அரசு மருத்துவரின் குடும்பத்திடம் மன்னிப்பும் கோரியுள்ளது.

சீன அரசின் அசண்டையால் பரவலடைந்த கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் உலக நாடுகளில் பெரிதாக தாக்கத்தை செலுத்தவில்லை. உலக நாடுகளிலும் சீன மக்களுக்கே குறித்த வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டமையால், தொற்று அடையாளம் காணப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மட்டுப்படுத்தியது உலக நாடுகள். பெப்ரவரி மாதம் கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீன மக்களின் உயிரிழப்பு அதிகமாக இருந்தது. உலக நாடுகள் பார்வையாளர்களாய் அசண்டையோடு கடந்து சென்றனர். மார்ச் மாத ஆரம்பங்களில் நிலைமை தலைகீழாக மாறியது. சீனாவில் கொரோனா பாதிப்பின் தாக்கம் குறைவடைந்து ஐரோப்பிய மற்றும் அமெரிக்க உள்ளடங்களாய் உலக நாடுகள் யாவற்றிலும் கொரோனாவின் ஆதிக்கம் அதிகமாகியது.


சீனாவை தொடர்ந்து இத்தாலியிலேயே மார்ச் மாத ஆரம்பத்தில் கொரோனாவின் ருத்ர தாண்டவம் ஆரம்பிக்கப்பட்டது. பெப்ரவரி 15ஆம் திகதி முதலாவது கொரோனா வைரஸ் தொற்று நோயாளி இத்தாலியில் இனங்காணப்பட்டதுடன் பெப்ரவரி 21ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றால் முதலாவது மரணம் இடம்பெற்றது. இதனை தொடர்ந்தே பெப்ரவரி 21இலிருந்து அரசாங்கம் வைரஸ் தொற்று அதிகமாக அடையாளம் காணப்பட்ட கோதாநா நகரின் எல்லைகளை மூடியது.  எனிலும் இத்தாலியின் தாராள சனநாயகம் இறுக்கமான தனிமைப்படுத்தல் சட்டங்களை போட அனுமதிக்காததால் அரசாங்கம் தயக்கம் காட்டியது. ஆரம்பத்தில் அந்நகரம் மற்றும் அதனை சூழஉள்ள இடங்களில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கும் கல்லூரிகளு க்கும் விடுமுறை விடுத்தது. இருப்பினும் மற்றவைக்கு எந்த தடையும் விதிக்கப்படாமையால் இத்தாலியின் அலுவலக செயற்பாடுகள் இயல்பாய் இடம்பெற்றது. மக்கள் கொரோனாவின் வீரியம் தெரியாது அதனை அசண்டை செய்தனர். கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு விலகியிருக்குமாறு அறிவுப்புக்கள் வெளியிட்ட காலத்தில் அவற்றை யாரும் பொருட்படுத்தவில்லை. குறிப்பாக நாட்டின் உயர்பொறுப்பிலுள்ள ஒருவரே ஒரு மதுக்கடையில் மதுக்கோப்பையை ஏந்தியவாறு படமெடுத்து கட்டுரையில், என்னை என்ன செய்து விடும் கொரோனா என்கின்ற அளவுக்கு கருத்து தெரிவித்து கொண்டிருந்தார். இந்த அசட்டு துணிச்சலாலேயே மார்ச் ஆரம்பங்களில் இத்தாலியின் கொரோனா பரவுகையும் மரணமும் அதிகரித்துக்கொண்டே சென்றது. சனநாயகத்தால் தடுமாறிய இத்தாலி முதல்முதலாக ஊரடங்கு சட்டத்தை லம்பார்டி என்ற ஒரு பகுதிக்கு மாத்திரம் மார்ச்10ஆம் திகதி அமுலாக்க தீர்மானித்தது. இவ்விடயம் ஊடகங்களில் கசிந்தமையால் மக்கள் தமது சொந்த நகரங்களுக்கு செல்ல முற்பட்டு இத்தாலி முழுவதற்கும் கொரோனா வைரஸை பரப்பினர். மார்ச் 09ஆம் திகதி முதல் முழு இத்தாலியிலும் ஊரடங்கு சட்டம் போடப்பட்டு தனிமைப்படுத்தல் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது. சனநாயகத்தை கருத்திற் கொண்டு இறுக்கமான நடைமுறைகளை இத்தாலி அரசு மேற்கொள்ள தயக்கங்காட்டியமையும் மக்களின் அசமந்த போக்குகளாலும் இத்தாலியின் கொரோனா வைரஸ் பரவுகையையும் மரணத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை சீனாவின் பாதிப்புகளையும் மிஞ்சி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 15,000 மேற்பட்டோர் இறந்துள்ளனர். தற்போது தினசரி சராசரியாக தொற்றுக்கு உள்ளாவோர் எண்ணிக்கை 5000ஆக இருப்பதுடன் இறப்பவர்களது எண்ணிக்கை 500-750 ஆகவும் காணப்படுகின்றது.

இத்தாலியை போன்றே பிரித்தானியா விலும் மக்களின் அசமந்த போக்கே பிரித்தானியாவின் கொரோனா வைரஸ் பரவுகைக்கு காரணமாக உள்ளது. இத்தாலியை தொடர்ந்து பிரான்ஸ், ஸ்பெயின் என ஐரோப்பிய நாடுகளிடையே கொரோனா வைரஸின் பரவுகை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்தே பிரித்தானியாவிலும் பிரித்தானிய அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் தனிமைப்படுத்தலை வலியுறுத்தி வந்தது. எனிலும் மக்கள் கொரோனா வைரஸின் வீரியத்தை புரிந்து கொள்ளாமல் அவர்கள் விருப்பத்துக்கு வெளியே அலைந்து கொண்டிருந்தனர். பூங்காக்களிலும் மதுக்கூடங்களிலும் அலைந்து திரிந்தனர். இதனால் வெறுத்துப்போன பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், இதே நிலை நீடித்தால் வீட்டிலிருந்து வெளியே வர தடை விதிக்கப்படும் என எச்சரித்தார். பின்னரும் மக்களை கட்டுப்படுத்த முடியாத நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று முறைக்கு மேலே வெளியே சென்றால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனிலும் பிரித்தானியாவின் கொரோனா வைரஸ் பரவுகையும் எல்லை மீறி சென்றுள்ளது. தற்போது சராசரியாக தினசரி 3000பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாவதுடன் மொத்தமாக இதுவரை 50,000இற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளார்கள். அவ்வாறே தினசரி சராசரியாக 500பேர் இறப்பதுடன் மொத்தமாக இதுவரை 8000இற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளார்கள். அத்துடன் பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மற்றும் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி தனிமைப்படுத்த ப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது கொரோனா வைரஸின் பாதிப்பில் உயரளவில் முகம்கொடுக்கும் நாடாக அமெரிக்கா காணப்படுகின்றது. அமெரிக்காவில் தற்போது சராசரியாக தினசரி 30,000இற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாவதோடு தினசரி சராசரியாக 1000இற்கும் மேற்பட்ட மக்கள் இறக்கின்றனர். இதுவரை 500,000 இற்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் கொரானா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் 10,000இற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். தரவுகளின் அடிப்படையில் அதிக பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நாடாக அமெரிக்க காணப்படுகின்றது. அமெரிக்காவிலும் நியூயோர்க் நகரமே கொரோனா தொற்றுக்குள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுவரை ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நியூயோர்க் நகரத்தை தனிமைப்படுத்துவதே அமெரிக்காவில் பரவும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவதற்கான சிறந்த தீர்மானம் ஆகும். அமெரிக்க சனாதிபதி ட்ரம்ப் இதனை பரிசீலனை செய்த போதிலும் நியூயோர்க் நகர ஆளுநர் அன்ட்ரூ கூமுவின் எதிர்ப்பை தொடர்ந்து அம்முடிவு கைவிடப்பட்டுள்ளது. அன்ட்ரூ கூமு நியூயோர்க்கை தனிமைப்படுத்தும் முடிவானது அமெரிக்காவின் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும் என கூறி அம்முடிவை கடுமையாக விமர்சித்திருந்தார். ஏற்கனவே சீனாவில் கொரோனா வைரஸ் பரவுகையில் அமெரிக்கா அதனை சீன வைரஸாக அசமந்த போக்கில் தமது நாட்டின் பாதுகாப்பை சரியாக உறுதி செய்யாமையே இன்று பெருமளவில் வைரஸ் தொற்று அதிகரிக்க காரணமாகியுள்ளது. மேலும் நாட்டின் பொருளாதாரத்தை மையப்படுத்தி கொரோனா வைரஸை கட்டுப்படுத்தம் முயற்சிகளை தளர்த்தி விடுவது அமெரிக்காவில் இழப்புக்களை அதிகரிக்க செய்வதாக மாறிவிடும் சூழலும் காணப்படுகின்றது.

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவுகையிலிருந்து இந்து சமுத்திரத்தின் முத்தாய் திகழும் இலங்கை தீவை சேர்ந்த நாமும் சில படிப்பினைகளை பெற வேண்டியவர்களாய் உள்ளோம். உலக நாடுகளிலெல்லாம் ஆட்சியாளர்களது இல்லாவிடில் மக்களின் அசமந்த போக்குகளாலேயே கொரோனா வைரஸின் பரவுகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் அமைச்சர் ஒருவரும் விடுதலைப் புலிகளை அழித்த எமக்கு கொரோனாவை அழிப்பது பெரும் பொருட்டல்ல எனக்கருத்துப்பட அசமந்தமாக கருத்து தெரிவித்த போதிலும் இலங்கை அரசு வைரஸ் தொற்றுக்கு இலங்கை பிரஜை உள்ளான நாளிலிருந்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவதில் இறுக்கமான நடைமுறையை செயற்படுத்தி வருகின்றது. மக்களும் அரசுக்கு பூரணமான ஒத்துழைப்பை வழங்குகையிலேயே இலங்கையில் இருந்து கொரோனா வைரஸ் பரவுகையை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். அரசு இறுக்கமான சட்டங்களை விதிக்கையிலும் நாம் அதனை அசண்டை செய்து சமூக இடைவெளியை கேள்விக்குட்படுத்துவோமாயின் நாளை நாமும் இத்தாலி, ஸ்பெயினுடன் இறப்பு எண்ணிக்கை யாருக்கு அதிகம் என்ற போட்டியில் பங்காளராக வேண்டியே வரும்.

விழித்திரு! தனித்திரு!


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-