கொரோனாவின் கைகளிலேயே நாளைய உலக ஒழுங்கு; அதுவே இன்றைய யதார்த்தம். -ஐ.வி.மகாசேனன்-


உலக அதிகாரத்தை பெற அரசியலிலும் பொருளாதாரத்திலும் நாடுகள் முட்டி மோதிக்கொண்டு இருக்கையில் கண்ணுக்கு புலப்படாத நுண்ணுயிர் உலக ஒழுங்கையே மாற்றி வருகின்றது. உலகளவில் 210 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டவர்களாய் இருபது லட்சத்திற்கு மேற்பட்டவர்களும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி கோவிட்19 நோயில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்களும் இறந்துள்ளனர்.  சீனாவில் 2019ஆம் ஆண்டின் இறுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோணா வைரஸ் 2020ஆம் ஆண்டின் பெப்ரவரி நடுப்பகுதிக்கு பின்னர் ஐரோப்பியா நாடுகளை தாக்கியதுடன் இன்று ஒற்றை மைய அரசியலின் சக்கரவர்த்தியான அமெரிக்காவினையும் திணறடித்துள்ளது. அமெரிக்காவின் மீள முடியாத இழப்பு 1989ஆம் ஆண்டுக்கு பிற்பட உலகில் நிலவும் ஒற்றை மைய அரசியலை தகர்த்துவிடும் நிலையே காணப்படுகின்றது. அதனடிப்படையில் குறித்த கட்டுரையானது ஒற்றைமைய அரசியல் தகர்க்கப்பட்டு ஏற்பட இருக்கும் புதிய உலக ஒழுங்கு இருதுருவ அல்லது பல்துருவ அரசியல் ஒழுங்காய் அமைவதற்கான சாத்தியப்பாட்டை விளக்குவதாக உருவாக்கப்பட்டுள்ளது.


1989ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியை தொடர்ந்து பனிப்போர் காலத்தில் நிலவிய அமெரிக்க மற்றும் ரஷ்ய முதன்மை பெற்ற இருதுருவ அரசியல் ஒழுங்கு நிர்மூலமாகி அமெரிக்காவை முதன்மைப்படுத்திய ஒற்றை மைய அரசியலுக்குள் உலக ஒழுங்கு சென்றது. அதில் ரஷ்ய அதிபர் கோர்பச்சேவின் வகிபாகம் முதன்மை பெறுகின்றது. அதற்கு பின்னர் இன்று கொரோனா வைரஸின் முலமான உலகளாவிய இழப்பினை தொடர்ந்து ஒற்றைமைய அரசியலானது பல துருவ அரசியல் ஒழுங்கிற்கு மீள நகரும்  போக்கு காணப்படுகின்றது. இதில் கண்ணுக்கு புலப்படாத நுண்ணுயிரான கொரோனாவின் வகிபாகம் முதன்மையாகின்றது.
சீனாவில் கொரோனா வைரஸ் அடையாளங்காணப்பட்ட போது அமெரிக்க அதனை பார்வையாளரின் அவதானிப்போடு மட்டுப்படுத்தி அசண்டை செய்தது. சனவரி பிற்பகுதியில் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப்பொருளாதார அமைப்பு மாநாட்டின் போது சி.என்.பி.சிக்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப்இ “நாங்கள் அதை முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறௌம்” எனக் கூறி இருந்தார். பின்னர் ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் கோரதாண்டவம் ஆடுகையில், ‘அரசியல் புரளி’ என அசண்டையூடன் கடந்து சென்றார். அமெரிக்க நிர்வாகம் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி சீனாவுக்கு நியூயோர்க்கை திறந்து விட்டிருந்தது. இன்று உலகளவில் அதிகளவு இழப்பினை கொண்ட நாடாக அமெரிக்க காணப்படுகின்றது. எண்ணிய தரவுகளின் அடிப்படையில் தினசரி சராசரியாக இருபதாயிரத்திற்கு மேற்பட்டோர் கொரேனா தொற்றுக்கு உள்ளாவதுடன் ஆயிரத்து ஐநூறிற்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர். மொத்தமாக ஆறு லட்சத்திற்கு மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதுடன் இருபத்தையாயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை இறந்துள்ளனர்.

அமெரிக்காவின் ஒற்றைமைய உலக ஒழுங்கு அரசியல், பொருளாதார, பலக்கோட்பாடு ரீதியாக தகர்க்கப்படுவதனை பிரதானமாக 3 விடயங்களினூடாக அவதானிக்கலாம்.

முதலாவது பொருளாதார ரீதியான சான்றாவது, அமெரிக்காவில் தலைவிரித்தாடும் கொரோனா வைரஸின் தாண்டவத்தினால் அமெரிக்காவின் பல்வேறு தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. பல லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்து அரசின் உதவியினை எதிர்பார்த்துள்ளனர். மேலும் அரசின் பெரும்பகுதி நிதி மக்களின் சுகாதாரத்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளதால், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி சிரமத்திற்குள்ளாகியிருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதார நிலைப்பாடு தொடர்பிலே மினியா பொலிஸ் பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் நீல் காஷ்காரி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “கொரோனா வைரஸின் பிடியிலிருந்து அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சிப்பாதைக்கு திரும்ப நீண்டகாலம் தேவைப்படும் அமெரிக்கா நீண்ட கடினமான பாதையை எதிர்நோக்கியிருக்கிறது.” எனக் கூறியுள்ளார். மேலும் உலகின் மிகப்பெரிய பொருளாதார ஆய்வு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி 1946ஆம் ஆண்டின் அமெரிக்காவில் நிலவிய பொருளாதார நிலைக்கு அமெரிக்கா சென்றுவிடும் என தெரிவித்துள்ளது. இக்கூற்று அமெரிக்காவின் பொருளாதார ரீதியிலான ஆதிக்கம் உலக ஒழுங்கில் வலுவிழப்பதை குறிக்கின்றது.

இரண்டாவது அமெரிக்காவின் அரசியல் ரீதியிலான கையறு நிலைமை ஒற்றைமைய உலக ஒழுங்கில் அமெரிக்காவின் தளர்ச்சியை பறைசாற்றுகின்றது. அமெரிக்காவின் உலக சுகாதார நிறுவனம் மீதான சீற்றம் அமெரிக்காவின் கையறு நிலையினையே உணர்த்துகின்றது. ஆரம்பத்தில் சீனா வெளிப்படுத்தும் செய்திகளை நம்புவதாக அறிவித்த ட்ரம்ப், அமெரிக்காவில் இழப்பு அதிகரித்ததன் பிற்பாடு கொரோனா வைரஸ் குறித்து முன்கூட்டியே போதுமான எச்சரிக்கை அறிவிப்புக்களை உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கவில்லை. சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயற்படுவதாகவும் அதற்கு வழங்குகின்ற நிதியை நிறுத்த போவதாகவும் எச்சரிக்கை விடுத்த போது ட்ரம்பின் செயற்பாட்டுக்கு எதிராக பல தரப்பாலும் கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டது. அதற்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரால் அதானம் கெப்ரியேசஸ் கொரோனாவால் அதிக சவப்பெட்டிகளை சுமக்க விரும்பவில்லையெனில் அரசியல் செய்யாதீர்கள் என பதிலடி கொடுத்துள்ளார். எனிலும் கடந்த புதன்கிழமை வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், “உலக சுகாதார அமைப்பிற்கான நிதியுதவி நிறுத்தப்படுகிறது.” எனக்கூறினார். உலக எஜமானாய் அதிகளவு நிதியினை வழங்கி பொது நிறுவனங்களை ஆக்கிரமித்து அதிகாரத்தை நிலைநாட்டிய அமெரிக்கா இன்று மூக்குடைக்கப்பட்டு செல்கின்றது. 

மூன்றாவது, அமெரிக்காவின் பலமிக்க நட்பு நாடுகள் முறிந்து செல்லும் நிலை காணப்படுகின்றது. அமெரிக்க இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின்னர் தனது வல்லரசு தன்மையை நிலைநாட்ட இராணுவ ரீதியாக நேட்டோ என்ற அமைப்பையை பயன்படுத்தி வந்தது. எனினும் கொரேனா தாக்கம் நேட்டோ நாடுகளிடையே முறிவை ஏற்படுத்தியுள்ளது. நேட்டோ நாடுகளான ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்த முகக்கவசங்களை அமெரிக்க முறையற்ற வகையில் தமது நாட்டுக்கு பெற்றுக்கொள்கின்றது. அமெரிக்காவின் செயற்பாடு நவீனரகமான திருட்டு எனவும் சர்வதேச வர்த்தக விதிகளை அமெரிக்க பின்பற்றவில்லை எனவும் ஜேர்மனிய உள்துறை அமைச்சர் ஆண்ட்ரியாஸ கீசல் கண்டித்துள்ளார். மேலும் பிரான்ஸ் கொள்வனவு செய்திருந்த முகக்கவசங்களுக்கும் அமெரிக்க அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதாக பிரான்ஸின் கிழக்கு பிராந்திய தலைவர் ஜேன் ரொட்னர் விசனம் தெரிவித்துள்ளார். இது அமெரிக்க இராணுவ பலமான நேட்டோ அமைப்பின் பிளவுகளை வெளிப்படுத்துகின்றது. அத்துடன் ஆசியாவில் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான இந்தியாவிடமிருந்து மருந்து பொருட்களை கொள்வனவு செய்ய ட்ரம்ப் விடுத்த மிரட்டல் செய்தியும் இந்திய – அமெரிக்க உறவின் விரிசலையே வெளிப்படுத்தி நிற்கின்றது.

அரசியல், பொருளாதாரம் மற்றும் இராணுவகூட்டு ரீதியாக ஒற்றைமைய உலக அரசியல் ஒழுங்கில் எஜமானாக இருந்த அமெரிக்காவின் அரசியல், பொருளாதாரம் மற்றும் இராணுவ கூட்டுக்களை கொரோனா வைரஸின் தாக்கம் சிதைத்துள்ளது. அதனடிப்படையில் ஒற்றைமைய உலக அரசியல் ஒழுங்கின் நிலைமை இருபத்தொராம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தின் ஆரம்பத்தில் கேள்விக்குறியாகி உள்ளது. நடைமுறை நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் உலக ஒழுங்கு அமெரிக்க – சீனாவை மையப்படுத்தி இருதுருவ அரசியலாகவோ அல்லது அமெரிக்க, சீனா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள், கியூபா என பல துருவ அரசியலாகவோ பரிணமிக்கவே வாய்ப்புள்ளமையை பறைசாற்றுகின்றது.

அமெரிக்கா கொரோனா வைரஸை சீனா வைரஸ் என அழைப்பதும், கொரேனா வைரஸ் பரவுகைக்கு சீனாவை குற்றஞ்சாட்டுவதும் மாறாக சீன அமெரிக்காவே சீனாவில் கொரோனா வைரஸை அறிமுகப்படுத்தியது எனவும் ஒருவருக்கொருவர் எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். அத்தோடு இரு நாடுகளும் கொரோனா வைரஸின் தாக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் தங்கள் நாட்டாமையை உறுதிப்படுத்த போட்டிபோட்டு ஏனைய நாடுகளுக்கு உதவி செய்கின்றனர். கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து மீள்ச்சி பெற்றுள்ள சீன தற்போது ஏனைய நாடுகளுக்கு மருத்துவ ரீதியான உதவிகளை செய்து வருகின்றது. அதேநேரம் அமெரிக்க கொரோனா வைரஸ் தாக்கத்தில் பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவுகளை சந்தித்துள்ள போதிலும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு பொருளாதார ரீதியிலான உதவியை வழங்கியுள்ளது. குறித்த செயற்பாடுகள் சீனா – அமெரிக்காவினது வல்லாதிக்க போட்டியை பறைசாற்றுகின்றது.

ரஷ்யா இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின்னர் 1989ஆம் ஆண்டு வரையில் இருதுருவ அரசியல் ஒழுங்கில் அமெரிக்காவின் பிரதான எதிரியாகவும் வல்லரசுகளில் ஒன்றாகவும் காணப்பட்டது. பொருளாதார ரீதியிலான சரிவு மற்றும் அதுசார்ந்த சோவியத் ஒன்றியத்தின் உடைவு ரஷ்யாவின் வல்லாதிக்கத்தை சிதைத்த போதிலும் இன்று வரை இராணுவ ரீதியிலான பலமான சக்தியாக ரஷ்யா திகழ்ந்து வருகின்றது. உலகளவில் இராணுவ பலத்தில் அமெரிக்காவை அடுத்து இரண்டாம் நிலையில் ரஷ்யா காணப்படுகின்றது. தற்போதைய கொரோனா நெருக்கடியில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ரஷ்யா இழப்பீடுகளை கட்டுப்படுத்தி வருகின்றது. ரஷ்யாவின் சமீபத்திய இராஜதந்திர உறவாய் அமெரிக்காவிற்கான மருத்துவ உதவிகளை செய்ய ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதுடன் அமெரிக்கா ரஷ்யாவிற்கான பொருளாதார உதவிகளை செய்ய இணக்கம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் எதிர்கால உலக ஒழுங்கில் ரஷ்யாவின் ஆதிக்கமும் பிரதான நிலையை பெறும் என்பதே அரசியல் ஆய்வாளர்களது கருதுகோளாக காணப்படுகின்றது.

மேலும் கொரோனா அபத்த காலத்தில் மனிதநேய ரீதியாக பெரிதும் பேசப்பட்ட நாடாக கியூபா காணப்படுகின்றது. மருத்துவ ரீதியாக எதிர்கால உலக ஒழுங்கில் தனக்குரிய விசேட நிலையை உறுதிப்படுத்துவதில் கியூபாவும் முனைப்பாக உள்ளது. உலக வல்லாதிக்க அமெரிக்காவின் கோடிப்புறத்தில் இருந்து கொண்டு அமெரிக்காவுக்கு எதிராகவே புரட்சி செய்து மீள்ச்சி பெற்ற தேசம் கியூபா. அதனடிப்படையில் அமெரிக்காவின் நட்பு நேட்டோ நாடுகள் கியூபாக்கு எதிராகவே செயற்பட்டு வந்தன. இன்றுவரை பொருளாதார ரீதியாக தடைகளை அனுபவித்து வருகின்றது. எனிலும் கொரோனா வைரஸ் அபத்த காலத்தில் பிரித்தானிய மற்றும் உலக நாடுகள் ஏற்காத பயணிகள் கப்பலை கியூபா தனது மருத்துவ துறையின் நம்பிக்கை கொண்டு நாட்டுக்குள் உள்வாங்கியது. மேலும் அமெரிக்காவுடன் இணைந்து தனக்கு எதிராக பொருளாதார தடைகளை மேற்கொண்ட இத்தாலிக்கு மருத்துவர் குழு ஒன்றை அனுப்பியுள்ளது. மருத்துவ துறையில் தன்னிகரில்லா நிலையை பெற்றுள்ள கியூபா புதிய உலக உலக ஒழுங்கில் புது நிலையை பெறும் என்பதாகவே ஆய்வாளர்கள் கருத்து காணப்படுகின்றது.

“நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே” என்ற கண்ணதாசனின் வரிகளே இன்றைய உலக அரசியலின் நடப்புக்களுக்கு பொருத்தமாக காணப்படுகின்றது. கண்ணுக்கு புலப்படாத நுண்ணுயிரின் அசைவால் உலக ஒழுங்கே மாற்றத்துக்குள் திண்டாடுகின்றது. அவதானிப்புக்கள் எதுவாயினும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் ஓர் மாற்றத்தை கொண்டு வருகின்றது. சில சந்தர்ப்பங்களில் மீளவும் சீனாவுக்குள்ளும் நுழையலாம் கொரோனா வைரஸ். ஆகையால் கொரோனா வைரஸ் முற்றாக கட்டுப்படுத்திய பின்னரான சூழலே ஒற்றைமைய அரசியலின் வீழ்ச்சி, இரு துருவ அரசியல் மாற்றம், பல துருவ அரசியல் போக்கு என்பவற்றை உறுதிப்படுத்த ஏதுவாக அமையலாம். கொரோனாவின் கைகளிலேயே நாளைய உலக ஒழுங்கு அதுவே இன்றைய யதார்த்தம்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-