ட்ரம்ப் அரசியல்நலன் கருதி சீனா மீது குற்றஞ்சாட்டுகிறாரா? -ஐ.வி.மகாசேனன்-

முழு உலகையே முடக்கி போட்டுள்ள பேரவலமாக கொரோனா வைரஸ் காணப்படுகின்றது. கோரோனா வைரஸ் பரவுகையால் நோய் ஏற்படுகின்றது என்பதையும் தாண்டி கொரோனா வைரஸ் பரவுகையால் ஏற்பட்டுள்ள நெருக்கடி உலகளாவிய போர் ஒன்றுக்கான முன்னாயரய்த்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்ற சந்தேகமும் காணப்படுகின்றது.  2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் தொற்று ஆரம்பிக்கப்பட்ட போதிலும் 2020ஆம் ஆண்டு சனவரி ஆரம்பத்தில் அடையாளங்காணப்பட்ட நாள்முதலேயே சர்ச்சைகள் மலிந்த விடயமாக கொரோனா வைரஸின் தோற்றுவாய் காணப்படுகின்றது. பொருளாதார போரில் ஈடுபட்டு வந்த சீனா மற்றும் அமெரிக்க கொரோனா வைரஸின் தோற்றுவாயை அடிப்படையாய் கொண்டு ஒருவோர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டி ஏறத்தாழ நான்கு மாதங்களாக வார்த்தைகளால் போர் நிகழ்த்தி கொண்டுள்ளனர். ஒருபுறம் கொரோனாவின் இழப்பு அதிகரித்து கொண்டு செல்லும் அதேவேளை மறுபுறம் சர்ச்சைகளையும் அரசியல் நலன்சார்ந்து அரசியல் தலைவர்கள் தூவி விடுகின்றனர். அதற்கு வலுச்சேர்க்கும் வகையிலே மேற்குநலன்சார் ஊடகங்களும், விஞ்ஞானிகளும் கருத்து தெரிவிக்கின்றனர். இக்கட்டுரையும் கொரோனா வைரஸ் தோற்றம் பெற்றதாக சர்ச்சைகள் நிரப்பப்பட்டுள்ள வூஹான் நோய்நுண்மவியல் ஆய்வுகூடத்தின் சர்ச்சைகளை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் பரவுகையோடு பேசுபொருளாகிய ஓர் நிறுவனமாக வூஹான் நோய்நுண்மவியல் ஆய்வு மையம் (WIV) காணப்படுகின்றது. புதிய சீனா நிறுவப்பட்ட ஆரம்பகாலங்களில் உருவாக்கப்பட்ட நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். இன்று சீனாவின் உயிரியல் ஆய்வில் பெரும் பங்களிப்பினை ஆற்றி வருகின்றது. இன்று இவ்ஆய்வுகூடம் தொடர்பிலான சர்ச்சையை முதன்மைப்படுத்தும் அமெரிக்காவும் ஆய்வுகூடத்தில் நிதிப்பங்களிப்பை மேற்கொள்ளும் இணைபங்காளியாய் உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஓபாமாவினுடைய ஆட்சி காலத்தில் 3.7மில்லியன் அமெரிக்க டாலர் மானியமாய் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் ஆரம்ப பரவுகை சீனாவின் வூஹான் மாகாணத்தில் உள்ள விலங்கு சந்தையிலிருந்து ஏற்பட்டது என்ற அடிப்படையில் கொரோனா வைரஸ் தோற்றுவாயோடு வூஹான் நோய் நுண்மவியல் ஆய்வு மையமும் பிணைக்கப்படலாயிற்று. ஆரம்பத்தில் இஸ்ரேலிய உயிரியல் விஞ்ஞானி இஸ்ரேலின் ராணுவத்தின் புலனாய்வு பிரிவு முன்னாள் அதிகாரியுமான டேனி ஷோஹம் என்பவர் த வாஷிங்டன் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கொரோனோ வைரஸ் பரவுகையுடன் வூஹான் நோய்நுண்மவியல் ஆய்வு மையத்தையும் தொடர்புபடுத்தி இருந்தார். எனிலும் அன்று கொரோனா வைரஸ் பரவுகையானது சீனாவில் மாத்திரம் காணப்பட்டமையால் இக்கருத்து பரவலடையவில்லை.

மார்ச் மாதத்திற்கு பின்னர் உலக நாடுகள் பூராகவும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கப்பட்டதன் பின்னரே கொரோனாவின் தோற்றுவாய் தொடர்பிலான சர்ச்சையும் மேலெழுந்தது. குறிப்பாக அமெரிக்காவில் கொரோனா வைரஸின் பரவுகை அதிகரிக்கப்பட்டு இழப்பின் வேகமும் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து மக்களின் பார்வையை திசைதிருப்ப அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசாங்கம் கொரோனா வைரஸ் தோற்றுவாய் தொடர்பிலான சர்ச்சையை மேலெழுப்பியது. தொடர்ந்து கொரோனா வைரஸை சீன வைரஸ், வூஹான் வைரஸ் எனும் பெயர்களால் அமெரிக்க அதிபரும் குடியரசு கட்சியினரும் அழைத்தனர்.

சீனா மீதான அமெரிக்காவின் வசைக்கு வலுச்சேர்க்கும் வகையில் ஏப்ரல்14ஆம் திகதி வெளியிடப்பட்ட வோஷிங்டன் போஸ்ட் இதழில் கட்டுரை ஒன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. கட்டுரையில், அமெரிக்க தூதரக அதிகாரிகள் 2018ஆம் ஆண்டு சனவரியில் வூஹான் நோய்நுண்மவியல் ஆய்வு மையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தியாக இல்லை என்பதை கவனித்துள்ளனர். இதையடுத்து வூஹான் நோய் நுண்மவியல் ஆய்வு மையத்தில் பாதுகாப்பு மற்றும் மேலான்மை பலவீனங்கள் பற்றிய ஒரு எச்சரிக்கையை தூதர அதிகாரிகள் அமெரிக்காவிற்கு அனுப்பியதாகவும், அதிக கவனம் மற்றும் உதவி தேவை என்பதையும் அதில் முன்மொழிந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வெளவால் கொரோனா பற்றிய ஆய்வகத்தின் பணிகள் மற்றும் அவற்றின் சாத்தியமான மனித பரவுதல் காரணமாக புதிய சார்க் போன்ற தொற்று நோய் அபாயம் ஏற்படக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

போஸ்ட் இதழின் வெளியான செய்தியை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் டொனால்ட் ட்ரம்ப் வூஹான் நோய்நுண்மவியல் ஆய்வு மையத்திலிருந்து பரவியது தொடர்பாக விசாரணை செய்யப்படும் எனவும், கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பது குறித்த விசாரணைக்கு சீனாவுக்கு நிபுணர்குழு அனுப்புவது தொடர்பிலும் தெரிவித்திருந்தார். எனிலும் சீனா குறித்த விசாரணை குழுவை அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சின் செய்தித்தொடர்பாளர் கெங் ஷீவாங், “இந்த வைரஸ் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான எதிரி, இது உலகில் எந்த நேரத்திலும், எந்த பகுதியில் வேண்டுமானாலும் தோன்றலாம். மற்ற நாடுகளை போலவே சீனாவும் பாதிக்கப்பட்டுள்ளது. சீனா குற்றவாளியல்ல, பாதிக்கப்பட்ட நாடு.” எனக்கூறியுள்ளார். மேலும் “2009ஆம் ஆண்டில் அமெரிக்காவில் எச்1என்1 வைரஸ் கண்டறியப்பட்டது. எச்.ஐ.வி/எய்ட்ஸ் கண்டறியப்பட்டது. 2008ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நிதி நெருக்கடி உலகளாவிய பொருளாதார நெருக்கடியாக மாறியது. இதற்கு அமெரிக்காதான் பொறுப்பேற்க வேண்டும் என யாராவது கேட்டார்களா?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்காவின் கருத்தோடு ஒன்றித்தே நோபல் பரிசு பெற்ற பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த விஞ்ஞானி லூக் மோன்தக்னேரும் கொரோனா வைரஸின் தோற்றம் தொடர்பிலே கருத்து தெரிவித்துள்ளார். “சீனாவின் வூஹானில் உள்ள தேசிய பயோ சேப்டி ஆய்வுகூடத்தில், கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ‘எய்ட்ஸ்’ நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்கான ஆய்வின் போது கொரோனா நுண்கிருமியை மனிதர்கள் செயற்கையாக படைத்துள்ளனர். அந்த ஆய்வகத்தில் ஏற்பட்ட விபத்தின் போது, கொரோனா வைரஸ் வெளியில் பரவியிருக்கிறது.” எனக்குறிப்பிட்டுள்ளார்.

முதல்முறையாக வூஹான் நோய் நுண்மவியல் ஆய்வு மையம் குற்றச்சாட்டுக்களை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளது. ஆய்வு கூடத்தின் இயக்குனர் யுவான் ஜிமிங் சீன அரசின் சி.ஜி.டி.என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “ஒரு விஞ்ஞானி என்ற முறையிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேலாளர் என்ற விதத்திலும் ஆய்வு கூடத்தில் செயற்கையாக வைரஸை உருவாக்குவது சாத்தியமற்றது. என்பது எனக்கு தெரியும். வைரஸை மனிதனால் உருவாக்க முடியாது. கொரோனா வைரஸ் செயற்கையானது என்பதை நிரூபிக்க எந்தவொரு ஆதாரமும் கிடையாது.” என தெரிவித்துள்ளார். மேலும் எங்கள் ஆய்வு கூடம் மக்கள் தொடர்பற்றது. எங்களிடம் கடுமையான ஒழுங்குவிதிமுறைகள் இருக்கின்றன. எங்கள் ஆய்வுகூடத்தில் செயற்கையாக கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டு, அங்கிருந்துதான் வெளியே வந்துவிட்டதாக அமெரிக்க கூறும் புகார்கள் துரதிர்ஷ்டவசமானது. யூகத்தின் அடிப்படையில் மக்களை குழப்புவதை நோக்காய் கொண்டே இவ்வாறானா வதந்திகள் பரப்பப்படுவதாகவும்” விசனம் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு ஆதரவாகவே பிரான்ஸ் கருத்து தெரிவித்துள்ளது. “அமெரிக்க பத்திரிகைகள் கோவிட்-19 இன் தோற்றம் மற்றும் சீனாவின் வூஹானின் வூஹான் நோய்நுண்மவியல் ஆய்வு மையத்தின் பணிகளுக்கு இடையே ஒரு தொடர்பை நிறுவுகிறது. இந்த வகையில் சமீபத்தில் புழக்கத்தில் இருந்த தகவல்களை உறுதிப்படுத்தும் எந்தவொரு உண்மை ஆதாரமும் இன்றுவரை இல்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். கொரோனா வைரஸின் உத்தியோகபூர்வ பெயர் SARC-COV2. வெளவால்களில் தோன்றியது என்று பரந்த அறிவியல் ஒருமித்த கருத்து உள்ளது.” என ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அலுவலகத்தின் ஒரு அதிகாரி கூறியூள்ளார். 2004ஆம் ஆண்டில், பிரான்சின் அப்போதைய வெளியுறவு மந்திரி மைக்கேல் பார்னியர் வூஹானில் உயிரியல் தொற்று நோய்கள் குறித்த ஆராய்ச்சி ஆய்வகத்தை நிறுவ பிரான்ஸ் சீனாவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார நிறுவனமும் சீனாவுக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் செய்தித்தொடர்பாளார் ஃபடெலா சாயிப், “சரியான ஆதாரம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. வைரஸ் சீன ஆய்வகத்தில் தயாரிக்கப்படவில்லை. கிடைக்கக்கூடிய அனைத்து ஆதராங்களின்படி விலங்குகளிடமிருந்தே வந்திருக்கலாம்.” எனக்குறிப்பிட்டுள்ளார். ஆரம்ப தகவல்களின் அடிப்படையில் விலங்கு சந்தையிலேயே கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் விலங்கு சந்தையிலிருந்து மனிதனுக்கு பரவியிருக்கலாம் என்பதே இன்றைய உறுதிப்படுத்தக்கூடிய தகவலாய் உள்ளது. ரஷ்யாவின் முன்னாள் சுகாதார அமைச்சர் வெரோனிக்கா ஸ்க்வொர்ட்சோவா, ஒரு ஆய்வகத்திலிருந்து வைரஸ் வருவதற்கான வாய்ப்பை மறுத்து, மிகவும் முழுமையான ஆய்வு நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

சர்ச்சைகளுக்கு மையமாக அமெரிக்காவின் அலட்சியத்தன்மையே காரணமானது என்பது யதார்த்தமான உண்மையாகும். சீனாவில் கொரோனா தொற்று ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே உலக சுகாதார நிறுவனம் ஓர் எச்சரிக்கையை விட்டிருந்தது. எனிலும் ட்ரம்ப் தலைமையிலான அரசாங்கத்தின் அலட்சியத்தால் அமெரிக்கா இன்று பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ட்ரம்ப் அரசியல் நலன் கருதி தனது அலட்சியத்தை திசை திருப்பும் வகையில் சீனா மீது குற்றஞ்சாட்டுவதை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார். கடந்த சனாதிபதி தேர்தலிலும் சீனா மீதான எதிர்ப்பை பிரச்சார உத்தியாக அதிகமாக பயன்பத்தியே  ட்ரம்ப் முதன்மை பெற்றிருந்தார். அதனடிப்படையிலேயே இன்றும் கொரோனா கால அபத்தத்தையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி இவ்வருட இறுதியில் நடைபெறஉள்ள சனாதிபதி தேர்தலை மையமாய் கொண்டு சீன எதிர்ப்பை முதன்மைப்படுத்துகின்றார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவுகைக்கு பின்னரான வெள்ளைமாளிகையில் இடம்பெறும் ஊடக சந்திப்புக்கள் அனைத்திலும் ஏதோவோர் வகையில் சீனாவை குற்றஞ்சாட்டுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளார். மிகவும் ஆபத்தான முறையில் அமெரிக்காவில் வைரஸ் பரவல் தீவிரமடைந்து செல்கையில், வைரஸை கட்டுப்படுத்தி தடுப்பதில் காட்டும் அக்கறையை விட சீனா மீது குற்றஞ்சாட்டுவதையே முதன்மையாய் கொண்டு செயற்படுவது கொரோனாவிலிருந்து மீள்வதற்கான தவறான முன்னுதாரணமாகும்.

எதுஎவ்வாறாயினும் கொரோனா வைரஸ் பரவுகையின் தோற்றுவாய் அறியப்பட வேண்டியது அவசியமானதாகும். ஆய்வாளர்களது சந்தேகங்களின்படி இது உயிரியல் போருக்கான அச்சாணி எனில் இதன் உண்மை கண்டறிந்து தீர்வு பெற வேண்டியது அவசியமாகின்றது. எனிலும் இன்றைய சூழல் அதற்கு பொருத்தமானது இல்லை என்பதே உண்மையுமாகும். கொரோனா வைரஸின் பரவுகை உலகளவில் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. வளர்ச்சியடைந்த பல நாடுகளிலும் சுகாதார மருத்துவ வசதிகளே பேரிடராக காணப்படுகின்றது. இந்நிலையில் அரச தலைவர்கள் வார்த்தை போரில் ஈடுபடுவது மக்கள் நலனற்ற செயற்பாடாய் அமைகின்றது. இன்று சர்ச்சைகளை தூவுதற்கு அப்பால் கொரோனா வைரஸ் பரவுகையை கட்டுப்படுத்துவதிலேயே உலக அரசியல் தலைவர்கள் ஒன்றினைந்து செயற்பட வேண்டும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-