இலங்கையில் கொரோனா தொற்றுகாவிகளாக படையினர் உள்ளனரா? -மித்ரசகி-

உலகில் அனர்த்தகாலங்கள் மற்றும் அவசரகால நிலைமைகளின் போது இராணுவத்தினரின் கடமைகள் முதன்மையாகின்றது. இலங்கை என்ற முழு தேசத்திலும் காலத்திற்கு காலம் இடம்பெற்றுள்ள அனர்த்த மற்றும் அவசரகால நிலைமைகளில் இராணுவத்தின் கடமைகள் முதன்மைபெற்றிருந்தன. முன்னர் 2004ஆம் ஆண்டிலே உலகை பெரும் அழிவிற்கு உட்படுத்திய சுனாமி அனர்த்த காலத்தில் இலங்கை மக்களுக்கான சேவையில் விடுதலைப்புலிகள் அமைப்பின் இராணுவ கட்டமைப்பும் இலங்கை இராணுவ கட்டமைப்பும் இணைந்து பணியாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறானதொரு நிலைமையிலேயே இன்று உலகை உலுக்கும் கொரோனா வைரஸ் அனர்த்தத்திலிருந்து இலங்கையை மீட்க இலங்கையின் இராணுவ கட்டமைப்பு பணியாற்றுகின்றது. ஆயினும் இலங்கை இராணுவம் இலங்கையின் வடக்கிற்கும் தெற்கிற்கும் மாறுபட்ட உருவங்கள் என்பதும் மறுக்கப்பட முடியாத உண்மையாகும். மேலும் இராணுவத்தை மையப்படுத்தியே அண்மைக்காலத்தில் இலங்கையின் கொரோனா வைரஸ் பரவுகை அதிகரித்து செல்கின்றமையும் அவதானிக்க வேண்டிய விடயமாக காணப்படுகின்றது. இதனடிப்படையிலே இலங்கையின் கொரோனா பரவுகையும் இராணுவ பாதுகாப்பையும் மையப்படுத்தியே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளிலும் பரவலாக கொரோனாக்கு எதிரான போரில் இராணுவங்களின் ஒத்தழைப்பு பெறப்பட்டே வருகின்றது. பிரித்தானியாவில், பிரித்தானிய தேசிய சுகாதார சேவையுடன் இணைந்து பிரித்தானிய இராணுவம் கொரோனாவை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபடுத்தப்படுகின்றனர். வைத்தியசாலை உருவாக்கம், அம்புலன்ஸ் சேவைகளில் இராணுவ பங்களிப்பு காணப்படுகின்றது. மற்றும் அமெரிக்காவிலும் பொதுமக்கள் பாவனை வைத்தியசாலைகளில் நோயாளிகள் அதிகரித்து வருவதால் பென்டகனை பயன்படுத்துவது தொடர்பிலே ஆலோசனை நடைபெற்று வருகின்றது. இந்தியாவிலும் இராணுவம் வெளிநாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களைக் கவணித்து கொள்வதற்காக தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை அமைப்பதிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில் உலக நாடுகளில் கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் நெறிமுறையில் ஒரு பகுதியாக நேரடியாக இராணுவத்தை நிறுத்தி வைத்துள்ளன.

இலங்கையில் கொரோனா வைரஸிற்கு எதிரான போரில் மக்கள் நலனை உறுதி செய்வதற்காகவும், பொது சுகாதாரம் மற்றும் ஏனைய சேவைகளை உறுதிப்படுத்தவும், நிவாரணம் மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகளை சிறப்பான முறையில் ஒருங்கிணைத்து செயற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட கோவிட்19 கட்டுப்பாட்டுக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவராக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திரா சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் அரசியல் தலைமைகள் ஆரம்ப நிலையிலேயே கொரோனா வைரஸை சுகாதார பிரச்சினையாய் கருதாது ஓர் போராகவே கருதி செயற்பட்டு வருகின்றனர். இராணுவ தளபதியை தலைவராக நியமித்தமையும் அதனையே உறுதி செய்கின்றது. சவேந்திர சில்வாவும் இதனை இரண்டாவது மனிதாபிமான போர் நடவடிக்கையாகவே குறிப்பிட்டுள்ளார். 2009ஆம் ஆண்டு யுத்தத்தை மனிதாபிமான போர் என்றே இலங்கை அரசாங்கம் குறிப்பிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா வைரஸின் ஆரம்ப பரவுகை காலத்தில் இலங்கையின் அமைச்சர் ஒருவரும் விடுதலைப்புலிகளை அழித்த எமக்கு கொரோனாவை அழிப்பது பெரும் பொருட்டல்ல எனக்கருத்துப்பட தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இலங்கையில் இடம்பெற்ற போரில் தமிழின அழிப்பு குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சவேந்திர சில்வா முழு இலங்கையிலும் கொரோனாவை கட்டுப்படுத்தும் தேசிய நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கை அரசாங்கத்தின் இராணுவ மேலாதிக்கத்தையே குறித்து நிற்கின்றது. சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவில் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடை மற்றும் சர்வதேச ரீதியாக இலங்கை இராணுவம் மீதுள்ள போர்க்குற்ற கலங்கத்தை துடைக்கவே சுகாதார ரீதியாக அணுக வேண்டிய அனர்த்தத்திற்கு இராணுவ தளபதியை இலங்கை அரசாங்கம் தலைவராக நியமித்துள்ளது. மேலும் அரசாங்கம் கொடிய அனர்த்த சூழலிலும் தமது தனிப்பட்ட பேரினவாத அரசியல் நலனை முதன்மைப்படுத்தியே செயற்படுகின்றது. இராணுவ தளபதியின் நியமனத்துக்கு அப்பால் மிருசுவில் படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த சுனில் ரத்நாயக்க என்ற இராணுவ வீரருக்கு சனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமையும் மனிதஉரிமைகள்சார் அமைப்பு ரீதியாக பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுகாதார ரீதியாக அணுகவேண்டிய கொரோனாவுக்கு எதிரான போரை இராணுவரீதியாக இலங்கை அரசாங்கம் எதிர்கொள்வது வடக்கு-கிழக்கில் இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்ட பெரும் துணைபுரிவது மறுக்க முடியாததாகவே காணப்படுகின்றது. இராணுவத்தை வெளியேறுமாறு போராடிய தமிழர் பிரதேசங்களில் இராணுவம் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் குவிக்கப்படுகின்றது. போர்க்காலம் போன்றே புதிது புதிதாக மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவசோதனை சாவடிகள் நிலைபெறுகின்றன. தெற்கில் ஊரடங்கு காலப்பகுதியில் வெளியே சென்ற இளைஞர்களுக்கு இந்திய பாணியில் முழங்காலில் இருக்க வைத்தமைக்காக குறித்த காவல்துறை அதிகாரியின் பதவி நீக்கப்பட்டுள்ளது. எனிலும் வடக்கில் ஊரடங்கு காலத்தில் வெளியே செல்லும் இளைஞர்களுக்கு இராணுவமும் காவல்துறையும் சரமாரியாக தாக்குகின்றது. அத்தியாவசிய தேவைக்கு வெளியே செல்வதற்கான அனுமதிச்சீட்டு பெறப்பட்ட போதிலும் இராணுவம் இராணுவத்தின் அனுமதி சீட்டை கேட்டு மக்களை கொடுமைப்படுத்தும் நிகழ்வுகளும் வடக்கில் அரங்கேறிக்கொண்டு தான் உள்ளது. ரஞ்சன் ராமநாயக்காவிற்கு நீதி வேண்டி கொடுக்க நீதிமன்றம் சென்ற தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிக்கு கொரோனா கட்டுப்படுத்தல் என்ற பேரில் தமிழ் மக்களுக்கு இடம்பெறும அநீதி தெரியாது இருப்பது தமிழ் மக்களின் துர்ப்பாக்கியமே ஆகும்.

இலங்கை அரசாங்கம் சர்வதேசரீதியாக இராணுவத்தின் கலங்கத்தை துடைப்பதற்கும், தமிழர் தாயகத்தில் இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தற்போது  முழு இலங்கையையும் பாதிக்கும் செயற்பாடாய் அமைந்து விட்டதோ என்ற ஐயப்பாட்டை அண்மைக்கால கொரோனா வைரஸ் பரவுகையின் தரவுகள் ஏற்படுத்துகின்றது. கொரோனா வைரஸ் பரவுகை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வராத சூழலிலும் கடந்த 20ஆம் திகதி முதல் இலங்கையின் கொழும்பு, கம்பஹா உட்பட்ட 7 அபாய மாவட்டங்களை விடுத்து மிகுதி 18 மாவட்டங்களிலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு வாழ்க்கை திருப்பபப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸின் பரவுகையின் வேகம் அதிகரிக்கப்ட்டுள்ளது. இப்பரவல் வேக அதிகரிப்பானது இம்முறை இராணுவ வீரர்களிடமே காணப்படுகின்றது. இது சுகாதார நடவடிக்கையை சுகாதார விழிப்புணர்வற்ற இராணுவத்திடம் கொடுத்த இலங்கை அரசாங்கத்தின் தவறின் வெளிப்பாடாகவே அமைகின்றது.

கடந்த வாரம் வெலிசர கடற்படை முகாமில் பணியாற்றும் 60 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. உடனடியாக வெலிசர கடற்படை வீரர்களின் குடும்பங்கள் 4000பேர் தனிமைப்படுத்தப்பட்டு பீ.சீ.ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றது. விடுமுறையில் பொலநறுவைக்கு சென்றிருந்த கடற்படைவீரர் ஒருவருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதியான நிலையிலேயே வெலிசர முகாமில் அவருடன் பணியாற்றிய கடற்படையினர் மற்றும் அவருடன் பழகியோர் வியாழக்கிழமை பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். இதில் 30 கடற்படையினருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதியானது. இதனையடுத்து வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கூடுதலான பரிசோதனையில் மேலும் 30 கடற்படையினருக்கு தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது. கடந்த ஞாயிறு வரையில் 95 கடற்படைவீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவின் கெப்டன் ஒருவருக்கும் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவின் 150 இராணுவத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த கப்டன் 25ஆம் திகதி பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு தனது மாதிரிகளை வழங்கிவிட்டு இயல்பாக படைமுகாமில் வழமைபோன்று செயற்பட்டுள்ளார். உறுதிப்படுத்தப்பட்ட பரிசோதனை முடிவானது 26ஆம் திகதியே கிடைக்கப்பெற்றது. ஆதலால் அவரோடு தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பதற்கே அதிக சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன. கடந்த திங்கட்கிழமை மாத்திரம் 30இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விடுமுறையில் பல இராணுவ வீரர்கள் வீடு சென்றுள்ள நிலையில் அனைவரது விடுமுறையும் இரத்து செய்யப்பட்டு கடந்த திங்கட்கிழமை முகாமுக்கு வரவழைக்கப்பட்டு தனிமைப்படுத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்காக இலங்கை பூராகவும் ஊரடங்கும் அமுல்படுத்தப்பட்டிருந்தது. இதில் யாழ்ப்பாணத்தில் மக்கள் அடர்த்தி கூடிய கோப்பாய் பகுதியில் தனிமைப்படுத்தல் முகாமை ஒழுங்கு செய்த போது மக்கள் அச்சத்தில் போராடி இடைநிறுத்தப்பட்டது. தனிமைப்படுத்தல் முகாம்களிலிருந்து பலர் தப்பியோடுவது செய்தியாக வரும் சூழலில் மக்கள் அடர்த்தி கூடிய பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் முகாமை தெரிவு செய்தது தனிமைப்படுத்தல் முகாமை தேர்வு செய்தவர்களின் பிழையாகும். இங்கு ஒருதிரள் குறித்த மக்களை இரக்கமற்றவர்கள் எனும் வசைபாடும் நிலையும் காணப்படுகின்றது. எனிலும் காங்கேசன்துறை, பலாலி, கொடிகாமம்இ முழங்காவில் போன்ற மக்கள்  அடர்த்தி குறைந்த சூழலில் தனிமைப்படுத்தல் முகாம்களை அமைக்கையில் மக்கள் எவ்வித விசனத்தையும் தெரிவிக்கவில்லை என்பதையும் தவறான வசைபாடுவோர் கருத்தில் கொள்ள வேண்டும்.

அனர்த்த காலங்களில் இராணுவ வீரர்களின் செயற்பாடு போற்றுதலுக்குரியது மறுதலிக்க முடியாத உண்மை. எனிலும் கடந்த கால வடுக்களை இதனூடாக சமன் செய்வது எளிதான விடயமும் அல்ல. “இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்” என்ற வள்ளுவனின் கூற்றுக்கு இணங்க அரசாங்கம் கொரோனா தடுப்பு பொறிமுறையை செயற்படுத்த வேண்டும். அனர்த்த காலங்களின் மீட்பு பணியில் ஒரு படிநிலையே இராணுவ வீரர்களாவர். கொரோனா வைரஸ் தொற்று பரவுகை என்பது சுகாதார இடர் என்ற ரீதியில் இங்கு முதன்மையான பணி சுகாதார பணியாளரிடமே காணப்படுகின்றது. இராணுவத்தினரும் சுகாதார வழிமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும். ஆபத்து பிரதேசங்களில் கடமையாற்றும் இராணுவ வீரர்கள் உரிய சுகாதார முறையை பேணாவிடில் இலங்கையின் கொரோனா வைரஸின் காவியாக இலங்கை இராணுவம் மாறி முழு இலங்கைக்கும் அது பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-