இலங்கை சுயசார்பு பொருளாதாரத்தை நோக்கி நகர்தல் வேண்டும்! -ஐ.வி.மகாசேனன்-
கொரோனா வைரஸின் தாக்கம் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் சூழலியலில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி வருகின்றது. அண்மையில் நாசா வெளியிட்டுள்ள செய்மதி படத்தில் உலகில் காற்று மாசுபாடு கணிசமாக குறைவடைந்துள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாகவும் உலகளவில் நிகழும் அவசரகால சட்டத்தினூடாக சனநாயகம், சுதந்திரம் என்பன கேள்விக்குறியாக காணப்படுகின்றது. சமூக இடைவெளியை உறுதிபடுத்துவதற்கான ஊரடங்கு சட்டம் இயந்திரமாக சுழன்ற மனிதனை குடும்பத்தோடு அன்னியோன்னியத்தை உருவாக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்துள்ளது. பொருளாதார ரீதியில் உலகளவில் பெரும் பொருளாதார நெருக்கடி சூழலை கொரோனா வைரஸின் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பெரும்பாலும் உலக நாடுகளினை சார்ந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தினையே கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. அதனடிப்படையிலேயே கொரோனாவிற்கு பின்னரான இலங்கையின் பொருளாதார நிலைமைகளை சீர்செய்வதற்கான சிபார்சுகளை சுயசார்பு அரசியல் பொருளாதாரத்தை மையப்படுத்தி குறித்த கட்டுரை விபரிக்கின்றது.
கொரோனா வைரஸ் தொற்று உலக அபத்தமானது உலகமயமாதல் எண்ணக்கருவின் விளைவுகளில் ஒன்றே ஆகும். இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தினசரி அதிகரித்து வருகின்ற போதிலும் மே மாதத்திற்கு பின்னர் காணப்படாதென இலங்கை ஆளும் கட்சி தரப்பு ஆருடம் சொல்லி வருகின்றது. கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக இலங்கையில் நீங்கினாலும் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை நாடுகள் தனிமைப்படுத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். மாறாக இலங்கையின் வருமானம் சுற்றுலாத்துயையே மையமாய் கொண்டது என இலங்கை திறந்து விடப்படுமாயின் இலங்கையில் இரண்டாம் சுற்று கொரோனா தாண்டவம் தவிர்க்க முடியாதது ஆகிவிடும். இலங்கையின் நெருங்கிய தோழமை நாடான சீனா, சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஏனைய நாடுகளிலிருந்து சீன வருவோரை கட்டுப்படுத்தி உள்ளதாலேயே சீனாவின் இரண்டாம் கட்ட பரவுகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆதலால் இலங்கை சுயசார்பு பொருளாதாரம் சார்ந்த சிந்தனையை முதன்மைப்படுத்த வேண்டி உள்ளது.
உலக வங்கியின் சமீபத்திய ஆய்வின்படி, கொரோனா பொருளாதார நெருக்கடியிலிருந்து தெற்காசிய நாடுகள் மீள 40ஆண்டுகளாகும் என கூறப்பட்டுள்ளது. இவ்அறிக்கையில் இலங்கை கடுமையான பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ளும் என உலக வங்கி கணித்துள்ளது. எனிலும் உலக ஆதிக்க போட்டியில் சீனா தனது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான முத்துமாலை திட்டத்தில் இணைந்த நாடுகளிற்கு பொருளாதார ரீதியிலான ஒத்துழைப்பை வளங்கி வளப்படுத்த கூடிய சூழலும் காணப்படுகின்றது. தென்னாசியாவில் முத்துமாலை திட்டத்தின் பங்காளிகளாய் சீனாவுடன் நெருக்கமான உறவை பேணும் இலங்கை, பாகிஸ்தான் என்பவற்றின் பொருளாதார வீழ்ச்சியை சீர்செய்வதில் சீனா பெரும் பங்காற்றுமென்பது ஆறுதலான செய்தியாக காணப்படுகின்றது. எனிலும் இதன் வெற்றி கொரோனாவின் பின்னரான பொருளாதார சீரமைப்பு செயற்பாட்டிலேயே அறிய முடியும்.
எது எவ்வாறாயினும் இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் பெரும் சுமைகளை, ஏற்கனவே போரின் வடுக்களிலிருந்து முழுமையாய் வெளிவராது பொருளாதார ரீதியில் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ள வடக்கு கிழக்கு மக்களே பெரிதும் சிரமங்களை முகங்கொடுக்க வேண்டி உள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நீங்கிய பின்னர் பொருளாதார தாக்கத்திலிருந்து மீள சுயசார்பு பொருளாதாரத்தை இலங்கை முழுவதும் கைகொள்வதே சிறந்த தீர்மானமாகும். குறிப்பாய் வடக்கு கிழக்கு மக்கள் சுயசார்பு பொருளாதாரத்தை அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.
இன்று இலங்கை பெருமளவு உலக நாடுகளிலிருந்து இறக்குமதியையே நம்பி உள்ளது. இலங்கை தீவாக உள்ள போதிலும் மீன் ரின் இறக்குமதி செய்யப்படுவது என்பது இலங்கையின் துரதிஷ்டமே. (அண்மையில் இலங்கையில் ரின் மீன் தயாரிக்கிற போதிலும் மக்கள் நம்பி வாங்க கூடிய தரத்தினை பெறவில்லை.) கொரோனா தொற்று முழுமையாய் உலக நாடுகளில் நீங்கும் வரை உலக நாடுகளுடன் பொருளாதார ரீதியான தொடர்பை பேணுவதும் ஆபத்து என்ற நிலை தொடர்கையிலேயே இறக்குமதியை நம்பி இருப்பதன் பலவீனம் உணரப்படும். இன்று இலங்கையில் அங்கர் மா, கோதுமை மா முதலான பொருட்களின் இருப்பு குறைவாகவே காணப்படுகின்றது. முடக்கம் நீடிக்கப்படின் அரசிக்கும் இறக்குமதியையே தேட வேண்டிய நிலையே காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் அரசி முதலான அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு யாழ்ப்பாணம் முழுமையாய் இறக்குமதியை நம்பி இருப்பதே காரணமாகின்றது.
இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் சுயசார்பு பொருளாதாரத்தை ஊக்குவிக்க தற்போது பிரதானமாக 5 வழிமுறைகள் காணப்படுகின்றது.
முதலாவது, மூன்று வாரங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக ஊரடங்கு போடப்பட்ட சூழலில் வடக்கு கிழக்கில் அரச நிவாரணம் முழுமையாய் பயனளிக்காத போதிலும் மக்களால் வாழ்கையை நடாத்த முடிகிறதாயின் தன்னார்வ தொண்டில் ஈடுபடும் இளைஞர்களின் பணி சிறப்புக்குரியது. எனிலும் தொடர்ச்சியாக இளைஞர்களால் நிவாரணத்தை வழங்குவது என்பது அவர்களது இயலுமைக்கு நிதிவளம் சார்ந்து சாத்தியமற்றதாகும். ஆதலால் மக்களிடம் சுயசார்பு பொருளாதார சிந்தனையை வளர்த்து விடுவதன் மூலம் நிவாரணம் வழங்க வேண்டிய தேவையை மட்டுப்படுத்தலாம். இளைஞர்கள் நிவாரண பொதிகளுடன் வீட்டுத்தோட்டம் செய்யக்கூடிய விதைகளை அல்லது நாற்றுகளை வழங்வார்களாயின் மக்களிடம் சுயசார்பு பொருளாதார சிந்தனைக்கான துளிரை வளர்த்து விடலாம்.
இரண்டாவது அரசியல் தரப்பு இலங்கையில் சுயசார்பு பொருளாதாரத்தை அரசியல் பொருளாதார கொள்கையாக முதன்மைப்படுத்த வேண்டும். பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளும் காரசாரமாக நடைபெறும் சூழலில் இலங்கையின் அரசியல் தரப்புகள் சுயசார்பு பொருளாதார கொள்கையை தேர்தல் விஞ்ஞாபனங்களில் முதன்மைப்படுத்தி செயற்படுத்துதல் வேண்டும். பொதுவாக மக்கள் மத்தியில் சாதாரணமான ஒருவர் கூறுவதிலும் அரசியல் தரப்பிலிருந்து குறித்த விடயம் கூறப்படுமாயின் செயற்றிறன் அதிகமாக காணப்படுவது யதார்த்தமானதாகும். சனாதிபதி தேர்தலுக்கு பின்னர் வீதிச்சுவர்களை வர்ணம் தீட்டியது முதல் இன்று பரவலாக வீட்டுத்தோட்டம் பற்றிய சிந்தனை பேசப்படுவது வரை யாவும் அரசியல் தரப்பால் முதன்மைப்படுத்தப்பட்டதாலேயே ஆகும். உள்ளூராட்சி சபைகளும் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட விதத்தில் சுயசார்பு பொருளாதாரத்தை முதன்மைப்படுத்தலாம். வடக்கு கிழக்கில் இயங்கும் உள்ளூராட்சி சபைகள் தங்கள் அதிகார ஆளுமையை முழுமையாய் பயன்படுத்தாது வீதிகளை போடுதல், சந்தைகளை பராமரித்தல், பிரதேசத்தை சுத்தம் செய்தல் என்பவற்றுடன் தங்கள் செயற்பாடுகளை மட்டுப்படுத்துகின்றனர்.
மூன்றாவது ஊடகங்கள் சுயசார்பு பொருளாதாரத்தை முதக்மைப்படுத்த வேண்டும். சனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகங்கள் காணப்படுகின்றதாயின் மக்களிடம் சிந்தனை புரட்சியை மேற்கொள்வதனாலேயே அந்நிலை காணப்படுகின்றது. அச்சு ஊடகங்களும் ஊடரங்கின் விளைவாய் மின்னியல் ஊடகமாக பெருமளவு அனைவரின் கரங்களுக்கும் செல்கின்றது. அச்சு ஊடகங்கள், இலத்திரனியல் மற்றும் இணைய ஊடகங்களிற்கு கொரோனாவிற்கு பின்னரான நிலைமைகளை உய்த்தறிந்து சமூகத்தை சிரமங்களிலிருந்து காக்க வேண்டிய பாரிய பொறுப்பு காணப்படுகின்றது. பொருளாதார இடர்வரும் என்பதனை செய்தியறிக்கையிடும் ஊடகங்ள் அதிலிலுந்து மீளக்கூடிய சுயசார்பு பொருளாதார சிந்தனையையும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது பிரதான பணியாகும்.
நான்காவது, கிராமங்கள் தோறும் இளம்விவசாயிகள் அமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும். இன்று பெரும்பாலும் இளைஞர்கள் விவசாயத்தை ஒதுக்கும் நிலையே காணப்படுகின்றது. இலங்கையின் சுயசார்பு பொருளாதாரமே விவசாயத்தை நம்பியே உள்ளது. ஆதலால் இளைஞர்களிடையே விவசாயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக காரைநகரில் இளம் விவசாயிகள் கழகம் ஒன்று செயற்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணத்தில் குறிப்பாக நெற்செய்கையில் கூடுதலான இரசாயணங்கள் பாவிக்கப்பட்டு வருகையில் குறித்த காரைநகர் இளம் விவசாயிகள் கழகத்தினர் முன்மாதிரியான இயற்கை பசளைகளை பயன்படுத்தி வினைதிறனான வளர்ச்சியை காட்டியுள்ளனர். தற்போது காரைநகரில் 30 ஏக்கரில் இயற்கை வழியில் நெல் பயிரிடப்பட்டு வருவதுடன் 2028ஆம் ஆண்டில் 420ஹெக்டெயரில் (அண்ணளவாக 1000 ஏக்கர்) இயற்கை வழியில் நெல் பயிரிடும் குறிக்கோளுடன் செயற்படுகின்றனர்.
ஐந்தாவது வடக்கு கிழக்கில் விவசாய வினைத்திறனை மேம்படுத்துவதில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இயங்கும் விவசாய பீடத்திற்கு முதன்மையான பணி காணப்படுகின்றது. விவசாய வசதிகளற்ற பல வளர்ச்சியடைந்த நாடுகளில் விவசாயத்தில் பல புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு விவசாயம் முதன்மைபெற்று வருகின்றது. இதற்கு அங்குள்ள பல்கலைக்கழகங்கள் ஆய்வு ரீதியாக உயர் பங்களிப்பை வழங்கி வருகின்றது. எனிலும் விவசாய நிலங்களை வசதிகளை அதிகமாக கொண்டுள்ள நம்மிடையே விவசாயத்தின் வீழ்ச்சியே அதிகரித்து வருகின்றது. இன்றும் பழமையான முறையிலே பலரும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எங்கள் சூழலுக்கு ஏற்ற வகையில் விவசாயத்தை இலகுபடுத்துவதற்கான தொழில்நுட்ப ஆய்வுகளை பல்கலைக்கழக சமூகம் முதன்மைப்படுத்தி மேற்கொள்ள வேண்டும். பல்கலைக்கழகத்தின் உருவாக்க நோக்கத்தினை பல்கலைக்கழகம் ஆய்வுசார் கற்கை கூடம் என்பதனை யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் உணர்ந்து செயலாற்ற வேண்டும்.
இலங்கையில் அண்மையில் சுயசார்பு பொருளாதார சிந்தனைக்கான ஆரம்பம் துளிர்விட்டுள்ளமை சாதகமான மாற்றமாக காணப்படுகின்றது. ஊரடங்கு காலத்தில் ‘சௌபாக்கிய வீட்டுத்தோட்டம்’ எனும் செயற்றிட்டத்தினூடாக கமநல சேவைகள் விதைகளை வழங்கி வீட்டுத்தோட்டம் செய்வதனை முதன்மைப்படுத்துவது முன்னேற்றகரமானதாகும். ஊரடங்கு ஓய்வு காலத்தில் வீட்டுத்தோட்டம் செய்வது தொடர்பிலே பலரும் பேசும் நிலையில் அதன் தொடர்ச்சி தன்மையை ஆய்வு செய்யும் முகமாக, சமூக வலைத்தள பக்கத்தில் துமி என்ற அமைப்பினூடக ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னரும் வீட்டுத்தோட்டத்தை செய்வீர்களா என எழுப்பப்பட்ட கருத்துக்கணிப்பிற்கு 63.8 வீதத்தினர் தொடர்வோம் என உறுதிப்படுத்தியயுள்ளதுடன், 17.8 வீதத்தினர் தொடரும் எண்ணம் உள்ள போதிலும் வேலைப்பளுவால் பின்வாங்குவோராய் கணப்படுகின்றனர். பெரும்பான்மையானோர் தொடர்வதற்கான சமிக்ஞை காட்டப்பட்டிருப்பது சுயசார்பு பொருளாதாரம் தொடர்பான மக்களின் அக்கறையை வெளிப்படுத்துகின்றது.
உலகளவில் முழுமையான சந்தைப்பொருளாதாரம் என்பது தோல்வியை நோக்கி கொண்டு செல்கையில், வளங்கள் நிறைந்த இலங்கைத் தீவு இன்றும் சந்தைப்பொருளாதாரத்தை முதன்மைப்படுத்தி உலக சந்தைகளை நம்பி இருப்பின் பொருளாதார வீழ்ச்சி அதிகரிக்கப்படும் சூழல் தவிர்க்க முடியாது என்பது யதார்த்தமானதாகும். மறுபுறம் முழுமையாய் உலக சந்தையிலிருந்தும் இலங்கை வெளிவர முடியதா சூழல் காணப்படுவதும் யதார்த்தமானதாகும். ஆயினும் இலங்கையின் வளங்களை முதன்மையாய் பயன்படுத்தி விவசாயம் மற்றும் மீன்பிடித்துறையில் இலங்கை தன்னிறைவை பெறுவது அவசியமாகின்றது. மாறாக தொடர்ச்சியாக அமெரிக்கா மாறினா சீனா என தங்கி வாழ முற்படின் இலங்கையின் பொருளாதாரம் பாதாளத்துக்குள் செல்வது தவிர்க்க முடியாது. அத்துடன் வடக்கு கிழக்கின் அரசியல் தலைமைகள் விழித்து தமக்கான அரசியல் பொருளாதார கொள்கையை வகுக்க தவறின் வடக்கு கிழக்கு தொடர்ச்சியாய் அபிவிருத்தியற்ற பிரதேசமாகவே செல்லும். அரசியல் தலைமைகள் விழிக்க தவறின் மக்கள் அரசியல் தலைமைகளுக்கு விழிப்பூட்ட வேண்டும். அதற்கான சிந்தனை புரட்சியை ஊடகங்கள் மக்களுக்கு வழங்க முதன்மை பணியாற்ற வேண்டும்.
Comments
Post a Comment