கொரோனா தொற்றும் அரசியல் தலைமைகளும் - ஐ.வி.மகாசேனன்-
கொரோனா அபத்தம் முடிவற்ற அழிவாகவே நீண்டு கொண்டு செல்கின்றது. எனிலும் சில அரசாங்கங்கள் கொரோனா வைரஸ் பரவுகையின் விளைவால் ஏற்பட்டுள்ள பொருளாதார, அரசியல் தாக்கங்களை சீர்செய்ய ஆபத்தான முயற்சிகளை முன்னெடுக்கின்றனர். முழுமையாய் கொரோனா வைரஸ் பரவுகை கட்டுக்குள் வராத போதிலும் சமூக நலனை புறந்தள்ளி ஊரடங்கு முடக்கத்தை தளர்த்தி இயல்பு நிலைக்கு திரும்ப முற்படுகின்றனர். இலங்கை அரசாங்கமும் முழுமையாக கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்படாத சூழலில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை தவிர்ந்த ஏனைய 18 மாவட்டங்களிலும் கடந்த திங்கட்கிழமை முதல் ஊரடங்கை பகலில் தளர்த்தி உள்ளனர். அத்துடன் தொடர்ச்சியாக ஊரடங்கு அமுலாக்கப்பட்ட பிரதேசங்களிலும் ஏப்ரல் 27ஆம் திகதி காலை ஊரடங்கை தளர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை அரசியல் பரப்பிலும் அரசியல் கட்சிகளிடையே பாரளுமன்ற தேர்தலை பற்றிய உரையாடல் மேலோங்கி காணப்படுகின்றது. இது கொரோனா தடுப்பிலிருந்து அரசாங்கத்தின் பார்வை திசை திரும்புவதை வெளிப்படுத்துகின்றது. இதனடிப்படையிலேயே குறித்த கட்டுரை இலங்கை அரசாங்கத்தின் பார்வை கொரோனா தடுப்பிலிருந்து திசை திரும்புவதால் ஏற்படும் அபத்தத்தை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான இலங்கையை சேர்ந்த நபர் அடையாளங்காணப்பட்ட மார்ச்11 முதல் இலங்கை அரசாங்கம் உயரளவில் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்துள்ளது என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை. கோவிட்19 நோயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் அவூஸ்ரேலியாவை தளமாக கொண்டு இயங்கும் நிறுவனமான ICMA நிறுவனத்தின் தரப்படுத்தலில் இலங்கை பெற்றுள்ள 9ஆவது இடமும் அதனையே உறுதிப்படுத்துகின்றது. இந்நிலையிலேயே சனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவுகையை தடுக்கும் செயற்பாட்டில் இதுவரை பெற்றுள்ள வெற்றியை அரசியல் முதலீடாக நகர்த்த முற்படுகின்றது. இதனடிப்படையிலேயே கொரோனா அபாயம் முழுமையாக நீங்காத சூழலிலும் சமூக இடைவெளியை உறுதிப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊடரங்கினை படிப்படியாக தளர்த்தும் செயற்பாட்டை பலத்த எதிர்க்குரல்களின் மத்தியிலும் அரசாங்கம் முன்னெடுக்கின்றது.
எதிர்க்கட்சிகள் பரவலாக உடரங்கு தளர்வை விமர்சிப்பது அவர்களது அரசியல் நலனாக அமைகின்ற போதிலும் அரசியல் கட்சிகளை தாண்டி சுகாதார அமைப்புக்களும் ஊடரங்கு தளர்வு முன்னெடுப்புக்களில் பொறுமைகாக்குமாறு கோரியுள்ளனர். இலங்கை தொற்று நோய் தடுப்பு பிரிவானது, “ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதற்காக அவசரகதியில் எடுக்கப்படும் தீர்மானங்கள் தவறாகிவிட்டால் அது நாட்டின் நிலைமைகளை பயங்கரமானதாக மாற்றி அமைத்துவிடும்” என எச்சரித்துள்ளார்கள். அரச மருத்துவ சங்கம் ஊரடங்கை தளர்த்த வேண்டுமானால் பரிசோதனைகளை அதிகரியுங்கள் என கோரியுள்ளது. மேலும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண கிளை கொரோனா சந்தேக நபர்கள் முழுமையாக பரிசோதனை செய்யப்படாத நிலையில் அவசரப்பட்டு ஊடரங்கு நீக்கியதால் யாழ் மாவட்டத்துக்கு பெரும் ஆபத்து என எச்சரித்துள்ளனர். எனினும் அரசாங்கம் சுகாதார பிரிவின் அனைத்து பரிந்துரைகளையும் உதாசீனம் செய்து ஊடரங்கை தளர்த்தியுள்ளமையானது, இலங்கையில் இரண்டாவது கொரோனா அலையை ஏற்படுத்துமோ என்ற ஐயப்பாடு காணப்படுகின்றது.
படிமுறையான ஊரடங்கு தளர்வின் முதல்கட்டத்தில் கடந்த திங்கட்கிழமை ஊரடங்கு தளர்த்தப்பட்ட அன்றைய தினத்தில் இலங்கையில் ஒரேநாளில் 33 கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். இது இலங்கையில் கொரோனா ஆபத்தின் வீரியம் குறையாத தன்மையையே பறைசாற்றுகின்றது. மேலும் இலங்கையில் கொரோனா பரவுகையின் அதிகரிப்பும் படிப்படியாக அதிகரித்து வந்துள்ளதனை இலங்கை தொற்று நோயியல் பிரிவின் தரவுகள் உறுதிப்படுத்துகின்றது. இலங்கையில் இதுவரை 310பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளங்காணப்பட்டுள்ளது. இதில் முதல் 100பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட 57 நாட்கள் எடுத்துள்ளது. இரண்டாவது 100பேருக்கு 19 நாட்களும் மூன்றாவது 100பேருக்கு 8 நாட்களும் என படிப்படியாக பாதிப்பின் வேகம் அதிகரித்துள்ளது. இவ்வாறாகவே அமெரிக்காவிலும் கொரோனா தொற்று படிப்படியாகவே அதிகரித்தது. இன்று அமெரிக்கா மீளமுடியாத துயரை அனுபவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசாங்கம் ஊரடங்கை தளர்த்தியமையால், மக்கள் கொரோனா பரவுகை கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாகவே உணருகின்றார்கள். முழுமையாக இன்னும் கொரோனா ஆபத்தின் வீரியம் கட்டுப்படுத்தப்படவில்லை என்பதை புரியாது செயற்படுகின்றார்கள். இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடும் அவ்வாறானதாவே காணப்படுகின்றது. அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஊரடங்கு தளர்த்தப்படுவதாக அறிவித்த அரசாங்கம் மதுபானசாலைகளை திறக்கலாம் என அளித்த அனுமதி இலங்கை அரசாங்கத்தின் அத்தியாவசிய தேவைப்பாட்டுக்குள் மதுவினையும் உள்ளீரப்பதாக அமைகின்றது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட திங்கட்கிழமை அன்று 18 மாவட்டங்களிலுமே பெருந்திரளாய் மக்கள் கூடிய இடமாக மதுபானசாலைகளே காணப்படுகின்றது. இதில் மதுபானம் கோவிட்-19 நோய்க்கு ஆபத்தானது என வைத்தியர் சங்கம் அறிவித்த தகவலை அரசாங்கமும் இலாபகரமாக மறந்து விட்டது. நாட்டின் பெருங்குடிமக்களும் மறந்தனர். எனிலும் சமூக அக்கறையாளர்களின் கடும் அதிருப்தியை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதுபானசாலைகளை காலவரையறையின்றி மீள மூடுமாறு சனாதிபதி செயலகம் அறிவுறுத்தியுள்ளது. எனிலும் ஊடரங்கு தளர்வு அறிவிப்பில் மதுபானசாலைகள் திறப்பதற்கான அனுமதியை விசேடமாக அளித்தமை அரசாங்கம் கொரோனா கட்டுப்படுத்தலிலிருந்து திசை மாறுவதையே உணர்த்துகின்றது.
மக்களும் கொரோனா வைரஸ் பரவுகையிலிருந்து பாதுகாப்பதற்கான சமூக இடைவெளியினை இன்னும் முழுமையாய் புரியாதவர்களாய் உள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்கான பயணத்திற்காக இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து சேவைகள் அனுமதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை உறுதிப்படுத்தும் வகையில் ஆசனங்களின் இருக்கை முறையை அரசாங்கம் அறிவித்திருந்தது. மக்கள் அரசாங்க அறிவிப்பை ஏற்று ஆசனங்களில் இருந்த போதிலும் நடுவில் நெருங்கி நின்று பயணம் செய்கின்றனர். இது மக்கள் சமூக இடைவெளியின் அர்த்தப்பாட்டை புரியாமையையே உறுதிப்படுத்துகின்றது. மேலும் கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்கையில் சமூக இடைவெளியை உணர்ந்த ஒருவர் இடைவெளி விட்டு நிற்க புதிதாக வருபவர் இடைக்குள் செல்லும் நிலையே இங்கு காணப்படுகின்றது.
மக்கள் முகக்கவசம் அணிவதையே கொரோனா வைரஸ் பரவுகையிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கான நடவடிக்கையாய் அதிகமாக முன்னெடுக்கின்றனர். அதுவும் காவல்துறையின் கெடுபிடியினாலேயே ஆகும். முன்னர் காவல்துறைக்கு பயந்து தலைக்கவசம் அணிந்து ஈருருளியில் பயணம் செல்வது போன்றே இன்று முகக்கவசம் அணிந்து பயணம் செய்கின்றனர். எனிலும் முகக்கவசம் அணிவதன் தேவைப்பாட்டினையோ, முறையையோ சரியாய் புரியாதவர்களாய் காணப்படுகின்றனர். உலகநாடுகளே முகக்கவச ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் நண்பர்கள் பகைவர்களாகுமளவிற்கு முரண்பட்டு கொண்டுள்ளனர். எனிலும் இலங்கை மக்கள் சுலபமாக ஓர் துணியை எடுத்து முகத்தில் கட்டிவிட்டு முகக்கவசமாக பயணம் செய்கின்றார்கள். இன்று தெருக்களில் விற்குமளவிற்கு சாதாரண துணியால் தைக்கப்பட்ட முகக்கவச வியாபராம் சூடுபிடித்துள்ளது. இவை மக்கள் கொரோனா வைரஸ் பரவுகையை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளிலிருந்து முழுமையாக விலகியுள்ளமையையே காட்டுகின்றது.
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிரதேசங்கள் யாவும் யதார்த்தத்தில் முகத்திற்கு துணியை கட்டிக்கொண்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. மறுபுறம் கொரோனா தொற்றின் பரவுகையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. தேர்தல் திணைக்களமும் ஜீன்20ஆம் திகதியை தேர்தல் நடைபெறவுள்ள திகதியாக அறிவித்துள்ளது. இந்நிலையில் அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் பாராளுமன்ற தேர்தலை நடாத்துவது, பாராளுமன்ற தேர்தலை தவிர்த்து மீள பாராளுமன்றத்தை கூட்டுவது என்பன தொடர்பாகவே விவாதித்து கொண்டுள்ளது. கொரோனாவின் அழிவையும் அரசியல் போட்டி மிஞ்சி விட்டது. கொரோனா பற்றிய உரையாடலை, பாரளுமன்ற தேர்தலை நடாத்துவது அல்லது இடைநிறுத்துவது எனும் மையவிவாத பொருளுக்கான உபகருத்துக்களாவே இலங்கையின் அரசியல் பரப்பில் பயன்படுத்தும் நிலையே காணப்படுகின்றது. இது தொடரின் கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளில் சிறப்பாக காணப்படும் நாடுகளில் முன்னணியில் உள்ள இலங்கை கடைநிலைக்கு செல்லும் நிலையே ஏற்படும். மக்களும் இலங்கை அரசியல் கட்சிகளின் செயற்பாடு மீது விசனமடைந்துள்ளனர். கொரோனா காலத்து கருத்துக்களை திரட்டும் துமி என்ற சமூக அமைப்பு சமூகவலைத்தள பக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்று அபாயத்தில் மக்கள் முடக்கப்பட்டிருக்கையில் இலங்கையின் பாராளுமன்ற தேர்தலை மையப்படுத்தி அரசியல் கட்சிகள் உரையாடுவது, காலத்துக்கு பொருத்தமானது, காலத்துக்கு பொருத்தமற்றது மற்றும் மக்கள் நலனற்ற போக்கை உறுதி செய்கின்றது என மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் 77.7வீதமான வாக்கு காலத்துக்கு பொருத்தமற்றது என்பதாகவே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாவற்றுக்கும் மேலாக வளர்ச்சியடைந்துவரும் இலங்கை போன்ற நாடுகளில் அரசியல் தூய்மையான மக்கள் நலன்சார்ந்த அரசியல் தலைமை கிடைப்பது என்பது அரிதான விடயமே ஆகும். எதிலும் அரசியல் நலனை எதிர்பார்த்தே அரசியல் தலைமைகள் செயற்படுவதே யதார்த்தமாகும். கோத்தபாய ராஜபக்ஷ அவர்களும் அதேவழியிலான தலைவராகவே காணப்படுகின்றார். கொரோனா வைரஸ் பரவூகையை கட்டுக்குள் வைத்திருக்கும் புகழுக்கு உடனடியாக இலாபாத்தை திரட்ட முற்படுகின்றார். மக்கள் நலனை இரண்டாம்பட்சமாக நோக்கும் நிலையே இன்று காணப்படுகின்றது. மக்கள் கொரோனா வைரஸ் பரவுகையிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள அரச செயற்பாடுகளுக்கு அப்பால் சமூக பொறுப்புணர்வுடைய பிரஜைகளாக தகவமைத்து கொள்ள வேண்டும். அவ்வாறு தகவமைப்பினேயே தங்களையும் தங்கள் சமூகத்தையும் காக்க முடியும். சட்டங்கள் முழுமையாய் மக்களை பாதுகாக்க போவதில்லை. தலைக்கவசம் அணிய வேண்டியது சட்டமாயினும் விபத்துக்களால் மரணம் தொடர்கதையாவே உள்ளது. இங்கு மக்கள் புரிதலே பிரதானமாகின்றது. கொரோனா பாதுகாப்பும் அவ்வாறானதே.
Comments
Post a Comment