கொரோனாவின் துயரமும் உளவியல் தேவையும் -மித்ரசகி-
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் முழு உலகையும் போர்க்கால பீதிக்குள் தள்ளியுள்ளது கொரோனா வைரஸின் தாக்கம். போர்க்காலத்தில் மக்களுக்கு ஏற்படும் உடல்சார் மற்றும் பொருள்சார் இழப்புக்கள் நேரடியாக தெரியும் பிரச்சினையாக காணப்படுகின்றது. போரின் பின்னர் அவ்வடுக்களை களைவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். அதேவேளை போர்க்காலத்தில் மக்கள் எதிர்கொள்ளும் உளவியல் ரீதியான பிரச்சினை என்பது வெளிப்படையாக தெரியாத போதிலும் நீண்ட காலத்திற்கு மக்களை பெரும் சிரமத்துக்கு உள்ளாக்கின்றது. போரின் நிறைவில் இலைமறை காயாகவே உளவியல் ஆற்றுகைள் மேற்கொள்ளப்படும். அவ்வாறே கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் இனங்காணப்பட்டோருக்கான கோவிட்19 நோய்க்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இயலுமானவரை உயிரை காக்க போரடப்படுகின்றது. ஆயினும் மறுதலையாய் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் உளவியல்ரீதியான பிரச்சினைகளுக்கு சரியான உளவள ஆற்றுகைக்கான முன்னாயர்த்த செயற்பாடுகள் இதுவரை எந்த தரப்பாலும் ஆக்கபூர்வமாக மேற்கொள்ளப்படவில்லை என்பதே யதார்த்தபூர்வமான உண்மையாகும். குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற ஆயூத போராட்டம் மௌனிக்கப்பட்டு ஓர் தசாப்தம் கடந்துள்ள சூழலிலும் போரினால் ஏற்பட்ட உளவியல் வடுக்களிலிருந்து மீள முடியாத தரப்பாக தமிழ் மக்கள் காணப்படுகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு மேலாக அமுலாக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மேலும் உளவியல் ரீதியாக தமிழ் மக்களை சிதைத்துள்ளது என்பதே யதார்த்தம். அதனடிப்படையில் குறித்த கட்டுரையானது கொரோனா போரின் உளவியல் தாக்கத்தை விபரிப்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போரினால் தமிழ் சமூகம் உளவியல் ரீதியாய் கடும் வடுக்களை இன்றும் சுமந்து கொண்டுள்ளார்கள் என்பது மறுக்க முடியாத யதார்த்தமாகும். அமெரிக்காவும் ஈரானும் முரண்படுகையில் இங்கு பெற்றோலுக்காக மக்கள் குவிவதையும், யாழ்ப்பாணம் சாதரணமாக மாலை 6மணி தொடக்கம் 9மணிக்குள் முடங்கி போவதையும் யாரும் எளிதாக கடந்து விட முடியாது. இதற்கு 2009ஆம் ஆண்டு வரை நடைபெற்ற யுத்தத்தினால் மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள பதகளிப்பும் யுத்த காலத்தில் அமுலாக்கப்பட்ட ஊரடங்கிற்கு பழக்கப்பட்டதுமே காரணமாகின்றது. இதனை இலங்கையில் யுத்தத்தின் பின்னர், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் உளவியலை ஆய்வு மேற்கொண்ட அமெரிக்க மருத்துவ சங்கத்தை சேர்ந்த மருத்துவ நிபுணர்களின் ஆய்வு உறுதிப்படுத்துகின்றது. எனிலும் இதுவரை வடக்கு கிழக்கு மக்களின் போரிற்கு பின்னரான உளவியல் ஆற்றுகைக்கான எவ்விதமான வினைத்திறனான செயற்பாட்டினையும் இலங்கை அரசாங்கமும் மேற்கொள்ளவில்லை. தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளும் முயற்சிக்கவில்லை.
போரின் வடு குணமடையாத சமூகத்தில் கொரோனா போரின் தாக்கம் பெரும் அபத்தமானது என்பதையாவது தமிழ் சமூகத்தின் தலைவர்கள் புரிந்திருப்பார்களா என்பது சந்தேகத்திற்குரியதே. இலங்கையிலே கொரோனா வைரஸ் பரவுகை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான செயற்பாடுகளில் மந்த கதியிலேயே உள்ளனர். மேய்ப்பானற்ற மந்தைகள் போல தலைமையற்ற சமூகமாகவே தமிழ் சமூகம் கொரோனா போருக்கு எதிராக போராடிக்கொண்டு உள்ளது. தமிழ் சமூகம் இன்று தாமே தமக்கான பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வையூம் தேட வேண்டியோராய் உள்ளனர். கடந்த 10ஆண்டுகளாய் வலுவிழந்து போகும் உரிமைக்காக தாமாய் போராடும் தமிழ்சமூகம், தம் உளவியலை கொரோனா அபத்தத்திற்குள் சிதைக்காது தாமாகவே பேண வேண்டியோராயும் உள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவுகையால் அமுலாக்கப்பட்டுள்ள ஊரடங்கும் அரசாங்கத்தின் வினைத்திறனற்ற நிவாரண பொறிமுறையும் மக்களிடையே வறுமையையே அதிகரித்துள்ளது. வறுமை பாரிய உளவியல் அழுத்தங்களை ஏற்படுத்தக்கூடியது மறுப்பதற்கில்லை. யாழ்ப்பாணத்தில் கொரோனா பரவுகையை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக அமுலாக்கப்பட்டுள்ள ஊரடங்கில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர், ஏழ்மையால் முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தொழில் செய்ய வந்திருந்த இளைஞன் ஒருவன் வறுமையால் ஏற்பட்ட மனஅழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளான். இத்துயரான பதிவு உளவியல் தாக்கத்திற்கு சாட்சியமாகின்றது. ஆயினும் உரிய தரப்பினர் இன்னும் முழுமையாய் அதனை சீர்செய்யக்கூடிய வகையில் நிவாரணங்களை வழங்க ஏற்பாடு செய்யவில்லை. தன்னார்வ தொண்டாளர்கள் சிலரே தமது இயலுமைக்கேற்றாவாறு நிவாரண பணிகளில் செயற்படுகின்றனர். உரிமைசார்ந்து மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதில் திராணியற்று காணப்படும் எமது அரசியல் தலைமைகள் மக்களின் வறுமையை களையக்கூடிய வகையில் நிவாரணங்களை வழங்குவதற்காவது வழிவகை செய்ய வேண்டும். தன்னார்வமாய் செயற்படும் இளைஞர்களால் பெருந்தொகை நிதியை திரட்டி நிவாரண உதவிகள் செய்யக்கூடியதாக உள்ளதெனில், பாரம்பரியமான வரலாற்றையும் பாரம்பரியமான சொத்துகளையும் கொண்டுள்ள தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் அரசியல் தலைமைகளும் இதுவரை எவ்வித வினைத்திறனான முன்னெடுப்பையும் செய்யாது இருப்பது தமிழ் மக்களின் துர்பாக்கியமே.
வறுமைக்கு அப்பால் ஊடகங்களின் செய்தியிடலும் மக்களிடையே உளவியல் தாக்கத்தை ஏற்படுத்த கூடியதாகவே உள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் கொடுமையானதே அது மறுப்பதற்கில்லை. எனிலும் மரண பீதியை காட்டி கொரோனா அபத்தத்தை வெளிப்படுத்துவது மக்களுக்கான உளவியலை பாதிக்கக்கூடிய நிகழ்வாகும். மக்களிடையே உளவியல்ரீதியாக அச்சத்தை ஏற்படுத்தி மக்களை பதகளிப்புடன் வாழ வழிசெய்கின்றது. எனிலும் எமது ஊடகங்கள் யாவும் மரணத்தையும் கொரோனா வைரஸ் பரவுகையின் அதிகரிப்பையுமே முன்னிலைப்படுத்துகின்றது. இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று 248 பேருக்கு உறுதிப்பட்டுள்ளதை மற்றும் 07 பேர் மரணித்ததை முன்னிலைப்படுத்தி செய்தி அறிக்கையிடும் ஊடகங்கள் 86 பேர் தேறி குணமடைந்து வெளியேறியுள்ள செய்தியை முன்னிலைப்படுத்துவதில்லை. ஊடகங்கள் எதிர்மறையான செய்தியிடலை தவிர்த்து நேர்மறையாய் செய்திடல் வேண்டும்.
ஊரடங்கு முடக்க காலத்தின் எம் செயற்பாடுகளும் எமது உளவியல் ரீதியான பாதிப்புக்கு காரணமாகின்றது. கடந்த வாரம் துமி என்ற சமூக அமைப்பினது முகநூல் பக்கத்தில் மேற்கொண்ட கருத்து கணிப்பு ஒன்றில் ஊரடங்கு காலத்தை மக்கள் சிறப்பாக பயன்படுத்துகின்றார்கள் அல்லது வீணடித்து கொண்டிருக்கின்றார்கள் என கேள்வியெழுப்பப்பட்டிருந்தது. இதில் சிறப்பாக பயன்படுத்துகிறேன் என 57.9வீதமானவவர்களும், வீணடித்துக்கொண்டிருப்பதாக 42.1வீதானவர்களும் வாக்களித்திருந்தனர். இம்முடிவு கொரோனா வைரஸிம் தமிழ் மக்களிடையே பாரிய உளவியல் பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதையே உறுதி செய்கின்றது. ஊரடங்கை வீணடிப்போர் நிச்சயம் குறித்த உளவியல் தாக்கத்தை பிரதிபலிப்பவர்களாகவே காணப்படுவர். தமிழ் சமூகம் சுயாதீன உள ஆற்றுகையினை மேற்கொள்ள வேண்டியவர்களாய் காணப்படுகின்றார்கள்.
ஊரடங்கு காலத்தில் தொடர்ச்சியான தூக்கம், சமூக வலைத்தள பாவனை, தொலைக்காட்சி பார்த்தல், தொலைபேசி உரையாடல், அடிக்கடி உணவு உண்ணுதல் என்பனவே பெரிதும் மக்களின் செய்படாய் காணப்படுகின்றது. இது உளவியலை பாதிக்கும் காரணியாக அமைகின்றது. குறித்த செயற்பாடுகளை பலரும் சாதரணாகவே கடந்து செல்வதனாலேயே இதன் பாதிப்பினையும் எவரும் புரிவதில்லை. எமது மூளை தொடர்ச்சியாக ஒன்றை செய்கையில் அதனை இயல்பாய் பழக்கப்படுத்தி கொள்ளும் குணமுடையது. யுத்த காலத்தில் மாலை 6மணி தொடக்கம் காலை 6மணி வரை அமுலாக்ககப்பட்ட ஊரடங்கிற்கு மக்கள் பழக்கப்பட்டு மூளை அதனை இயல்பாய் ஏற்றுக்கொண்டமையினாலேயே 10ஆண்டுகள் கடந்தும் இன்றும் யாழ்ப்பாணம் மாலை 6மணி தொடக்கம் இரவு 9மணிக்குள்ளேயே முடங்கி விடுகின்றது. இன்றும் நாம் ஊரடங்கு காலத்தில் சில பழக்கங்களுக்கு அடிமையாயின் மீள முடியாதவர்களாய் அதனால் பொருதும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். மாறாக ஓர் வேலையுமின்றி வீட்டுக்குள் முடங்கி இருப்பதும் வேறு யோசனைகளை ஏற்படுத்தி உளவியல் ரீதியான மன அழுத்த பிரச்சினைகளை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுகின்றது.
மக்கள் வீடுகளில் இருந்தாலும் பல வேலைகளை செய்வதனூடாக மக்களுக்கு ஏற்படக்கூடிய உளவியல் பிரச்சினைகளை சீர்செய்யலாம். பலர் குடும்பத்தாரோடு நேரத்தை ஒதுக்க முடியாத வகையில் வேலைப்பளுக்களுடன் அலைந்திருப்பீர்கள். கொரோனா வைரஸ் பரவுகையால் ஏற்பட்டுள்ள ஊரடங்கை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளுங்கள். குடும்பத்தாரோடு உரையாடி அவர்களுடன் நேரம் ஒதுக்கலாம். நூல் பிரியர்கள் பல நூல்களை வாசித்து பல புதிய தேடல்களில் பரிணமிக்கலாம். மேலும் கொரோனா நமக்கு விவசாயத்தின் சுயாதீன பொருளாதாரத்தின் தேவைகளை உணர்த்தி இருக்கின்றது. ஆதலால் வீட்டுத்தோட்ட முயற்சிகளை மேற்கொள்ளலாம். மேலும் காலையில் உடற்பயிற்சி, யோக என்பவற்றை மேற்கொள்ளலாம். இவ்வகையான மாறுபட்ட பயனுடைய விதத்தில் ஊரடங்கு விடுமுறையை பயன்படுத்துகையில் உளவியல்ரீதியிலான பிரச்சினைகளிலிருந்து தள்ளியே இருக்கலாம்.
கொரோனா உடலில் மாத்திரம் பிரச்சினையை ஏற்படுத்தக் கூடிய நோய் அன்று மாறாக உளத்தையும் புண்படுத்த கூடியது என்பதனை உணர்ந்து அரசாங்கம் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் உளவியல் பிரச்சினைகளையும் கரிசனை கொள்ளுதல் வேண்டும் இல்லையேல் கொரோன வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உடலியல் பிரச்சினை தீர்க்கப்பட்டாலும் உளவியல் பிரச்சினை தீர்க்க முடியாத வடுவாக நிலைத்திடும்.
Comments
Post a Comment