பொறுப்புணர்வற்ற சமூக செயற்பாடுகளும்; கொரோனா கட்டுப்படுத்தலின் விளைவுகளும். ஐ.வி.மகாசேனன்
உலகை உலுக்கும் கொரோனா பீதியில் யாழ்ப்பாணம் முற்றாக முடக்கப்பட்டு இரண்டு வாரங்கள் கடக்கின்றது. கொரோனா பரவுகையால் ஏற்படும் உயிராபத்து ஒருவகை அபாயம் எனில் அது சார்ந்த பயமும் உளவியல் ரீதியிலான ஒரு வகையிலான அபத்தத்தையே ஏற்படுத்துகின்றது. யாழ்ப்பாணம் முற்றாக முடக்கப்பட்டுள்ளமையால் கொரோனா பரவுகை கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டவர்களில் கோவிட்19 நோய்க்கான அறிகுறிகள் காணப்படாத போதிலும் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இணங்காணப்பட்டுள்ளமை என்பது யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் பரவுகை இன்னும் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது. ஆதலால் மக்களது சமூக இடைவெளி தொடர்ச்சியாக பேண வேண்டியது அவசியமாகின்றது. மருத்துவ சங்கம் முன்வைக்கும் கோரிக்கை அடிப்படையில் மக்களின் சமூக இடைவெளியை பேண ஊரடங்கின்; காலமும் நீண்டு செல்லலாம். வீட்டுக்குள் முடக்கப்படும் மக்கள் தங்கள் பொறுப்புணர்ந்து முழுமையாக ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டின் கொரோனா பரவுகை கட்டுப்படுத்தலின் பக்கவிளைவுகளான வறுமை, உளவியல் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம், வியாபார ஸ்தாபனங்கள், ஊடகங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சமூக உயர் நிறுவனங்கள் தங்கள் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
மார்ச்21 யாழ்ப்பாணத்தின் தாவடிப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டதிலிருந்து யாழ்ப்பாணத்தில் அமுலாக்கப்பட்ட ஊரடங்கு சட்டத்தில் இறுக்கம் பேணப்பட்டது. மார்ச்24 அன்று காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை தற்காலிகமாக ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது மக்கள் பொருட்களை வாங்கும் வேகத்தில் சமூக இடைவெளியை புறந்தள்ளியதால் மார்ச்24இற்கு பிறகு காலவரையறையின்றி ஊரடங்கு சட்டம் யாழ்ப்பாணத்தில் அமுலாக்கப்பட்டது. எனிலும் ஆரம்ப நாட்களில் மருந்தகங்களுக்கு செல்லவும் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான விற்பனை நிலையங்களை உள்ளூர்களில் நடாத்த அனுமதிக்கப்ட்டது. எனிலும் மக்கள் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டதன் அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த சலுகைகள் நிறுத்தப்பட்டு ஊரடங்கு சட்ட அமுலாக்கம் இறுக்கப்பட்டது. மீறுவோர் பிணையற்ற கைதுக்கு உள்ளாகினார்கள். எனிலும் உள்ளூர்களில் தளர்ச்சி தன்மையே இப்போதும் காணப்படுகின்றது.
கொரோனா பரவுகையை கட்டுப்படுத்த சமூக இடைவெளியை பேணும் வகையில் ஊரடங்கு இறுக்கமாக பேணப்பட வேண்டியது அவசியமாகின்ற போதிலும் மறுபுறம் மக்களது அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்க கூடிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதும், மக்களுக்கு உளவியல் ரீதியான பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுவதும் அரசாங்கத்தினது பிரதான கடமையாக காணப்படுகின்றது. இதற்கு உறுதுணையாக வியாபார நிறுவனங்கள்இ ஊடகங்கள், அரசியல் கட்சிகள், சமூக உயர் நிறுவனங்கள் மற்றும் நாட்டின் துடிப்புடைய இளைஞர்களின் செயற்பாடுகள் காணப்படல் வேண்டும். எனிலும் இளைஞர்கள் மாத்திரமே யாழ்ப்பாணத்தில் தங்கள் இயலுமைக்கேற்றவாறு பொறுப்புணர்ந்து செயற்படுவதனை காணக்கூடியதாக காணப்படுகின்றது. ஏனைய எந்த தரப்பினரும் முழுமையாய் தங்கள் பொறுப்புணர்வுக்குள் செயற்பட தவறிவிட்டனர் என்பதே யதார்த்தபூர்வமான உண்மையாகும்.
பொறுப்புக்கூறலை பிரதான பண்பாய் கொண்டுள்ள அரசாங்கமே யாழ்ப்பாணத்தில் பொறுப்பற்ற விதத்திலேயே செயற்படுகின்றது. பல வாக்குறுதிகளை அதிகாரமட்டத்தின் பார்வையிலிருந்தே வழங்குகின்றனவே தவிர, அதன் செயற்பாட்டு திறனை கணிக்க மறந்து விடுகின்றது. இதனால் அரசாங்கத்தின் பல திட்டங்கள் அறிவிப்புடனேயே காலவதியாகி விடுகின்றது. குறிப்பாக ரின்மீன், பருப்பு மற்றும் முட்டை என்பவற்றிற்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயித்து விலையை மிகவும் குறைத்தது. எனிலும் தொகையாக அதிக விலைக்கு கொள்வனவு மேற்கொண்டு பாதிக்கப்படக்கூடிய வியாபார நிறுவனங்களுக்கு எவ்வித மானிய சலுகைகளையும் அரசாங்கம் அறிவிக்காமையால் வியாபார நிறுவனங்கள் எவ்வித கட்டுப்பாட்டு விலை நியமங்களையும் அனுசரிக்காது வழமையான விலையிலேய விற்பனை மேற்கொண்டது. எனிலும் அரச நிறுவனங்கள் கட்டுப்பாட்டு விலையை நடைமுறைப்படுத்த எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. நுகர்வோர் அதிகார சபை விலை முறைப்பாட்டை அறிவிக்குமாறு தொலைபேசி இலக்கங்களை சமூக வெளியில் அறிவித்த போதிலும் நுகர்வோர் அதிகார சபையின் தொலைபேசி இலக்கம் பல சந்தர்ப்பங்களில் அடைய முடியாததாகவே காணப்படலாயிற்று. அரசாங்கத்தின் செயற்றிறனற்ற அறிவிப்புக்களால் மக்களே பெரும் சிரமங்களுக்கு உள்ளாகின்றார்கள்.
வியாபார நிறுவனங்களும் நடைமுறையில் எரியுற வீட்டில் பிடுங்கினது இலாபம் என்பதாகவே செயற்படுகின்றது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அரசியின் உத்தியோகபூர்வ விலையாகவே ரூபா.145 காணப்படுகின்றது. இதுவே ஏனைய மாவட்டங்களையும் விட ரூபா.50 – 60 அதிகமாக காணப்படுகின்றது. எனிலும் சில பின்தங்கப்பட்ட கிராமப்புறங்களில் ரூபா.450 வரையில் அரசியின் விலை விற்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. அரிசி போன்றே ஏனைய அத்தியவசிய உணவுப்பொருட்ளும் அதிக விலைக்கே யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யப்படுகின்றது. இதனை யாழ் மாவட்ட செயலகமோ மற்றும் நுகர்வோர் அதிகார சபையோ தடுப்பதற்கு எவ்வித செயற்றிறன்மிக்க நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது அசண்டை செய்துள்ளனர். இதனால் பெரிதும் ஏழை மக்கள் பெரும் சிரமத்துக்குள் உள்ளாகின்றனர். மக்களுக்கான நிவாரணங்களும் போதிய அளவில் கிடைக்கப்பெறாத நிலையில் வியாபார நிலையங்களின் கொள்ளை வியபாரம் மக்களை வறுமைக்குள் தள்ளுகின்றது.
இவற்றோடு ஊடகங்களும் சரியான செய்திகளை சமூக வெளிக்குள் கொண்டு செல்கின்றனவா என்பது பெரும் கேள்விக்குறியா காணப்படுகின்றது. ஊரடங்கு முடக்கத்தினுள் அச்சிதழ்களும் மின்னிதழ்களாய் சுருங்கி விட்டது. அத்தோடு சமூக வலைத்தளங்களில் ஊடகம் என்ற பெயரில் பல நிறைந்து விட்டது. குழாய் தமிழும் ஊடகக் கோமாளித்தனமுமே நிறைந்து கணப்படுகின்றது. இக்கட்டான சூழ்நிலைகளில் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதே பொறுப்பான ஒரு ஊடகத்தின் பணியாகும். நூறுக்கும் மேற்பட்ட ஊடகங்கள் எனத் தம்மை விளம்பரப்படுத்திய இணைய வலைத்தளங்களும், சமூக வலைத்தளங்களும் மலிந்துபோன இன்றைய சூழலில், மேற்படி பொறுப்பான பணியைச் செய்வது மட்டுமல்ல, தேவையற்ற வேலைகளைச் செய்யாது இருப்பதும் ஒரு ஊடகத்தின் சிறந்த பண்பாகிறது. சமீபத்தில் இணைய வலைத்தளம் ஒன்றின் செய்தியில், குறித்த இணையத்தள ஊடக வாகனம் செல்கையில் மக்கள் நிவாரணம் வருவதாக கருதி அங்கு கூடுகையில், பின்னணி குரலில் “இங்கே பாருங்கள் மக்கள் கூட்டமாக நிற்கிறார்கள்... சரியான விழிப்புணர்வு இன்னும் இல்லை...” என்று பதிவாகிறது. நிவாரணத்தை எதிர்பார்த்து வந்தவர்களில் ஒரு சிலர் மீடியா என்று தெரிந்தவுடன் வீடுகளுக்கு செல்கின்றனர். குறித்த செய்தி உணர்த்துவது மக்களின் இன்றைய பிரதான தேவையாக காணப்படுவது நிவாரணம் என்பதுஇ எனிலும் குறித்த ஊடகம் தம் செய்திப்பரப்புக்காக மக்கள் விழிப்புணர்வற்று செயற்படுகின்றார்கள் என மாறுபட்ட செய்தியை சமூக வெளிக்குள் புகுத்துகின்றது. இவ்வாறான பொறுப்பற்ற ஊடக செயற்பாடுகளால் மக்களின் உண்மை தேவை சரியாய் போய் சேர முடிவதில்லை.
மேலும், பிரதான ஊடகங்களில் வெளிவரும் சில செய்திகள் கொரோனாவின் வீரியம் தெரியாது செயற்படுகின்றார்களோ என எண்ணத்தூண்டுகின்றது. யாழ்ப்பாணத்து ஊடகம் ஒன்றில் அண்மையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை உத்தியோபூர்வ தகவல் கிடைக்கப்பெறாத நிலையில் ஊகமாக தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாய் முன்பக்க தலைப்பு செய்தியாக மின்னிதழில் போட்டிருந்தது. எனிலும் பின்னர் வைத்தியசாலை குறித்த செய்தி வதந்தி என மறுப்பு அறிக்கை விட்டிருந்தது. இவ்வாறான செயற்பாடு மக்களை உளவியல் ரீதியாக பாதிப்படைய செய்ய கூடிய விடயமாகும். ஊடகங்கள் செய்தியை தெளிவாக ஆராய்ந்து ஆதரபூர்வமாகவே வெளியிட வேண்டும். மாறாக ஊடகங்களே வதந்தியை பரப்புகையில் மக்கள் பெரும் பதட்டத்துக்கு உள்ளாகின்றார்கள். கொரோனா ஒன்றும் கிரிக்கெட் அல்ல முந்தி கொண்டு ஸ்கோர் அறிவிக்க என்பதை ஊடகங்கள் உணர வேண்டும். பாதிப்பு விபரங்களை மக்களுக்கு அறியப்படுத்தி மக்களை பயத்துக்குள் தள்ளாது மக்களுக்கான விழிப்புணர்வை வழங்கும் பாரிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு என்பதை ஊடகங்கள் உணர வேண்டும்.
அரசியல் கட்சிகள் மீது இன்றைய சந்தர்ப்பத்தில் விரல் நீட்டுவது எருமை மாடு மீது பெய்யும் மழை போன்றே காணப்படுகின்றது. பல பத்தி எழுத்தாளர்களும் தங்கள் அரசியல் கட்டுரைகளில் அரசியல் கட்சிகளின் அசண்டையை சுட்டிகாட்டி அவர்களது பொறுப்பை கோடிட்டு காட்டியுள்ளார்கள். எனிலும் தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சி உள்ளூராட்சி சபையூடாக நிவாரணம் வழங்குவதற்காக இன்றுவரை ஆளுநரின் பதிலுக்காகவே காத்துள்ளது. இடையிடேயே சீற்றமான அறிக்கையுடன் மட்டுப்படுகின்றார்கள். அத்துடன் சில செயற்படும் அரசியல் செயற்பாட்டாளர்கள் மீதும் காழ்ப்புணர்ச்சி அரசியலையே இங்கு அரசியல் கட்சிகள் நடாத்துகின்றது.
உலக வல்லரசுகளையே ஆட்டம் காண வைத்துள்ள கொரோனாவை சிறு குடாவை சேர்ந்த நாம் எளிதாய் கொள்ள முடியாது. கொரோனாவின் பரவுகையை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றகரமாக பாதுகாப்பானதாகவே காணப்படுகின்றது. எனிலும் கொரோனாவின் பரவுகை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளான வறுமை, உளவியல் தாக்கங்களை சீர்செய்ய கூடிய திட்டங்களையும் அரசாங்கம் மேற்கொள்வதுடன் அதற்கு ஏனைய சமூக நிறுவனங்களும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். மாறாக பக்க விளைவுகளை பொருட்படுத்தாவிடில் கொரோனா அபத்தம் நீங்கிய பின் மீள ஓர் மாபெரும் அனர்த்தத்திற்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை அரசாங்கத்துக்கு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தை மாத்திரம் நம்பியிராது தற்போது கல்வியாளர்களாலும் சமீபத்தில் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களாலும் நினைவுபடுத்தியுள்ள யுத்த காலத்தில் போருக்கு அப்பால், மக்கள் நலன் சந்த பொருண்மிய மேம்பாட்டு கழகத்தின் செயற்பாடு சமகாலப்பகுதியில் பயனுடைய பொறிமுறையாய் காணப்படுகின்றது. சட்டத்திற்கு உட்பட்ட, வெளிப்படையாக இயங்கும் அரச இயந்திரத்திற்கு நிகராக/ சமாந்திரமாக மனிதாபிமான, அபிவிருத்தி, வாழ்வாதாரப் பணிகளை பெரியளவில் ஒருங்கிணைக்கக் கூடிய அமைப்புக்களை நாம் சமூக வெளியில் உருவாக்கிக் கொள்வது மிக மிக அவசியம். எனிலும் எம் அரசியல் தலைமைகளிடம் காணப்படும் ஒற்றுமையின்மை இதனை செயலுருவாக்கம் பெறுவதில் தடையாக காணப்படும். ஆயினும் வடமாகாணத்தின் உயர்கல்வி நிறுவனமான யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் இதனை மேற்கொள்ளுமாயின் எளிதில் சாத்தியப்படுத்தக்கூடியதாக காணப்படும். கல்வியாளர்களின் வழிகாட்டலில் மாணவர் ஒன்றியம் தன்னார்வமாய் செயற்படும் இளைஞர் அமைப்புக்களையும் ஒன்றிணைத்து செயற்பட முன்வரின் மக்களை கொடும் அனர்த்தத்திலிருந்து விடுவிக்க கூடிய பொறிமுறை பயனுடையதாய் அமையும். தமிழ் சமூகத்தை மீட்கும் பொறுப்பை இளைஞர்களை வழிப்படுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் மேற்கொள்ளுமா என்பதை காலம் தான் பதில்சொல்ல வேண்டும்.
Comments
Post a Comment