ஹிட்லர்: புதிர்களின் புதல்வன் -ஐ.வி.மகாசேனன்-

வரலாறு உருவாக்கிய தலைவர்களுள் வரலாற்றை உருவாக்கிய தலைவர்களும் காணப்படுகின்றனர். பிறப்பு முதல் இறப்பு வரையில் புதிராய் நிறைந்தவரே அடோல்ப் ஹிட்லர் ஆவார். ஆஸ்திரியாவில் 1889ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி அலோய்ஸ் ஹிட்லருக்கும் கிளாராவுக்கும் மகனாக பிறந்து 1945ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி மரணத்தை வரவழைக்கும் வரையில் செய் அல்லது செத்து மடி என வாழ்ந்தார். 

இன்று 75ஆம் ஆண்டு நினைவவு நாள் கடக்கின்ற போதிலும் முடிச்சுக்கள் அவிழ்க்க முடியாத மர்மமாகவே ஹிட்லரின் வாழ்க்கை காணப்படுகின்றது. ஹிட்லர் என்ற தனிஒருவன் இல்லை என்றால் இன்றைய உலக ஒழுங்கு குறித்த வடித்தில் இருந்திராது. இரண்டாம் உலகப்போரின் உருவாக்கம், யூத இனப்படுகொலை என்ற இரு தவறுகளுக்குள் ஹிட்லரின் பல வெற்றிகள் மற்றும் குணங்கள் மறைக்கப்பட்டுவிட்டது. ஒரு வரலாற்றாசிரியரின் கடமை தீர்ப்பு எழுதுவதல்ல. புரிந்து கொள்வது தான். ஆயினும் ஹிட்லரின் வரலாற்றில் புரிதல் கடினமே. ஹிட்லரை வேறு எப்படியும் பார்க்க முடியாது எனும் அளவிற்கு மிகக்கறாராகவும் மிக வலுவாகவும் ஹிட்லரை நாம் மதிப்பிட்டு முடித்துவிட்டோம். ஏந்தவொரு புதிய ஆய்வும், பதிய பார்வையும் நம் மதிப்பீட்டை மாற்றிவிட போவதில்லை. எனிலும் மறைக்கப்பட்டவற்றிற்கான ஓர் தேடலை வழங்குவதாவே குறித்த கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
அடோல்ப் ஹிட்லரின் வரலாற்றை எழுதியுள்ள எழுத்தாளர்கள் பலரும் ஹிட்லரின் வரலாற்றில் இடைவெளிகள் அதிகம் உண்டு என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள். இற்றைக்கு 25ஆண்டுகளுக்கு முன்னர் ஹிட்லரின் வரலாற்றை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் H.R.ட்ரிவர், “ஐம்பது ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையிலும் அடால்ப்ஃ ஹிட்லர் அஞ்சத்தக்க ஒரு புதிராகவே இருக்கின்றார்.” எனக்குறிப்பிடுகின்றார். இன்று எழுபத்தைந்து ஆண்டுகள் கடக்கின்ற நிலையிலும் அவ்வாறாகவே வரலாறு புதிராவே நீள்கிறது. மற்றொரு புகழ்பெற்ற எழுத்தாளர் கிறிஸ்டியன் எவான் ராக்கே, “நம்மிடம் எந்த அளவுக்கு ஹிட்லரை பற்றிய ஆவணங்கள் இருக்கிறதோ அதைவிட அதிக அளவுக்கு வரலாற்று இடைவெளியும் இருக்கிறது. ஹிட்லர் மேலும் மேலும் புதிராகவே காட்சியளிக்கின்றார்.” என ஹிட்லர் பற்றிய குறிப்பில் குறிப்பிடுகின்றார்.

ஓர் எழுத்தாளரின் வரலாற்றை எழுதும் போது, அவருடைய வாழ்க்கையும் அவருடைய படைப்புக்களும் அருகருகே வைக்கப்பட்டு அவைளுக்கிடையிலான தொடர்பும் முரணும் விவாதிக்கப்படுகின்றன. ஆனால் ஒரு புரட்சியாளனின் அல்லது தலைவனின் வாழ்க்கை வரலாறு எழுதப்படும் போது காலகட்டமும், அதன் உளவியல் கூறுகளும், அரசியல் - சமூக – பொருளாதார போக்குகளும், அரசியல் கோட்பாடுகளும், பண்பாட்டு நிகழ்வு போக்குகளும் அடிப்படை தரவுகளாக மாறிவிடுகின்றன. புரட்சியாளர் அல்லது தலைவர்களின் வாழ்க்கையில் நேரடியாக நடைபெற்ற நிகழ்வுகளோடு மேற்குறிப்பிட்ட பல்துறைசார்ந்த போக்குகளையும் கோட்பாடுகளையும் பொருத்தி தான் அவர்களது வரலாற்றை எழுத வேண்டியுள்ளது. அவ்வாறு எழுதும் போது தான் அது முழுமையடைகின்றன. எனிலும் ஹிட்லரின் வரலாற்றில் அம்முழுமையை இதுவரை பெறமுடியாத அளவு அவரை பற்றிய எதிர்மறையான எண்ணங்களே பலமாக விதைக்கப்பட்டுள்ளன.

சர்வதிகாரிகளின் ஆட்சிகாலத்தில் ஆபாச அத்துமீறல்கள் அதிகமாகவே இருக்கும். எனிலும் ஹிட்லர் அத்தகைய ஆபாசங்களை ஒருபோதும் அனுமதித்ததில்லை. ஒரு விபச்சார விடுதி கூட அவரின் ஆட்சி காலத்தில் ஜேர்மனியில் இல்லை. “விபச்சாரம் பிளேக் நோய் போன்றது. சிறிதும் தயவு காட்டாமல் அது அழிக்கப்பட வேண்டும். சமுதாயத்தில் அழுகிப்போன விடயங்களை நாம் சுத்தப்படுத்த வேண்டும். இலக்கியம், சினிமா, கலை, பத்திரிகைகள், சுவரொட்டிகள், கடைகளின் விளம்பர பதாகைகள் எதிலும் ஆபாசம் இருக்க நான் அனுமதிக்க மாட்டேன்.” என்று ஹிட்லர் எச்சரித்துள்ளார். இலங்கை வரலாற்றில் சிங்களவர்களுக்கு எதிராக செயற்பட்ட தமிழ் மன்னர்களை கெட்டவர்களாகவே சித்தரித்த மகாநாமதேரரால், எல்லாளனின் ஆட்சி சிறப்பால் அவனை கெட்டவனாக சித்தரிக்க முடியவில்லை. அதேபோன்றே ஹிட்லரின் வரலாற்றை வெளிச்சமூகத்துக்கு தந்தோர் ஹிட்லரை முழுமையாய் சர்வதிகாரியாய் சித்தரித்த போதிலும் சில நல்ல பண்புகளை மறைக்க முடியாது போய்விட்டது. குறித்த பண்புகளே ஹிட்லரின் வரலாற்றில் உள்ள இடைவெளிகளையும் சுட்டிக்காட்டுகின்றது.

ஹிட்லரின் சர்வதிகாரத்தன்மையை முன்னர் கூறிய போன்று பல்துறைசார் போக்குகளுடனும் கோட்பாடுகளுடனும் பொருத்தி ஆராய வேண்டியது அவசியமாகின்றது. ஏனெனில் அன்றைய சூழலில் ஜேர்மனியின் வளர்ச்சிக்கு கடும்போக்கான தலைமையொன்றின் தேவையே காணப்பட்டது. முதலாம் உலகப்போரின் முடிவில் 1919ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வேர்சல்ஸ் உடன்படிக்கை மூலமாய் முதலாம் உலகப்போரின் குற்றவாளியாய் ஜேர்மனி அடையாளம் காணப்பட்டு ஜேர்மனியின் பொருளாதாரம் முழுமையாய் நசுக்கப்படும் வகையிலேயே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனூடாக ஜேர்மனி ஐரோப்பாவிலேயே மிகவும் நலிவுற்ற தேசமாக மாறியது. வேலைவாய்ப்பின்மை, வறுமை என்பது ஜேர்மனியினுள் இயல்பாகியது. இந்நிலையில் ஜேர்மனியை மீளக்கட்டியமைக்க ஹிட்லர் போன்ற தேசபக்தியுடைய கடும்போக்காளரையே ஜேர்மன் எதிர்பார்த்திருந்தது என்பதே நிதர்சனம். மக்களின் எதிர்ப்பு பலமாக இருந்திருப்பின் ஹிட்லரால் ஜேர்மனியில் ஆட்சியமைப்பதோ அதை நிலைத்து பேணுவதோ சாத்தியமற்றதாக இருந்திருக்கும். எனிலும் ஹிட்லர் ஜேர்மனியை பேரரசாக உருவாக்கும் அளவிற்கு படைதிரட்டி போரிட முடிந்ததாயின் ஜேர்மனி மக்கள் ஹிட்லரை ஏற்றனர் என்பதே உர்ஜிதமாகிறது. ‘அடால்ப் ஹிட்லர்’ என்ற புத்தகத்தை எழுதிய பேராசிரியர் ஜான் டோலேன்ட், “ஹிட்லர் ஆட்சிக்கு வந்த நாலாவது ஆண்டில் ஏதாவது காரணத்தால் இறந்திருந்தால், உலகமே ஹிட்லரை ஜேர்மனியின் சரித்திரத்தில் தோன்றிய மிகச்சிறந்த மாமனிதன் என்று பாராட்டியிருக்கும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

20ஆம் நூற்றாண்டில் நாடுகளை ஆக்கிரமித்தல் என்பது இயல்பான அரசியல் நடத்தையாகவே காணப்பட்டிருந்தது. பிரித்தானிய, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் ஆசிய, ஆபிரிக்க, இலத்தின் அமெரிக்க நாடுகளில் தங்கள் ஆட்சி பரப்பை விரித்திருந்தன. அவ்வாறானதொரு கனவையே ஹிட்லரும் கண்டார். ஜேர்மனியின் அட்சிப்பரப்பை விஷ்தரிக்க விருப்பம் கொண்டிருந்தார். ஹிட்லரின் ஜேர்மனி மீதான பற்றை, “ஜேர்மன் பேரரசில் தெருக்கூட்டுகிற ஒரு சாதாரண தொழிலாளியாய் இருப்பது அயல்நாடு ஒன்றின் அரசனாக இருப்பதை விட மேலானது.” என பெருமிதத்துடன் ஒருமுறை கூறியதிலிருந்து அறிய முடிகின்றது. இத்தேச பக்தியே இரண்டாம் உலகப்போருக்கும் காரணமாகியது. நாடுகளை ஆக்கிரமித்தல் சரியென கூறிவிட இயலாது. ஆயினும் அக்கால அரசியல் நடத்தையின் பிழையை ஒருவர் மீது மாத்திரம் சுமத்துவது தான் வரலாற்று முரணாகிறது. இரண்டாம் உலகப்போரின் உதயம் தான் பின்னாளில் ஆசிய, ஆபிரிக்க, இலத்தின் அமெரிக்க நாடுகளின் விடுதலைக்கு காரணமாகியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹிட்லரின் அனைத்து நற்குணங்களையும் மூடிமறைப்பதற்கு ஏதுவான காரணியாகியது யூத இனஅழிப்பாகும். இனஅழிப்பிற்காக நியாயம் கோரும் சமூகமாகிய நாம் ஹிட்லரின் இனஅழிப்பை தவிர்த்து அவரை நியாயப்படுத்துவதும் முற்றான தவறாகும். அதில் உள்ள படிப்பினையையே வெளிஉலகிற்கு சொல்ல வேண்டி உள்ளோம். ஹிட்லரின் புகழ்கள் யாவற்றின் அழிவிற்கும் இனஅழிப்பின் சாபமே காரணம் எனலாம். தமிழின அழிப்பின் கொடுங்கோலர்களின் அழிவிலும் தமிழர்களின் சாபம் நிச்சயம் ஓர் நாள் பலிக்கும் என நம்பிக்கை கொள்வோம். எனிலும் அன்றைய சூழலில் ஹிட்லரின் யூத இன அழிப்பை ஐரோப்பிய தேசங்கள் பெரும் பூதகரமான விடயமாக மாற்றுவதும் வரலாற்று முரணாகவே காணப்படுகின்றது. யூத இனத்துக்கு எதிரான குரல் ஹிட்லரால் ஆரம்பிக்கப்பட்டது அல்ல. மாறாக ஹிட்லருக்கு முன்னரே ஐரோப்பிய நாடுகளில் பரவலாக யூத எதிர்ப்பு அதிகமாகவே காணப்பட்டது என்பதே யதார்த்தமாகும். இங்கும் ஐரோப்பிய நாடுகளின் அரசியல் நடத்தையில் காணப்பட்ட பிழையை தனித்து ஹிட்லர் மீதே சுமத்தப்பட்டுள்ளது. 1948ஆம் ஆண்டு யூத தேசம் ஒன்று உருவாகுவதில் ஹிட்லரின் வகிபாகம் பிரதானமானது என்பதும் குறிப்பிடத்தக்கதே.

மேலும் ஹிட்லரின் வாழ்வில் மலர்ந்த காதலும் சுவாரஸ்யமானதே. கல்லுக்குள் ரோஜாவாகவே வரலாற்றாசிரியர்களால் சித்தரிக்கப்படுகின்றார் ஈவா பிரவூன். யூதர்களின் கனவுகளில் கொலைவாட்களோடு மட்டுமே அலைந்து கொண்டிருந்த ஹிட்லர், ஈவாவின் கனவுகளை பூக்களால் நிறைத்தான். மரணம் நெருங்கும் வரை காதலியாகவே இருந்த ஈவாவுக்கு ஹிட்லர் 29ஆம் திகதி திருமதி என்ற மகுடத்தையும், 30ஆம் திகதி இணைந்த மரணம் என்ற வெகுமதியையும் அளித்தார். இன்று ஹிட்லரின் காதல் மனைவி ஈவா பிரவுனினதும் எழுபத்தைந்தாம் ஆண்டு நினைவு தினமாகும். 

இரண்டாம் உலகப்போரின் முடிவில் நேட்டோ நாடுகளின் வெற்றிக்கு மாறாக ஜேர்மன் வென்றிருப்பின் இன்று உலகம் இன்னொரு வடிவில் காணப்பட்டிருக்கும். அத்துடன் ஹிட்லரையும் வரலாற்று நாயகனாக புகழ்ந்துரைக்கும். இதுவே யதார்த்தம். ஹிட்லரின் மரணமும் வாழ்க்கைக்கான தத்துவத்தையே பிரதிபலிக்கின்றது. வெற்றியிலேயே எம் பெறுமதி தங்கியுள்ளது. மாறாக தோற்கின் நாம் எத்தகைய பெறுமதியனாவர்களாயினும் இறுதி நிலை பூச்சியமே ஆகும். இதுவே உலக நியதி.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-